மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 23 மா 2021

திமுக, அதிமுக வேட்பாளர்களைத் திணறடிக்கும் தேமுதிக வேட்பாளர் ஜெயலட்சுமி

திமுக, அதிமுக வேட்பாளர்களைத் திணறடிக்கும் தேமுதிக வேட்பாளர் ஜெயலட்சுமி

மதுரை மாவட்டத்திற்குள் வரும் சோழவந்தான்(தனி) தொகுதியில் தேமுதிக வேட்பாளராக ஜெயலட்சுமி போட்டியிடுகிறார்.  வேட்பு மனு வாபஸ் வாங்குவதற்கான கடைசி நாளான நேற்று (மார்ச் 22) மாலை 3 மணிவரை திமுக- அதிமுக- தேமுதிக தரப்பில் பரபரப்பும்- பதட்டமும் நிலவியது. காரணம் தேமுதிக வேட்பாளராகப் போட்டியிடும் ஜெயலட்சுமி தான்

கடந்த ஐந்து சட்டமன்ற தேர்தலில் திமுக, அதிமுக தரப்பில் இந்த தொகுதியைச் சேர்ந்தவர்களுக்கு ஒரு முறை மட்டுமே இந்த கட்சிகள் வாய்ப்பு கொடுத்திருக்கின்றன. அதில்  கடந்த தேர்தலில் அதிமுக வேட்பாளர் கருப்பையா வெற்றிபெற்றார். திமுக சார்பில் போட்டியிட்ட பவானி குறைந்த வாக்குகளில் வெற்றிவாய்ப்பை இழந்தார்.

2021 தேர்தலில் இந்த தொகுதியில் அதிமுக- திமுக இரு கட்சியிலும் இருப்பவர்கள் போட்டியிட விருப்ப மனு கொடுத்திருந்த போதிலும் வழக்கம்போல வெளி தொகுதி ஆட்களுக்கே போட்டியிட வாய்ப்பு வழங்கியிருக்கிறது திமுக - அதிமுக இரு கட்சிகளுமே

இதிலிருந்து வேறுபட்டு, அந்த தொகுதியைச் சேர்ந்த சாதாரண தலித் சமூகத்தைச் சேர்ந்த ஜெயலட்சுமியை, பிரேமலதா விஜயகாந்த் விருப்பத்தின் அடிப்படையில் வேட்பாளராக தேமுதிக அறிவித்தது. இது, அனைத்து கட்சி வேட்பாளர்களுக்கும் இப்படி ஒரு நெருக்கடியை ஏற்படுத்தும் என அவர்களே எதிர்பார்க்கவில்லை

ஏற்கனவே இத்தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் மதுரையைச் சேர்ந்த மாணிக்கம்  வெற்றிபெற்ற பின் தொகுதி மக்களை அந்நியர்களைப் போல பார்த்ததுடன், தொகுதிக்கான வளர்ச்சி பணிகள் எதையும் முன்னெடுக்கவில்லை. இதன் காரணமாக தற்போது பிரச்சாரத்திற்குப் போகும் ஊர்களில் கடுமையான எதிர்ப்பை சந்தித்து வருகிறார். பல ஊர்களில் ஊருக்குள்ளேயே அவரை வாக்கு கேட்க நுழையவிடவில்லை. இதன் காரணமாக திமுக வேட்பாளர் எளிதாக வெற்றிபெற்று விடுவார் என திமுக கணக்குப் போட்டதைத் தவிடுபொடியாக்கி வருகிறது தேமுதிக - அமமுக கூட்டணி.

வைகை பாசன பகுதிகளையும், வானம் பார்த்த விவசாய பகுதிகளையும் சம அளவில் கொண்டது சோழவந்தான் தொகுதி. 1962 முதல் இதுவரை இந்த தொகுதியில் வெற்றி பெற்றவர்கள், போட்டியிட்டவர்கள் அனைவரும் வைகை பாசன நிலப்பரப்பு பகுதியைச் சேர்ந்தவர்கள்

வானம் பார்த்த பூமியைச் சேர்ந்த ஆதனூர்பவானி கடந்த தேர்தலில் தோற்றுப்போனார். இந்த முறை தேமுதிக சார்பில் போட்டியிடும் முடுவார்பட்டி ஜெயலட்சுமி வானம் பார்த்த நிலப்பரப்பைச் சேர்ந்தவர் என்பதுடன் தலித் என்பது குறிப்பிடத்தக்கது. பிற கட்சிகளின் வேட்பாளர்கள் அனைவரும்" தேவேந்திரகுல வேளாளர்கள்" சமூகத்தைச் சார்ந்தவர்கள்

