அதிமுகவினர் பாஜக எம்.எல்.ஏ.வாக மாறிவிடுவார்கள்: ஸ்டாலின்

politics

திமுக தலைவர் ஸ்டாலின் தமிழகம் முழுவதும் சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இன்று கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனஹள்ளி தொகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

கிருஷ்ணகிரி திமுக வேட்பாளர் செங்குட்டுவன், வேப்பனஹள்ளி திமுக வேட்பாளர் முருகன், தளி தொகுதி இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் ராமச்சந்திரன், ஊத்தங்கரை காங்கிரஸ் வேட்பாளர் ஆறுமுகம் ஆகியோரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தைத் தந்த அந்த உரிமையோடு ஆதரவு கேட்க வந்திருக்கிறேன் என்று பேசத் தொடங்கிய திமுக தலைவர் ஸ்டாலின், “மறைந்த முதல்வர் ஜெயலலிதா உயிரோடு இருந்தபோது, பொதுக்குழு நடந்த நேரத்தில் அதிமுகவைச் சேர்ந்த பொதுக்குழு உறுப்பினர்கள் கோஷமிட்டார்கள். அதற்குப் பிறகு ஜெயலலிதா அருகிலிருந்தவர்களிடம் விசாரித்தபோது, ‘கே.பி.முனுசாமியைப் பற்றித்தான் கோஷமிடுகிறார்கள். எல்லாவற்றிலும் 30 சதவிகிதம் கமிஷன் வாங்குகிறார். அதனால் அவருக்கு 30 சதவிகிதம் முனுசாமி என்று பட்டம் சூட்டி இருக்கிறார்கள்’ என்று சொன்னார்கள்.

அடுத்த நிமிடமே அவரது அமைச்சர் பதவியை ஜெயலலிதா பறித்து விட்டார். இப்போது அவர் மறைவிற்குப் பிறகு முனுசாமிக்கு ஒரு புது வாழ்க்கை கிடைத்திருக்கிறது. அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீரையும், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமியையும் மிரட்டி பதவி வாங்கி விட்டார்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஆளுங்கட்சி சார்பில் வேட்பாளராக நிறுத்தப்பட்ட கே.பி.முனுசாமி அந்த தேர்தலில் தோல்வி அடைந்தார். மீண்டும் அவருக்கு மாநிலங்களவை எம்.பி. பதவி கொடுத்தார்கள். இதற்கிடையில் இப்போது எம்.எல்.ஏ. சீட் கொடுத்திருக்கிறார்கள். அப்படிப்பட்டவரை நாம் தோற்கடிக்க வேண்டுமா? வேண்டாமா?. கே.பி.முனுசாமி அதிமுகவுக்கு துணை நிற்கிறாரோ இல்லையோ…பாமகவுக்கு ஒரு ஏஜெண்டாகவே செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்” என்று விமர்சித்தார்.

தொடர்ந்து அமைச்சர்கள் மீதான ஊழல் புகார் குறித்து பேசிய அவர், “ உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணி, உள்ளாட்சித் துறையின் மூலமாகத் தெருவிளக்கு மாற்றுவதில், ஸ்மார்ட் சிட்டி உருவாக்குவதில், கொரோனா காலத்தில் பல கோடி ரூபாய் கொள்ளை அடித்திருக்கிறார்.

மின்சார அமைச்சர் தங்கமணி, நிலக்கரி இறக்குமதியில் ஊழல், காற்றாலை ஊழல், மின் கொள்முதலில் ஊழல், உதிரிபாகங்கள் கொள்முதல் செய்வதில் ஊழல் எனப் பல கோடி ரூபாய் அவர் துறையில் ஊழல் நடந்திருக்கிறது.

மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார் , மீனவர்கள் பாதுகாப்புக்காக வாங்கும் வாக்கி டாக்கியில் கொள்ளை அடித்திருக்கிறார். வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார், பாரத் நெட் டெண்டரில் ஊழல் செய்திருக்கிறார். சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், குட்காவை காவல்துறையினர் துணையோடு சதவிகிதக் கணக்கில் கமிஷன் வாங்கிக்கொண்டு தாராளமாக விநியோகிக்கும் சூழ்நிலையை ஏற்படுத்தி இருக்கிறார். அதில் கோடி கோடியாக கொள்ளை அடித்து இருக்கிறார். குவாரி ஊழல், கொரோனா தடுப்புக்கான கொள்முதலில் ஊழல் செய்திருக்கிறார்.

உணவுத்துறை அமைச்சர் காமராஜ், கொரோனா காலத்தில் மத்திய அரசிடமிருந்து வந்த அரிசியைக் கொள்முதல் செய்ததில் கோடி கோடியாகக் கொள்ளை அடித்து இருக்கிறார்.

