மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 25 மா 2021

100நாள் வேலை திட்டம் 200ஆக உயர்வு, வேலையில்லா இளைஞர்களுக்கு உதவித்தொகை!

100நாள் வேலை திட்டம் 200ஆக உயர்வு, வேலையில்லா இளைஞர்களுக்கு உதவித்தொகை!

விசிக தேர்தல் அறிக்கை

வருகிற ஏப்ரல் 6ஆம் தேதி தமிழக சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அனைத்து கட்சிகளின் சார்பிலும் கவர்ச்சிகரமான தேர்தல் அறிக்கைகள் வெளியிடப்பட்டு வருகின்றன.

அதன்படி திமுக கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் தேர்தல் அறிக்கையை இன்று (மார்ச் 25) அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் விழுப்புரத்தில் வெளியிட்டார்.

அந்த அறிக்கையில், “

தமிழ்நாட்டில் நடைமுறையில் உள்ள 69% விழுக்காடு இடஒதுக்கீட்டு முறை பாதுகாக்கவும்;

மருத்துவப் படிப்பில் தமிழக அரசு, அகில இந்திய ஒதுக்கீடு ((AIQ- All India Quota) மத்திய அரசின் தொகுப்பிற்கு, ((Central Pool) 15% இடங்களை வழங்குவதை நிறுத்த வேண்டும். இதன்மூலம் அந்த இடங்களுக்கான பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கான 50% இட ஒதுக்கீடு நிலைநிறுத்தவும்;

பின்தங்கிய வகுப்பினருக்கான 10% இடஒதுக்கீட்டை தமிழகத்தில் உள்ள சில பல்கலைக்கழகங்களில் மத்திய அரசின் உதவிபெரும் பாடப்பிரிவுகள் எனச் சொல்லி நடைமுறைப்படுத்துகின்றனர். இதனை இரத்து செய்யவும், இது தமிழகத்தில் ஒருபோதும் நடைமுறைப்படுத்தாமல் இருக்கவும்;

அரசுத்துறைகளில் மாநில அரசால் செயல்படுத்தப்படும் இடஒதுக்கீடு முறை பற்றிய வெள்ளையறிக்கை அவ்வப்போது வெளியிடச் செய்யவும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நடவடிக்கை எடுக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அதில், “மதவெறி சக்திகளை எதிர்த்து வலுவான மக்கள் போராட்டங்களை முன்னெடுத்துச் செல்வோம். மக்கள் ஒற்றுமையைப் பேணிக்காத்து அனைத்து மதங்களைச் சார்ந்த மக்களும் சகோதரத்துவத்துடன் இணைந்து வாழும் மாநிலமாக தமிழகத்தைத் திகழச் செய்து ‘மதச்சார்பின்மையைப் பாதுகாப்போம்.

அதிகரித்து வரும் ஆணவக் கொலைகளைத் தடுத்திட தனிச் சட்டம் இயற்ற வலியுறுத்துவோம்.

சாதி மறுப்பு திருமணம் புரிந்தோருக்கு அரசு வேலைவாய்ப்புகளில் முன்னுரிமை வழங்க வலியுறுத்துவோம்.

சாதி மறுப்பு மணம்புரிந்த, தம்பதியினரைப் பாதுகாக்கவும் இதற்கெனத் தனி காவல்பிரிவு உருவாக்கப்படவும் வலியுறுத்துவோம்.

எஸ்சி மக்கள் மீதான வன்கொடுமை தடுப்புத் திருத்தச் சட்டம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட வலியுறுத்துவோம்.

எழுவர் விடுதலை பத்தாண்டுகளுக்கும் மேலாக இலங்கைச் சிறையில் சிக்கி வாடும் தமிழக, கேரளா உள்ளிட்ட தென்னிந்தியர்களை உடனே இந்தியாவுக்குக் கொண்டுவர உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவும்.

தமிழக மீனவர்களின் பாதுகாப்பையும் -இந்திய கூட்டரசின் எல்லைப் பாதுகாப்பையும் கச்சத்தீவை இலங்கைக்குத் தாரை வார்த்த ஒப்பந்தத்தையும் ரத்து செய்து, கச்சத்தீவை மீட்டுத்தர பாடுபடுவோம்.

தற்போது திரட்டப்படும் மத்திய வரிகளிலும் கூடுதல் வரிகளிலும் மாநிலங்களுக்கு 75 விழுக்காடு வழங்கவும்;

மாநில அரசின் கடன் சுமைகளை மத்திய அரசு ஏற்றுக்கொள்ளவும்;

தமிழுக்கு முக்கியத்துவம்

தமிழ் உட்பட அங்கீகரிக்கப்பட்ட 22 மொழிகளையும் மத்திய அரசின் நிர்வாக மொழியாக அறிவிக்கவும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தொடர்ந்து போராடும்.

ஒவ்வொரு மாநில எல்லைகளுக்கும் உள்ள கனிம வளங்கள் மீதுள்ள உரிமை அந்தந்த மாநிலங்களுக்கே உரிய உயிர் ஆதார உரிமையாகும். இத்தகைய கனிம வளங்களால் மாநிலங்கள் பயன்பெற வேண்டுமெனில், அவற்றின் மூலமான வருவாயை மாநில அரசுகளே பயன்படுத்திக்கொள்ளவும் வகை செய்யப்பட வேண்டும். இதற்கு ஏதுவாக இந்தியக் கூட்டரசு கனிம வளங்களின் மீது செலுத்தும் மேலாண்மையை விலக்கிக்கொள்ளும் பொருட்டு, கனிம வளங்கள் மேலாண்மையை மாநில அரசுகளின் அதிகாரப்பட்டியலுக்கு மாற்றி அறிவிக்க வலியுறுத்துவோம்;

மத்திய அரசு வெளியுறவுக் கொள்கை தொடர்பான முடிவுகளை எடுக்கும்போதும் அண்டை நாடுகளுடன் ஒப்பந்தங்கள் செய்து கொள்ளும்போதும் சம்பந்தப்பட்ட மாநிலங்களில் உள்ள தேசிய இனங்களின் உரிமைகள் தொடர்புடையவையாக இருந்தால் அந்த தேசிய இனத்தைச் சார்ந்த மக்களின் கருத்தைக் கேட்ட பிறகே முடிவை எடுக்க வேண்டும். இதற்கு மாநில அரசு மட்டுமின்றி அங்கீகாரம் பெற்ற அனைத்து அரசியல் கட்சிகளும் இடம்பெறக்கூடிய அமைப்பு ஒன்று உருவாக்கப்பட வேண்டுமென வலியுறுத்துவோம்;

