�ஜெயிக்கப் போவது யாரு? இதுதான் திமுக, அதிமுகவின் ‘அரித்மேட்டிக்’ கணக்கு!

politics

நாட்கள் நெருங்க நெருங்க தமிழகத்தில் தேர்தல் பதற்றம் அதிகமாகிக் கொண்டே இருக்கிறது. ஒரு பக்கத்தில் கொரோனாவைக் காரணம் காட்டி தேர்தலை தள்ளி வைத்து விடுவார்களோ என்ற அச்சம் பரவிக் கொண்டிருக்கிறது. ஆனாலும் அதைப் பற்றி எந்தக் கவலையுமின்றி, தேர்தல் பிரச்சாரங்களில் மக்கள் கூட்டம் கூட்டமாகக் குவிந்து தலைவர்களின் பேச்சைக் கேட்பதைப் பார்க்க முடிகிறது.

யாராவது இரண்டு பேர் ஒன்று கூடினாலே ‘அடுத்து யாரு ஆட்சிங்க வரும்’ என்ற கேள்வியோடுதான் பேச்சைத் துவக்குகிறார்கள். இந்த விவாதம், மக்களுக்குள் மட்டுமில்லை; கட்சிகளை வழி நடத்தும் தலைவர்களுக்குள்ளும் நடந்து கொண்டேயிருக்கிறது. கள நிலவரத்தை அறிந்தே அவர்கள் அடுத்தடுத்த தேர்தல் வியூகங்களையும் செய்து கொண்டிருக்கிறார்கள்.

இப்போதுள்ள சூழ்நிலையில், கருத்துக் கணிப்புகள் பெரும்பாலும் திமுகவுக்குச் சாதகமாக வந்து கொண்டிருக்கின்றன. ஆனால் நாளுக்கு நாள் போட்டி கடுமையாகிக் கொண்டிருக்கிறது. திமுக நினைப்பதைப் போல எளிதான வெற்றி எங்குமே கிடைக்காது என்ற நிலை உருவாகிக் கொண்டிருக்கிறது. போட்டியை இன்னும் கடுமையாக்கி வெற்றியைத் திசை திருப்புவதற்கான வேலைகளில் அதிமுக தீவிரமாக இறங்கியிருக்கிறது. திமுகவும் திருப்பியடித்துக் கொண்டிருக்கிறது.

அடுத்து நம்ம கட்சிதான் ஆட்சியைப் பிடிக்குமென்ற நம்பிக்கையில் இரண்டு கட்சிகளும் இருப்பதுதான் மக்களையும் குழப்பிக் கொண்டிருக்கிறது. இந்த நம்பிக்கையை ஏற்படுத்தும் காரணிகள் என்னென்ன, களநிலவரத்தை இவர்கள் எப்படி அறிந்து வைத்திருக்கிறார்கள் என்று அதிமுக, திமுக இரண்டு தரப்பிலும் மிகமிக முக்கியமான தலைவர்களிடம் பேசினோம். ஒவ்வொரு தரப்புடன் பேசும்போதும் அவர்கள் சொல்வதுதான் சரியென்று நம்மை நம்ப வைப்பதைப் போலிருக்கின்றன அந்தக் காரணிகள்.

திமுகவின் நம்பிக்கை என்னவாயிருக்கிறது….திமுக தலைமைக்கு நெருக்கமான ஒருவர் சொல்வதைக் கேட்போம்….

‘‘எங்களுடைய முதல் வெற்றியே, நாடாளுமன்றத் தேர்தலில் அமோக வெற்றி பெற்ற கூட்டணியை உடைய விடாமல் அப்படியே தக்க வைத்ததுதான். திமுக கூட்டணிக்குள் பெரும் குழப்பம் ஏற்பட்டு, சில கட்சிகள் வெளியே போய்விடும் என்று நினைத்தார்கள். அதை முறியடித்தோம். ஆனால் ஏற்கெனவே தோல்வியைச் சந்தித்த அதிமுகவின் கூட்டணி மேலும் உடைந்திருக்கிறது. தேமுதிக வெளியேறிவிட்டது. சமத்துவ மக்கள் கட்சி, புலிப்படை, கொங்கு இளைஞர் பேரவை என பல கட்சிகளும் அதிமுக கூட்டணியில் இப்போது இல்லை.

