மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 25 மா 2021

வேலுவைக் குறிவைத்து ரெய்டு: திமுக கூட்டணி வேட்பாளர்கள் ஷாக்

வேலுவைக் குறிவைத்து ரெய்டு: திமுக கூட்டணி வேட்பாளர்கள் ஷாக்

திருவண்ணாமலை திமுக மாவட்டச் செயலாளரும் உயர் நிலைக்குழு உறுப்பினருமான முன்னாள் அமைச்சர் எ.வ. வேலுவை குறிவைத்து திருவண்ணாமலையிலும், சென்னையிலும் வருமான வரித்துறையினர் நடத்திய ரெய்டு திமுக வட்டாரத்திலும், திமுக கூட்டணிக் கட்சிகள் வட்டாரத்திலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இன்று (மார்ச் 25) பகல் திருவண்ணாமலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் திமுக வேட்பாளரான எ.வ வேலுவுக்கும், கூட்டணி வேட்பாளர்களுக்கும் பிரச்சாரம் செய்துகொண்டிருந்த நேரத்தில்தான்... எ.வ. வேலுவின் கல்லூரி, அலுவலகம், வீடு என சென்னையிலும், திருவண்ணாமலையிலும் சுமார் பத்து இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடியாக சோதனை நடத்தத் தொடங்கினார்கள்.

சில மணி நேரங்களாக நீடித்த இந்த சோதனையின் என்ன கைப்பற்றப்பட்டது என்பது பற்றி வருமான வரித்துறையினர் எதையும் இன்னும் முறையாக அறிவிக்கவில்லை.

இந்த ரெய்டால் திமுக மற்றும் வடமாவட்ட திமுக கூட்டணி வேட்பாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இதுகுறித்து திருவண்ணாமலை அரசியல் வட்டாரத்தில் பேசியபோது, “எ.வ. வேலுதான் திமுகவின் தேர்தல் வேலைகளை ஆக்டிவ் ஆக செய்துகொண்டிருப்பவர் என்பது டெல்லி வரைக்கும் தெரியும். திமுகவின் வேட்பாளர்களுக்கு தலைமை கொடுக்கும் தேர்தல் செலவுக்கான பணம் எ.வ. வேலு மூலமாகத்தான் அனுப்பப்பட்டு வருகிறது என்றும், குறிப்பாக வட மாவட்ட திமுக மற்றும் திமுக கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்கு எ.வ. வேலு மூலமாகத்தான் இந்த பரிவர்த்தனை நடைபெறுவதாகவும் கட்சியில் பேசப்படுகிறது. இந்த நிலையில்தான் வருமான வரித்துறையினர் வேலுவைக் குறிவைத்து பாய்ச்சல் வேட்டை நடத்தியுள்ளனர். இந்த வேட்டை காரணமாக வேலு கவலை அடைந்துள்ளார். அதேநேரம் தேர்தலுக்கு சில நாட்களே இருக்கும் நிலையில், ‘வேலு ரூட்’ டை எதிர்பார்த்திருந்த திமுகவின் கூட்டணிக் கட்சி வேட்பாளர்கள் கவலையும் பதற்றமும் அடைந்துள்ளனர்”என்கிறார்கள்.

இந்நிலையில் வேலுவின் மீதான ரெய்டு பழிவாங்கும் நடவடிக்கை என்று திமுக கூட்டணிக் கட்சித் தலைவரான மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

“தமிழ்நாட்டில் நடைபெறப்போகும் சட்டப் பேரவைத் தேர்தலில் தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி மாபெரும் வெற்றியை ஈட்டப் போவதற்குக் கட்டியம் கூறும் வகையில் தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் உறுதி என்பதை அரசியல் வல்லுநர்களின் கணிப்புகள் தெரிவிக்கின்றன.

மத்திய பா.ஜ.க. அரசு தனது அரசியல் ஆதாயத்துக்காக வருமான வரித்துறை, அமலாக்கத் துறை, சி.பி.ஐ., போன்ற அமைப்புகளைத் தொடர்ந்து பயன்படுத்தி வருகிறது. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் செய்து வரும் அதே மிரட்டல், அதிகார அத்துமீறலைத் தமிழ்நாட்டிலும் அரங்கேற்றி இருக்கிறது.

இந்நிலையில் அரசியல் களத்தில் அ.இ.அ.தி.மு.க., - பா.ஜ.க., கூட்டணியை எதிர்த்து மக்கள் சக்தியைத் திரட்டி வரும் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினின் மக்கள் ஆதரவைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் பா.ஜ.க. அரசு வருமான வரித்துறையை ஏவி மிரட்டிப் பார்க்கிறது.

திருவண்ணாமலையில் தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரத்தில் இருக்கின்ற நிலையில் அவர் தங்கி இருந்த அறை உள்ளிட்ட தி.மு.க.வின் முன்னணித் தலைவர்களில் ஒருவரான திருவண்ணாமலை எ.வ.வேலு அவர்களின் வீடு, அலுவலகம், கல்லூரி, அறக்கட்டளை அலுவலகம், உறவினர்கள், நண்பர்கள் இல்லங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியது வன்மையான கண்டனத்துக்குரியது.

மத்திய பா.ஜ.க. அரசின் இத்தகைய மிரட்டல்களால் ஒருபோதும் தி.மு.க. கூட்டணியின் வெற்றியைத் தடுத்து விட முடியாது; எடப்பாடி அரசு மற்றும் பா.ஜ.க. ஆட்சியாளர்களின் கூட்டுச்சதி தூள் தூளாகும்”என்றும் கூறியுள்ளார் வைகோ.

-வேந்தன்

கனிமொழி தொகுதியில் நடக்கும்; கரூர் மட்டும் என்ன...? - காங். எம்.பி. ...

6 நிமிட வாசிப்பு

கனிமொழி தொகுதியில் நடக்கும்; கரூர் மட்டும் என்ன...? - காங். எம்.பி. தர்ணா!

மாடு மேய்க்கிற பையனை மா.செ. ஆக்கவா? - இராமதாஸ் சீற்றம்!

5 நிமிட வாசிப்பு

மாடு மேய்க்கிற பையனை மா.செ. ஆக்கவா? - இராமதாஸ் சீற்றம்!

பாலாற்றில் 100 தடுப்பணைகள்!

3 நிமிட வாசிப்பு

பாலாற்றில் 100 தடுப்பணைகள்!

வியாழன் 25 மா 2021