மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 24 மா 2021

‘‘ஆளுக்கு பத்து...அதுக்கு மேல கொடுக்குறது உங்க கெத்து!’’ ஓட்டுக்கு 500 சாக்லேட்: தொகுதிக்கு 2 லட்சம் அதிமுக டார்கெட்!

‘‘ஆளுக்கு பத்து...அதுக்கு மேல கொடுக்குறது உங்க கெத்து!’’ ஓட்டுக்கு 500 சாக்லேட்: தொகுதிக்கு 2 லட்சம் அதிமுக டார்கெட்!

ஸ்வீட் பாக்ஸ், சாக்லேட் என தமிழக தேர்தல் களம் இனிப்புகளால் நிறைந்துகிடக்கிறது. வேட்பாளர்களுக்கு தலைமைகளில் இருந்து தரப்படும் ஸ்வீட் பாக்ஸ்களில் இருந்து வாக்காளர்களுக்கான சாக்லேட் விநியோகம் விரைவில் துவங்கவிருக்கிறது. எந்தக் கட்சியில் வேட்பாளருக்கு எவ்வளவு ஸ்வீட் பாக்ஸ், வாக்காளருக்கு எவ்வளவு சாக்லேட் என்பதெல்லாம் ஏற்கெனவே முடிவு செய்யப்பட்டுவிட்டன. ஸ்வீட் பாக்ஸ், சாக்லேட் என்ற சங்கேத வார்த்தைகளை சாதாரண மக்களும் புரிந்து கொண்டுள்ள நிலையில், வருமானவரித்துறை, தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கும் இதெல்லாம் தெரியாமலிருக்க வாய்ப்பேயில்லை. ஆனால் பிடிப்பது மிகமிகக் குறைவாகத்தான் இருக்கிறது. அப்பாவி மக்களின் பணம்தான் பிடிபட்டு அலைக்கழிப்பது அதிகமாகவுள்ளது. மற்றபடி அனைத்துத் தொகுதிக்குள்ளும் இனிப்பு விநியோகத்துக்கான எல்லா வேலைகளும் கனஜோராகத் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. ஒவ்வொரு தொகுதியிலும் ஒரு கட்சி எவ்வளவு கொடுக்கிறது என்பதைப் பார்த்துவிட்டு, அதற்கு இணையாக அல்லது அதற்கும் மேலாக தருவதற்கு முயற்சிகளைத் தொடர்ந்து கொண்டிருக்கிறார்கள் ‘வெயிட்’ ஆன வேட்பாளர்கள். அது முடியாது என்று நினைப்பவர்கள், எந்தெந்த வகையில் இதைப் போட்டுக்கொடுத்துப் பிடிக்கலாம் என்று கண்கொத்திப் பாம்பாக களத்தில் ஊர்ந்து கொண்டிருக்கிறார்கள். இப்படிப் போட்டுக் கொடுத்து பிடிக்கப்பட்டதுதான், முசிறி அதிமுக எம்.எல்.ஏ.,வும் வேட்பாளருமான செல்வராஜ் காரிலேயே பிடிக்கப்பட்ட ஒரு கோடி ரூபாய்.

