மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 25 மா 2021

விஜயகாந்த் மௌன பிரச்சாரம்!

விஜயகாந்த் மௌன பிரச்சாரம்!

தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்த் நேற்று (மார்ச்25) மாலை கும்மிடிப்பூண்டியில் இருந்து தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளார்.

தேமுதிக பொருளாளரும் விஜயகாந்தின் மனைவியுமான பிரேமலதா சில நாட்களுக்கு முன் தலைமைக் கழகத்தில் செய்தியாளர்களை சந்தித்தபோது, “நான் விருத்தாசலம் தொகுதியில் போட்டியிடுவதால் அங்கே நிறைய பணிகள் இருப்பதால் தமிழகம் முழுதும் என்னால் பிரச்சாரம் செய்ய இயலாது. அதனால் துணைச் செயலாளர் சுதீஷ் தமிழகம் முழுக்க பிரச்சாரம் செய்வார். கேப்டன் விஜயகாந்த் இறுதிக்கட்டப் பிரச்சாரத்துக்காக வருவார்”என்று தெரிவித்திருந்தார். ஆனால் சுதீஷுக்கு திடீரென கொரோனா தொற்று ஏற்பட்டு அவரது பிரச்சாரப் பயணத்தை முடக்கியது. கொரோனாவில் இருந்து மீண்டும் தற்போது பிரச்சாரத் திட்டத்தை அறிவித்திருக்கிறார் சுதீஷ்.

இந்நிலையில், நேற்று (மார்ச் 25) தேமுதிக 2011 இல் வெற்றிபெற்ற கும்மிடிப்பூண்டியிலிருந்து பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளார் விஜயகாந்த்.

ஒரு காலத்தில் மிகச் சிறந்த பேச்சாற்றல் பெற்று விளங்கிய விஜயகாந்த், தற்போது உடல்நலக் குறைவு காரணமாக ஒரு சில வார்த்தைகள் கூட பேச முடியாத நிலைமையில் இருக்கிறார். கொரோனா தொற்று காலத்தில் மிக கவனமாக இருக்க வேண்டிய விஜயகாந்த், பிரச்சாரத்துக்கு வந்ததை தலைமைக் கழக நிர்வாகிகளே கவலையோடுதான் பார்க்கின்றனர். ஆனபோதும் விஜயகாந்த் வெளியே வந்து தலைகாட்டினால், கை நீட்டினாலே மற்ற தலைவர்களுக்கு இணையான பிரச்சாரம் செய்த பலன் கிடைக்கும் என்று தேமுதிகவினர் நம்புகிறார்கள்.

இந்த வகையில்தான் திறந்த வேனில் கம்பிகளைப் பிடித்துக் கொண்டு தொண்டர்களைப் பார்த்து மெல்ல கையசைத்தார் விஜயகாந்த். ஒலிபெருக்கியில் இன்னொருவர், ‘கேப்டன் வருகிறார்... உங்களைத் தேடி கேப்டன் வருகிறார்’ என்று சொல்லிக்கொண்டே வர விஜயகாந்த் கம்பிகளைப் பிடித்துக் கொண்டு நிற்கிறார். கீழே ஒருவர் உட்கார்ந்துகொண்டு விஜயகாந்தை பிடித்துக் கொள்கிறார்.

வீட்டில் இருந்து கும்மிடிப்பூண்டிக்கு கிளம்பி இரண்டு மணி நேரத்தில் விஜயகாந்த் வீட்டுக்குச் சென்றுவிட்டார். அங்கே 35 நிமிடங்கள் பிரச்சாரக் களத்தில் இருந்தார். அடுத்து சென்னையில் பல்லாவரம் உள்ளிட்ட இடங்களில் விஜயகாந்த் பிரச்சாரம் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

-வணங்காமுடி வேந்தன்

நயினார் நாகேந்திரன் பேச்சு: ஓபிஎஸ் அறிக்கை!

10 நிமிட வாசிப்பு

நயினார் நாகேந்திரன் பேச்சு: ஓபிஎஸ் அறிக்கை!

டிஜிட்டல் திண்ணை: ஐஏஎஸ்-ஐபிஎஸ் அதிகாரிகள் சட்டம்: பாஜகவின் தேர்தல் ...

6 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: ஐஏஎஸ்-ஐபிஎஸ் அதிகாரிகள் சட்டம்: பாஜகவின் தேர்தல் திட்டம்!

அதிமுக-பாஜக:என்ன நடக்கிறது?

10 நிமிட வாசிப்பு

அதிமுக-பாஜக:என்ன நடக்கிறது?

வியாழன் 25 மா 2021