மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 25 மா 2021

ஸ்டாலின் அறை... எ.வ.வேலுக்கு சொந்தமான இடங்களில் ரெய்டு!

ஸ்டாலின் அறை... எ.வ.வேலுக்கு சொந்தமான இடங்களில் ரெய்டு!

தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் விறுவிறுப்பாக நடந்து வரும் அதே வேளையில், அரசியல் கட்சியினருக்குச் சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை தொடர் சோதனை நடத்தி வருகிறது.

இந்நிலையில், இன்று (மார்ச் 25) திருவண்ணாமலை தொகுதி திமுக வேட்பாளரும், முன்னாள் அமைச்சருமான எ.வ.வேலுக்குச் சொந்தமான கல்லூரி, அறக்கட்டளை உள்ளிட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் போட்டியிடும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரிக்க நேற்று இரவு அக்கட்சித் தலைவர் ஸ்டாலின் திருவண்ணாமலைக்கு வந்தார்.

எ.வ.வேலுவுக்கு சொந்தமான அருணை பொறியியல் கல்லூரியில் தங்கி, இன்று காலை உணவு முடித்த பிறகு, 10.45 மணியளவில் காந்திசிலை சந்திப்பில் எ.வ வேலு உள்ளிட்ட வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரித்துக் கொண்டிருந்தார்.

அருணை பொறியியல் கல்லூரியிலிருந்து ஸ்டாலின் கிளம்பிய, சில நிமிடங்களிலேயே வருமான வரித்துறையினர் அந்த கல்லூரிக்குள் நுழைந்து தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து, சோதனையில் ஈடுபட்டிருக்கின்றனர்.

ஸ்டாலின் தங்கியிருந்த அறை உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் சோதனை நடைபெற்றதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒரு பக்கம் ஸ்டாலின் வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டிருந்த நிலையில் மறுபக்கம் சோதனை நடத்தப்பட்டது திமுகவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை மட்டுமல்லாமல், சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள எ.வ வேலு வீட்டிலும், காலை 11 மணி முதல் சோதனை தொடங்கியுள்ளது. வாசலில் நிற்கும் கார்களிலும் சோதனை நடந்ததாகவும், சோதனையின் முடிவில் அனைத்து விவரங்களும் தெரியவரும் என்றும் வரித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் தோல்வி பயத்தால் ரெய்டு நடப்பதாக திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "எதிர்க்கட்சித் தலைவர் தங்கி இருக்கிறார் என்று கூட இல்லாமல் அவருடைய அறை உட்பட அனைத்து இடங்களிலும் சோதனை நடத்தப்பட்டுள்ளது. தோல்வி பயத்தால், பாஜகவை தூண்டிவிட்டு அதிமுக ரெய்டு நடத்துகிறது. வருமான வரித்துறை சோதனை நடத்தினால் பயந்து போய் விடுவார்கள் என்று நினைக்கிறார்கள். இந்த வருமான வரித்துறை சோதனைகளால் திமுகவினர் துவண்டு விடமாட்டார்கள்” என்று கண்டனம் தெரிவித்தார்.

தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு ஐடி ரெய்டு குறித்து கூறுகையில், “வருமானவரித் துறை அவர்களுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் சோதனை மேற்கொண்டு வருகிறது. தேர்தலுக்கும், ஐடி சோதனைக்குத் தொடர்பு இருக்கிறதா என்பது குறித்து விசாரணைக்குப் பின் தெரியவரும்” என்று கூறியுள்ளார்

-பிரியா

டிஜிட்டல் திண்ணை: சென்னை யார் கையில்? சேகர்பாபு vs மா.சுப்பிரமணியன் ...

10 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: சென்னை யார் கையில்?  சேகர்பாபு vs  மா.சுப்பிரமணியன்

மீண்டும் எட்டு வழிச் சாலை! காய் நகர்த்தும் கட்கரி

10 நிமிட வாசிப்பு

மீண்டும் எட்டு வழிச் சாலை!  காய் நகர்த்தும் கட்கரி

டிஜிட்டல் திண்ணை: கனிமொழியா? உதயநிதியா? மேயர் ரேஸ்

11 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை:  கனிமொழியா? உதயநிதியா?  மேயர் ரேஸ்

வியாழன் 25 மா 2021