1956-ஆம் ஆண்டு நடந்த மாநிலங்கள் எல்லை வரையறையின் போது தமிழகத்தின் பல பகுதிகள், கேரளம், ஆந்திரம், கர்நாடகம் ஆகிய மாநிலங்களோடு இணைக்கப்பட்டுவிட்டன. இதைத் தமிழ் மக்களின் இறையாண்மைக்கு எதிரான செயலாக விசிக கருதுகிறது. எனவே,

தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும், தேவிகுளம், பீர்மேடு, மூணாறு முதலிய பகுதிகளிலும், கர்நாடக மாநிலத்தில் சேர்க்கப்பட்டுள்ள கோலார் தங்கவயல் பகுதியிலும் பொதுவாக்கெடுப்பு நடத்தி, அவ்வாக்கெடுப்பின் முடிவின் அடிப்படையில் இப்பகுதிகள் வாழும் தமிழர்கள் விருப்பப்படி தமிழ்நாட்டின் எல்லைக்குள் கொண்டுவரப்பட விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தொடர்ந்து போராடும்

கல்வியை பொதுப்பட்டியலில் இருந்து விடுவித்து மாநில அதிகாரங்களுக்கான பட்டியலில் இணைக்க வேண்டும்.

.தமிழகத்தில் தமிழ்மொழியைக் காக்கும் வண்ணம் தமிழ்ப்பெயர் ஏற்போருக்கு ‘பெயர்மாற்ற அரசிதழ் பதிவிற்கு முழு கட்டண விலக்கு அளிக்கவும். தமிழ்ப் பெயரில்லாத திரைப்படங்களுக்கு இரட்டிப்பு வரி விதிக்கவும். வணிக நிறுவனங்கள் தமிழ்ப்பெயர் பலகைகள் வைப்பதை தமிழ்நாடு முழுவதும் நடைமுறைப்படுத்தவும்· ஆங்கில வழி மழலையர் வகுப்புகள், முற்றிலும் நீக்கவும்,

தமிழ் மொழி வளர்ச்சிக்கும், தமிழ்ப் பண்பாட்டு மீட்சிக்கும் தொண்டாற்றி வருகிற தாய்த் தமிழ் பள்ளிகளை அரசு உதவிபெறும் பள்ளிகளாக அறிவிக்கவும் முழுக்கட்டமைப்பு வசதிகளைச் செய்து தரவும், மருத்துவம், பொறியியல், சட்டம் முதலிய உயர்கல்வி படிப்புகள் தமிழ்வழியில் வழங்கப்படவும்,

தமிழகத்தில் எங்கும் தமிழ், எதிலும் தமிழ் எனும் நிலையை எட்ட தமிழக அரசின்

ஆட்சி மொழியாக தமிழ் இருப்பதுபோல, உயர்நீதிமன்றம் மற்றும் அனைத்து கீழமை நீதிமன்றங்களிலும் தமிழே வழக்காடு மொழியாக தமிழை சட்டப்பூர்வமாக அறிவிக்கவும்,

தமிழை வழிபாட்டு மொழியாக நடைமுறைப்படுத்தவும்· தமிழ் செம்மொழி என்பதை இந்தியக் கூட்டரசின் பண்பாட்டுத்துறையின் பட்டியலில் இருந்து மனிதவள மேம்பாட்டுத்துறையின் பட்டியலில் சேர்த்து அறிவிக்கவும், · மத்திய, மாநில அரசு நிறுவனங்கள் மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் உள்ளிட்ட பன்னாட்டு தொழில் நிறுவனங்களில் தாய்மொழி வழிக் கல்வி கற்றவர்களுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை அளித்திடவும்,

மத்திய அரசு பணிக்கான அகில இந்திய நுழைவுத் தேர்வுகள் மற்றும் போட்டித் தேர்வுகள் தமிழில் எழுத உரிய நடவடிக்கை எடுக்கவும், தமிழ்வழிக் கல்வி மற்றும் அரசுப் பள்ளிகளில் பயின்ற மாணவர்களுக்கு டி.என்.பி.எஸ்.சி., உள்ளிட்ட அனைத்துத் தேர்வு வாரியங்களிலும் வேலை வாய்ப்பில் முன்னுரிமை அளிக்கவும் வலியுறுத்துவோம்.

வெளிநாடுவாழ் மற்றும் பணிபுரியும் தமிழர்களின் நலனைக் காக்கும்வகையில் தமிழர்கள் பெரும்பான்மையாக பணி செய்யும் நாடுகளில் உள்ள தூதரகங்களில் தமிழ் அதிகாரிகள் பெருமளவில் நியமிக்கவும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அனைத்து ஆக்கபூர்வமான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும்.

வேளாண் நலன் மற்றும் நிலப் பாதுகாப்பு

· விவசாயிகளுக்கும், விவசாய தொழிலாளர்களுக்கும் எதிரான மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களைத் தமிழகத்தில் நடைமுறைப்படுத்துவதை தடுக்க விசிக தொடர்ந்து போராடும்.

தமிழகத்தில் உள்ள அனைத்து நிலங்களையும் மாநில அரசின் மேலாண்மைக்கு உட்படுத்தும் வகையில் ‘தமிழக நில ஆணையம்’ ஒன்று உருவாக்கப்படவும். இவ்வாணையத்தின் வழியாக விளைநிலங்கள் மற்றும் குடியிருப்புகளுக்கான நிலங்கள் அனைத்தும் பட்டியலிடப்பட்டு கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட வேண்டும். இவ்வகை நிலங்களின் விற்பனை மற்றும் பரிமாற்றங்கள் எதுவாயினும் இவ்வாணையத்தின் இசைவின்றி இறுதி செய்யப்படக்கூடாது. இவ்வாணையத்தில் அரசியல் கட்சிகளின் பிரதிநிகள், சுற்றுச்சூழல் விஞ்ஞானிகள், விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் முதலானோர் இடம் பெற்றிருக்கவும்.

விவசாய நிலங்களை விவசாய பயன்பாடுகளுக்கு மட்டும் விற்கவோ,- வாங்கவோ முடியும் என்ற சட்டத்தை தமிழ்நாடு அரசு கொண்டுவரவும். நிலங்கள் தொடர்ச்சியாக வட இந்திய, வெளிநாட்டு நிறுவனங்கள் கைப்பற்றுவதைத் தடுக்க வேண்டும்.