வன்னியர் சமுதாயத்துக்கு 10.5 சதவீதம் இட ஒதுக்கீடு கொடுத்ததால் அந்த சமுதாயத்தின் வாக்குகள் அப்படியே கிடைக்குமென்று அதிமுக தலைமை நினைக்கிறது. அது தப்புக்கணக்கு. ஏற்கெனவே 13 சதவீதம் வரை வாங்கிக் கொண்டிருந்த இட ஒதுக்கீட்டை இப்போது பத்தரை சதவீதமாக டாக்டர் குறைத்து விட்டார் என்று அந்த சமுதாயத்திலுள்ள படித்தவர்கள் நினைக்கிறார்கள். இதற்காக அவரை யாரும் பாராட்டவில்லை. இன்னும் சொல்லப் போனால் கடுமையான விமர்சனங்கள்தான் எழுந்திருக்கின்றன.

அதேநேரத்தில் வடக்கு மாவட்டங்களில் உள்ள மற்ற சமுதாயத்தினர் அனைவரும் இந்த இட ஒதுக்கீடு கொடுத்ததால் அதிமுக மீது வெறுப்பாகவுள்ளனர். அதனால் வடக்கு மாவட்டங்களில் எங்களுக்கு பெரும் வெற்றி கிடைக்குமென்று நம்புகிறோம். அடுத்ததாக பிஜேபி அந்தக் கூட்டணியில் நீடிப்பது எங்களுக்குப் பெரும் பாக்கியம். அதுதான் எங்களுடைய விருப்பமாகவும் இருந்தது. ஏதேதோ செய்து பிஜேபியை எடப்பாடி கழற்றி விடுவார் என்று நினைத்தோம். அவரால் அது முடியவில்லை. தமிழகத்தில் பிஜேபி மீது கடுமையான அதிருப்தி இருக்கிறது. அது அதிமுக மீதும் பாயப்போகிறது.

இதற்குப் பயந்துதான் தென் மாவட்டங்களில் பல தொகுதிகளில் அதிமுக வேட்பாளர்கள் தங்களுடைய பிரச்சார வாகனங்களிலும், பேனர்களிலும் மோடியின் படத்தைப் போடுவதேயில்லை. திருப்பூரில் கூட முன்னாள் அமைச்சர் ஆனந்தனின் தேர்தல் அலுவலகத்தில் மோடியின் படத்தை சிறிதாகப் போட்டிருப்பதைப் பார்த்து விட்டு தமிழக பிஜேபி தலைவர் முருகன் வருத்தப்பட்டிருக்கிறார். இதுதான் அவர்களின் நிலைமை. பெட்ரோல், டீசல் விலை உயர்வு அந்தக் கூட்டணியின் வாக்குகளை கடுமையாகப் பாதிக்கும். அதிமுகவில் இப்போது உடனிருக்கும் பிஜேபி, தமாகா என எந்தக் கட்சிக்கும் பெரிதாக வாக்கு வங்கி இல்லை. அதிகார பலத்தையும், பணபலத்தையும் காண்பித்து பெரிதாகக்காட்டுகிறார்கள்.

அமமுக தனித்து நிற்பது அதிமுகவுக்குக் கடும் பாதிப்பை ஏற்படுத்தும். தினகரன் களத்தில் கடுமையாக வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார். அவர் அதிமுக வாக்குகளை அதிகளவில் பிரிப்பார் என்பது நிச்சயம். சசிகலாவை எடப்பாடி பழனிசாமி அவமதித்துப் புறக்கணித்து விட்டதாக அந்த சமுதாயத்தின் மக்கள் கடும் கோபத்தில் இருக்கிறார்கள். இது தெற்கு மாவட்டங்களிலும், டெல்டா மாவட்டங்களிலும் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் நாங்கள் வெற்றி பெறுவதற்கு பெரும் உதவியாக இருக்கும்.

தேவேந்திர குல வேளாளர் என்று ஒரே பெயராக பெயர் வைத்ததற்கு வேளாளர் என்று பெயரைக் கொண்ட பல்வேறு பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினருக்கும் கடுமையான அதிருப்தி உள்ளது. இது நீரு பூத்த நெருப்பாக இருக்கிறது. அந்தப் போராட்டங்களை போலீசை வைத்து முடக்கிவிட்டனர். அவர்கள் தங்கள் கோபத்தைத் தேர்தலில் வெளிப்படுத்துவார்கள்.

அதிமுக அரசின் மீது எந்த அதிருப்தியும் இல்லை, பாதிப்புமில்லை என்று திட்டமிட்டு ஒரு செய்தியைப் பரப்புகின்றார்கள். ஆனால் ஒவ்வொரு துறையிலும் பயங்கரமான ஊழல் நடந்திருக்கிறது. சாதாரண டிரான்ஸ்பருக்குக் கூட லட்ச லட்சமாய் லஞ்சம் வாங்கப்படுகிறது. கிராமங்களிலேயே மக்கள் இதைப் பேசுகின்ற நிலைமை உள்ளது. இது எல்லாவற்றுக்கும் மேலாக, இந்த ஆட்சி நீடிக்க வேண்டாம் என்று அதிமுகவின் அடிமட்டத் தொண்டர்களே நினைக்கின்ற நிலைமை உள்ளது. அதற்கு முதல் காரணம், அவர்கள் பெரிதும் நேசித்த ஜெயலலிதா, எப்படி இறந்தார் என்பது கூட இன்னும் தெரியாமல் இருப்பதுதான். ஆட்சி மாறினால்தான் அவருடைய மரணத்தின் உண்மை வெளிவருமென்று அவர்கள் நினைக்கிறார்கள்.

