மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 25 மா 2021

ஒதுங்கி நிற்பவர்களை கவனித்துக் கொண்டுதான் இருக்கிறேன்: ஸ்டாலின்

ஒதுங்கி நிற்பவர்களை கவனித்துக் கொண்டுதான் இருக்கிறேன்: ஸ்டாலின்

நடைபெற இருக்கும் சட்டமன்றத் தேர்தல் தொடர்பான கருத்துக்கணிப்புகள் வெளியாகி வருகின்றன. பெரும்பாலான கருத்துக்கணிப்புகள் திமுகவுக்கு சாதகமாகவே இருக்கிறது. தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக 177 தொகுதிகளைக் கைப்பற்றும் என டைம்ஸ் நவ் - சி வோட்டர் கருத்துக்கணிப்பு வெளியிட்டுள்ளது. அதுபோன்று, தேர்தலை முன்னிட்டு தீவிர பிரச்சாரங்களை அரசியல் கட்சியினர் மேற்கொண்டு வரும் நிலையில், தங்களுக்குத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காததால் ஒருசிலர் களத்தில் சரியாக வேலை செய்வதில்லை என திமுக தலைமைக்குத் தகவல் சென்றுள்ளது.

இதுதொடர்பாக திமுக தலைவர் ஸ்டாலின், கட்சியினருக்கு எழுதியுள்ள கடிதத்தில், “கருத்துக்கணிப்புகள் தி.மு.க.வுக்கு ஆதரவாக இருந்தாலும், எதிராக இருந்தாலும், அதனை மட்டுமே நம்பி சார்ந்திருக்காமல், முன்னெப்போதும் போல களப்பணியாற்றுவதே நம் கடமை என்பதைத் தலைவர் கலைஞர் அடிக்கடி நினைவூட்டுவார். மக்கள்தான் வெற்றியைத் தருவதற்குத் தயாராக இருக்கிறார்களே என்ற அதீத எண்ணம் மனதில் கடுகளவு குடியேறினாலும், அது களத்தில் மலையளவு பாதிப்பை ஏற்படுத்தி விடும் என்று குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து அவர், “தலைவர் கலைஞரை 6-ஆவது முறையாக முதலமைச்சராக அமர வைக்கும் வாய்ப்பு கடந்த 2016-ஆம் ஆண்டு தேர்தலின் போது வெறும் 1.1% வாக்குகள் வித்தியாசத்தில்தான் கை நழுவிப் போனது. எனவே, கருத்துக் கணிப்புகள் தருகிற உற்சாகத்தைவிட, உழைப்பின் மூலம் சேகரித்துச் செலுத்தப்படும் ஒவ்வொரு வாக்கும்தான் உண்மையான உற்சாகத்தை, ஊக்கத்தை வாக்கு எண்ணிக்கை நாளான மே 2-ஆம் தேதியன்று வழங்கிடும். அதற்கேற்ப அயராது, எதையும் அலட்சியம் செய்யாது பணியாற்றிட வேண்டும்.

நான் ஏற்கனவே சொன்னதுபோல, இந்தத் தேர்தல் களத்தில் போட்டியிட விரும்பியும் வாய்ப்பு அமையாதவர்களுக்கு உரிய நேரத்தில் - உரிய வாய்ப்பினை தலைமை நிச்சயம் வழங்கும். களத்தில் நிறுத்தப்பட்டிருப்பவரும் உங்களைப் போன்ற உடன்பிறப்புதான். அனைத்துத் தொகுதிகளிலும் தலைவர் கலைஞரே வேட்பாளர் என்ற திட சித்தத்துடன், வெற்றி முகடை நோக்கி ஒவ்வொரு நொடியும் உழைத்திட வேண்டும்” என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

ஓயாத பரப்புரைப் பயணத்திற்கிடையிலும், ஒவ்வொரு நாளும் கழகத்தவரின் களப் பணிகள் குறித்த விவரங்களை விசாரித்து அறிந்து வருகிறேன் என்று குறிப்பிட்டுள்ள ஸ்டாலின், அதுகுறித்த அறிக்கைகளை ஊன்றிப் படிக்கிறேன். ஒவ்வொரு தொகுதியிலும் - அதற்குட்பட்ட ஒன்றிய - நகரப் பகுதிகளிலும் - வார்டுகளிலும் திறம்படச் செயல்படும் நிர்வாகிகள், உடன்பிறப்புகள் ஆகியோர் குறித்து அறிந்துகொள்கிறேன். அதே நேரத்தில் அலட்சியம் காட்டுகிற ஒரு சில நிர்வாகிகள், ஒதுங்கி நிற்பவர்கள், பெயரளவில் செயல்படுபவர்களையும், கழகத்தின் வெற்றிப்பயணத்திற்கு வேகத்தடையாக இருப்போரையும் கவனித்தே வருகிறேன். அவர்கள் மிக மிகச் சிலராக இருந்தாலும், என் கவனத்திலிருந்து தப்ப முடியாது. கழகத்தின் வெற்றிக்கு உழைக்காவிடில், அதன் விளைவுகளை எதிர்கொண்டே ஆகவேண்டும்” என்று எச்சரித்துள்ளார்.

