மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 23 மா 2021

'சமயம் பார்த்து அடிக்கிறீங்களேப்பா' : கலகலப்பான ஓபிஎஸ்

'சமயம் பார்த்து அடிக்கிறீங்களேப்பா' : கலகலப்பான ஓபிஎஸ்

இரண்டு முறை எளிதாக வென்ற துணை முதல்வர் பன்னீர் செல்வத்திற்கு இந்த முறை போடி தொகுதி சிம்ம சொப்பனமாக மாறியுள்ளது.

தமிழக சட்டசபை தேர்தலையொட்டி, திமுக சார்பில் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்ட போது ,போடிநாயக்கனூரில் ஓபிஎஸ்க்கு எதிராக தங்கதமிழ்செல்வன் நிறுத்தப்பட்டது தான் பெரும் விவாதப் பொருளாக தமிழக அரசியல் அரங்கில் அன்றைக்கு பேசப்பட்டது.

தங்க தமிழ்செல்வனை, திமுக தலைவர் ஸ்டாலின், போடி தொகுதியில் நிற்க வைத்து அதிர்ச்சி கொடுத்தார். இந்த துணிச்சலான முடிவை  அதிமுக கூட எதிர்பார்த்திருக்கவில்லை.  போடிநாயக்கனூரில் மூன்றாவது முறையாகப் போட்டியிடும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், இரண்டு முறையும் திமுகவின் லட்சுமணனை மிகப்பெரிய வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தினார். அதற்கு காரணம் தேனி மாவட்டம் முழுவதிலுமே ஓபிஎஸ்க்கு இருந்த தனிப்பட்ட செல்வாக்கு மற்றும் எளிமையாக பழகும் குணம் போன்றவை காரணமாகும்.

இந்நிலையில் பன்னீர்செல்வத்தை எதிர்த்து, அதிமுக முன்னாள் எம்எல்ஏவும், தி.மு.கவின் தேனி வடக்கு மாவட்டச் செயலாளருமான தங்க தமிழ்ச்செல்வன் களமிறக்கப்பட்டிருக்கிறார். இருவருக்கும் இடையேயான மோதல் தேனி அரசியல் வட்டாரத்தில் மட்டுமல்லாமல், தமிழகம் முழுவதுமே தெரிந்த ஓன்று. அதிமுகவில் தங்கம் மீண்டும் சேராமல் போக ஓபிஎஸ்தான் காரணம் என்று கடந்த 2019ம் ஆண்டு பரபரப்பாக பேசப்பட்டது.

ஆண்டிப்பட்டி எம்.எல்.ஏ-வாக இருந்த தங்க தமிழ்ச்செல்வன், அ.தி.மு.க-விலிருந்து அ.ம.மு.க-வில் இணைந்ததால் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். ஆனால் தினகரனுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், தி.மு.க-வில் இணைந்து முதலில் கொள்கை பரப்புச் செயலாளராகவும், அடுத்து மாவட்டச் செயலாளராகவும் உயர்ந்தார். அதிமுகவில் இருந்த போதே பன்னீருக்கும் தங்கத்துக்கும் இடையே மோதல் அதிகமாக இருந்தது. எதிர் முகமான தி.மு.க-வுக்கு தங்கம் வந்துவிட்டதால், இருவருக்கும் இடையே மோதல் அனலாக மாறியது

போடியில் தற்போதைக்கு ஓபிஎஸ்க்கு இரண்டு பெரிய பிரச்சனைகள் ஏற்பட்டது. தேவேந்திர குல வேளாளர் பெயர் பிரச்னை காரணமாக தொகுதியிலிருக்கும் பிள்ளைமார் சமுதாய மக்கள், அ.தி.மு.கவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். அண்மையில் போடியில் வ.உ.சி சிலைத் திறப்பில் கலந்துகொண்ட பன்னீருக்கு அவர்கள் எதிர்ப்பு தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தினர்.

அதேபோல, DNT (சீர்மரபினர் பழங்குடியினர்) சான்றிதழ் பிரச்னை காரணமாக, தேவர் சமுதாய மக்களும் பன்னீர் மீது அதிருப்தியில் உள்ளதாக கூறப்படுகிறது. இது ஒருபுறம் எனில் அ.ம.மு.க வேட்பாளராக நாயக்கர் சமூகத்தைச் சேர்ந்த முத்துசாமி களமிறக்கப்பட்டுள்ளார். அவர், நாயக்கர் சமூக வாக்குகள் பிரிக்க அதிக வாய்ப்புள்ளது. எனவே வழக்கமாக அதிகமாக விழும் நாயக்கர் சமுதாய வாக்கு சதவீதம் குறைய வாய்ப்பு உள்ளது.

மேற்கண்ட விஷயங்களை தனக்கு சாதகமாக்கி கொண்டுள்ள தங்க தமிழ்ச்செல்வன் அனைத்து சமூகப் பெரியவர்களைத் தனித்தனியே சந்தித்து ஆதரவு திரட்டிவருகிறார். இதேபோல் தேனி அருகே உள்ள கிராமங்களில் பட்டியல் சமூக மக்களின் வாக்குகளையும் கவர அதிரடி திட்டத்தை வகுத்துள்ளார் தங்கம். இதுமட்டுமின்றி அதிமுக எந்தெந்த வார்டில் யாரை எப்படி வைத்து வாக்குளை பெற வியூகம் வகுத்தது என்பது தங்கத்திற்கு தெரியும் என்பதால் அதிமுக கலக்கத்தில் உள்ளது.