தமிழ்நாடு முழுவதும் தொழில் முனைவுகள் பரவலாக்கப்படும் நிலையில் அதற்கு ‘நில ஆணையம்’ அங்கீகரிக்கும் தரிசு நிலங்களையே பயன்பாட்டிற்காக அனுமதிக்கப்படவும்.

மூன்று ஆண்டுகளுக்கு மேல் தரிசாகப் போடப்பட்டு ரியல் எஸ்டேட்டு தேவைக்கு மாற்றப்படுவதை தடுக்க கட்டுப்பாடுகள் கொண்டுவரப்படுவும்

கோயில் நிலங்கள் அனைத்தும் நாட்டுடைமையாக்கப்படவும். நாட்டுடமையாக்கப்பட்ட அந்நிலங்கள் ஏழைத் தமிழ் விவசாயிகளுக்கு பகிர்ந்தளிக்கப்படவும். அதற்கு ஏதுவாக இந்திய அறக்கட்டளைகள் சட்டம் மற்றும் தமிழ்நாடு அரசின் இந்து அறநிலையத்துறை சட்டங்களில் திருத்தங்கள் ஏற்படுத்தவும்,

பன்னாட்டு நிறவனங்களால் தமிழகத்திலும் இந்தியாவின் பிற பகுதிகளிலும் புகுத்தப்படும் மரபணு மாற்றப்பட்ட விதைகள் விவசாயத்தையும் விவசாயக் குடிகளையும் தொடர்ந்து அச்சத்தில் ஆழத்தி வருவதால் மரபணு விதைகள் முழுமையாக விலக்கல் முறை, பாரம்பரிய சாகுபடி விதைகள் விவசாய முறைகள் பாதுகாத்தல், உழவர்களுக்குத் தற்போது வழங்கப்பட்டு வருகிற இலவச மின்சாரம் எந்தக் காரணம் கொண்டும் நிறுத்தப்படாமலிருக்கவும், 60 வயதை எட்டிய அனைத்து விவசாயிகளுக்கு மாதாந்திர ஓய்வூதியம் வழங்கவும், வேளாண்துறையில் குறைந்தப்பட்ச கூலியாக இருபாலருக்கும் ரூபாய் 500 நிர்ணயிக்கவும் வலியுறுத்துவோம்.

மாநில உயிரியல் பன்மய வாரியம் அமைக்கவும், தேசியமயமாக்கப்பட்ட மற்றும் கூட்டுறவுக் கடன்கள் தள்ளபடி செய்யவும் நிலுவையில் உள்ள மற்றும் தவணை தவறிய அனைத்துவகை விவசாயக் கடன் மற்றும் நகைக் கடன்களையும் ரத்து செய்யவும், 100 நாள் வேலை வாய்ப்பை வேளாண்மைக்கும் சமுகக் காடுகள் வளர்ப்பு திட்டத்திற்கும் நீட்டிப்புச் செய்து 200 நாளாக உயர்த்தவும் விசிக தொடர்ந்து பாடுபடும்.

நீர்வள மேலாண்மை

ஒவ்வொரு மாநிலத்திலும் அந்தந்த மாநில எல்லைக்குள் ஓடும் நதிகள் அந்தந்த மாநிலத்தின் ஆளுகைக்கு உட்படும், அதற்கு முன்னோட்டமாக தமிழக அரசு தமிழக எல்லைக்குள் ஓடும் நதிகளைப் பாதுகாக்கும் வகையிலும் நீர்வள ஆதாரங்களைப் பாதுகாக்கும் வகையிலும் சட்டப்படி செயல் அதிகாரம் பெற்ற நதிகள் மற்றும் நீர்வள பாதுகாப்பு ஆணையம் உருவாக்கப்படவும்

ஒன்றுக்கும் மேற்பட்ட மாநிலங்களுக்கிடையே ஓடும் நதிகள் அனைத்தும் இந்திய கூட்டரசின் உடைமையாக்கப்பட வேண்டும். அதற்கு ஏதுவாக, மாநிலங்களுக்கிடையே ஓடும் நதிகள் அனைத்தையும் இந்திய அரசமைப்புச் சட்டத்தின் பின் இணைப்பில் கூட்டரசின் பட்டியலில் அறிவிக்கவும்.

ஆற்றுநீர் சிக்கல்களைக் கையாள அனைத்துக் கட்சியினர் கொண்ட உயர்நிலைக்குழு அமைக்கப்படவும். ஆறுகள், கனிமவள வரையறையில் இருந்து நீக்கி. ஆறுகளில் மணல் அள்ளுவது தடை செய்யப்படவும், மணலுக்கு மாற்றான பொருளை மக்களிடையே பிரபலப்படுத்த வேண்டும். எம்.சாண்ட் கூட மலைகளைத் தகர்த்து இயற்கை வள சுரண்டலுக்கு வழி வகுக்கிறது. எனவே கட்டுமானங்களில் மணலுக்கு மாற்றாக பித்தளைகழிவுகள் இரும்பாலை இரும்புத்துகள் கழிவுகள் , அனல்மின் நிலைய சாம்பல், பழைய கட்டிடங்கள் இடிப்பு கழிவு ஆகிய பொருட்களைப் பயன்படுத்தப்படும் கட்டுமானங்களை ஊக்கப்படுத்தும் வகையில் திட்டம் வகுத்திடவும்,.

ஆறுகளிலிருந்து மணல் கொள்ளயடிப்போர் மீது ஆயுள் தண்டனை வழங்கக்கூடிய அளவில் சட்டங்கள் கடுமையாக்கப்படவும், ஏரிகள் மற்றும் குளங்கள் போன்ற நீர் நிலைகளில் கருவேல மரங்கள் வளர்ப்பது போன்ற நீர் வள ஆதாரங்களை சீர்குலைக்கும் நடவடிக்கைகளை முற்றிலும் தடுக்கவும் வெள்ளநீர் வீணாகிப் போகாமல் சேமிக்கும் விதமாக ஏரிகள் குளங்களில் தூர்வாரி ஆழப்படுத்தவும் பாசனக் கால்வாய்களை மேம்படுத்த சிறப்புக் கவனம் செலுத்தவும்,

தனியார் ஆக்கரமிப்புகளிலிருந்து ஏரிகள், குளங்களைப் பாதுகாக்க உள்ளாட்சி அமைப்புகளுக்கு விழிப்புணர்வை உருவாக்கவும், சிறிய நதிகள் அனைத்திலும் 5 கிலோ மீட்டர் ஒன்றுக்கு வீதம் சிறியத் தடுப்பணைகள் கட்டி நிலத்தடி நீரையும் மணல் வளத்தைப் பாதுகாக்கவும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தொடர்ந்து போராடும்

சுற்றுச் சூழல்

சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு சட்டம் - 2020ஐ நடைமுறைப்படுத்தாமல் தடுத்திட, தூத்துக்குடியில் அமைக்கப்பட்டுள்ள ஸ்டெர்லைட் நாசகர நச்சு ஆலையை நிரந்தரமாக அகற்ற,

அதானியின் காட்டுப்பள்ளி துறைமுக திட்டத்தை முற்றிலுமாக கைவிட வலியுறுத்துவோம்.