அது மட்டுமின்றி, இந்த ஆட்சியில் நடக்கும் ஊழல்களால் அமைச்சர்களும், அவர்களின் ஆதரவாளர்கள் சிலரும், உற்றார் உறவினர்களும்தான் பயனடைந்துள்ளனர். கீழ் மட்டத்திலுள்ள கட்சி நிர்வாகிகளே பலனடைய முடியவில்லை. டிரான்ஸ்பர், போஸ்ட்டிங் போன்றவற்றில் அமைச்சர்களின் உதவியாளர்களே, சம்பந்தப்பட்டவர்களுடன் நேரடியாக ‘டீல் ’பேசி முடித்துக்கொள்கின்றனர். இதனால் வட்டச் செயலாளர்கள், ஒன்றியச் செயலாளர்கள் என எல்லோருமே பயங்கர கடுப்பில் இருக்கிறார்கள்.

அடுத்தாக மேற்கு மாவட்டங்களில் கவுண்டர் ஓட்டுக்கள் அப்படியே கிடைக்குமென்று அதிமுக தலைமை நினைக்கிறது. அப்படியொன்றும் அலை வீசுவதாக எங்களுக்குத் தெரியவில்லை. எடப்பாடி பழனிசாமியே கஷ்டப்பட்டுதான் ஜெயிக்க வேண்டுமென்ற நிலைதான் இருக்கிறது. மேற்கு மாவட்டங்களில் சைக்கிளிலும், டூ வீலரிலும் சுற்றிக் கொண்டிருந்த பலரும் இப்போது பெரிய பெரிய கார்களில் வலம் வருகிறார்கள். பிரமாண்டமாக பங்களா கட்டியிருக்கிறார்கள். ஏகப்பட்ட சொத்துகளை வாங்கிப் போட்டிருக்கிறார்கள். இவர்களுடைய வளர்ச்சியை உள்ளூர்க்காரர்களே பார்த்து விட்டு, ‘இதெல்லாம் மக்கள் பணம்தாேனே. அமைச்சருடன் இருந்ததால்தானே இவ்வளவு வளர்ச்சி. இவர்களே இவ்வளவு சம்பாதித்திருந்தால் அமைச்சர் எவ்வளவு சம்பாதித்திருப்பார்’ என்று பேச ஆரம்பித்திருக்கிறார்கள். ஒட்டு மொத்தமாகப் பார்த்தால் கவுண்டர் சமுதாயத்திலுள்ள மக்களிடமும் இந்த ஆட்சி மீது வெறுப்புதான் அதிகமுள்ளது.

அதிமுகவில் முக்கியமான இடத்திலிருக்கும் ஒரு அமைச்சரே, ‘கட்சியை எதிரிகளிடமிருந்தும், துரோகிகளிடம் இருந்து காப்பாற்றியிருக்கிறோம். டெல்லியில் ஏதேதோ செய்து ஆட்சியைக் காப்பாற்றியிருக்கிறோம் என்று நாம் மார்தட்டிக் கொள்ளலாம். அதனால் மக்களுக்கு என்ன பயன்.. மீண்டும் நாம் ஜெயிப்போம் என்ற நம்பிக்கை எனக்குத் துளியும் இல்லை. அதிகபட்சமாக 40 சீட்டுகள் வந்தாலே பெரியது என்று நினைக்கிறேன்!’ என்று புலம்பியிருக்கிறார். ஓபிஎஸ்சும் கூட, ‘அமமுகவை மீண்டும் கட்சியில் சேர்க்காவிட்டால் தென் மாவட்டங்களில் பெரிய பாதிப்பு ஏற்படும். சொல்லப் போனால் நான் ஜெயிப்பதே கஷ்டம்தான்’ என்று அமித்ஷாவிடமே சொன்னதாக எங்களுக்குத் தகவல் வந்திருக்கிறது. அதனால் 150லிருந்து 200 தொகுதி வரை நாங்கள் ஜெயிப்பது உறுதி’’ என்றார்கள் தீர்க்கமான குரலில்.