எனவே, ஊழலுக்காக ஊழல்வாதிகளால் நடத்தப்படும் ஒரு ஊழல் கேபினட் தான் இப்போது இருக்கும் அதிமுக ஆட்சி” என்று கூறினார்.

மேலும், ”திமுக தேர்தல் அறிக்கையில், நாம் ஆட்சிக்கு வந்தவுடன் உடனடியாக முதலமைச்சரிலிருந்து அமைச்சர்கள் வரை என்னென்ன ஊழல்கள் செய்து இருக்கிறார்களோ, அந்த ஊழல்களை கண்டுபிடிக்க தனி நீதிமன்றம் அமைக்கப்படும் என்ற உறுதி மொழியை அறிவித்திருக்கிறோம். ஒரு அதிமுக எம்.எல்.ஏ. கூட வெற்றி பெறக்கூடாது. அப்படி ஒருவர் வெற்றி பெற்றால் கூட அவர் பா.ஜ.க. எம்.எல்.ஏ.வாக மாறிவிடுவார். பா.ஜ.க. வருவதற்கான வாய்ப்பே இல்லை. அதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள்” என்றார்.

கடந்த 10 நாட்களாக தமிழகம் முழுவதும் சுற்றிச் சுற்றி வருகிறேன். அதனுடைய உணர்வின் அடிப்படையில் சொல்கிறேன் 200 அல்ல, 234 இடங்களிலும் நாம் தான் வெற்றி பெறப் போகிறோம் என்று தெரிவித்த முக.ஸ்டாலின், “ பா.ஜ.க.வுக்கு – மோடிக்கு ஒரு அடிமையாக இன்றைக்கு பழனிசாமி ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிறார். காவிரி உரிமையை நிலைநாட்ட முடிந்ததா? நீட் தேர்வை தடுக்க முடிந்ததா? ஜி.எஸ்.டி. வரியைக் குறைக்க போராட முடிந்ததா? தமிழ்நாட்டுக்கு வர வேண்டிய நிதியைப் பெற முடிந்ததா? மதுரைக்கு எய்ம்ஸ் மருத்துவமனை கொண்டு வர முடிந்ததா?” என்று அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினார்.

தொடர்ந்து அவர், “போக்குவரத்து ஊழியர்கள் ஓய்வூதியம் கொடுக்க வேண்டும் என்று போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். சத்துணவுப் பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள் வேலை நிரந்தரம் செய்ய வேண்டும் என்று போராடிக்கொண்டிருக்கிறார்கள். அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராடிக் கொண்டிருக்கிறார்கள். முதலமைச்சரும் அமைச்சர்களும் கோட்டுப் போட்டுக்கொண்டே வெளிநாடு சென்று வந்தார்களே தவிர, யாருக்கும் வேலை வாய்ப்பு கிடைக்கவில்லை. தொழில் நிறுவனங்களும் கொண்டுவரப்படவில்லை.

நமது தேர்தல் அறிக்கையில், தொழில் வளர்ச்சிக்கான பல வாக்குறுதிகளையும் வழங்கி உள்ளோம். கொரோனா காலத்தில் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளின் காரணமாக மூடப்பட்ட தொழிற்சாலைகளை மீண்டும் இயங்க வைக்கவும், அங்கே பணியாற்றிய தொழிலாளர்களுக்கு மீண்டும் வேலைவாய்ப்பு கிடைக்கவும், இந்த நிறுவனங்களுக்கு எளிய தவணையில் திரும்பச் செலுத்தும் வகையில் கடன் உதவி செய்வதற்கென்று 15,000 கோடி நிதி ஒதுக்கப்படும். தொழில் நிறுவனங்களை நலிவிலிருந்து மீட்க அரசுத் துறைகள், நிதி நிறுவனங்கள், தொழில் துறையினர் ஆகியவற்றின் பிரதிநிதிகள் அடங்கிய குழு ஒன்று அமைக்கப்படும். தொழிலாளர்கள் நல வாரியங்கள் முழு வீச்சில் செயல்படும்” என்று திமுகவின் வாக்குறுதிகளைக் கூறி வாக்கு சேகரித்தார் ஸ்டாலின்.

இதனிடையே, கிருஷ்ணகிரி நகருக்குள் வந்த ஸ்டாலின், சப்-ஜெயில் சாலையில் வாகனத்திலிருந்து கீழே இறங்கி, சாலையில் நடைப்பயணமாகச் சென்று கிருஷ்ணகிரி வேட்பாளர் செங்குட்டுவனுக்கு வாக்குகள் சேகரித்தார். கிருஷ்ணகிரி நகரில் சுமார் 1 கிமீ தூரத்திற்கும் மேல் நடைபயணம் மேற்கொண்டு ஆதரவு திரட்டினார். அப்போது அவருடன் கைக்குலுக்கியும், செல்பி எடுத்துக்கொண்டும் பொது மக்கள் உற்சாகமடைந்தனர்.

**-பிரியா**

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *