மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 24 மா 2021

கோவை ஆட்சியர், காவல் ஆணையர் அதிரடி மாற்றம்!

கோவை ஆட்சியர், காவல் ஆணையர் அதிரடி மாற்றம்!

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கிவரும் நிலையில், நீண்ட காலமாக ஒரே இடத்தில் பணியாற்றும் அதிகாரிகள் மற்றும் புகாருக்கு உள்ளான காவல்துறை அதிகாரிகளைத் தேர்தல் ஆணையம் பணியிட மாற்றம் செய்து நடவடிக்கை எடுத்து வருகிறது.

அந்த வகையில் இன்று (மார்ச் 24) கோவை மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் ஆணையரை பணியிட மாற்றம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

கோவை மாவட்டத்தில் பணியாற்றிவரும் முக்கிய அதிகாரிகள் பலரும் உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணியின் கட்டுப்பாட்டில் தான் இருக்கிறார்கள் என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன. அதே சமயத்தில் கோவை மாவட்டத்தில் அவரையன்றி அரசுத் துறைகளில் ஒரு அணுவும் அசையாது என்று ஆளும் கட்சியைச் சார்ந்தவர்களே கூறுகின்றனர்.

கோவையில் இப்போது எந்த அதிகாரி ஆளும் கட்சிக்காக என்ன வேலை செய்து கொண்டிருக்கிறார் என்பது புரியாமல் திமுகவினர் திணறிக் கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி, தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவிடம் கடந்த 20ஆம் தேதியன்று ஒரு புகார் மனு அளித்திருந்தார்.

தமிழகம் முழுவதும் 8 காவல்துறை அதிகாரிகளை மாற்ற வேண்டும் என்று அவர் கொடுத்த பட்டியலில் இடம்பெற்றிருந்த ஐந்துபேர் கோவை மாவட்டத்தைச் சேர்ந்த காவல்துறை அதிகாரிகள்.

அதில், கோவையில் 7 ஆண்டுகளாக பணியாற்றிவரும் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அனிதா, கோவை எஸ்.பி அலுவலக ஸ்பெஷல் பிராஞ்ச் இன்ஸ்பெக்டர் லோகநாதன், கோவை மாநகர காவல்துறை நுண்ணறிவுப் பிரிவு உதவி ஆணையர் ரமேஷ் கிருஷ்ணன், கோவை மாநகர காவல்துறையின் நுண்ணறிவு பிரிவு இன்ஸ்பெக்டர் ஜோஸ், கோவை எஸ்பி அருளரசு உள்ளிட்டோர் பெயர் இடம்பெற்றிருந்தன.

இந்த விவகாரம் தொடர்பாக மின்னம்பலத்தில் அதிகாரிகள் - ஆளும்கட்சி கூட்டு :கோவையில் எதிர்க்கட்சிகளுக்கு வேட்டு என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம்.

இந்நிலையில், இன்று திடீரென கோவை மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அதிகாரியுமான ராஜாமணி மற்றும் மாநகர காவல் ஆணையர் சுமித் சரண் ஆகியோரை இடமாற்றம் செய்து தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. தேர்தல் ஆணையத்திற்கு வந்த பல தகவல்களின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறிக்கையில் சுட்டிக்கட்டியுள்ள தேர்தல் ஆணையம், இவர்கள் இருவரையும் தேர்தல் அல்லாத பணிக்கு மாற்ற வேண்டும் என்று கூறியுள்ளது. புதிய மாவட்ட ஆட்சியராக நாகராஜன் ஐ.ஏ.எஸ் மற்றும் மாநகர காவல் ஆணையராக டேவிட்சன் தேவாசிர்வாதம் ஆகியோரை நியமித்துள்ளது

திடீரென உயர் அதிகாரிகள் இருவர் பணியிட மாற்றம் செய்யப்பட்டது கோவை அரசியல் வட்டாரத்தில். பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

-பிரியா

டிஜிட்டல் திண்ணை: சசிகலாவுக்கு எதிராக தினகரன் திடீர் முடிவு! ...

8 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: சசிகலாவுக்கு எதிராக தினகரன்  திடீர் முடிவு!

அண்ணாமலையை கைது செய்: ட்ரெண்டிங் ஹேஷ்டேக்!

5 நிமிட வாசிப்பு

அண்ணாமலையை கைது செய்: ட்ரெண்டிங் ஹேஷ்டேக்!

குலாமா? ஆசாத்தா? பத்ம பாலிடிக்ஸ்!

6 நிமிட வாசிப்பு

குலாமா? ஆசாத்தா? பத்ம பாலிடிக்ஸ்!

புதன் 24 மா 2021