மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 25 மா 2021

டெல்லி சொல்வதைக் கேட்கும் நிலையில் தமிழகம்: ஸ்டாலின்

டெல்லி சொல்வதைக் கேட்கும் நிலையில் தமிழகம்: ஸ்டாலின்

டெல்லி சொல்வதைக் கேட்கும் நிலையில் தமிழகம் இருப்பதாக திமுக தலைவர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் எ.வ.வேலு (திருவண்ணாமலை), பிச்சாண்டி (கீழ்பென்னாத்தூர்), கிரி (செங்கம்), சரவணன் (கலசப்பாக்கம்), சேகரன் (போளூர்), அன்பழகன் (ஆரணி), ஜோதி (செய்யாறு), அம்பேத் குமார் (வந்தவாசி) ஆகியோர் ஆதரித்து, திருவண்ணாமலை காந்தி சிலை அருகே திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று வாக்கு சேகரித்தார்.

அப்போது பேசிய அவர், “ திருவண்ணாமலைத் தொகுதியில் வேட்பாளராக நிற்கும் எ.வ.வேலு, தலைவர் கலைஞரால் பாராட்டப் பெற்றவர். கலைஞர் ஒரு முறை எ.வ. என்றால் எதிலும் வல்லவர் என்று சொன்னார். அப்படிப்பட்டவரைத்தான் வேட்பாளராக உங்களிடத்தில் ஒப்படைத்திருக்கிறோம். அவருக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றி வாய்ப்பை கொடுக்க வேண்டும்” என்றார்.

ஊழல் செய்ததற்காக அமைச்சர் பதவியிலிருந்து, ஜெயலலிதா நீக்கிய அக்ரி கிருஷ்ணமூர்த்தியை போளூர் வேட்பாளராக அதிமுக நிறுத்தியிருக்கிறது என்று சுட்டிக்காட்டிய ஸ்டாலின், “ அக்ரி கிருஷ்ணமூர்த்தியை ஜெயலலிதா எந்த அளவிற்கு ஒதுக்கி வைத்தாரோ, அதேபோல, நிச்சயமாக அந்த தொகுதியில் இருக்கும் மக்களும் ஒதுக்கி வைப்பார்கள். எனவே அவரை எதிர்த்து போட்டியிடும் கே.வி.சேகரனுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றியை பெற்றுத் தர வேண்டும்.

இந்த திருவண்ணாமலை மாவட்டத்திற்கு என்ன சிறப்பு என்றால் 8 தொகுதிகளிலும் உதயசூரியன் நிற்கிறது. எனவே உங்களுக்குக் கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்தி நம்முடைய வேட்பாளர்களை உதயசூரியன் சின்னத்தில் ஆதரித்து மிகப்பெரிய வெற்றியைத் தேடித் தர வேண்டும்.

1989-இல் இந்த மாவட்டத்தை தலைவர் கலைஞர் திருவண்ணாமலை மாவட்டம் என்று தனி மாவட்டமாக உருவாக்கித் தந்தார். அவருடைய மகன் ஸ்டாலின் உங்களைத் தேடி நாடி வந்திருக்கிறேன். திமுக தேர்தல் அறிக்கையில் இந்து சமய அறநிலையத்துறைக்குப் பல்வேறு வாக்குறுதிகளை வழங்கி இருக்கிறோம்.

ஆலயங்கள் குடமுழுக்கிற்கு 1,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும். கோவில்கள் மற்றும் அறநிலையங்கள் பாதுகாப்புப் பணிகளில் 25,000 திருக்கோவில் பணியாளர்கள் நியமிக்கப்படுவார்கள். முக்கிய கோவில்களில் கேபிள் கார் வசதி செய்து தரப்படும். அனைத்துக் கோயில் தெப்பக்குளங்களும் தூர்வாரப்பட்டு நிரப்பப்படும். தமிழக கோவில்களின் பழமை மாறாமல் புதுப்பிக்கப்படும். கோவில்களில் தமிழில் அர்ச்சனை செய்யும் திட்டம் விரிவுபடுத்தப்படும். திருவண்ணாமலையில் கிரிவலப் பாதை கான்கிரீட் சாலையாக மாற்றப்பட்டு இரு பக்கமும் பசுமையான சூழல் உருவாக்கப்படும்” என்று திமுகவின் வாக்குறுதிகளை மக்களிடம் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், ”எப்போதும் தேர்தல் வரும் நேரத்தில் நாம் ஆட்சிக்கு வந்து விடக்கூட கூடாது என்று நினைக்கின்ற சில தலைவர்கள், ‘தி.மு.க. இந்துக்களுக்கு விரோதி’ என்று ஒரு பிரச்சாரத்தைத் தொடர்ந்து நடத்துவது உண்டு. யாருடைய நம்பிக்கைக்கும் இடையூறாக இருப்பது தி.மு.க. அல்ல. எனவே அமையவிருக்கும் என்னுடைய அரசும் அனைவர் உணர்வுக்கும் மதிப்பளிக்கும். எல்லோரையும் மதித்துத்தான் என்னுடைய ஆட்சி நடக்கும் என்ற உறுதியை இந்தத் திருவண்ணாமலையில் நின்றுகொண்டு சொல்ல விரும்புகிறேன்.

