மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 24 மா 2021

ஊர்ந்து சென்று காலில் விழுந்தீர்களா? இல்லையா? - ஸ்டாலின் கேள்வி!

ஊர்ந்து சென்று  காலில் விழுந்தீர்களா? இல்லையா? - ஸ்டாலின் கேள்வி!

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், நேற்றைய (மார்ச் 23) தேர்தல் பரப்புரைப் பயணத்தின்போது, பாலக்கோட்டில் பொதுமக்களிடையே உரையாற்றி வாக்கு சேகரித்தார்.

தருமபுரி தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளரான தடங்கம் சுப்பிரமணி, பென்னாகரம் வேட்பாளர் இன்பசேகரன் உள்ளிட்டோரை ஆதரித்து பிரச்சாரத்தில் ஈடுபட்ட திமுக தலைவர் ஸ்டாலின், “பழங்காலத்தில் தகடூர் என்று அழைக்கப்பட்ட இந்த தருமபுரிக்கு வந்திருக்கிறேன். கடையேழு வள்ளல்களில் ஒருவரான அதியமான் வாழ்ந்த மண்ணுக்கு வந்திருக்கிறேன். தருமபுரிக்கு ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தைக் கொண்டுவந்த இந்த ஸ்டாலின் உரிமையோடு உங்களில் ஒருவனாக உங்கள் வீட்டுப் பிள்ளையாக வாக்குக் கேட்க வந்திருக்கிறேன்.

இந்த மாவட்டத்துக்கு ஒரு அமைச்சர் இருக்கிறார். இருக்கிறார் என்று சொன்னேனே தவிர செயல்படுகிறார் என்று சொல்லவில்லை. அவர் பெயர் கே.பி.அன்பழகன். உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்து என்ன சாதித்தார் என்று தேடித் தேடிப் பார்க்கிறேன். ஒன்றும் கிடைக்கவில்லை. உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்து நீட்டை அனுமதித்தார். அதாவது அனிதா உட்பட பல மாணவ - மாணவியர்கள் இந்த 'நீட்'டினால் தற்கொலை செய்துகொண்டு இறந்திருக்கிறார்கள். அதைத்தான் செய்தார் உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன்.

நாம் எதிர்க்காமல் இருந்திருந்தால் அண்ணா பல்கலைக்கழகத்தைக் கபளீகரம் செய்திருப்பார்கள். அந்தத் துறை மீது அக்கறை இல்லாத ஒரு அமைச்சர் யார் என்றால் அது அன்பழகன்தான்.

அந்தத் துறைக்குத்தான் ஒன்றும் செய்யவில்லை என்று பார்த்தால், இந்தத் தொகுதிக்கு - இந்த மாவட்டத்துக்கு ஏதாவது செய்து இருக்கிறாரா என்றால் அதுவும் இல்லை. பஞ்சப்பள்ளி குடிநீர் திட்டத்தை திமுக கொண்டு வந்தது. ஆனால், அந்தத் திட்டம் மூலம் இப்போது தருமபுரிக்குத் தண்ணீர் வருகிறதா? தென்பெண்ணை ஆற்றின் உபரிநீரை வைத்து தருமபுரி மாவட்டத்தில் 15 ஊராட்சிகள் பயனடையும் என்று சொன்னார். அதைச் செய்தாரா? அலியாளம் அணையிலிருந்து தூள்செட்டி ஏரிக்குத் தண்ணீர் கொண்டு வருவோம் என்று சொல்லி 10 வருடங்கள் ஆகிவிட்டன. அவ்வாறு செய்து கொடுத்திருக்கிறாரா? வத்தல் மலையைச் சுற்றுலாத்தலமாக்க இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் ஆணை பிறப்பித்தார்கள். ஏதாவது நடந்து இருக்கிறதா? தருமபுரி தொழிற்பேட்டை என்ன ஆனது?” என அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினார்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமியை விமர்சித்த ஸ்டாலின், “அவருக்கு எவ்வாறு பதவி கிடைத்தது என்று சொன்னால் அவருக்குக் கோபம் வந்துவிடும். அவர் படிப்படியாக வளர்ந்து வந்தாராம். ஸ்டாலின் மாதிரி திடீரென்று வளர்ந்து வரவில்லை என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்.

படிப்படியாக வந்தாரா? ஊர்ந்து வந்தாரா? தவழ்ந்து வந்தாரா? சசிகலா காலில் விழுந்தீர்களா? இல்லையா? முதலில் அதைச் சொல்லுங்கள். அதுவும் ஊர்ந்து சென்று விழுந்தீர்களா? இல்லையா? அதைச் சொல்லுங்கள்.

சமூக வலைதளங்களில் பார்த்திருந்தால் தெரியும். அவர் ஊர்ந்து வரும்போது அருகிலிருந்த திண்டுக்கல் சீனிவாசன் பதறி ஏதோ ஊர்ந்து வருகிறது என்று பயந்து எழுந்து நிற்கிறார். இதைச் சொன்னால் அவருக்குக் கோபம் வந்துவிடும்.

இப்போது அவர்கள் கோடி கோடியாக செலவு செய்து, பக்கம் பக்கமாகப் பத்திரிகைகளில் மக்களின் வரிப் பணத்தைப் பயன்படுத்தி விளம்பரப்படுத்திக் கொண்டிருப்பதெல்லாம் என்ன?

விவசாயிகளைக் காப்பாற்றிவிட்டதாக, வேளாண்மையைச் செழிக்க வைத்து விட்டதாகப் பக்கம் பக்கமாக விளம்பரம் கொடுத்துக் கொண்டிருக்கிறார் பழனிசாமி.