தண்ணீர் வணிகத்திற்காகவும், மென்பானங்கள் தயாரிப்புக்கும் பன்னாட்டு நிறுவனங்கள் மூலம் நிலத்தடி நீர், ஆற்று நீர் உறிஞ்சப்படுவதைத் தடுத்திட, அண்டை மாநிலங்களிலிருந்து மருத்துவக் கழிவுகளும், மின்னணுக் கழிவுகள் மற்றும் இதர கழிவுகளும் தமிழக எல்லையில் கொட்டப்படுவதைத் தடுக்க உறுதியான நடவடிக்கை மேற்கொள்ள, ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை விசிக மேற்கொள்ளும்.

பெண்கள் நலன்

· பெண்களுக்கு 33 விழுக்காடு அமல்படுத்தப்படவும், பின்னர் அதை 50 விழுக்காடாக உயர்த்திடவும் · ஆரம்ப கல்வி முதல் ஆராய்ச்சி கல்வி வரை அனைத்துப் பெண்களுக்கும்

இலவசமாக்கவும் · மாநில மகளிர் ஆணையம் முறையாக இயங்கவும் அதன் பரிந்துரைகளை செயல்படுத்தவும் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவும். இது குறித்த அறிக்கை சட்டமன்றத்தில் தாக்கல் செய்யவும்

பாலியல் வன்கொடுமைகள் தடுப்பு, மகளிர் உரிமை, பாதுகாப்பு மற்றும் முன்னேற்றம் குறித்து அரசு நிர்வாகம், நீதித்துறை, காவல்துறை உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் உரிய கவனம் செலுத்தி நடவடிக்கை எடுப்பதோடு, பாலியல் நிகர்நிலை கண்ணோட்டம் குறித்து துறைசார்ந்த பயிற்சியளிக்கவும்

பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் பணிபுரியும் பெண்கள், சட்டவிரோதமாக 8 மணி நேரத்திற்கும் மேல் வேலை செய்திட நிர்ப்பந்தப்படுத்துவதைத் தடுக்க உறுதியான நடவடிக்கைகள் எடுக்கவும்

பணியிடங்களில் பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுத்திட 2013இல் நிறைவேற்றப்பட்ட சட்டத்தின் அடிப்படையில் புகார் குழுக்கள் அமைக்கவும்

தமிழகத்தில் மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு தேசிய வங்கிகள் வழங்கியுள்ள கடன்களை ரத்து செய்து அவற்றை மாநில அரசே செலுத்தவும்

மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு வங்கிகள் மூலம் குறைந்த வட்டியில் கடன் வழங்கவும். தற்போது மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு தனியார் நுண்நிதி நிறுவனங்கள் வழங்கிய கடனுக்கு அதீத வட்டி வசூல் செய்வதை சட்டப்படியான வட்டி அளவாகக் குறைக்கவும்

திருமண உதவித்தொகை அனைவருக்கும் ரூ. ஒரு லட்சமாக உயர்த்தி வழங்கவும்,

அனைத்து உதவித்தொகையும் ரூ.5000/- ஆக உயர்த்தப்பட்டு, சேவை உரிமை சட்டத்தின் மூலம் லஞ்சமின்றி வழங்கவும்

பாலியல் வல்லுறவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, மருத்துவ உதவி துவங்கி வழக்கு உதவி வரை அனைத்தும் ஒரே இடத்தில் கிடைக்கச் செய்யும் விதத்தில் உதவி மையங்கள் அமைக்கவும் முதல் கட்டமாக மாவட்ட அளவில் உருவாக்கவும் விசிக நடவடிக்கை மேற்கொள்ளும்.

திருநங்கையர் நலன்

கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் திருநங்கையருக்கு இடஒதுக்கீடு வழங்கிட உரிய முயற்சிகள் மேற்கொள்ள,

திருநங்கையர்கள் பாதுகாப்பாக குடியிருப்பதற்கு தனியாக அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டித் தர, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்.

தலித் மக்களின் நலன்

தலித் பொருளாதார மேம்பாட்டுக்காக தலித்துகள், பழங்குடிகள் மேப்பாட்டு வங்கி ஒன்றைத் தொடங்கி அதன்மூலம் குறைந்த வட்டியில்லாமலும் எளிய முறையிலும் அனைத்து வகையான தொழில்களுக்கும் நிபந்தனையின்றி தொழில் கடன்கள் வழங்கப்பட வேண்டும்.

தாட்கோ கடன் உதவித்திட்டத்தில் வங்கிகளைத் தவிர்த்து முழுக்கடன் தொகையும் தாட்கோ மூலமே வழங்கப்பட வேண்டும்.

தாட்கோ கடன்களை அனுபவித்து வரும் பினாமிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழக அரசு அறிவித்த 2 ஏக்கர் நிலம் வழங்கும் திட்டத்தில் முன்னுரிமை அடிப்படையில் அனைத்து தலித் மக்களுக்கும் 5 ஏக்கர் நிலம் வழங்கப்பட வேண்டும்.

நீதி வழங்கும் அதிகாரத்துடன் கூடிய பஞ்சமி நில மீட்பு ஆணையம் மூலம் தமிழ்நாட்டில் உள்ள பஞ்சமி நிலங்கள் பற்றி வெள்ளை அறிக்கை வெளியிட்டு பஞ்சமி நிலங்களை அதன் உரிமையாளர்களுக்கோ அல்லது அவர்களின் வாரிசுதாரர்களுக்கோ வழங்க வேண்டும்.