மேலும், “உதயசூரியன் உதித்திட வேண்டும் - அனைத்துத் தொகுதிகளிலும் கலைஞரே வெற்றி பெற வேண்டும் என்கிற ஆழ்ந்த உணர்வு கொண்ட உடன்பிறப்புகள் ஒருபோதும் ஒரு சிறிதும் அலட்சியம் காட்ட மாட்டார்கள். எல்லாத் தொகுதிகளிலும் உதயசூரியனே போட்டியிடுவதாகக் கருதி ஓயாது உழைப்பதே திமுகழக உடன்பிறப்புகளின் பிறவிக் குணம், ஒருபோதும் மாறாத வழக்கம்.

கூட்டணிக் கட்சியினர் போட்டியிடும் தொகுதிகளில் அவர்கள் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டாலும், அவர்களின் கட்சிகளுக்குரிய சின்னங்களில் போட்டியிட்டாலும் அங்கும் கழகமே போட்டியிடுகிறது என்கிற ஒற்றைச் சிந்தனையுடன் ஒருங்கிணைந்து பணியாற்றி வெற்றியினை உறுதி செய்திடல் வேண்டும். இன்னும் சொல்ல வேண்டுமென்றால், கழகம் போட்டியிடுகிற தொகுதிகளைவிடவும் சற்று கூடுதலான அளவில் ஒற்றுமையைக் காட்டி - உழைப்பினை செலுத்தி - தோழமைக் கட்சிகளின் வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்திட வேண்டும்.

ஆட்சியில் இருப்பவர்கள் அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்து - அத்துமீறல்களில் - முறைகேடுகளில் ஈடுபட்டு திமுக தலைமையிலான கூட்டணியின் வெற்றியைத் தடுத்திட - குறைத்திட முனைவார்கள். கழகம் போட்டியிடும் இடங்களிலோ - தோழமைக் கட்சியினர் போட்டியிடும் இடங்களிலோ குழப்பங்களை உருவாக்கி, தற்காலிகமாகக் குளிர்காய நினைப்பார்கள். குன்றிமணி அளவுகூட அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக்கூடாது. வெற்றிச் செய்தி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்வரை, நம் உன்னதமான உழைப்புக்கு ஓய்வு என்பதே கிடையாது; நம் கண்களுக்கு உறக்கம் கிடையாது; நம் சிந்தனையில்-செயல்பாட்டில் சிறிதும் சோர்வு கிடையாது.

கணிப்புகள் ஊக்கம் தந்தாலும், வாக்குகளே வெற்றியைத் தரும். சிறு துளிகள் பெருகிச் சேர்ந்து கடலாவது போல, ஒவ்வொரு வாக்கும் கவனமாகச் சேகரிக்கப்படும்போது, வெற்றியின் அளவு வரலாறு காணாத வகையில் உயர்ந்திடும். அதனால், ஒவ்வொரு நாளும் வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரியுங்கள். ஒவ்வொரு வாக்காளரையும் நேரில் சந்தித்து ஆதரவு திரட்டுங்கள் அலட்சியம் வேண்டாம்; ஒதுங்கி நிற்காதீர்: என்று வலியுறுத்தியுள்ளார்.

-பிரியா

அதிமுகவினரின் கைக்கூலி கதிர் ஆனந்த்- திமுகவினர் கோஷம்!

6 நிமிட வாசிப்பு

அதிமுகவினரின் கைக்கூலி கதிர் ஆனந்த்- திமுகவினர் கோஷம்!

அண்ணாமலை-இதுவே இறுதியாகட்டும்: செந்தில் பாலாஜி வார்னிங்!

6 நிமிட வாசிப்பு

அண்ணாமலை-இதுவே இறுதியாகட்டும்: செந்தில் பாலாஜி வார்னிங்!

எடப்பாடியை குறிவைத்து இளங்கோவன் வீட்டில் ரெய்டா?

4 நிமிட வாசிப்பு

எடப்பாடியை குறிவைத்து இளங்கோவன் வீட்டில் ரெய்டா?

வியாழன் 25 மா 2021