தொகுதியைச் சேர்ந்த தலித் சமூகத்தவர்கள் போட்டியிட வாய்ப்பு கேட்டும் வாய்ப்பு வழங்கப்படாதது திமுக-அதிமுக இரு கட்சியினரிடமும் கடுமையான அதிருப்தியையும்,மனச்சோர்வையும் ஏற்படுத்தியிருக்கிறது. தொகுதியில் பெரும்பான்மை வாக்காளர்களாக 70,000ம் பேர் உள்ள முக்குலத்தோர் சமூகத்தில் பலம் பொருந்திய கட்சியாக அமமுக உள்ளது

தேமுதிக கட்சியின் கூட்டாளியான இவர்கள், அதிமுகவிற்கு வாக்களிக்க மாட்டார்கள் அதேபோன்று வருடம் முழுவதும் தங்களுடன் சமூக ரீதியாக மோதல் போக்கை தொடரும் தேவேந்திரகுல வேளாளர் சமூக வேட்பாளர்களுக்கு வாக்களிக்க மாட்டார்கள். உதயசூரியன் இவர்களது ஜென்ம விரோதி என்பதால் இவர்களின் ஒரே தேர்வாக தேமுதிகவின் முரசு சின்னமாக இருக்கிறது.

 முக்குலத்தோர் சமூகத்திற்கு அடுத்தபடியாக வேளாளர்கள் சமூக வாக்குகள் உள்ளது. இவர்களுக்கும் தேவேந்திரகுல வேளாளர்களுக்கும் ஜென்ம பகை. இந்த சமூகம் மதுரை மாவட்ட அளவில் இவர்களுக்கு வாக்களிக்க வேண்டாம் என கடிதம் அனுப்பியதுடன் தொடர் பிரச்சாரத்தையும் மேற்கொண்டுவருகிறது. இச்சங்கத்தின் மாவட்ட தலைவர் ஷகீலா, அலங்காநல்லூர் ஊர்சேரி கிராமத்திற்கு அதிமுக வேட்பாளர் மாணிக்கத்துக்கு வாக்கு கேட்க வந்தபோது ஊர் நுழைவிலேயே அவரை முன்னேற விடாமல் தடுத்து போராட்டம் நடத்தி கைது செய்யப்பட்டார்.

தொகுதியில் 60,000ம் வாக்குகளை வைத்திருக்கும் தலித் சமூகம் தங்களுக்குக் கிடைத்திருக்கும் அரிய வாய்ப்பை பயன்படுத்தி ஜெயலட்சுமியை வெற்றியடையச் செய்யக் கட்சி வேறுபாடுகளைக் கடந்து முரசு சின்னத்துக்கு வாக்களிக்க வேண்டுமென்ற முனைப்புடன் அச்சமூக இளைஞர்கள் களப்பணியாற்றி வருகின்றனர். இவை அணைத்தும்தான் திமுக- அதிமுக வேட்பாளர்களை அதிர வைத்து பயமுறுத்திக் கொண்டிருந்தது

இதற்குக் காரணமாக இருக்கும் தேமுதிக வேட்பாளர் ஜெயலட்சுமி ஒரு ஏழை. தேர்தலில் மற்றவர்களுக்கு இணையாகப் பணம் செலவு செய்ய முடியாது. எனவே அமமுக சார்பில் வேட்பாளரை நிறுத்துவதற்கு இரு கழகங்களும் குறுக்குவழியைக் கையாண்டது. இதனை தேமுதிகவைக் காட்டிலும் மோப்பம் பிடித்த அமமுக மாவட்ட செயலாளரும் உசிலம்பட்டி தொகுதி வேட்பாளருமான மகேந்திரன் வேட்பாளரை மாற்றுவது என்கிற பேச்சுக்கு இடமில்லை, ஜெயலட்சுமி தான் வேட்பாளர். அவர் வெற்றிபெற தேர்தல் செலவுக்கு பணத்தை எதிர்பாராமல் வேலை செய்யுங்கள் என தனது கட்சியினருக்கு அறிவுறுத்திய பின் தொகுதிக்குள் தேமுதிக வேட்பாளருக்கான தேர்தல் வேலை சூடுபிடித்தது.

