மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 23 மா 2021

சசிகலா அதிமுகவில் இணைவதை பரிசீலிக்கலாம்: ஓ.பன்னீர்

சசிகலா அதிமுகவில் இணைவதை பரிசீலிக்கலாம்:  ஓ.பன்னீர்

சசிகலா அதிமுகவில் இணைவதை பரிசீலிக்கலாம் என்று அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர் செல்வம் கூறியிருக்கிறார்.

தந்தி தொலைக்காட்சிக்கு அவர் அளித்துள்ள சிறப்புப் பேட்டியில் இதைக் குறிப்பிட்டுள்ளார்.

சசிகலா அதிமுகவில் சேர்க்கப்படுவதற்கு 100 சதவிகிதம் வாய்ப்பே இல்லை என்று கடந்த ஜனவரி 19 ஆம் தேதியே தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி டெல்லியில் பேட்டியளித்தார். ஆனால் சசிகலா பற்றி அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரான ஓ.பன்னீர் செல்வம் எவ்வித கருத்தும் பொது வெளியில் தெரிவிக்கவில்லை. இந்நிலையில்தான் இன்று (மார்ச் 23) ஓ.பன்னீர் அளித்த பேட்டியில் சசிகலா பற்றி மனம் திறந்திருக்கிறார்.

“சசிகலா அரசியலை விட்டு விலகும் முடிவை வரவேற்கிறேன். சசிகலா மீது எனக்கு எந்த வருத்தமும் கிடையாது. இப்போது என்று இல்லை. எப்போதுமே அவர் மீது எனக்கு வருத்தம் கிடையாது. அம்மா மறைந்த பிறகு அவர் மீது சில சந்தேகங்கள் இருந்தது. அதற்காக விசாரணை வைத்து அவரை நிரபராதி என்று நிரூபிப்பதற்காகத்தான், நான் நீதி விசாரணை கோரினேன். தவிர அவர் மீது எனக்கு எந்த சந்தேகமும் கிடையாது. நான் அவருடன் இருந்திருக்கிறேன். 32 வருடம் அம்மாவோடு அவர் பயணித்திருக்கிறார். அவர் மீது எனக்கு எப்போதும் சந்தேகம் இருந்தது கிடையாது. சசிகலா அம்மாவுடன் இருக்கும்போது அம்மாவுக்கு நன்மைகள் செய்தார் என்ற நல்லெண்ணம் எங்களுக்கு இருக்கிறது” என்று கூறிய ஓ.பன்னீர் செல்வம்,

ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் பற்றியும் விளக்கியுள்ளார்.

“ஆறுமுகசாமி ஆணையத்தில் என்னை விசாரணைக்கு அழைத்தபோது நான்குமுறை அவர்களாகவே தேதியை மாற்றினார்கள்.இரண்டு முறை எனக்கு வேலை இருந்தது என்பதால் என்னால் ஆஜராக முடியவில்லை. இப்போது உச்ச நீதிமன்றத்தில் அப்பலோ வழக்கு இருப்பதால் ஆணையத்துக்கு தடை இருக்கிறது. அந்தத் தடை நீங்கிய பிறகு ஆணையத்தில் நான் உண்மைகளைச் சொல்வேன்” என்று கூறினார் ஓ.பன்னீர்.

சசிகலா மீண்டும் அதிமுகவுக்கு வந்தால் அவரை ஏற்றுக் கொள்வீர்களா என்ற கேள்விக்கு பதிலளித்த ஓ.பன்னீர்செல்வம்,

“முதலமைச்சர் அதற்கு வாய்ப்பே இல்லை என்று சொல்லியிருக்கிறார். என்னைப் பொறுத்தவரை சசிகலா நான்கு ஆண்டுகாலம் தண்டனையை அனுபவித்திருக்கிறார். மனிதாபிமான அடிப்படையில் பார்க்கும்போது அம்மாவுடன் 32 ஆண்டு காலம் பயணித்தவர் என்ற அடிப்படையில் அம்மாவுக்கு பல உதவிகள் நன்மைகள் செய்தவர் என்ற அடிப்படையில் அவர் அதிமுகவுக்கு வந்தால் அதை பரிசீலிக்கலாம்.

இப்போது கட்சி ஜனநாயக முறைப்படி இயங்கிக் கொண்டிருக்கிறது. தனிப்பட்டவருக்காகவோ, ஒரு குடும்பத்துக்காகவோ கட்சி இப்போது இயங்கவில்லை. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் ஜனநாயக ரீதியாக இயங்கும் கட்சியின் இந்த செட்டப்பை, இந்த அமைப்பை அவர்கள் ஏற்றுக்கொண்டால் அவர்களை இணைத்துக் கொள்வதை பரிசீலிக்கலாம்”என்று முக்கியமான ஒரு கருத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்.

தென் மாவட்டத்தில் அதிமுகவுக்கு முக்குலத்தோர் வாக்குகள் கிடைக்காது என்ற கருத்துகள் பரவலாக பரவியிருக்கும் நிலையில் ஓ.பன்னீர்செல்வத்தின் இந்த கருத்து தேர்தல் களத்திலும் தமிழ்நாட்டு அரசியல் களத்திலும் முக்கியத்துவம் பெறுகிறது.

வேந்தன்

கனிமொழி தொகுதியில் நடக்கும்; கரூர் மட்டும் என்ன...? - காங். எம்.பி. ...

6 நிமிட வாசிப்பு

கனிமொழி தொகுதியில் நடக்கும்; கரூர் மட்டும் என்ன...? - காங். எம்.பி. தர்ணா!

மாடு மேய்க்கிற பையனை மா.செ. ஆக்கவா? - இராமதாஸ் சீற்றம்!

5 நிமிட வாசிப்பு

மாடு மேய்க்கிற பையனை மா.செ. ஆக்கவா? - இராமதாஸ் சீற்றம்!

பாலாற்றில் 100 தடுப்பணைகள்!

3 நிமிட வாசிப்பு

பாலாற்றில் 100 தடுப்பணைகள்!

செவ்வாய் 23 மா 2021