இந்த முறை எந்தக் கட்சி, எந்தக்கூட்டணி என்பதையெல்லாம் பார்க்காமல், வாக்காளர்களுக்குப் பணம் தருவதைத் தடுப்பதற்கு தேர்தல் ஆணையமும், வருமானவரித்துறையும் இணைந்து அதிரடிகளில் இறங்கியிருக்கின்றன. அலைபேசி ஒட்டுக்கேட்பு, அடிக்கடி வாகன சோதனைகள் என என்னென்னவோ செய்தாலும் எதற்குமே பிடிபடாமல் ‘புது ரூட்’டில் இந்த வேலைகளைச் செய்து கொண்டிருக்கிறார்கள் வேட்பாளர்கள் பலர். அமைச்சர் வேலுமணி போட்டியிடும் தொண்டாமுத்துார் தொகுதியில், ஆளும்கட்சியின் சார்பில் 3000 பொறுப்பாளர்களை நியமித்து, ஒரு நாளுக்கு ஆளுக்கு 50 பேர் வீதமாக, பத்து நாட்களில் யுபிஐ மற்றும் பணப்பரிவர்த்தனை செயலி மூலமாக பணம் அனுப்பப்படுவதாக புகார் கிளம்பியிருக்கிறது. ஒரே நபருக்கு நேரடியாக அனுப்பாமல், மளிகைக்கடை, ஜவுளிக்கடை, மருந்துக்கடை, ஓட்டல் என பல விதங்களில் பணம் பரிமாறப்படுகிறது. அது வாக்காளர்களுக்கு பொருளாகப் போய்ச் சேர்கிறது என்று நுணுக்கங்களை எல்லாம் கண்டு பிடித்திருக்கிறார்கள் திமுகவினர். ஆனால் தேர்தல் ஆணையத்திடம் புகார் கொடுத்தும் எதுவுமே நடக்கவில்லை என்று நொந்து போயிருக்கிறார் திமுக வேட்பாளர் கார்த்திகேய சிவசேனாதிபதி.

இது ஒரு சோறு பதம் போலத்தான். வெவ்வேறு தொகுதிகளில் வெவ்வேறு யுக்திகள் கையாளப்படுகின்றன.

மற்ற கட்சிகளை விட ஆளும்கட்சி தரப்பில்தான், இனிப்பு விநியோகம் முதலில் துவங்கியிருக்கிறது. மற்ற கட்சியினருக்குப் பணம் வரும் வழிகளை, வருமான வரித்துறையினரும், தேர்தல் ஆணையமும் தீவிரமாகக் கண்காணிப்பதால் இன்னும் ஆங்காங்கே தடைபட்டு நிற்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்பிருந்ததை விட, இப்போது போட்டி கடுமையாகிவருவதால், அனைத்துத் தொகுதிகளிலும் இனிப்பு விநியோகத்தை முன் கூட்டியே துவங்கி முடித்து விடுமாறு தலைமையிடமிருந்து ஆளும்கட்சியினருக்கு அறிவுறுத்தல் வந்திருப்பதாகத் தெரிகிறது. இதற்கேற்ப வேட்பாளர்களுக்கான ஸ்வீட் பாக்ஸ்களும் வந்து சேர்ந்திருப்பது கட்சிக்காரர்களாலேயே கலகலப்பாக விவாதிக்கப்படுகிறது.

இந்த முறை இனிப்பு விநியோகத்தை அதிமுக தலைமை எப்படி திட்டமிட்டிருக்கிறது என்று அந்தக் கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் பலரிடமும் விசாரித்தபோது கிடைத்த தகவல்கள் ஒரே மாதிரியாய் இருந்தன. இதிலிருந்தே கட்சித் தலைமை யாருக்கும் பாரபட்சம் காட்டவில்லை என்பது தெளிவாகியுள்ளது என்பதும் தெரிந்தது. மாவட்டச் செயலாளர்கள் மகிழ்வோடு பரிமாறிக்கொண்ட அந்த ரகசியங்கள் இதுதான்...

‘‘தேர்தல் என்று அறிவித்ததுமே, இந்த முறை வாக்காளர்களுக்கு எவ்வளவு இனிப்பு வழங்குவது என்பது பற்றி தலைமையில் தெளிவாகப் பேசி முடிவெடுத்து விட்டார்கள். இந்த முறை 177 தொகுதிகளில் அதிமுக நேரடியாகப் போட்டியிடுகிறது. இவற்றைத் தவிர்த்து, ஐந்து சிறிய கட்சிகள், இரட்டை இலைச் சின்னத்தில் போட்டியிடுகின்றன. இந்தத் தொகுதிகள் அனைத்துக்கும் தொகுதிக்கு 10 ஸ்வீட் பாக்ஸ் தருவது என்று தலைமையில் முடிவெடுக்கப்பட்டது. அதாவது தொகுதிக்கு 2 லட்சம் பேருக்கு தலைக்கு 500 சாக்லேட் என்று கணக்குப் போட்டு, ஸ்வீட் பாக்ஸ் தரப்பட்டுள்ளது.

