மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 24 மா 2021

சுயேச்சை நெவளிநாதனை விஜயபாஸ்கர் ‘வீழ்த்தியது’ எப்படி?

சுயேச்சை நெவளிநாதனை  விஜயபாஸ்கர்  ‘வீழ்த்தியது’ எப்படி?

அமைச்சர் விஜயபாஸ்கரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுகவைச் சேர்ந்த முத்தரையர் சமூக பிரமுகர் நெவளிநாதன், தனது வேட்பு மனுவை வாபஸ் வாங்கிவிட்டார். இதை அமைச்சரின் ராஜதந்திரம் என்று அவரது ஆட்கள் கொக்கரிக்க, ‘இப்படி சமுதாயத்தை வச்சி ஃபிலிம் காட்டிட்டாரே?”என்று முத்தரையர் இளைஞர்கள் கொந்தளிக்கிறார்கள்.

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை தொகுதியில் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு எதிராக போட்டியிடுவதற்காக பிப்ரவரி 24 ஆம் தேதி விருப்ப மனு தாக்கல் செய்தார் அதிமுகவின் மாவட்ட வழக்கறிஞர் அணி துணைத் தலைவரான நெவளிநாதன். விருப்ப மனு வாங்கியதுமே இவர் பெயர் ஊடகங்களில் அடிபடத் தொடங்கியது.

ஏனெனில் விராலிமலை தொகுதிக்கு அதிபர் என்ற ரேஞ்சில் அவரது ஆதரவாளர்களால் சித்திரிக்கப்படும் அமைச்சர் விஜயபாஸ்கரை எதிர்த்து அதிமுகவிலேயே ஒருவர் விருப்பமனு வாங்கியது சர்ச்சைகளையும் சலசலப்புகளையும் கிளப்பியது. தனக்கு வந்த அத்தனை அன்பான எச்சரிக்கைகளையும் மீறி விராலிமலை தொகுதியில் வேட்பு மனுவும் தாக்கல் செய்தார் நெவளிநாதன்.

இதையடுத்து புதுக்கோட்டை மாவட்டம் மட்டுமல்ல, தஞ்சாவூர் தொடங்கி அருப்புக்கோட்டை வரைக்கும் பல மாவட்டங்களில் இருந்தும் தனக்கு வாழ்த்துகள் குவிந்ததாக நெவளிநாதனே மின்னம்பலத்திடம் தெரிவித்திருந்தார். மேலும் அதிமுக வேட்பாளர்களை எதிர்த்து சுயேச்சையாக போட்டியிட்ட ஈரோடு முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம், சேந்தங்கலம் சந்திரசேகரன் ஆகியோர் கட்சியில் இருந்தே நீக்கப்பட்ட நிலையில் நெவளிநாதன் மட்டும் நீக்கப்படவில்லை. தனது நிலையை விளக்கி முன்கூட்டியே ஓபிஎஸ்சுக்கும், ஈபிஎஸ்சுக்கும் அவர் கடிதம் எழுதியது ஒரு காரணமாக சொல்லப்பட்டாலும், விஜயபாஸ்கரின் வித்தியாச அணுகுமுறைதான் முக்கியக் காரணம்.

”கட்சியில் இருந்து ஒருவரை நீக்க வேண்டுமென்றால் மாவட்டச் செயலாளர் பரிந்துரைக் கடிதம் அனுப்ப வேண்டும். அதாவது விஜயபாஸ்கர் பரிந்துரைக்க வேண்டும். ஆனால் தன்னை எதிர்த்துப் போட்டியிட்டாலும் முத்தரையர் சமுதாயத்தைச் சேர்ந்த நெவளிநாதன் நீக்கம் என்ற அறிவிப்பு வெளியிட்டால் அது மேலும் தனக்கு எதிராய் போகும் என்று விஜயபாஸ்கர் யோசிக்கிறார். அதனால்தான் அவைத் தலைவரை அனுப்பி நெவளிநாதனுக்கு தூதுவிட்டார். இன்னமும் பொறுமை காத்துக்கொண்டிருக்கிறார். அதனால்தான் நெவளிநாதன் அதிமுகவில் இருந்து நீக்கப்படவில்லை..

இந்த நிலையில்தான், வேட்பு மனு பரிசீலனையின்போது நெவளிநாதனை விஜயபாஸ்கர் சார்பாக சந்தித்த மாவட்ட அவைத் தலைவர் உள்ளிட்ட நிர்வாகிகள் சமசரம் பேசினார்கள். ஆனால் அவர், “விஜயபாஸ்கர்தான் என்னிடம் பேசவேண்டும்” என்று தெரிவித்திருந்தார்.

இந்தப் பின்னணியில் அமைச்சர் விஜயபாஸ்கரே தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட நெவளிநாதனிடம் பேசி, அவருக்கு மாநில ஜெ. பேரவை இணைச் செயலாளர் பதவி தருவதற்கான கடித நகலை அனுப்பியிருக்கிறார். இதையடுத்து 22 ஆம் தேதி பிற்பகல் 2 மணிக்கு, விஜயபாஸ்கருக்கு எதிரான தனது வேட்புமனுவை வாபஸ் பெற்றுக் கொண்டிருக்கிறார் நெவளிநாதன்.

விஜயபாஸ்கருக்கு எதிராக வேட்பு மனு தாக்கல் செய்தபோது நெவளிநாதனை வாழ்த்திய பலரும், அவர் வேட்பு மனுவை வாபஸ் பெற்றபோது கடுமையாகத் திட்டித் தீர்த்திருக்கிறார்கள்.

இதுகுறித்து நெவளிநாதனிடமே பேசினோம்.

“நான் முத்தரையராக பிறந்திருப்பதால் என்னை புறக்கணிக்கிறார்கள் என்று கூறினேன். அமைச்சருக்கு எதிராக வேட்பு மனு தாக்கல் செய்தேன். ஆரம்பத்தில் என்னை ஆதரிப்பதாக சொன்ன இந்த சமுதாயத்தில் உள்ள தலைவர்கள் என்னை நேரடியாக ஆதரிக்க முடியவில்லை. அதுமட்டுமல்லாமல் முன்னாள் அமைச்சர் ஆலங்குடி வெங்கடாசலம் அவர்களின் மகள் தனலட்சுமியும் விராலிமலையில் போட்டியிடுகிறார். அவர் நின்றே ஆவேன் என்று உறுதிகாட்டிவிட்டார்கள். தேர்தல் களத்துக்கு நான் ஆயத்தமாக இருந்தேன். என் வேட்பு மனு ஏற்றுக் கொள்ளப்பட்ட பின் எனக்கு உதவி செய்வதாக கூறியவர்கள் என் போனைக் கூட எடுக்க மறுத்துவிட்டார்கள்

இந்த நிலையில் அமைச்சர் விஜயபாஸ்கர் எனக்கு போன் பண்ணி, ‘உங்கள் 22 வருட கட்சி வாழ்க்கை என்னால் வீணாகிவிடக் கூடாது. உங்கள் ஆதங்கத்தில் நியாயம் இருக்கிறது. ஆனால் உங்கள் அணுகுமுறையில் சில தவறுகள் இருக்கிறது. எல்லாவற்றையும் பேசித் தீர்த்துக் கொள்வோம். வேட்பு மனுவை திரும்பப் பெற்றுவிடுங்கள் என்று கூறினார். அப்போது நான் அவரிடம் சில கோரிக்கைகளை சொன்னேன்.

இன்று அவர் எனக்குக் கொடுக்க முன் வந்திருக்கும் பதவியை விட என்னால் ஏற்பட்ட விவாதங்கள் முக்கியமானது என்று கருதுகிறேன். சமூக நீதியை பத்து நாட்களில் பெற்றுவிட்டாரா என்று சிலர் கேலி செய்கிறார்கள். ஆனால்... நெவளிநாதன் இந்த சந்தர்ப்பத்தில் பலர் பல ஆண்டுகளாக பேச வேண்டும் என்று நினைத்து பேசாமல் விட்ட விஷயங்களைப் பேசியிருக்கிறான். நான் போட்ட விதை அடுத்த சில வருடங்களில் அனைத்து சமுதாயத்தினருக்கும் உரிய நியாயம் கிடைக்கும்.

என்னமோ நான் இந்த சமுதாயத்தைப் பயன்படுத்தி பல ஆயிரம் கோடிகளையும், பெரும் பதவியையும் வாங்கிவிட்டேன் என்று சொல்ல எப்படி மனசாட்சி அனுமதிக்கிறது? என்னுடைய முடிவு 100 சதவிகிதம் சுயநலமற்றது. என்னை உள்நோக்கத்தோடு கொச்சைப்படுத்துவதை நான் மட்டுமல்ல நல்ல உள்ளம் கொண்ட எவராலும் ஜீரணிக்க முடியாது”என்று கூறினார்.

நாம் அமைச்சர் விஜயபாஸ்கரை சுற்றியுள்ள அதிமுகவினரிடம் பேசினோம்.

“நெவளிநாதன் விராலிமையில் உள்ள சுமார் அறுபதாயிரம் முத்தரையர் வாக்குகளை குறிவைத்து போட்டியிட்டார். அது அமைச்சர் விஜயபாஸ்கருக்கு கடும் நெருக்கடியை உண்டாக்கியது. அத்தனை முத்தரையர் ஓட்டுகளையும் நெவளிநாதன் பிரிக்கப் போவது கிடையாது. ஆனால் அவர் பிரிக்கும் சில ஆயிரம் ஓட்டுகள் வெற்றிதோல்வியை தீர்மானிக்க கூடியதாக இருக்கும் என்பது விஜயபாஸ்கருக்குத் தெரியும். இதனால் ஒருபக்கம் நெவளிநாதனிடம் பேசிட தனது ஆதரவாளர்களை அனுப்பிய அமைச்சர் இன்னொரு பக்கம் கடுமையான சில காய்களை நகர்த்தினார்.

நெவளிநாதனின் வேட்புமனுவை முன்மொழிய விராலிமலை தொகுதிக்குட்பட்ட பத்து பேர் முன் வர வேண்டும். யார் யாரை நெவளிநாதன் முன்மொழிய ஏற்பாடு செய்கிறாரோ அவர்களை அமைச்சர் தரப்பு உடனடியாக அணுகி தடுத்தது. ஒரு கட்டத்தில் வெளிநாட்டில் இருக்கும் சிலரிடம் போன் செய்து அவர்கள் மூலமாக உறுதியான சில முத்தரையர் நண்பர்களை வைத்து முன்மொழிவு நபர்களுக்கு ஏற்பாடு செய்தார் நெவளிநாதன். இதில் முதல் கட்ட வெற்றி பெற்றார்.

இன்னொரு பக்கம் விராலிமலையில் நெவளிநாதனுக்கு ஒரு வீடு கூட கிடைக்காதபடி அமைச்சர் தரப்பு பார்த்துக் கொண்டது. இப்படி கள ரீதியாக அவருக்கு நெருக்கடி கொடுத்துக்கொண்டே இன்னொரு பக்கம் முதல்வர் வரை இப்பிரச்சினையைக் கொண்டு சென்றார் விஜயபாஸ்கர். முதல்வர் எடப்பாடி பழனிசாமி இதுகுறித்து கு.ப.கிருஷ்ணனிடம் போனில் பேசி, ‘அந்த பையனை கொஞ்சம் ஆஃப் பண்ணுங்க’என்று விஜயபாஸ்கருக்காக பேசியிருக்கிறார். அதன் பின் குபகியும் அழுத்தம் கொடுக்கவே நெவளிநாதன் வேறு வழியின்றி வாபஸ் வாங்க வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகியிருக்கிறார்” என்கிறார்கள்.

பிப்ரவரி 24 ஆம் தேதி விருப்ப மனு மூலம் தொடங்கிய இந்த பிரச்சினை இன்று மார்ச் 24 ஆம் தேதி முடிவுக்கு வந்தது. புதுக்கோட்டையில் இன்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தபோது விஜயபாஸ்கரும் நெவளிநாதனும் ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொண்டனர். இவருக்கு அவருக்கும் அவருக்கு இவரும் சால்வை போட்டு சிரித்துக் கொண்டார்கள்.

ஆனால்... விஜயபாஸ்கருக்கு எதிராக ஒருவர் வேட்பு மனு தாக்கல் செய்தால் அவர் என்ன விளைவுகளையெல்லாம் சந்திக்க வேண்டியிருக்கிறது என்பதை வியப்போடு பேசிக்கொண்டிருக்கிறார்கள் புதுக்கோட்டை அதிமுகவினர்.

அதிமுகவினரின் கைக்கூலி கதிர் ஆனந்த்- திமுகவினர் கோஷம்!

6 நிமிட வாசிப்பு

அதிமுகவினரின் கைக்கூலி கதிர் ஆனந்த்- திமுகவினர் கோஷம்!

அண்ணாமலை-இதுவே இறுதியாகட்டும்: செந்தில் பாலாஜி வார்னிங்!

6 நிமிட வாசிப்பு

அண்ணாமலை-இதுவே இறுதியாகட்டும்: செந்தில் பாலாஜி வார்னிங்!

எடப்பாடியை குறிவைத்து இளங்கோவன் வீட்டில் ரெய்டா?

4 நிமிட வாசிப்பு

எடப்பாடியை குறிவைத்து இளங்கோவன் வீட்டில் ரெய்டா?

புதன் 24 மா 2021