மத உணர்வுகளைத் தூண்ட விரும்புவோர் ஒன்றைத் தெரிந்து கொள்ள வேண்டும். இது தமிழ்நாடு. எங்கள் தமிழ் மக்கள் அரசியல் வேறு - ஆன்மீகம் வேறு என்று தெளிவு கொண்டவர்கள். இதை பா.ஜ.க. புரிந்துகொள்ள இன்னும் 100 ஆண்டுகள் ஆகும்” என்று விமர்சித்தார்.

“தமிழகத்தில் நடக்கின்ற தேர்தலில் பாஜக வேட்பாளர் பட்டியலை இந்தியில் வெளியிட்டார்கள். அதாவது இந்தி பேசும் மக்களுக்கான ஆட்சிதான் அது. இந்தியைத் தமிழ்நாட்டில் திணிப்பது, இந்தி பேசும் இளைஞர்களைத் தமிழ்நாட்டில் வேலைக்குள் நுழைப்பது அதன் மூலமாக பா.ஜ.க.வை வளர்த்து விடலாம் என்று ஒரு சூழ்ச்சி செய்து கொண்டிருக்கிறார்கள். அதற்கு இங்கே இருக்கும் பழனிசாமி கும்பல் வேண்டுமானால் வேடிக்கை பார்க்கலாம்.

ஆனால் தி.மு.க.வோ, தமிழ்நாட்டு மக்களோ அதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க மாட்டார்கள்” என்று குறிப்பிட்டுள்ளார் ஸ்டாலின்.

“பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் அந்த மாநில மக்களுக்குத்தான் முன்னுரிமை கொடுத்துக் கொண்டிருக்கிறது. அதே போலத் தமிழ்நாட்டில் இருக்கக்கூடாதா? புதிய கல்விக் கொள்கை என்று சொல்லி குலக் கல்வியைக் கொண்டு வருவதற்கான முயற்சியில் இன்றைக்கு பா.ஜ.க. ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது. அதை இங்கே இருக்கும் அ.தி.மு.க. ஆட்சி தடுக்கவில்லை.

நீட் தேர்வினால் தமிழக மாணவர்களுக்கு இடம் குறைந்துவிட்டது. இப்போது மாநில அரசு தேர்வுகளையும் மத்திய அரசு பொதுத் தேர்வாக நடத்தும் என்று சொல்கிறார்கள். இது என்ன அநியாயம்.

வடமாநிலத்தவரைத் தமிழ்நாட்டில் திணிக்கப் பார்க்கிறார்கள். ஐம்பது ஆண்டுகளாகப் பார்த்துப் பார்த்து உருவாக்கிய தமிழகத்தைச் சிதைக்கப் பார்க்கிறார்கள். தலைகொடுத்தாவது தமிழகத்தை நிச்சயமாக தி.மு.க. பாதுகாக்கும்.

இந்தத் தேர்தல் மூலமாக நாம் வெற்றி பெற்று ஆட்சிக்கு வரவேண்டும் என்று சொல்கிறோம். அது பதவியில் உட்கார வேண்டும் என்பதற்காக அல்ல, அப்போதுதான் இதுபோன்ற அயோக்கியத்தனங்களைத் தடுக்க முடியும். நம்முடைய தமிழகத்தில் இருக்கும் இளைஞர்களின் எதிர்காலத்தைக் காப்பற்ற முடியும்.

நான் தேர்தலுக்கு முன்பே சொன்னேன். இந்தத் தேர்தலை வெறும் தேர்தலாக மட்டும் கருதாதீர்கள். நம்முடைய கொள்கையைக் காப்பாற்ற, நாம் கட்டி அமைத்திருக்கும் தமிழகத்தைக் காப்பாற்ற நடக்கின்ற போர். அந்தப் போரில் நாம் வெற்றி கண்டாக வேண்டும் என்பதுதான் நம்முடைய குறிக்கோளாக இருக்க வேண்டும்” என்றார்.