அதற்கு மேல் அந்தந்த வேட்பாளர் அவரவருடைய கெப்பாசிட்டியைப் பொறுத்து, ஆயிரமோ, இரண்டாயிரமோ சேர்த்துக் கொடுக்கலாம் என்றும் தலைமை தெளிவாகக் கூறிவிட்டது. சொன்னதைப் போலவே, சென்ற சனி, ஞாயிறு ஆகிய இரண்டு நாட்களும் இரவோடு இரவாக எல்லா வேட்பாளர்களுக்கும் தலைமையிடமிருந்து நேரடியாக 10 ஸ்வீட் பாக்ஸ்கள் அனுப்பப்பட்டுவிட்டன. அதைப் பிரித்து ஒன்றியம், நகரம், கிளைக்கழகம் என விநியோகம் செய்யும் பணிகளும் வேகமாக நடந்து கொண்டிருக்கின்றன. எந்தெந்த வீடுகளுக்குக் கொடுக்க வேண்டும், எந்தெந்த வீடுகளைத் தவிர்க்க வேண்டும் என்பதற்கான பட்டியல்கள் ஏற்கெனவே பூத்வாரியாக தயார் செய்யப்பட்டுவிட்டன. இந்த வார இறுதி நாட்களில் பெரும்பான்மையான வாக்காளர்களுக்கு வீடு வீடாக இனிப்பு விநியோகம் துவங்கிவிடும்.’’ என்றவர்கள், கட்சி நிர்வாகிகள் தரப்பு வருத்தத்தையும் நம்முடன் பகிர்ந்து கொண்டனர்...

‘‘அம்மா இருந்தபோது, இந்த இனிப்பு விநியோகத்தில் கட்சி நிர்வாகிகளின் பங்களிப்பு மிக அதிகமாக இருக்கும். இந்த முறை அதை வேண்டுமென்றே தவிர்த்திருக்கிறார்கள். சென்ற 2019 ஆம் ஆண்டில் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில், பல தொகுதிகளில் இனிப்பு விநியோகம் சரிவர நடக்கவில்லை. ஒவ்வொரு நாடாளுமன்றத் தொகுதியிலும் ஐந்து அல்லது ஆறு சட்டமன்றத் தொகுதிகள் இருப்பதால், ஒரு தொகுதியில் அடித்தால் எப்படித் தெரியும் என்று நினைத்து, கொடுக்க வேண்டியதில் பாதியைத்தான் கொடுத்தார்கள். அதாவது தொகையைக் குறைக்காமல், வாக்காளர்களின் எண்ணிக்கையைக் குறைத்துவிட்டனர். ஆனால் இடைத்தேர்தல் நடந்த சட்டமன்றத் தொகுதிகளில், அமைச்சர்களே நேரடியாகக் கண்காணித்ததால் அந்தத் தவறு நடக்கவில்லை. அதனால்தான் ஆட்சியைக் காப்பாற்றிக் கொள்ள முடிந்தது.

ஆனால் நாடாளுமன்றத் தேர்தலில் கட்சிக்கு பலத்த அடி கிடைத்தது. அதன் காரணமாக, இந்த முறை நேரடியாக தலைமையிடமிருந்து வேட்பாளர்களுக்கு ஸ்வீட் பாக்ஸ்களை அனுப்பி விட்டார்கள். அவர்கள் கட்சி நிர்வாகிகளையும், தங்களுக்கு விசுவாசமானவர்களையும் சேர்த்து கமிட்டிகளை அமைத்து, இனிப்பு விநியோகத்தைச் செய்து கொள்ளுமாறு தலைமை சார்பில் அறிவுறுத்தியிருக்கிறார்கள். ஆனால் இது கட்சிக்கு விசுவாசமாக வேலை பார்த்த நிர்வாகிகளுக்கு வேதனையை ஏற்படுத்தியிருக்கிறது. அவர்கள் ‘எங்கோ சில பகுதிகளில் நடந்த தவறுகளைக் கருத்தில் கொண்டு, தலைமை இப்படிச் செய்திருக்கக்கூடாது. எப்போதும் போல கிளைக்கமிட்டி, பகுதிக்கழக கமிட்டி, நகர கமிட்டி, தொகுதி கமிட்டிகளை அமைத்து, அந்த கமிட்டிகள் மூலமாகத்தான் இனிப்பு விநியோகத்தைச் செய்திருக்க வேண்டும்.’ என்று குமுறுகிறார்கள்.

உண்மையில் இதுபோன்ற தேர்தல் நேரத்தில்தான் கட்சி நிர்வாகிகள் கொஞ்சம் காசு பார்ப்பார்கள். அதற்கும் இப்போது ஆப்பு வைத்து விட்டார்கள். ஏற்கெனவே அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் எல்லோரும் மானாவாரியாகச் சம்பாதித்திருப்பதைப் பார்த்திருக்கிற கட்சி நிர்வாகிகள், முன்பு போல போஸ்ட்டிங், டிரான்ஸ்பர், காண்ட்ராக்ட் போன்றவற்றில் தங்களுக்கு எந்தப் பங்கும் கிடைப்பதில்லை என்ற குமுறலில் இருக்கிறார்கள். இப்போது வாக்காளர்களுக்குத் தர வேண்டிய இனிப்பு விநியோகத்தில் தங்களுக்கு எந்தப் பங்கும் இல்லை என்று சொன்னதால் கடுப்பாகியிருக்கிறார்கள். அமைச்சர்கள், நன்றாகச் சம்பாதித்த எம்எல்ஏக்கள் தொகுதிகளில் தண்ணீராய்க் காசு புழங்குவதால் எந்தப் பிரச்சினையுமில்லை. ஆனால் தலைமை கொடுத்துள்ள பணத்தை மட்டுமே நம்பி, களத்தில் நிற்கும் வேட்பாளர்களின் நிலைமைதான் பரிதாபம். தேர்தல் முடியும்போதுதான் இந்த அதிருப்தியின் விளைவு தெரியும்!’’ என்றார்கள்.

தொகுதிக்கு 10 ஸ்வீட் பாக்ஸ் என்று வைத்துக்கொண்டாலும், 180 தொகுதிகளுக்கு 1800 ஸ்வீட் பாக்ஸ்கள் விநியோகம் நடந்திருக்கிறது. இதில் பிடிபட்டிருப்பது ஒரே ஸ்வீட் பாக்ஸ் மட்டும்தான். மற்றவையெல்லாம் எப்படி, யாரால், எந்த ரூட்டில் கொண்டு செல்லப்பட்டன, அங்கிருந்து எப்படி தொகுதிக்குள் பரிமாறப்படுகின்றன என்பதெல்லாம் கற்பனைக்கு எட்டாத விஷயங்களாகவுள்ளன. தேர்தல் ஆணையமும், வருமானவரித்துறையும் ‘நேர்மையான தேர்தல்’ என்ற இலக்கோடு செயல்படுவதாகக் கூறுவது மாபெரும் கேலிக்கூத்தாகேவே உள்ளது. இதில் ‘நேர்மை’ என்பதற்கு எந்த அர்த்தமும் இருப்பதாகவும் தெரியவில்லை.

வில்லன் படத்தில் கருணாஸ் பரிதாபமாகச் சொல்லும் டயலாக்தான் நினைவுக்கு வருகிறது...

‘‘உங்க ‘டக்’ இவ்வளவுதானா சார்?’’

–பாலசிங்கம்

திருமண அனுமதி: சேகர்பாபுவிடம் கேட்பதை தடுத்த தினகரன்

4 நிமிட வாசிப்பு

திருமண அனுமதி: சேகர்பாபுவிடம் கேட்பதை தடுத்த தினகரன்

’மத்திய’ பிரதேசத்தில் இருந்து எம்பியாகும் ஒன்றிய அமைச்சர் ...

4 நிமிட வாசிப்பு

’மத்திய’ பிரதேசத்தில் இருந்து எம்பியாகும் ஒன்றிய அமைச்சர்  முருகன்

ஒரு கட்சிக்குக் காய்ச்சலே வந்துவிட்டது: மோடி

3 நிமிட வாசிப்பு

ஒரு கட்சிக்குக் காய்ச்சலே வந்துவிட்டது: மோடி

புதன் 24 மா 2021