மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 23 மா 2021

அசாமில் அபாயம்- அலறும் பாஜக; பதில்கேள்வி கேட்கும் காங்கிரஸ்!

அசாமில் அபாயம்- அலறும் பாஜக; பதில்கேள்வி கேட்கும் காங்கிரஸ்!

மூன்று கட்ட அசாம் மாநில சட்டப்பேரவைத் தேர்தலில், வரும் 27ஆம் தேதி முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது. பிரச்சாரம் முடிவடைய இன்னும் இரண்டு நாட்களே இருக்கையில், மத்திய, மாநில ஆளும் கட்சியான பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் அகில இந்தியத் தலைவர்கள் தேர்தல் களத்தைச் சூடாக்கி வருகின்றனர்.

மாநிலத்தை ஆளும் பாஜக, அசாம் கண பரிசத் கட்சியை முக்கிய பங்காளிக் கட்சியாகக் கொண்டு களமிறங்கியுள்ளது. காங்கிரஸ் தலைமையில் பத்து கட்சிகள் பெருங்கூட்டணி அமைத்து எதிர்த்து நிற்கிறது. இதில் பத்ருதீன் அஜ்மல் தலைமையிலான அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணியும் இடம்பெற்றுள்ளது. இதையொட்டி பாஜக தரப்பில் அக்கட்சியின் முன்னாள் தலைவர் அமித்ஷா, இன்னாள் தலைவர் நட்டா, பிரதமர் மோடிவரை, காங்கிரஸ் கூட்டணி ஆட்சிக்கு வந்தால் ஊடுருவல் அதிகரித்துவிடும் என்பதை முக்கியமாகப் பேசி வருகின்றனர்.

மற்ற மாநிலத் தேர்தல்களைப் போலவே, இங்கும் பிரச்சாரம் செய்த பாஜக முதலமைச்சர்களான உத்தரப் பிரதேசத்தின் யோகி ஆதித்யநாத், மத்தியப் பிரதேசத்தின் சிவராஜ் சிங் சௌகான் ஆகியோரும், மலைப்பகுதிகளில் மட்டும் ஊடுருவல் விவகாரத்தை அதிகமாக மையப்படுத்தினார்கள். இலங்கையில் சிங்கள வெறியர்களால் ஈழத்தமிழர்கள் அடித்துவிரட்டப்பட்டதைப் போல, வங்காள தேசத்திலிருந்து அடித்து விரட்டப்பட்ட வங்காளிகள் அசாம் உள்பட்ட வடகிழக்கு மாநிலங்களில் தஞ்சம் புகுந்தனர்.

அதையொட்டி உள்ளூர் மக்களுக்கும் அவர்களுக்கும் இடையே வாழ்வாதாரப் பிரச்சினை எழுந்தது. அரசாங்கங்கள் முறைப்படுத்தாத நிலையில் அது மக்களுக்கு இடையிலான பிரச்சினையாக நீடித்து வருகிறது. இன்றுவரை தொடரும் அந்த விவகாரத்தை பாஜக தனக்குச் சாதகமாகப் பயன்படுத்த முனைகிறது. ஐக்கிய ஜனநாயக முன்னணிதான் ஊடுருவல் காரர்களைப் பாதுகாக்கிறது; அந்த அமைப்போடு காங்கிரஸ் கூட்டு வைத்திருக்கிறது என்பது பாஜகவின் குற்றச்சாட்டு.

அசாமில் பிரச்சாரம் செய்த இடங்களில் எல்லாம் அமித்ஷாவும் மோடியும் இந்த விவகாரத்தையே முக்கியமானதாகப் பேசினார்கள்.

காங்கிரஸ் தரப்பில் தருண் கோகாய் இல்லாத முதல் தேர்தல் எனும் நிலையில், ராகுல் காந்தியும் பிரியங்காவும் மாறிமாறி அங்குப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சத்தீஸ்கர் முதலமைச்சர் பூபேஷ் பாகலும் அகில இந்தியப் பொதுச்செயலாளர்களில் ஒருவரான ரந்தீப் சுர்ஜிவாலாவும் அவர்களுடன் கைகோர்த்துள்ளனர்.

” அசாமில் தேசப் பாதுகாப்புக்கு ஆபத்து, ஐயோ ஊடுருவல்காரர்கள் என பாஜகவினர் பேசுகிறார்கள்.. அமித்ஷா அவர்களையும் மோடி அவர்களையும் கேட்கிறேன்.. கடந்த ஆறு ஆண்டுகளாக இங்கு யாருடைய ஆட்சி இருந்துவருகிறது? ஏழு ஆண்டுகளாக மத்தியில் மோடி அவர்கள்தான் ஆட்சி செய்துவருகிறார். நாட்டின் எல்லையைப் பாதுகாக்கவேண்டியது அமித்ஷா, ராஜ்நாத்சிங், மோடி ஆகியோரின் கடமைதானே? அப்படியானால் அவர்களின் பொறுப்பை நிறைவேற்றுவதில் தோற்றுப் போய்விட்டார்கள் என்றுதானே பொருள்.. அவர்களால் ஊடுருவலைக் கண்காணித்துத் தடுக்கமுடியவில்லை.. எனவே, எங்களிடம் ஆட்சியைக் கொடுங்கள். நாங்கள் அதைச் செய்துகாட்டுகிறோம்..” என்று சுர்ஜிவாலா பதில் அளித்துள்ளார்.

அசாம் மாநில தேர்தலில் காங்கிரஸ் பொறுப்பாளர்களில் ஒருவரான பூபேஷ் பாகலும் இதில் பாஜக தரப்புக்குப் பதிலடி தந்திருக்கிறார்.

“ ஐக்கிய ஜனநாயக முன்னணி வகுப்புவாத சக்தி, அது ஊடுருவல்காரர்களை ஆதரிக்கிறது என்றால் மாவட்ட ஊராட்சித் தேர்தலில் அந்தக் கட்சியுடன் பாஜக கூட்டணி வைத்துக்கொண்டது ஏன்? அவர்களிடம் சொல்லிக்கொள்ள எதுவும் இல்லையென்றால் எல்லாவிதமான பொய்களையும் தூக்கிக்கொண்டு வந்துவிடுவார்கள். ஊடுருவல்காரர்களைப் பற்றிப் பேசுகிறவர்கள், அசாமுக்கு எதிரான குடியுரிமை திருத்தச் சட்டத்தைப் பற்றி பேசமாட்டார்கள். எங்கள் அணியில் இருக்கும் மற்ற எட்டு கட்சிகளையும் பற்றி அவர்கள் பேசுவதில்லையே? மக்கள் அவர்கள் செய்வதைப் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். வாக்களிக்கும்போது அதற்கு பதில் தருவார்கள்.” என நம்பிக்கையோடும் பேசியிருக்கிறார், பூபேஷ் பாகல்.

- இளமுருகு

டிஜிட்டல் திண்ணை: சென்னை யார் கையில்? சேகர்பாபு vs மா.சுப்பிரமணியன் ...

10 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: சென்னை யார் கையில்?  சேகர்பாபு vs  மா.சுப்பிரமணியன்

மீண்டும் எட்டு வழிச் சாலை! காய் நகர்த்தும் கட்கரி

10 நிமிட வாசிப்பு

மீண்டும் எட்டு வழிச் சாலை!  காய் நகர்த்தும் கட்கரி

டிஜிட்டல் திண்ணை: கனிமொழியா? உதயநிதியா? மேயர் ரேஸ்

11 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை:  கனிமொழியா? உதயநிதியா?  மேயர் ரேஸ்

செவ்வாய் 23 மா 2021