அவர் விவசாயி அல்ல, போலி விவசாயி. போலி விவசாயியாக இருக்கும் மிஸ்டர் பழனிசாமி அவர்களே… நீங்கள் என்னதான் குட்டிக்கரணம் போட்டாலும் தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றவே முடியாது. எவ்வளவுதான் விளம்பரம் கொடுத்தாலும் மக்கள் நம்பத் தயாராக இல்லை. எவ்வாறு மந்திரத்தால் மாங்காய் வரவழைக்க முடியாதோ, அதேபோல எவ்வளவு விளம்பரத்தாலும் இந்த மண்ணை செழிக்க வைக்க நிச்சயம் முடியாது.

விளம்பரத்தால் விவசாயி ஆகிவிடலாம் என்று நினைக்கிறீர்கள். இது விவசாயிகளுக்குக் கேவலம். எப்போது பார்த்தாலும் விவசாயி, விவசாயி என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் பச்சைத் துண்டு போட்டுக்கொண்டிருக்கும், விவசாயிகளுக்குப் பச்சை துரோகியாக அவர் நடந்து கொண்டிருக்கிறார். இதை நிச்சயம் விவசாயிகள் மறக்கமாட்டார்கள்.

மத்திய ஜல்சக்தித் துறையின் கட்டுப்பாட்டின் கீழ், அதிகாரமில்லாத அமைப்பாகக் காவிரி மேலாண்மை வாரியத்தை ஆக்கி, டெல்டா விவசாயிகளுக்குத் துரோகம் செய்திருப்பவர்தான் இந்த பச்சைத் துண்டு பழனிசாமி. சேலம், தருமபுரி, திருவண்ணாமலை போன்ற மாவட்ட விவசாயிகளும் இப்போது நிம்மதியாக இல்லை. குடிமராமத்து என்று சொல்லி மணல் கொள்ளையை நடத்தி போலி பில் போட்டு கொள்ளையடித்துக் கொண்டிருக்கும் ஆட்சிதான் இந்த போலி விவசாயியாக நடித்துக்கொண்டிருக்கும் பழனிசாமியின் ஆட்சி. கரும்பு டன் ஒன்றுக்கு 200 ரூபாய் ஊக்கத்தொகை திமுக ஆட்சியில் கொடுத்தோம். இப்போது 137 ரூபாயாகக் குறைந்து விட்டார்கள்.

அதேபோல விவசாயிகளுக்குப் பல ஆண்டுகளாக நிலுவைத் தொகையைக் கொடுக்காமல் இழுத்தடித்துக் கொண்டிருக்கிறார்கள். நெல் கொள்முதல் செய்ய லஞ்சம், அவ்வாறு செய்தாலும் முழுமையாகச் செய்யவில்லை.

புயலால் பாதிக்கப்பட்டிருக்கும் விவசாயிகளுக்கு இன்னமும் இழப்பீடு தரவில்லை. இது அனைத்திற்கும் மேலாக இலவச மின்சாரத்தை ரத்து செய்ய துடிக்கும் மத்திய அரசிற்கு ஒத்து ஊதிக் கொண்டிருக்கும் அடிமை ஆட்சிதான் பழனிசாமி தலைமையில் இருக்கும் அதிமுக ஆட்சி.

மீட்டரைப் பொருத்தி மத்திய அரசு விவசாயிகளிடம் பணம் வாங்க போகிறார்கள். மூன்று வேளாண் சட்டத்தை ஆதரித்த, வேளாண் விரோத அதிமுக அரசை நீங்கள் வீட்டுக்கு அனுப்ப வேண்டும்.

பத்தாண்டுக்காலமாக இந்தத் தமிழகத்தை சீரழித்து விட்டார்கள். தமிழகம் 50 ஆண்டுக்காலம் பின்னோக்கி பாதாளத்துக்குச் சென்று விட்டது. ஊழல் செய்வது - பொய் சொல்வதுதான் இந்த ஆட்சி” என்று குறிப்பிட்டார்.

மேலும், “புதிய தலைமுறை தொலைக்காட்சி நடத்திய கருத்துக்கணிப்பில் நாம்தான் வெற்றி பெறப் போகிறோம் என்று வந்திருக்கிறது. பிரபலமான பத்திரிகையாளர் இந்து ராம் தெளிவாக சொல்லி இருக்கிறார்.

எனவே எத்தனை முறை பிரதமர் வந்து பிரச்சாரம் செய்தாலும் தமிழ்நாட்டில் பாஜக வரப்போவதில்லை. அதே நேரத்தில் ஒரு அதிமுக வேட்பாளர்கூட வெற்றி பெற்று விடக்கூடாது. அதிமுக வேட்பாளர் வென்றால் அவர் பாஜக எம்எல்ஏதான்” என்று குறிப்பிட்ட ஸ்டாலின், திமுக வாக்குறுதிகளை எடுத்துக் கூறி வாக்கு சேகரித்தார்.

-பிரியா

திருமண அனுமதி: சேகர்பாபுவிடம் கேட்பதை தடுத்த தினகரன்

4 நிமிட வாசிப்பு

திருமண அனுமதி: சேகர்பாபுவிடம் கேட்பதை தடுத்த தினகரன்

’மத்திய’ பிரதேசத்தில் இருந்து எம்பியாகும் ஒன்றிய அமைச்சர் ...

4 நிமிட வாசிப்பு

’மத்திய’ பிரதேசத்தில் இருந்து எம்பியாகும் ஒன்றிய அமைச்சர்  முருகன்

ஒரு கட்சிக்குக் காய்ச்சலே வந்துவிட்டது: மோடி

3 நிமிட வாசிப்பு

ஒரு கட்சிக்குக் காய்ச்சலே வந்துவிட்டது: மோடி

புதன் 24 மா 2021