மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 24 மா 2021

எடப்பாடிக்குதான் விஷம் அதிகம்: சேலத்தில் ஸ்டாலின்

எடப்பாடிக்குதான் விஷம் அதிகம்: சேலத்தில் ஸ்டாலின்

சேலம் மாவட்டம் ஆத்தூரில் இன்று (மார்ச் 24), திமுக தலைவர் முக.ஸ்டாலின் திறந்த வேனில் நின்று, பொதுமக்கள் மத்தியில், ஆத்தூர் வேட்பாளர் சின்னதுரை மற்றும் கெங்கவல்லி வேட்பாளர் ரேகா பிரியதர்ஷினி, உளுந்தூர்பேட்டை வேட்பாளர் மணிகண்டன், கள்ளக்குறிச்சி வேட்பாளர் மணிரத்தினம் ஆகியோரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது பேசிய அவர், “கொளத்தூர் தொகுதியில் சட்டமன்ற வேட்பாளராக நிற்கிறேன். ஆனால் தமிழக முழுவதும் முதல்வர் வேட்பாளராக நிற்கிறேன். இவர்கள் எல்லாம் வெற்றி பெற்றால் தான் நான் முதல்வராக முடியும். எனவே திமுகவுக்கு வாக்களித்து வெற்றி வாய்ப்பை பெற்றுத் தர வேண்டும்.

வற்றாத வசிஷ்டநதி பாயும் ஆத்தூர், கலகக்குறிச்சி என்று போற்றப்படும் கள்ளக்குறிச்சி, அர்த்தநாரீஸ்வரர் அருள்பாலிக்கும் ரிஷிவந்தியம், மலைவாழ் மக்கள் நிறைந்த சங்கராபுரம் என பல சிறப்புகள் கொண்ட தொகுதிகளுக்கு வந்துள்ளேன்.

இன்று முதல்வராக இருக்க கூடிய எடப்பாடி பழனிசாமி, ஏதேதோ பேசி கொண்டிருக்கிறார். அவர் ஊர்ந்து, தவழ்ந்து போய் தான் பதவி ஏற்றார். இதை சமூக வலைதளங்களில் பார்த்தோம். இதை சொன்னால் அவருக்கு கோபம் வருகிறது. நான் என்ன பாம்பா , பல்லியா என்று கேள்வி கேட்கிறார்.

பாம்பு, பல்லியை விட பழனிசாமிக்கு விஷம் அதிகம். இப்போது அவர் தேர்தல் பிரச்சார கூட்டங்களை நடத்துகிறார். பிரியாணி பொட்டலமும், பல கவனிப்புகளுடன் கூட்டிவரப்படும் அந்த கூட்டம், உணர்ச்சியே இல்லாமல் அவரது பேச்சை கேட்கிறது.

இப்போது அந்த கூட்டத்திலும் பலர் கேள்வி கேட்க ஆரம்பித்துவிட்டனர். ஆனால் இங்கு வந்திருப்பது உணர்ச்சி மிகுந்த கூட்டம். இதை பார்க்கும் போது, பேசாமல் உங்களுடைய முகத்தை எல்லாம் பார்த்து கொண்டே இருக்கலாம் என எனக்கு தோன்றுகிறது.

4 வருடமாக ஆட்சி நடத்தும் எடப்பாடி பழனிசாமியால், இந்த ஆட்சியின் சாதனைகளை சொல்லி வாக்கு கேட்க முடிகிறதா? . ஆனால் 10 ஆண்டுகளுக்கு முன்பு திமுக கொண்டு வந்த திட்டங்களை சொல்லி வாக்கு கேட்டு வருகிறோம்.

2ஆவது உலக முதலீட்டாளர் மாநாடு நடத்தி வெளிநாடுகளிலிருந்து 3 லட்சம் கோடி ரூபாய் முதலீடு கொண்டு வந்தேன் என்கிறார் பழனிசாமி. இது எல்லாம் ஜமக்காளத்தில் வடிகட்டிய பொய். முதல்வரும், சில அமைச்சர்களும் கோட்டும் சூட்டும் போட்டு வெளிநாடுகளுக்குச் சுற்றுலா சென்றது தான் உண்மை. ஆனால் 3லட்சம் கோடி முதலீடு எப்போது வந்தது? அதனால் எத்தனை தொழிற்சாலைகள் உருவாக்கப்பட்டது? எத்தனை பேருக்கு வேலை கிடைத்தது என்பது குறித்து முதல்வர் சொல்லவே இல்லை. இதுகுறித்து சட்டமன்றத்திலும் கேட்டேன், வெள்ளை அறிக்கை வெளியிடவும் கேட்டேன். எதற்கும் பதில் இல்லை.