1973ஆம் ஆண்ட தமிழ்நாடு குத்தகைகாரர் சட்டத்தை (15 ஏக்கருக்கு மேல்) முறையாக அமல்படுத்தி மடங்கள், கோயில்கள், அறக்கட்டளைகள் ஆகியவற்றின் நிலங்களைக் கையகப்படுத்தி தலித் மக்களுக்கு வழங்க வேண்டும். மேலும், அவற்றில் விவசாயம் செய்ய போதுமான நிதியை முழுமையான மானியத்துடன் வழங்க வேண்டும்.

மனிதனின் மலத்தை மனிதனே அள்ளுவதை தடை செய்து ஒழிப்பதோடு, அதற்கு மிக அவசியமாக ஒரு குற்றவியல் சட்டம் கொண்டு வரவேண்டும். மேலும் இப்பணி செய்த தொழிலாளர்களுக்கு மாற்றுப் பணி வழங்கி மறுவாழ்வு அளிக்கும் ஆணையம் ஏற்படுத்திட வேண்டும். மேலும் இத்தொழில் செய்யும் மக்களுக்கு நிவாரணமாக ரூ.10 இலட்சம் வழங்க வேண்டும். கையால் மலம் அள்ளும் தொழிலை செய்ய நிர்பந்தம் செய்யும் நபர்களைக் குண்டர் தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவுசெய்ய வேண்டும்.

தமிழகத்தில் உள்ள 12,618 ஊராட்சிகளில் உள்ள துப்புரவுப் பணியாளர்களை முழுநேர அரசுப் பணியாளர்களாக அறிவித்து அவர்களுக்கு காலமுறை ஊதியம், பணிப்பாதுகாப்பு, வைப்புநிதி, பணிக்கால ஈட்டுத்தொகை, ஓய்வூதியம் ஆகிய இதர சலுகைள் வழங்கப்பட வேண்டும். மேலும் பணியாளர்களுக்கு போதிய பாதுகாப்பு கருவிகளும், கையுறைகளும் வழங்க வேண்டும்.

அருந்ததியின மக்கள் கூட்டுறவு தொழற்சங்கங்கள் தொடங்கி நிதி இல்லாமல் செயல்படாமல் இருப்பதால் அவற்றை செயல்படும் விதத்தில் சிறப்புக்கூறு திட்டத்தில் இருந்து நிதி ஒதுக்கப்பட வேண்டும்.

அரசு வாரியங்களில் தலைவர்களாக தலித் சமூகத்தவர்கள் நியமிக்கப்படுவதே இல்லை. எனவே, அரசு வாரியங்களின் தலைவர்களாக தலித் சமூகத்தவர்கள் நியமனம் செய்ய வேண்டும்.

தமிழகத்தில் உள்ள மாநகராட்சி, நகராட்சி மற்றும் உள்ளாட்சி நிறுவனங்களுக்கு

சொந்தமாக உள்ள வணிகவளாகங்களில் தலித் மக்களுக்கு இடஒதுக்கீட்டின் அடிப்படையில் ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும்.

பொதுக்கிணறு, பொதுப்பாதை, பொது சுடுகாடு, பொதுக்கோவில் போன்ற அனைத்து நிலைகளிலும் தலித் மக்களின் உரிமைகளை நிலை நாட்டப் பாதுகாப்பு சட்டம் கொண்டு வரப்பட வேண்டும்.

தீண்டாமை மற்றும் வன்கொடுமைகளை ஒழித்திட தீண்டாமை ஒழிப்பிற்கென தனி காவல் பிரிவையும், தனிக் குற்றவியல் நடுவர் நீதிமன்றங்களையும் அமைத்திட வேண்டும். மேலும், இக்காவல் பரிவுகளில் விசாரணை அதிகாரிகளாகவும், தனி குற்றவியல் நடுவர் நீதிமன்றங்களில் நீதிபதிகளாகவும், தாழ்த்தப்பட்ட சமூகத்தைவர்களையே நியமனங்கள் செய்திட வேண்டும். மேலும் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும்.

தலித் ஊராட்சி தலைவர்களுக்கும் தலித் பெண் ஊராட்சி தலைவர்களுக்கும் சாதியப் பாகுபாட்டிலிருந்து பாதுகாப்பு வழஙக வேண்டும். தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் மக்கள்மீது திணிக்கப்படும் தீண்டாமை மற்றும் வன்கொடுமைகளை ஒழிக்க வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை தீவிரமாக அமல்படுத்திட வேண்டும். தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினரின் புகார்களை எந்தவிதமான நிபந்தனையுமின்றி காவல்துறை முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யவேண்டும்.

அரசின் உதவிகளைப் பல்வேறு மட்டங்களில் பெற்று, தனியார் துறைகள் இயங்கி வருகின்றன. எனவே, தனியார் துறைகளில் உள்ள வேலைவாய்ப்புகளிலும் கல்வி நிறுவனங்களிலும் தலித் மக்களுக்கு இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும். அதற்கென சட்டம் இயற்ற வேண்டும்.

தலித் இடஒதுக்கீட்டை 2011 மக்கள்தொகை அடிப்படையில் 21%ஆக உயர்த்த வேண்டும்.

இடஒதுக்கீட்டை அபகரிக்கும் போலி சாதிச்சான்றிதழ் பேர்வழிகள் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுத்து அதனால் ஏற்படும் காலி பணியிடங்களை தலித் சமூகத்தவரை கொண்டே நிரப்ப வேண்டும்.

தமிழகத்தின் சில பகுதிகளில் உள்ள மாத்தம்மா முறையை ஒழித்து அப்பெண்களுக்கு மறுவாழ்வு ஏற்படுத்திட வேண்டும். இம்முறையை ஊக்குவிப்பவர்களுக்குக் கடுமையான தண்டனைகள் வழங்கப்பட வேண்டும்.

ஊராட்சி தலைவர்களுக்கும் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படுவது போல ஊராட்சி மேம்பாட்டு நிதியாக ஆண்டுக்கு ரூ.10 இலட்சம் வழங்கப்பட வேண்டும். மேலும் ஊராட்சி தலைவரை பதவி நீக்கம் செய்யும் சட்டப்பிரிவு 205-ஐ நீக்கம் செய்ய வேண்டும்.