வேட்பாளரை மாற்றும் முயற்சி பலன் தராததால் வேட்பாளரின் குடும்ப பின்னணி, வசதியின்மையைப் பயன்படுத்தி வேட்புமனுவை வாபஸ் வாங்குவதுடன் கட்சிமாறுவதற்கான பேச்சுவார்த்தையை தேமுதிக வேட்பாளரின் உறவினர்கள் மூலம் கழகங்களால் முயற்சிக்கப்பட்டது

தேமுதிக வேட்பாளர் ஜெயலட்சுமியின் கணவர், ஒன்றிய துணை செயலாளராக பணியாற்றியவர் திடீர் என ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக நான்கு மாதங்களுக்கு முன்பு காலமானார். வருடம் திரும்புவதற்கு முன்பே கணவருக்குக் கிடைக்காத வாய்ப்பை கட்சி எனக்கு வழங்கியிருக்கிறது. கணவரே இல்லை என்றான பின்பு மாற்றுக் கட்சி கொடுக்கும் பணத்தை வாங்கிக்கொண்டு வாழ்நாள் முழுவதும் துரோகத்தின் அடையாளமாக நானும் எனது சந்ததியும் இருக்க விரும்பவில்லை. சராசரி அரசியல்வாதியாக இருப்பதைவிட சத்திரியானவளாக, சத்தியத்துக்குக் கட்டுப்பட்டவளாக வாழ விரும்புகிறேன் என தன்னிடம் பேரம் பேசியவர்களிடம் ஜெயலட்சுமி கூறியதாகத் தெரிகிறது

x

இது தெரியாமல் தேமுதிக-அமமுக இரு தரப்பும் நேற்று மாலை 3 மணிவரை ஜெயலட்சுமிக்கே தெரியாமல் காவலுக்கு ஆள் போட்டு அவரை கண்காணித்ததை எண்ணி வருத்தப்பட்டு வருகின்றனர்

தேமுதிகவின் சார்பில் போட்டியிடும் 60 தொகுதிகளில் மதுரை மாவட்டத்தில் மதுரை மேற்கில் அமைச்சர் செல்லூர் ராஜுவை எதிர்த்தும், சோழவந்தான் தனித் தொகுதியிலும் வேட்பாளரை நிறுத்தி உள்ளது

தேமுதிக சார்பில் வில்லிவாக்கம், விருத்தாசலம், அவினாசி, சோழவந்தான் என நான்கு தொகுதிகளில் மட்டுமே பெண் வேட்பாளர்கள் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.  இதில் சோழவந்தான் மட்டுமே தலித் வேட்பாளர் என்பதால் தேமுதிக தலைமையும், பிரேமலதா விஜயகாந்தும் தனிக் கவனம் செலுத்துகின்றனரா என விசாரித்த போது,   ‘அது மட்டும் காரணமில்லை தலைவர் விஜயகாந்த் அம்மா பிறந்த ஊர் தெத்தூர் மேட்டுப்பட்டி, சோழவந்தான் தொகுதியில் உள்ளது.  இப்போதும் அவரது ரத்த சம்பந்த உறவுகள் அங்கு வசித்து வருகின்றனர்.  விஜயகாந்த்துக்கு தாய்ப்பாசம், பிரேமலதாவுக்கு மாமியார் பாசம்’ என்றனர்

அதனையும் கடந்து இங்கு இருக்கும் சாதிய முரண்பாடுகள், அதிமுக- திமுக மாவட்ட செயலாளர்கள் தொகுதியினரை மதிக்காமல் கட்டிங் வாங்கிகொண்டு வெளியாட்களுக்குத் தொகுதியை விற்பனை செய்வதால் கட்சியினரிடையே ஏற்பட்டிருக்கும் அதிருப்தியைப் பயன்படுத்தி சோழவந்தான் தொகுதியை தேமுதிக-அமமுக கூட்டணி தட்டி தூக்கப் போராட்டத்தை உக்கிரமாக்கி வருகிறது.

-இராமானுஜம்

ஸ்டாலின் ஆபரேஷன் சக்சஸ்: உள்ளாட்சித் தேர்தலில் பாமக தனித்துப் ...

8 நிமிட வாசிப்பு

ஸ்டாலின் ஆபரேஷன் சக்சஸ்:  உள்ளாட்சித் தேர்தலில் பாமக தனித்துப் போட்டி -  எம்.பி. தேர்தலில் திமுக கூட்டணி!

எம்.எல்.ஏ.வாக ஆகியிருக்கலாமோ? ஏக்கத்தை வெளிப்படுத்திய கனிமொழி! ...

4 நிமிட வாசிப்பு

எம்.எல்.ஏ.வாக ஆகியிருக்கலாமோ?  ஏக்கத்தை வெளிப்படுத்திய கனிமொழி!

ராஜ்யசபா: காங்கிரசுக்கு திமுக கதவு சாத்திய பின்னணி!

3 நிமிட வாசிப்பு

ராஜ்யசபா:  காங்கிரசுக்கு திமுக கதவு சாத்திய பின்னணி!

செவ்வாய் 23 மா 2021