“ஈழத்தமிழர்களுக்கு இன்றைக்கு பா.ஜ.க.வும் – அ.தி.மு.க.வும் சேர்ந்து பல்வேறு வகைகளில் துரோகம் செய்து கொண்டிருக்கின்றனர். இலங்கையில் நடந்த போர்க் குற்றங்கள் குறித்து ஐ.நா. சபையில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்திற்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என்று நாம் கோரிக்கை வைத்தோம். நாம் கோரிக்கை வைத்தது மட்டுமல்ல, நானே பிரதமர் மோடி அவர்களுக்குக் கடிதம் எழுதி இருக்கிறேன். நம்முடைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் அத்தனை பேரும் பிரதமருக்குக் கடிதம் எழுதி இருக்கிறார்கள்.

ஐ.நா. சபையில் நடக்கும் கூட்டத்தில் அந்தத் தீர்மானத்தை நீங்கள் எதிர்த்து வாக்களிக்க வேண்டும் என்று பிரதமருக்குக் கடிதம் அனுப்பி வைத்தோம். ஆனால் அந்தக் கூட்டத்திலிருந்து இந்தியா வெளிநடப்பு செய்து விட்டது.

இதே பிரச்சினை 2012-இல் வந்தது. அப்போது மன்மோகன் சிங் அவர்கள் தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி ஆட்சி இந்தியாவில் நடக்கிறது. அதில் தி.மு.க. அமைச்சர்கள் இருந்தார்கள்.

அப்போது தி.மு.க.வின் சார்பில் தலைவர் கலைஞர் , அன்னை சோனியா காந்தி இடத்தில் - பிரதமர் மன்மோகன் சிங் இடத்தில், “இந்தப் பிரச்சினை வருகிற போது நீங்கள் உடனே அதை எதிர்த்து குரல் கொடுக்க வேண்டும் - வாக்களிக்க வேண்டும் - கண்டிக்க வேண்டும். இல்லை என்றால் நாங்கள் உங்களுடைய அமைச்சரவையில் இருக்க மாட்டோம். அத்தனை பேரும் ராஜினாமா செய்து விடுவோம்” என்று தெளிவாக எடுத்துச் சொல்லி, அதற்குப் பிறகு இந்தியா அன்றைக்கு ஐ.நா. சபையில் இந்தப் பிரச்சினையை எதிர்த்து வாக்களித்தது. அதுதான் தி.மு.க. அதுதான் கலைஞர். தமிழ்நாடு சொன்னதை அன்றைக்கு டெல்லி கேட்டது. ஆனால் இன்றைக்கு டெல்லி சொல்வதைத் தமிழ்நாடு கேட்டுக்கொண்டிருக்கும் நிலைதான் உருவாகியிருக்கிறது” என்று கடுமையாகச் சாடினார்.

“தமிழ் மண்ணில் இந்தியைத் திணித்து, சமஸ்கிருதத்தைத் திணித்து, நீட்டை கொண்டுவந்து நுழைத்து, மத வெறியைத் தூண்ட நினைப்பவர்களுக்கு, நான் உறுதியோடு சொல்ல விரும்புவது, அது நடக்கவே நடக்காது. இது திராவிட மண். தந்தை பெரியார் - அண்ணா - கலைஞர் பிறந்த மண் இந்த மண். உங்கள் மோடி மஸ்தான் வேலைகள் இங்குப் பலிக்காது. எனவே தமிழக மக்கள் யோசிக்க வேண்டும். நம்முடைய மாநில உரிமைகள் பறி போய்விட்டது. நாம் இன்றைக்கு அடிமையாக இருக்கிறோம். தமிழ்நாட்டின் உரிமைகளை இன்றைக்கு டெல்லியில் எடுத்துக்கொண்டிருக்கிறார்கள். எனவே அதை மீட்க வேண்டும்” என்று குறிப்பிட்டு திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரித்தார் ஸ்டாலின்.

-பிரியா

டிஜிட்டல் திண்ணை: சென்னை யார் கையில்? சேகர்பாபு vs மா.சுப்பிரமணியன் ...

10 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: சென்னை யார் கையில்?  சேகர்பாபு vs  மா.சுப்பிரமணியன்

மீண்டும் எட்டு வழிச் சாலை! காய் நகர்த்தும் கட்கரி

10 நிமிட வாசிப்பு

மீண்டும் எட்டு வழிச் சாலை!  காய் நகர்த்தும் கட்கரி

டிஜிட்டல் திண்ணை: கனிமொழியா? உதயநிதியா? மேயர் ரேஸ்

11 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை:  கனிமொழியா? உதயநிதியா?  மேயர் ரேஸ்

வியாழன் 25 மா 2021