கிறித்துவ, இந்து, இஸ்லாம் மதங்களிலிருந்து, பௌத்த மதத்திற்கு மாறும் செட்யூல்டு சாதியினரை, பட்டியல் சாதி அட்டவணையில் சேர்த்து, தமிழ்நாடு அரசிதழில் வெளியிட வகை செய்யப்பட வேண்டும்.

மதமாற்றத்தை பதிவுசெய்து வெளியிட அரசு நிர்ணயித்துள்ள ரூ.415ஐ, தமிழ்பெயர் மாற்றத்திற்கு நிர்ணயித்துள்ளது போல ரூ.50 ஆக குறைக்க வேண்டும்.

மாநில அளவில் பழங்குடியினர் நல வாரியம் அமைக்க வேண்டும்.

மலைவாழ் மக்கள் கூடுதலாக வசிக்கும் மாவட்டங்களில் மாதந்தோறும் மலைவாழ்மக்கள் குறைதீர் கூட்டம் நடத்தப்பட வேண்டும்

மலைவாழ் மக்களின் வாழ்விடங்களுக்கு மின்சாரம், குடிநீர், சாலை, போக்குவரத்துவசதிகள் செய்து தரப்படவும்

குழந்தை நலன்

குழந்தைத் தொழிலாளர் தடை சட்டத்திற்கான வயதை 18 ஆக உயர்த்தவும், பட்டாசுத் தொழிற்சாலை, செங்கல்சூளை, தீப்பெட்டி, கூடை முடைதல், தோல் பதனிடும் தொழிற்சாலை பணிபுரியும் தொழிலாளர்களின் குழந்தைகளைக் கண்டறிந்து, சிறப்புப் பள்ளிகள் அமைத்து கல்விக் கற்க வழிவகை செய்திடவும்

அங்கன்வாடிப் பள்ளிகள் குழந்தைகள் விளையாட்டுப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படவும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அனைத்து ஆக்கபூர்வமான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும்.

இளைஞர் நலன்

நொறுங்கிக் கிடக்கும் கிராமப்புற பொருளாதாரத்தை மேம்படுத்தி விவசாயம் சார்ந்த தொழில்களுக்குச் சிறப்பு சலுகை வழங்கி ஊக்குவிக்கப்படும். பட்டதாரி இளைஞர்களுக்கு மானியத்துடன் கடன் வழங்கி விவசாயம் சார்ந்த தொழிலில் ஈடுபடுத்த ஊக்குவிக்கவும்

படித்த வேலை இல்லா இளைஞர்கள் பயிற்சிக்குச் செல்வதற்கும், போட்டித் தேர்வுகளில் பங்கேற்பதற்கும் பேருந்துகளில் இலவசப் பயணத்திற்கு அனுமதிச் சீட்டு வழங்கப்படும். எழுத்துத் தேர்வு மற்றும் போட்டித் தேர்வுகளுக்கு பிற மாநிலங்களுக்குச் செல்லும் இளைஞர்களுக்கு ரயில் கட்டணம் செலுத்தவும்

வேலையில்லா காலத்துக்குப் படித்த இளைஞர்களுக்கு நிவாரணம் / உதவித் தொகை வழங்கவும்

நீட் தேர்வை முற்றிலும் விலக்கிட விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அணைத்து ஆக்கபூர்வமான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும்.

இன்றைய காலச்சூழலைக் கருத்தில் கொண்டு மாணவர்களுக்கு ஸ்மார்ட் போன்

, இன்டர்நெட் இணைப்பு, பள்ளிகளில் இலவச வை- பை போன்றவை வழங்கிட வலியுறுத்தப்படும்.

அரசுப் பள்ளிகள் மூடப்படுவது தடுக்கப்படவும். அரசுப் பள்ளி மாணவர்களுக்கு

ஊக்கத்தொகை வழங்கப்படவும், அனைத்துத் தனியார் கல்வி நிறுவனங்களும் சமூக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டு, கல்வித்தரம், கட்டணம், ஆசிரியர், பணியாளர் ஊதியங்கள் மற்றும் இதர நெறிமுறைகள் உள்ளிட்ட அனைத்து அம்சங்களும் ஒழுங்குபடுத்தப்படவும்,

அனைத்துப்பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் விளையாட்டு மைதானங்கள், உள்விளையாட்டு அரங்குகள் அமைக்கப்படும். ஆண், பெண் இரு பாலரும் அவற்றைப் பயன்படுத்த ஆவண செய்யப்படும். பள்ளிகளில் விளையாட்டு என்பது கட்டாயப்பாடமாக ஆக்கப்படவும் சிறப்பு பயிற்சியாளர்கள் நியமிக்கப்படவும், மாற்றுத்திறனாளிகளுக்கு உரிய பயிற்சி ஏற்பாடுகள் செய்யப்படவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படவும்,

மீனவர்கள் நலன்

மீனவர் பாதுகாப்பிற்கு தனி ஆணையம்.

மீனவர் கிராமங்கள் அனைத்தும் தனி ஊராட்சிகளாக மாற்றி அமைப்பது.

மீனவ மக்கள் மீன்பிடி தொழிலின் ஈடுபடும்போது இறந்தால் ரூ.10 லட்சம் நிவராணம்

மீன்கள் இன பெருக்கக் காலமான ஏப்ரல் 15- முதல் மே- 30 என 45 நாட்கள் மீனவர்களுக்கு மீன்பிடி தடைக்காலம் நடைமுறையில் உள்ளது. அப்போது அவர்களுக்கு ரூ.5000 வழங்கப்படுவதை மாற்றி ரூ.10000 வழங்க வேண்டும். · வீடு வழங்கும் திட்டத்தின்கீழ் அடிப்படையில் ஒரு வீட்டிற்கு ரூ.50 ஆயிரம் ஒதுக்கப்படுவதை ரூ.1 லட்சம் ஒதுக்கி மீனவர்களுக்கு வீடு வழங்கும் திட்டத்தை அமல்படுத்தப்பட வேண்டும்.

மீனவ இளைஞர்கள் கடல் தொழிலில் பயிற்சி பெற தேவையான திட்டங்கள் செயற்படுத்தப்படும். கடல் தொழில் படிப்பு மற்றும் பயிற்சி மையங்கள் கடற்புர நகரங்களில் அமைக்கப்படும்.

வெளிநாடுகளில் கடல் தொழில் வேலைவாய்ப்பு கிடைப்பதற்கு கடல்தொழில் சான்றிதழ்கள் வழங்கிட மையம் அமைக்கப்படும்.