2014ஆம் ஆண்டு பாஜக அரசு ஆட்சிக்கு வந்ததும், மதுரையில் எய்ம்ஸ் அமைக்கப்படும் என்று சொன்னார்கள். ஆனால் 5 ஆண்டுகளாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எய்ம்ஸ் கட்டுவதற்கு இதுவரை ஒரு செங்கல் கூட நட்டுவைக்கவில்லை. இவ்வாறு தமிழகத்துக்குத் துரோகம் செய்தது பாஜக. அதற்கு பழனிசாமி துணையாக இருக்கிறார்.

காவிரி-குண்டாறு இணைப்பு திட்டத்துக்காக பழனிசாமி அடிக்கல் நாட்டினார். இந்த விழாவுக்கும் பிரதமரும் வருவதாக இருந்தது. ஆனால் இது கலைஞரால் தொடங்கப்பட்ட திட்டத்தை மீண்டும் தொடங்கி வைத்தால் கேலி கிண்டல் ஏற்படும் என மோடிக்கு கடிதம் எழுதினேன். எனவே மோடி இந்த நிகழ்ச்சியை ரத்து செய்தார்.

தமிழகத்தை மின்மிகை மாநிலம் என கூறுகின்றனர். அரசாங்கம் மின்சாரத்தை உற்பத்தி செய்து மிச்சம் உள்ளதை மற்ற மாநிலங்களுக்கு விற்றால் மட்டுமே மின்மிகை மாநிலம் ஆகும். ஆனால் கமிஷனுக்காக வெளிநாடுகளிலிருந்தும், வெளிமாநிலங்களிலிருந்தும் மின்சாரத்தை வாங்கி விட்டு, மின்மிகை மாநிலம் என்று பொய் சொல்கின்றனர்.

உளுந்தூர்பேட்டையில் ஒரு எம்.எல்.ஏ இருக்கிறார். அவர் பெயர் குமரகுரு. பழனிசாமிக்கு வலதுகரமாக இருக்கிறார். தமிழகம் முழுவதும் விடப்படும் டெண்டர்களுக்கு அவர் தான் பொறுப்பு. ஆளும் கட்சி எம்.எல்.ஏ.வே இப்படி என்றால் அமைச்சர்கள் நிலை வேறு மாதிரியாக உள்ளது.

நேற்றைய இந்து பத்திரிகையில், அமைச்சர்களின் சொத்து மதிப்பு குறித்து செய்தி வெளியிடப்பட்டுள்ளது. அதில், துணை முதல்வரின் சொத்து மதிப்பு 409%, அமைச்சர்கள் ராஜலட்சுமி 356%, ஆர்.பி. உதயகுமார் 475%, செல்லூர் ராஜூ 445%, விஜயபாஸ்கர் 576%, கே.பி.அன்பழகன் சொத்து மதிப்பு 684 சதவிகிதமாக உயர்ந்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பினாமிகள், உறவினர்கள், ஆதரவாளர்கள் பெயரில் இவர்கள் சேர்த்துள்ள சொத்துக்கள் குறித்து தனி நீதிமன்றம் அமைக்கப்பட்டு விசாரணை நடத்தி உரிய தண்டனை வழங்கப்படும்” என்று தெரிவித்தார்.

அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராட்டம் குறித்து பேசிய அவர், கலைஞர் மகனான நான், அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றுவேன். புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராகச் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்படும். நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்று தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ள வாக்குறுதிகளைக் கூறி வாக்கு சேகரித்தார்.

மேலும், ”ஆண்டவன் சொல்றான்... அருணாச்சலம் செய்கிறான் என்று ரஜினிகாந்த் சினிமாவில் கூறியது போல, நான் சொன்னவற்றை முதல்வர் பழனிசாமி செய்து காட்டுகிறார்” என்றும் குறிப்பிட்டார் ஸ்டாலின்

-பிரியா

டாஸ்மாக் அட்டைப் பெட்டி டெண்டர்: அமலானது செந்தில்பாலாஜி மாடல்! ...

8 நிமிட வாசிப்பு

டாஸ்மாக் அட்டைப் பெட்டி டெண்டர்: அமலானது செந்தில்பாலாஜி மாடல்!

அன்று குணசேகரன் இன்று கரு. பழனியப்பன்: பாஜகவின் டெர்மினேஷன் ...

4 நிமிட வாசிப்பு

அன்று குணசேகரன் இன்று கரு. பழனியப்பன்: பாஜகவின் டெர்மினேஷன் ஆபரேஷன்

டிஜிட்டல் திண்ணை: சசிகலா- தினகரன் இடைவெளி: தூது போன குடும்பப் ...

7 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: சசிகலா- தினகரன் இடைவெளி: தூது போன குடும்பப் பிரமுகர்!

புதன் 24 மா 2021