ஓரங்கட்டிய செந்தில்பாலாஜி: சின்னசாமியின் அதிமுக விளம்பரம்!

politics

நீக்கப் பின்னணி

திமுகவின் மாநில விவசாய அணிச் செயலாளர் கரூர் சின்னசாமி திமுகவின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து தற்காலிக நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார். இதற்கான அறிவிப்பை இன்று (மார்ச் 23) திமுக பொதுச் செயலாளர் வெளியிட்டிருக்கிறார்.

கரூரில்இன்று காலை நாளிதழ் பார்த்த பலருக்கும் அதிர்ச்சி. விஷயத்தை ஏற்கனவே அறிந்தவர்களுக்கு, ‘கட்சி மாறுவதை இப்படியா அறிவிப்பார்?”என்று சின்ன ஆச்சரியம்.

ஆம் கரூர் சின்னசாமி இன்றைய செய்தித் தாள்களில் கொடுத்திருந்த விளம்பரம்தான் இப்படி பேச வைத்தது.

“அன்புடையீர் வணக்கம்.

பத்தாண்டு காலம் திராவிட முன்னேற்றக் கழகத்தில் உண்மைத் தொண்டனாக பணியாற்றினேன். அங்கு எனக்கு ஏற்பட்ட அவமானத்தைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து விலகிக் கொள்கிறேன். 24 ஆம் தேதி காலை 8.30 மணியளவில் கரூர் பேருந்து நிலையம் அருகே நடைபெறும் நிகழ்ச்சியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலும், அமைச்சர் விஜயபாஸ்கர், எம்பி தம்பிதுரை ஆகியோர் முன்னிலையிலும் என்னை அதிமுகவில் இணைத்துக் கொள்கிறேன்” என்பதுதான் சின்னசாமி இன்று கொடுத்திருந்த விளம்பரம்.

செந்தில்பாலாஜியின் திமுக வருகையின் போதே கரூர் சின்னசாமிக்கு கரூர் மாவட்ட திமுகவில் இனி முக்கியத்துவம் இல்லை என்பது முடிவாகிவிட்டது. ஏற்கனவே சில முறை கரூரில் வைத்தே எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் சேர திட்டமிட்ட சின்னசாமியின் திட்டங்கள் திமுகவில் சிலரால் ஒத்திவைக்கப்பட்டன. ஆனால் இப்போது சமாதானங்கள் எதுவும் எடுபடாததால் அதிமுகவில் சேருவதை விளம்பரம் மூலமாகவே வெளிப்படுத்திவிட்டார் கரூர் சின்னசாமி.

இதுபற்றி கரூர் அரசியல் வட்டாரத்தில் பேசினோம்.

“திமுகவுக்கு செந்தில்பாலாஜி வந்த 41 ஆவது நாளிலேயே மாவட்டப் பொறுப்பாளர் பதவி வழங்கப்பட்டது. காரணம் அவரிடம் இருக்கும் பணம். ஆனால் கரூர் சின்னசாமி எம்.ஜி.ஆர். காலத்து சீனியராக இருந்தாலும் திமுகவில் அவருக்கு முக்கியத்துவம் இல்லை. அதுவும் குறிப்பாக செந்தில்பாலாஜி திமுகவுக்கு வந்ததும்,மாவட்ட திமுகவில் தன்னைத் தவிர வேறு யாரும் முக்கியஸ்தர்கள் இருக்கக் கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறார்.

கரூர் சின்னசாமி 2019 மக்களவை தேர்தலில் கரூர் எம்பி சீட் கேட்டார். ஆனால் செந்தில்பாலாஜி சாமர்த்தியமாக செயல்பட்டு தன் நண்பர் கரூர் ஜோதிமணி போட்டியிடுவதற்காக காங்கிரஸுக்கு ஒதுக்கிவிட்டார். இப்போது சட்டமன்றத் தேர்தலிலும் போட்டியிட முயன்றார் கரூர் சின்னசாமி. ஆனால் அதை செந்தில்பாலாஜி தடுத்துவிட்டார்.

கரூர் சின்னசாமி அதிமுகவில் கோலோச்சியபோது அவரது சிபாரிசின் பேரில் கவுன்சிலர் ஆனவர்தான் செந்தில் பாலாஜி. ஆனால் எம்பி சீட், எம்.எல்..ஏ.சீட்டுக்காக செந்தில்பாலாஜியிடம் போய் நிற்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார் சின்னசாமி.

எம்பி சீட் தனக்கு மறுக்கப்பட்ட நிலையிலேயே அதிமுகவில் சேர முடிவெடுத்துவிட்டார் கரூர் சின்னசாமி. இதுகுறித்து தனது பழைய அதிமுக நண்பர்களிடம் பேசினார். அதையடுத்து முதல்வர் எடப்பாடி பழனிசாமியே சின்னசாமியிடம் பேசி அதிமுகவுக்கு வாங்கண்ணே என்று அழைத்தார். ஆனால் அதற்குள் சில திமுகவினர் சின்னசாமியை சமாதானப்படுத்தினார்கள். ஆனால் இப்போது எம்.எல்.ஏ.சீட்டும் கிடைக்காத நிலையில் இது தனக்கு இழைக்கப்படும் அவமானம் என்று கருதி அதிமுகவில் சேர உறுதியாக முடிவெடுத்துவிட்டார்” என்கிறார்கள்.

அதிமுகவில் சேரும் விளம்பரத்தில் தன்னை திமுக விவசாய அணி செயலாளர் என்றும் குறிப்பிட்டிருக்கிறார் சின்னசாமி. செய்தித் தாளைப் பார்த்த செந்தில்பாலாஜி இதுகுறித்து தலைமைக்கு தகவல் கொடுக்க 12.30 மணியளவில் சின்னசாமியை நீக்க அறிவிப்பு வெளியானது.

**-வேந்தன்**

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *