மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 24 மா 2021

உற்சாகத்தில் லியோனி உளறல்; உடன் பிறப்புகள் அலறல்!

உற்சாகத்தில் லியோனி உளறல்; உடன் பிறப்புகள் அலறல்!

தமிழகத்தில் பலராலும் உன்னித்துக் கவனிக்கப்படுகிற தொகுதிகளில் முக்கியமானது, கோவையில் உள்ள தொண்டாமுத்துார் தொகுதி. தமிழக உள்ளாட்சித் துறை அமைச்சரும், முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் வலது கரமும் ஆன எஸ்.பி.வேலுமணியின் தொகுதிதான் இது. கடந்த 2011 மற்றும் 2016 ஆகிய இரண்டு தேர்தல்களிலும் காங்கிரஸ், மனித நேய மக்கள் கட்சி என்று கூட்டணிக் கட்சியினருக்கே இந்தத் தொகுதியை திமுக தள்ளிவிட்டதால், எளிதாக வென்று விட்டார் வேலுமணி.

கடந்த ஐந்தாண்டுகளில் அரசியலிலும் அதிகாரத்திலும் அசுர வளர்ச்சி பெற்றுள்ள வேலுமணிதான், திமுக தலைவர் ஸ்டாலினின் ஹிட் லிஸ்ட்டில் முதலிடத்தில் இருக்கிறார். அதனால் இந்த முறை அவருக்கு எதிராக திமுக வேட்பாளரையே நேரடியாகக் களமிறக்கியுள்ளார் ஸ்டாலின். உள்ளூரில் உள்ள கீழ்மட்ட நிர்வாகிகள் முதல் வேட்பாளர் வரை எல்லோரையும் அவர் விலைக்கு வாங்கிவிடுவார் என்று பரவிய தகவலால், காங்கேயத்திலிருந்து கார்த்திகேய சிவசேனாதிபதியைக் களமிறக்கி விட்டுள்ளார். அவருக்கு ஆதரவாகப் பணி செய்பவர்களும் பெரும்பாலும் வெளியூர்க்காரர்களாகவே உள்ளனர். அவர்கள் களத்தில் பணி செய்வதை விட, கணினியில் பணி செய்வதுதான் அதிகமாக இருக்கிறது. இதற்குப் பதிலடி தருவதற்கும் அதிமுக ஐடி விங்க் அதிதீவிரமாக வேலை செய்து கொண்டிருக்கிறது.

திமுகவுக்கு ஆதரவாக பரப்புரை செய்பவர்களை திமுகவினர் படம், வீடியோ எடுப்பதை விட அதிமுகவினர்தான் அதிகமாக எடுக்கின்றனர். ஊடகத்துறையில் பணியாற்றும் பலரையும் காண்ட்ராக்ட் பேசி, திமுக வேட்பாளருடனே வலம் வரச் செய்திருக்கிறார் வேலுமணி. இதனால் அவர்கள் ஒரு சின்ன தவறு செய்தாலும், உளறினாலும், பணம் கொடுக்க முயன்றாலும் அதை உடனே வீடியோ எடுத்து வாட்ஸ் ஆப் குரூப்களில் பரபரப்பைக் கிளப்பி விடுகிறது வேலுமணி டீம். இதில் முதலில் சிக்கியிருக்கிறார் திமுக பேச்சாளர் திண்டுக்கல் லியோனி.

திமுக வேட்பாளருக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் பரப்புரை செய்து வரும் லியோனி, நேற்று கோவை தொண்டாமுத்துாரில் சில இடங்களில் வாகனத்தில் வலம் வந்து பரப்புரை செய்தார். குனியமுத்தார் குறிஞ்சி நகரில் அவர் பேசும்போது, ‘‘சிறுவாணி தண்ணின்னா உலகத்துக்கே பிடிக்கும். அந்தத் தண்ணி கோயம்புத்தூர் மக்களுக்குப் பத்துறதில்லை. அதனால, எல்லா மக்களுக்கும் தண்ணி கொடுக்குறதுக்காகக் கொண்டு வந்த திட்டம்தான் சூயஸ் திட்டம். அந்தத் திட்டத்தை வரவிடாமல் தடுக்குறது யாருன்னா, இன்றைக்கு உள்ளாட்சி அமைச்சராகவும், நாளை ஜெயில்கைதியாகவும் போகிற வேலுமணி என்கிற ஜென்மச்சனி. தமிழகத்தை பிடித்த ஜென்மச்சனி!’’ என்றும் ஆவேசமாகப் பேசினார்.

