மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 25 மா 2021

சடலமாகத் தொங்கிய பாஜக நிர்வாகி: மேற்குவங்கத்தில் தீவைப்பு, சூறையாடல்!

சடலமாகத் தொங்கிய பாஜக நிர்வாகி: மேற்குவங்கத்தில் தீவைப்பு, சூறையாடல்!

மேற்குவங்க மாநிலத்தின் கூச்பிகார் மக்களவைத் தொகுதி எம்.பி.யான நிசித் பிரமாணிக், பிர்பும் மாவட்டத்தில் உள்ள தின்கட்டா சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடுகிறார். நேற்று இங்குள்ள கால்நடை மருத்துவமனையில், பாஜக தலைவர் ஒருவர் தூக்கிலிட்ட நிலையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். இதனால் மாவட்டத்தின் பல பகுதிகளில் தீவைப்பு, சூறையாடல், தாக்குதல்கள் அரங்கேறின.

தின்கட்டா நகர பாஜக மண்டல் குழுவின் தலைவரான 50 வயது அமித் சர்க்கார் என்பவரே, மர்மமாக மரணம் அடைந்திருக்கிறார். மம்தாவின் திரிணமூல் காங்கிரஸ் கட்சியினர்தான் அவரை அடித்துக்கொன்றுவிட்டு, தூக்கில் தொங்கவிட்டுவிட்டனர் என்பது பாஜகவினரின் குற்றச்சாட்டு.

அமித் சர்க்காரின் மரணம் பற்றிய தகவல் வெளியானதும் பாஜகவினர் ஆவேசத்துடன் வீதிகளில் இறங்கினர். சாலைகளில் போக்குவரத்தைத் தடுத்தனர். ஆங்காங்கே தொங்கவிடப்பட்டிருந்த திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் கொடிகளைக் கிழித்தெறிந்தனர். அந்தக் கட்சியின் தட்டிகள், பதாகைகளையும் கிழித்து, உடைத்துப்போட்டு தீவைத்தனர். தின்கட்டா நகரிலும் புறநகர்ப் பகுதிகளிலும் திரிணமூல் கட்சியின் ஏழு அலுவலகங்களை அவர்கள் சூறையாடினர்.

இதற்கிடையே தகவல் அறிந்த காவல்துறையினர் சடலத்தைக் கைப்பற்றுவதற்காக, கால்நடை மருத்துவமனைக்குச் சென்றனர். ஆனால் அவர்கள் உள்ளே நுழைவது அவ்வளவு எளிதாக இருக்கவில்லை. சாலை மறியலில் ஈடுபட்டவர்களைக் கலைக்கவும் அவர்கள் முயன்றனர். ஏற்கெனவே, கோபத்துடன் இருந்த பாஜக தொண்டர்கள், போலீஸ்காரர்கள் மீது கற்களையும் செங்கற்களையும் தூக்கி வீசினார்கள்.

பொறுத்துப்பார்த்த போலீஸ்காரர்கள் தடியால் அடித்தும் கண்ணீர்ப்புகை குண்டுகளை வீசியும் பதில் தாக்குதல் நடத்தினர். போர்க்களம்போல நிலைமை மாறியதால், நகரில் உள்ள கடைக்காரர்கள் உடனடியாக கடைகளை மூடிவிட்டு கிளம்பினார்கள். மோதல் முடிந்தபிறகு பிற்பகலில் பார்த்தபோது, நகரமே ஊரடங்கு விதிக்கப்பட்ட பகுதியைப் போல காட்சியளித்தது என்கிறார்கள், உள்ளூர் செய்தியாளர்கள்.

முதலில் கால்நடை மருத்துவமனை வராந்தாவில் அமித் சர்க்காரின் சடலம் தொங்கியதை, தின்கட்டாவின் டக்பங்களபரா பகுதிவாசிகள் சிலர் பார்த்துள்ளனர். தகவல் அறிந்து அங்கு வந்தார், பாஜக வேட்பாளர் பிரமாணிக். மக்களவை உறுப்பினரான அவர், திரிணமூல் கட்சியினரே

அமித்தைக் கொன்றுபோட்டதாக பகிரங்கமாகக் குற்றம்சாட்டினார்.

குறிப்பாக, தின்கட்டா தொகுதியின் தர்போதைய சட்டமன்ற உறுப்பினரான உதயன் குகாதான் இதன் பின்னணியில் இருக்கிறார் என்பது பிரமாணிக்கின் குற்றச்சாட்டு.

” அமித் சர்க்கார் இந்தப் பகுதியில் பிரபலமான ஒரு தலைவர். படிப்படியாக எங்கள் கட்சியை இந்தப் பகுதியில் வளர்த்துவருகிறார். அதனால் அவரை திட்டமிட்டுக் கொன்றுவிட்டார்கள். மாநில போலீஸ் மீது நம்பிக்கை இல்லை. சிபிஐ விசாரணை நடத்தப்படவேண்டும்.” என்கிறார் பிரமாணிக்.

மருத்துவமனையில் அவர் இவ்வாறு பேசிக்கொண்டிருக்க, நகரத்தின் பல பகுதிகளில் பாஜகவினர் ஆங்காங்கே போராட்டத்தில் குதித்தார்கள். முக்கிய சாலைகளை முடக்கினார்கள். திரிணமூல் கட்சியின் ஏழு அலுவலகங்களை அவர்கள் தாக்கி, சூறையாடினர். புறநகரில் பேத்தாகுரி எனும் பகுதியில் அந்தப் பகுதி திரிணமூல் கட்சித் தலைவர் வீட்டையும் பாஜகவினர் தாக்கினார்கள்.

பிறகு, கூடுதல் போலீஸ்காரர்கள் வரவழைக்கப்பட்ட பிறகே நிலவரம் ஒருவாறாக கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

சம்பவம் குறித்து விசாரிக்க தனி போலீஸ் பார்வையாளரை நியமித்துள்ள தேர்தல் ஆணையம், விரைவில் அறிக்கை அளிக்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளது.

“ எந்த மரணமும் துரதிர்ஷ்டவசமானதே; ஆனால் இதையொட்டி பாஜகவினர் செய்யும் அரசியல் கண்டனத்துக்குரியது. போலீஸ் உண்மையைக் கண்டறிய வேண்டும் என்பதே எங்கள் விருப்பம்.” என்கிறார்,தின்கட்டாவின் தற்போதைய எம்.எல்.ஏ.வான திரிணமூல் கட்சியின் குகா .

பிர்பும் மாவட்டத்தின் நனூர் பகுதியில் செவ்வாயன்று பின்னிரவில் கோராசந்த் மண்டல் எனும் பாஜக நிர்வாகியின் வீட்டின் மீது நாட்டு வெடிகுண்டுகள் வீசப்பட்டன. அதில் அக்கட்சியின் இரண்டு தொண்டர்கள் காயமடைந்தனர். திரிணமூல் கட்சியின் குண்டர்கள்தான் இந்த காரியத்தைச் செய்தனர் என்று பாஜகவினர் குற்றம்சாட்டுகின்றனர். ஆனால் இதையும் திரிணமூல் கட்சியினர் மறுத்துள்ளனர். குடித்துவிட்டு யாரோ இப்படி செய்திருக்கவேண்டும் என்கிறார்கள், அவர்கள்.

சம்பவம் நிகழ்ந்த பேஜ்ரா கிராமத்தில் நனூர் போலீசார் 40 நாட்டு வெடிகுண்டுகளைக் கைப்பற்றி இருக்கின்றனர். அமித் சர்க்காரின் சடலக் கூறாய்வு அறிக்கை வந்தபிறகு, இதில் தெளிவு கிடைக்கலாம் என்கின்றனர் போலீஸ் தரப்பில்.

தற்கொலையோ கொலையோ முதல் கட்ட வாக்குப்பதிவுக்கு முன்னரேயே அரசியல் கட்சி நிர்வாகி ஒருவர் இப்படி இறந்துபோயிருப்பது, அபாயத்துக்கான அறிகுறியும் உடனடியாகத் தடுக்கப்படவேண்டியதும் ஆகும்!

- இளமுருகு

டாஸ்மாக் அட்டைப் பெட்டி டெண்டர்: அமலானது செந்தில்பாலாஜி மாடல்! ...

8 நிமிட வாசிப்பு

டாஸ்மாக் அட்டைப் பெட்டி டெண்டர்: அமலானது செந்தில்பாலாஜி மாடல்!

டிஜிட்டல் திண்ணை: சீமானை விட்டுப் பிடிக்கும் ஸ்டாலின்

12 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: சீமானை விட்டுப் பிடிக்கும் ஸ்டாலின்

சட்டமன்றத்தை கலைக்கத் தயாரா: முதல்வருக்கு ஜெயக்குமார் கேள்வி! ...

3 நிமிட வாசிப்பு

சட்டமன்றத்தை கலைக்கத் தயாரா: முதல்வருக்கு ஜெயக்குமார் கேள்வி!

வியாழன் 25 மா 2021