இந்த சூழ்நிலையில் ஓ.பன்னீர் செல்வம் நேற்று (22.03.2021) தேனி மாவட்டத்தில் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டார். தேனி ஒன்றியத்துக்கு உட்பட்ட உப்பார்பட்டி, பாலகுருநாதபுரம் உள்ளிட்ட பல பகுதிகளில் திறந்தவெளி ஜீப்பில் நின்றபடி அவர் பிரச்சாரம் செய்தார்.

வீடு கட்டிக் கொடுத்தோம்

இந்த பிரச்சாரத்தின்போது அதிமுக அரசு செய்த மக்கள் நல பணிகளை அவர் பட்டியலிட்டார்.

“தேனி மாவட்டத்தில் மட்டும், ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் 2000 வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டுள்ளன. இன்னும் 2400 வீடுகள் கட்டப்பட உள்ளன. பேறுகால நிதி உதவி 1000 என்ற அளவிலிருந்து 18,000 ரூபாய் என்ற அளவுக்கு உயர்த்தியுள்ளது அதிமுக அரசு” என்றார் ஓ.பன்னீர்செல்வம்.

 “அண்ணன்கள் பைக் ஓட்டும்போது தங்கச்சிகள் பின்னால் உட்கார்ந்து செல்வதை பார்த்திருப்பீர்கள். ஆனால் அதிமுக அரசின் மானிய விலை ஸ்கூட்டர் திட்டத்தால் தங்கைகள் வாகனம் ஓட்ட, அண்ணன்கள் பின்னால் அமர்ந்து பயணித்துக் கொண்டிருக்கிறார்கள். இதுதான் பெரியார் கண்ட சமூகநீதி கனவு, பெண் சுதந்திரம். அதை இந்த அரசுதான் செயல்படுத்தி உள்ளது

திமுக ஆட்சியில் மின்சாரத்துறை அமைச்சராக இருந்தவர் ஆற்காடு வீராசாமி. அவர் ரொம்ப நல்ல மனிதர் என்பதால் சொன்னது சொன்னபடி பலிக்கும். மின்தட்டுப்பாடு காரணமாக திமுக மீண்டும் ஆட்சிக்கு வராது என்று அவர் சொன்னார். அது போல கடந்தபத்து வருடமாக அந்த கட்சி ஆட்சிக்கு வரமுடியவில்லை” என்று கிண்டலாக கூறினார் ஓ.பன்னீர்செல்வம்.

 ஜல்லிக்கட்டு விளையாட்டுக்கு காங்கிரஸ் திமுக அரசு ஆட்சி காலத்தில் தடை விதிக்கப்பட்டதாகவும், தான் முதல்வராக இருந்த போது பிரதமர் மோடியிடம் பேசி 24 மணி நேரத்தில் நான்கு அரசாணைகள் வெளியிட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்பட்டதையும் குறிப்பிட்டு பெருமிதம் தெரிவித்தார் பன்னீர்செல்வம்.  

அப்போது கூட்டத்தில் இருந்த சில மாணவர்கள்.,  ”ஐயா 12ம் வகுப்பில் அனைவரையும் ஆல் பாஸ் செய்ய உத்தரவு போடுங்கள்.." என்று கூட்டத்திலிருந்து கோஷம் போட்டனர். இது ஓபிஎஸ் காதுகளில் விழுந்தது. உடனடியாக உங்கள் கோரிக்கை பற்றி முதலமைச்சருடன் கலந்து பேசி கண்டிப்பாக நடவடிக்கை எடுப்பேன் என்றார். அத்தோடு விட்டார்களா மாணவர்கள்.. "நம்ம ஊரில் விளையாட்டு மைதானம் தேவை.." என்று அடுத்தாற்போல் ஒரு கோஷம் போட்டனர். ஓ பன்னீர்செல்வம் ஏற்பாடு செய்கிறேன் என்றவர், அடுத்த கோரிக்கை வரும் முன், “நேரம் பார்த்து அடிக்கிறீங்கப்பா” என்று தனக்கே உரித்தான சிரிப்புடன் சொல்ல, கூடியிருந்த கூட்டம் முழுமையும் எழுந்த சிரிப்பலை அடங்க சில நிமிடங்களானது

போடி தொகுதி வாக்காளர்கள் பிரதான போட்டியாளர்களான பன்னீர்செல்வம்-தங்கதமிழ்செல்வன் இருவருக்கும் ஒரே மாதிரியான வரவேற்பையும், கூட்டத்தையும் காட்டி வருகின்றனர். இதனால் இருவருக்குமே வெற்றிவாய்ப்பு சமபலத்தில் இருப்பதாகவே தொகுதி மக்கள் மத்தியில் கூறப்படுகிறது. பன்னீர்செல்வத்திற்கு இணையாக தங்கதமிழ்செல்வன் அனைத்து விஷயங்களிலும் தரை டிக்கட் ரேஞ்சில் லோக்கலாக இறங்கி தேர்தல் வேலை செய்வது பன்னீர்செல்வம் குடும்பத்தை மட்டுமல்ல அதிமுக வட்டாரத்தை கலங்கடித்து வருகிறது.

-இராமானுஜம்

டிஜிட்டல் திண்ணை: குடியரசுத் தலைவர் தேர்தலில் தமிழிசை?

6 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: குடியரசுத் தலைவர் தேர்தலில் தமிழிசை?

ஸ்லீப்பர் செல்: ஏமாற்றப்படும் கே.என். நேரு

6 நிமிட வாசிப்பு

ஸ்லீப்பர் செல்: ஏமாற்றப்படும் கே.என். நேரு

அன்று குணசேகரன் இன்று கரு. பழனியப்பன்: பாஜகவின் டெர்மினேஷன் ...

4 நிமிட வாசிப்பு

அன்று குணசேகரன் இன்று கரு. பழனியப்பன்: பாஜகவின் டெர்மினேஷன் ஆபரேஷன்

செவ்வாய் 23 மா 2021