மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 24 மா 2021

’கட்சியிலேயே சேரல, வேட்பாளரா?’-வேட்பாளர்களை மாற்றியது பாஜக!

’கட்சியிலேயே சேரல, வேட்பாளரா?’-வேட்பாளர்களை மாற்றியது பாஜக!

மேற்குவங்கத்தில் அறிவித்த இரண்டு வேட்பாளர்களும் ‘கட்சியிலேயே சேராத எங்களை எப்படிய்யா வேட்பாளர் ஆக்கமுடியும்?’ எனக் கேட்டதால், பாஜக தலைமைக்கு பெருத்த அவமானமாகிப்போனது. அந்த இரண்டு இடங்களையும் சேர்த்து பாஜகவின் கடைசிக் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

எட்டு கட்டங்களாகத் தேர்தல் நடைபெறும் மேற்குவங்கத்தில் வரும் 27ஆம் தேதி முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதல் கட்டப் பிரச்சாரம் முடிவடையவுள்ள நிலையில், பாஜக மற்றும் திரிணமூல் காங்கிரஸ் கட்சியினரிடம் வேட்பாளர் பட்டியல் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது. குறிப்பாக, பாஜகவில் கடுமையான எதிர்ப்பையும் உண்டாக்கியிருக்கிறது.

திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்களில் எதிர்ப்பு கிளம்பும் இடங்களில் சில வேட்பாளர்கள் மாற்றப்பட்டுள்ளனர். பாஜகவிலோ பெரிய அளவுக்கு மாற்றங்கள் இல்லை என்றாலும் தொகுதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

நேற்று வெளியிடப்பட்ட 11 பேர் கொண்ட பாஜக வேட்பாளர் பட்டியலில், மத்திய அரசின் முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அசோக் லாகிரியின் பெயர் மீண்டும் இடம்பெற்றுள்ளது. இவர், முன்னதாக அலிப்பூர்துவார் தொகுதியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். அதற்கு தொகுதியில் கடும் எதிர்ப்பு கிளம்பி, போராட்டங்களும் நடத்தப்பட்டன. சொந்தக் கட்சி அலுவலகத்தின் மீதே பாஜகவினர் தாக்குதல் நடத்தினர். அதையடுத்து அசோக் லாகிரி அந்தத் தொகுதியில் போட்டியிடமாட்டார் என அறிவிக்கப்பட்டது. டெல்லியில் வசித்துவரும் அவரின் பெயர், வங்கத்தில் இடம்பெறவில்லை என பாஜக தரப்பு காரணம் கூறியது. இது குறித்து நாம் ஏற்கெனவே செய்தி வெளியிட்டிருந்தோம்.

ஆனால் நேற்றைய பாஜக பட்டியலில் பாலுர்காட் தொகுதி வேட்பாளராக அசோக் லாகிரி அறிவிக்கப்பட்டுள்ளார். இந்தத் தொகுதியில் ஏப்ரல் 26ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

இந்தப் பட்டியலில் இடம்பிடித்திருக்கும் இன்னொரு முக்கிய வேட்பாளர், ஓய்வுபெற்ற ராணுவத் தளபதி லெப்.ஜெனரல் சுப்ரதா சகா. கொல்கத்தாவின் ராச்பீகாரி தொகுதியில் அவர் நிறுத்தப்பட்டிருக்கிறார். இராணுவத்துக்கான இந்தியாவில் உற்பத்தி செய், திட்டத்துக்காக போஸ்டர் பாய் என பெயர்வாங்கிய சுப்ரதா, ராணுவத்தில் 2016 வடிவமைப்பு அமைப்பு ஒன்றை உருவாக்கியவர்.

சௌரிங்கீ தொகுதியில் அறிவிக்கப்பட்ட சிகா மித்ரா சௌத்ரி, காசிப்பூர் பெல்கச்சியா யில் அறிவிக்கப்பட்ட தருண் சாகா இருவரையும் நேற்றைய அறிவிப்பின் மூலம் திரும்பப்பெற்றுக்கொண்டது. அவர்களுக்குப் பதிலாக வேறு இருவர் புதிதாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

ஏற்கெனவே அறிவிக்கப்பட்டு போட்டியிட மறுத்தவர்கள் இருவரும் வெளியிட்ட தகவல், எல்லா தரப்பினரையும் அதிர்ச்சியடையச் செய்தது.

இவர்களில் சிகா மாநில காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோமன் மித்ராவின் மனைவி ஆவார். மம்தாவின் முன்னாள் சகாவும் இப்போதைய நந்திகிராம் தொகுதி பாஜக வேட்பாளருமான சுவேந்து அதிகாரிக்கு நெருக்கமான குடும்பம் எனும் நிலையில், சிகா மித்ரா பாஜகவில் இணைவார் என்று பேசப்பட்டது. ஆனால் பட்டியல் வெளியானதும் காணொலி ஒன்றை வெளியிட்ட சிகா, ” எந்தத் தொகுதியிலும் நான் போட்டியிடப் போவதில்லை. என்னிடம் எதுவும் பேசாமல் அவர்களாகவே என் பெயரை வேட்பாளராக அறிவித்திருக்கிறார்கள். நான் இதுவரை பாஜகவில் சேரக்கூட இல்லை. காங்கிரஸ் பாரம்பர்யக் குடும்பத்தைச் சேர்ந்த நான், எப்படி பாஜக வேட்பாளராகப் போட்டியிடுவேன்?” என ஒரேயடியாக மறுத்திருந்தார்.

இப்போதும் அவர் காங்கிரஸ் கட்சியில் இருந்துவருகிறார். தருண் சாகா, இதே தொகுதியில் இரண்டாவது முறையாக சட்டமன்ற உறுப்பினராக இருந்துவரும் திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் மாலா சகாவின் கணவர் ஆவார். வேட்பாளர் பட்டியலில் பெயரைச் சேர்ப்பதற்கு முன்னர் தன்னிடம் பாஜக தரப்பில் யாரும் ஒருவார்த்தைகூடப் பேசவில்லை என்று சாகா அதிர்ச்சி தெரிவித்திருந்தார்.

அந்த இரண்டு தொகுதிகளுக்கும் இப்போது மாவட்ட பாஜக நிர்வாகிகளை நிறுத்தியிருக்கிறது, அக்கட்சியின் தலைமை.

இந்தப் பட்டியலிலாவது மாற்றம் இருக்காது என எதிர்பார்க்கலாம் என கிண்டல் செய்கிறார்கள், மாநிலத்தில் உள்ள மாற்று கட்சியினர்.

- இளமுருகு

கொலைப் புகார்: கடலூர் திமுக எம்பியை ராஜினாமா செய்ய ஸ்டாலின் ...

12 நிமிட வாசிப்பு

கொலைப் புகார்: கடலூர் திமுக எம்பியை ராஜினாமா செய்ய ஸ்டாலின் உத்தரவு!

பிடிஆருக்கு ஜிஎஸ்டி கவுன்சிலில் முக்கியப் பொறுப்பு!

3 நிமிட வாசிப்பு

பிடிஆருக்கு ஜிஎஸ்டி கவுன்சிலில் முக்கியப் பொறுப்பு!

முதல்வர் வழியில் எழுக பி.டி.ஆர்!

7 நிமிட வாசிப்பு

முதல்வர் வழியில் எழுக பி.டி.ஆர்!

புதன் 24 மா 2021