அவர் ஏதோ நல்லதுதான் பேசுகிறார் என்பதைப் போல விஷயமே புரியாமல் அருகில் நின்று கொண்டிருந்தார் திமுக வேட்பாளர் கார்த்திகேய சிவசேனாதிபதி. இந்தியாவிலேயே டெல்லிக்கு அடுத்தபடியாக தமிழகத்தில் அதுவும் கோவையில்தான் குடிநீர் விநியோகத்தை தனியார் நிறுவனமான சூயஸ் நிறுவனத்துக்குக் கொடுக்க கோவை மாநகராட்சி ஒப்பந்தம் போட்டுள்ளது. வேலுமணி உள்ளாட்சித்துறை அமைச்சரான பின்புதான்,

2017 நவ.,24 அன்று, ‘டெண்டர்’ விடப்பட்டு, சூயஸ் பிராஜெக்ட்ஸ் நிறுவனத்துக்கு, பணிஆணை தரப்பட்டுள்ளது. 646 கோடி ரூபாய் கட்டுமானத்திற்கும், இயக்குதல் மற்றும் பராமரித்தலுக்கு 2,325 கோடி ரூபாயுமாக மொத்தம் 2961 கோடி அந்த நிறுவனத்திற்கு வழங்கப்படவுள்ளது. இந்த திட்டச் செலவில் 33 சதவீதத்தை மத்திய அரசும், 20 சதவீதத்தை மாநில அரசும், மீதமுள்ள 47 சதவீதத்தை மாநகராட்சியும் பங்களிப்பாக வழங்குகின்றன,

ஓராண்டு ஆய்வு, நான்காண்டுகள் கட்டுமானம், 21 ஆண்டுகள் இயக்கி பராமரிப்புக்கென 26 ஆண்டுகள், இந்த நிறுவனத்துடன் ஒப்பந்தம் போட்டிருக்கிறது கோவை மாநகராட்சி. இதில் கட்டுமானத்துக்குத் தரப்படும் தொகையைத் தவிர்த்து, 21 ஆண்டு பராமரிப்புக்கு 2325 கோடி ரூபாய் வழங்குவதில்தான் மிகப்பெரும் ஊழல் நடந்திருப்பதாக சர்ச்சை கிளம்பியது. தனியாரிடம் குடிநீர் விநியோகத்தைத் தரக்கூடாது என்று திமுக தலைவர் ஸ்டாலின் கோவைக்கே வந்து ஆர்ப்பாட்டம் நடத்தினார். கம்யூனிஸ்ட் கட்சிகளும் தொடர்ந்து போராட்டம் நடத்தின. இந்த விஷயமே புரியாமல், சூயஸ் திட்டம் நல்ல திட்டம் என்றும், அதை நிறைவேற்ற விடாமல் வேலுமணிதான் தடுப்பதாகவும் அவர் பேசியதை வீடியோ எடுத்து வேலுமணியின் டீம், எல்லா வாட்ஸ்ஆப் குரூப்களிலும் போட்டுக் கிழித்துக் கொண்டிருக்கிறது. இதனால் திமுகவினர் உள்ளிட்ட கூட்டணியில் உள்ள அனைத்துக் கட்சியினரும் கடுப்பாகியுள்ளனர்.

வழக்கமாக திண்டுக்கல் லியோனியை நடுவராக வைத்துத்தான் பட்டிமன்றங்கள் நடக்கும். இப்போது கோவை திமுகவினரிடம் லியோனியையே தலைப்பாக வைத்து ஒரு பட்டிமன்றம் நடக்கிறது.

லியோனி பரப்புரை செய்தது திமுகவுக்கு ஓட்டு வாங்கவா...வேட்டு வைக்கவா?

விஜிலென்ஸ் வருகை: இரவில் சென்று பகலில் வந்த எடப்பாடியின் நண்பர் ...

6 நிமிட வாசிப்பு

விஜிலென்ஸ் வருகை:  இரவில்  சென்று   பகலில் வந்த எடப்பாடியின் நண்பர் இளங்கோவன்

துரைமுருகன் ஆதரவாளர்களை துரைமுருகன் மூலமாகவே நீக்கிய ஸ்டாலின் ...

10 நிமிட வாசிப்பு

துரைமுருகன் ஆதரவாளர்களை  துரைமுருகன் மூலமாகவே நீக்கிய ஸ்டாலின்

ரெய்டு: இளங்கோவனைப் போட்டுக் கொடுத்த அதிமுகவினர்!

9 நிமிட வாசிப்பு

ரெய்டு: இளங்கோவனைப் போட்டுக் கொடுத்த அதிமுகவினர்!

புதன் 24 மா 2021