மாற்றுத் திறனாளிகள் நலன்

மாநிலம் முழுதும் ஊராட்சி, வார்டு வாரியாக முகாம்கள் நடத்தி, கணக்கெடுப்பு செய்து, மாற்றுத் திறனாளிகள் குறித்த தகவல் தளம் உருவாக்கப்படவும்.

மாற்றுத் திறனாளி உதவித் தொகை ரூ.3,000/- ஆக உயர்த்தப்படும். சட்டப்படி அரசுப் பணிகளில் 3 விழுக்காடு வேலை வாய்ப்பு உறுதிப்படுத்தப்படும்.

பார்வையற்றோர், மாற்றுதிறனாளிகளுக்கு வழங்கப்படும் பராமரிப்புத்தொகை ரூ.1,000/ -லிருந்து ரூ.5,000/- ஆக உயர்த்தித் தரப்படவும்.

வீடு இல்லாத மாற்றுத்திறனாளி குடும்பங்களுக்கு அரசின் வீடு வழங்கும் திட்டங்களில் முன்னுரிமை வழங்கப்படவும்.

அரசு ஊழியர்கள் - ஆசிரியர்கள் நலன்

ஆறாவது ஊதியக்குழு பரிந்துரையின்படி மத்திய அரசு வழங்கியுள்ள ஊதியம் மற்றும் அனைத்துப் படிகளையும் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கும் வழங்க நடவடிக்கை எடுக்கப்படவும்,

ஊதிய முரண்பாடுகள் தீர்க்கப்படும். அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பணியிட மாறுதல் எவ்வித முறைகேட்டிற்கும் இடமின்றி கலந்தாய்வு அடிப்படையில் நிறைவேற்றப்படவும்,

குடிநீர், சென்னை மெட்ரோ வாட்டர், துப்புரவு மேல்நிலை தொட்டி இயக்குபவர் உள்ளிட்ட தொகுப்பூதியம் / மதிப்பூதியத்தில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கப்படவும்,

அனைத்து துறைகளிலும் உள்ள தொகுப்பூதிய, மதிப்பூதிய ஊழியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படவும்,

கருணை அடிப்படை பணி நியமனம் எவ்வித நிபந்தனையும் இன்றி உடனுக்குடன் வழங்கப்படவும்,

ஊழியர் விரோத நடத்தை விதிகள் ரத்து செய்யப்படும். கடந்த ஆட்சியின் போது

தொழிற்சங்க ரீதியான இயக்கங்களில் ஈடுபட்டதற்காக மேற்கொள்ளப்பட்ட பழிவாங்கும் நடவடிக்கைகள் ரத்து செய்யப்படவும்,

அரசு ஊழியர் - ஆசிரியர்கள் பணி வரன்முறை, பணி ஓய்வு, இடமாறுதல், பதவி

உயர்வு உள்ளிட்ட நிர்வாக ரீதியான பிரச்சனைகள் குறித்து அனைத்து சங்கங்களையும்

அழைத்து ஒருங்கிணைப்பு கூட்டம் நடத்தி தீர்வு காணப்படவும் விசிக வலியுறுத்தும்.

ஆசிரியர் அரசு ஊழியர் சங்கங்களுடன் முறையான பேச்சுவார்த்தை நடத்தி ஊதியக்குழு முரண்பாடுகள் களையப்படும். மேலும் மத்திய அரசின் 7-ஆவது ஊதியக்குழு பரிந்துரைகள் தமிழகத்தில் 8ஆவது ஊதியக்குழு மூலம் முழுமையாக நிறைவேற்றப்படவும், அரசுப் பள்ளிகள், கல்லூரிகளில் பணியமர்த்தப்பட்டுள்ள தொகுப்பூதிய ஆசிரியர்கள் அனைவரும் பணிநிரந்தரம் செய்யப்பட்டு முறையான ஊதிய விகிதங்கள் தீர்மானிக்கப்படவும்.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் அனைத்திலும் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் காலியிடங்கள் நிரப்பப்படவும், ஓய்வூதியர்களுக்கான மருத்துவக் காப்பீடு அரசே ஏற்று நடத்தவும், ஓய்வூதியர்கள் தொடர்பான பொதுவான தீர்ப்பினை மேல்முறையீடு செய்யாமல் அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

பூரண மதுவிலக்கு*

தமிழ்நாட்டில் முழுமையான மதுவிலக்கை செயல்படுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படவும். டாஸ்மாக் பணியாளர்களுக்கு தகுதிக்கேற்ற முறையில் அரசுத் துறையில் மாற்றுப் பணி வழங்கப்படவும்

தமிழ்நாட்டில் மது உற்பத்தி ஆலைகளுக்கு வழங்கப்பட்டுள்ள உரிமங்கள் இரத்துச் செய்யப்பட்டு மது உற்பத்தி ஆலைகளை நிரந்தரமாக மூட உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவும் விசிக பாடுபடும்.

கிராமப்புற, நகர்ப்புற மேம்பாடு

கிராமப்புறங்கள் மற்றும் நகர்ப்புறங்களில் வீட்டுமனைப் பட்டா இல்லாத அனைவருக்கும் இலவச வீட்டுமனைப்பட்டா வழங்கப்படுவதற்கும், ஏற்கனவே பல வகை புறம்போக்கு இடங்களில் குடியிருப்போருக்கு வகை மாற்றம் செய்து பட்டா வழங்கப்படவும்.

சொந்த வீடு இல்லாத அனைத்து ஏழை குடும்பங்களுக்கும் குடியிருக்க மாநகராட்சி,

நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி உட்பட அனைத்துப் பகுதிகளிலும் வீடு கட்டுவதற்கான பெருந்திட்டம் உருவாக்கப்படவும். குடியிருக்க வீடில்லாத அனைத்துக் குடும்பங்களுக்கும் வீடு வழங்கப்பட்டு குடிசைகள் இல்லா தமிழகம் அமைவதற்கு விசிக குரல் எழுப்பும்.

·

பொது விநியோகம்

விண்ணப்பித்து காத்திருக்கும் தகுதியுள்ளவர்கள் அனைவருக்கும் புதிய குடும்பஅட்டைகள் தாமதமின்றி வழங்கப்படுவதற்கும்,

500 குடும்ப அட்டைகள் உள்ள குடியிருப்புகளுக்கு தனியே ஒரு நியாய விலைக்கடையும், 100 குடும்ப அட்டைகள் உள்ள குடியிருப்புகளுக்கு பகுதிநேர கடையும் திறக்கப்படவும், நடமாடும் நியாய விலை கடைகள் தேவையான இடங்களில் ஏற்படுத்தப்படவும்,

நியாய விலை கடைகளில் வழங்கப்படும் அரிசி, கோதுமை உள்ளிட்ட பொருட்கள் தரம் பாதுகாக்கப்படவும், காய்கறி, பழங்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் அனைத்தும் நியாய விலை கடைகள் மூலம் மானிய விலையில் வழங்கப்படவும்.

சென்னையில் செயல்படும் அமுதம் அங்காடிகள் போல் அனைத்து மாநகராட்சி பகுதிகளிலும் அமைக்கப்படவும் விசிக வலியுறுத்தும்.

நீதித்துறை

காலியாகவுள்ள நீதிபதிகள் பணியிடங்கள் அனைத்தும் உடனே பூர்த்தி செய்யப்படவும். பணி நியமனங்கள் அனைத்தும் எவ்வித முறைகேடுகளுமின்றி தகுதியான நபர்கள் நியமிக்க ஏதுவாக முறை ஒழிக்கப்பட்டு புதிய அமைப்பு உருவாக்கப்படும்;

சுங்கவரி

தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம், இந்தியா முழுவதும் நெடுஞ்சாலைகளில் சுங்கவரிச் சாவடிகள் அமைத்து இருக்கின்றது. போக்குவரத்துக்கான வாகனங்கள் சாலை வரி ஆண்டுதோறும் உயர்த்தப்பட்டு வருகின்ற நிலையால், நெடுஞ்சாலைச் சுங்கவரியும் வாகனங்களுக்குப் பெரும் சுமையாக இருக்கின்றன. கட்டுப்பாடற்ற முறையில் சாலை சுங்கவரி வசூலிப்பதை இரத்து செய்ய வலியுறுத்தப்படும்.

சாலைப்போக்குவரத்து

அதிமுக அரசு வரலாறு காணாத வகையில் உயர்த்திய பேருந்து கட்டணம் குறைக்கப்படவும்.

ஆம்னி பேருந்துகளின் கட்டணத்தைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படவும்.

இந்தியாவில் சாலை விபத்துகளில் உயிர் இழப்போர் எண்ணிக்கை பெருகி வருகிறது. தமிழ்நாட்டில் மட்டும் ஆண்டுதோறும் 15 ஆயிரம் பேர் இறக்கிறார்கள். 40 ஆயிரம் பேர் கை, கால்களை இழந்து முடமாகிறார்கள். நாட்டின் ஒட்டுமொத்த உற்பத்தி மதிப்பில் 3 விழுக்காடு அளவுக்கு இழப்பு ஏற்படுகிறது. விபத்து ஏற்பட்ட உடனேயே அளிக்கும் சிகிச்சைக்காகவே சுமார் 7 இலட்சம் கோடி ரூபாய் செலவாகிறது. உடல் ஊனம் அடைவதால் கோடிக்கணக்கான ரூபாய் தேசிய இழப்பு ஏற்படுகிறது. இந்தக் காரணங்களால் சாலை விபத்துகளை தேசியப் பேரிடராகக் அறிவிக்க வேண்டுமென்று வலியுறுத்தப்படும்.

அரசின் பல்வேறு துறைகளுக்கு இடையில் ஒற்றுமையும் ஒருங்கிணைப்பும் இல்லாததால், சாலைப் பாதுகாப்புக்கான சட்டங்கள் ஏட்டளவிலேயே இருக்கின்றன. எனவே, சாலை விபத்துக்களைத் தடுக்கவும், அதற்கான ஆலோசனைகள் கூறவும், சாலை விதிகளைக் கடுமையாக நடைமுறைப்படுத்தவும், ‘சாலை பாதுகாப்புக்கான மத்திய வாரியம்’ அமைக்க வலியுறுத்தப்படும்.

திரைப்படத்துறை

திரைப்படத் துறையில் பணிபுரியும் தொழிலாளர்கள், நலிவுற்ற திரைப்படத்துறை,

சின்னத்திரை கலைஞர்கள் நலன் பாதுகாக்கப்படவும்;

அரசு நிர்ணயித்துள்ள திரையரங்கு கட்டணங்கள் வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்படும். கூடுதல் கட்டணங்கள் வசூலிக்கும் திரையரங்குகள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படவும்;

குறைந்த செலவில் எடுக்கப்படும் தரமான திரைப்படங்கள் மற்றும் சமூக சீர்திருத்த கருத்துக்களை வலியுறுத்தும் திரைப்படங்களைத் தேர்வு செய்து பாராட்டும், பரிசுத் தொகையும் வழங்கப்படவும் விசிக பாடுபடும்.

சுற்றுலா வளர்ச்சி

சென்னையிலிருந்து மாமல்லபுரத்திற்கு புதிய தொடர்வண்டித் தடம் அமைத்தல், புதிய சுற்றுலா விடுதிகளைக் கட்டுதல், ஹெலிகாப்டர் சேவை, விரைவுப் படகுப் போக்குவரத்து, பலூன் விளையாட்டுகள், மலை ஏற்றம் என அயல்நாட்டுச் சுற்றுலாப் பயணிகளைக் கவருகின்ற புதிய திட்டங்களை விரைந்து செயல்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதற்கு வலியுறுத்துவோம்.

சுற்றுலா வாகனங்கள் இயக்கப் பன்னாட்டு நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ள உரிமங்கள் இரத்துச் செய்யப்பட்டு, உள்ளூர் சுற்றுலா வாகனங்கள் இயக்குபவர்களுக்கு

முன்னுரிமை அளிக்கப்படுவதற்கு வலியுறுத்தப்படும் என்று தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

.

பிடிஆர் கட்சிப் பதவிப் பறிப்பு?

6 நிமிட வாசிப்பு

பிடிஆர் கட்சிப் பதவிப் பறிப்பு?

நகைச்சுவை மழை: மரபுகளை உடைத்த பைடன், மோடி

4 நிமிட வாசிப்பு

நகைச்சுவை மழை: மரபுகளை உடைத்த பைடன், மோடி

விரைவில் சட்டமன்றத் தேர்தல்: எடப்பாடி பேச்சின் பின்னணி!.

8 நிமிட வாசிப்பு

விரைவில் சட்டமன்றத் தேர்தல்: எடப்பாடி பேச்சின் பின்னணி!.

வியாழன் 25 மா 2021