அதிமுக தலைமை என்ன நம்பிக்கையில் இருக்கிறது என்று அக்கட்சியை வழிநடத்துவதில் முக்கியப் பொறுப்பிலுள்ள ஒருவரிடம் கேட்டதற்கு அவரும் விரிவாக விளக்கினார்….

‘‘ஸ்டாலின் 200 சீட்டுகள் ஜெயிப்போம் என்று நினைப்பதுதான் எங்களுக்கு பலம். அவர் கடுமையாக உழைப்பார். ஆனால் ஒவ்வொரு தேர்தலிலும் அவர் போடும் கணக்கு தப்பாகத்தான் போகிறது. ஆர்கே நகர் இடைத்தேர்தலில் கூட, கடைசி வரை ஜெயிப்போம் என்றுதான் அவர் சொல்லிக் கொண்டிருந்தார். எங்களுக்கு எங்குமே மக்களிடம் எதிர்ப்பு இல்லை. சீட் கிடைக்காததால் கட்சிக்காரர்கள் கொஞ்சம் அதிருப்தியில் இருந்தனர். அதெல்லாம் சரி செய்து விட்டோம்.

எத்தனையோ தடைகளைத் தாண்டி இந்த ஆட்சியைக் காப்பாற்றிக் கொண்டு சென்றதில், அதிமுகவினர் அனைவருமே பெரும் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள். அவர்களுக்கு எடப்பாடி பழனிசாமி தலைமை மீது பெரும் நம்பிக்கை வந்திருக்கிறது. அடிமட்டத் தொண்டர்கள் அனைவரும் மகிழ்ச்சியோடு களத்தில் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

வடக்கு மாவட்டங்களைப் பொருத்தவரை, பாமகவின் வாக்கு வங்கி சரிந்த நேரத்தில் நாங்கள் பத்தரை சதவீத இட ஒதுக்கீட்டை அறிவித்திருக்கிறோம். அது வன்னியர் சமுதாயத்தில் ராமதாசுக்கு இருந்த செல்வாக்கை மீண்டும் மீட்டெடுத்திருக்கிறது. அதனால் அந்த சமுதாயத்தின் வாக்குகள் அப்படியே எங்கள் கூட்டணிக்குக் கிடைக்குமென்பது நிச்சயம். அதே வடக்கு மாவட்டங்களில் விடுதலைச் சிறுத்தைகளுக்குச் செல்வாக்கு இருக்கும் பகுதிகளில் உள்ள வாக்குகளைக் கவர்வதற்காகவே, பெண்களுக்கு மாதம் 1500 ரூபாய், வீட்டுக்கொரு வாஷிங் மெஷின் திட்டம் என அறிவித்திருக்கிறோம். அதெல்லாம் அங்கே நன்றாக எடுபட்டிருக்கிறது. ரிசல்ட் வரும்போது அது உங்களுக்குத் தெரியும்.

தமிழகத்தில் சாதிரீதியாக வாக்கு வங்கி என்று பார்த்தால், வன்னியர்கள் வாக்கு 14 சதவீதம், கவுண்டர்கள் 7 சதவீதம், தேவேந்திர குல வேளாளர்கள் 6 சதவீதம் என மொத்தம் 27 சதவீதம் வாக்காளர்கள் அதிமுக பக்கம்தான் இருக்கின்றனர். முக்கியமாக தேவேந்திர குல வேளாளர்கள், தங்களுக்குக் கிடைத்ததை பெரிய அங்கீகாரம் என்று நினைக்கிறார்கள். பிஜேபி அரசை அவர்கள் நன்றியோடு நினைக்கிறார்கள். அது எங்கள் கூட்டணிக்கு பெரிய பலமாக இருக்கும். கவுண்டர்களும் தங்கள் சமுதாயத்திலிருந்து ஒரு முதல்வர் வந்ததைப் பெருமையாக நினைப்பதால் இந்த ஆட்சி தொடர வேண்டுமென்று நினைக்கிறார்கள்.

தினகரன் வெளியே இருப்பதால் தேவர் சமுதாயத்தில் அதிருப்தி இருப்பது உண்மைதான். அந்த சமுதாயத்தில் 40 சதவீதம் தினகரனுக்கும், திமுகவுக்கு 30 சதவீதமும் போகும். மீதி 30 சதவீதம் எங்களுக்குக் கிடைக்கும். நாடார்களைப் பொருத்தவரை 65 சதவீதம் திமுகவுக்குதான் வாக்களிப்பார்கள். மற்ற சமுதாயங்களில் உள்ளவர்களுக்கும் நாங்கள் அதிக சீட் கொடுத்து அங்கீகரித்துள்ளதால் எல்லா சமுதாயங்களிலும் எங்களுக்கு ஆதரவு கிடைக்குமென்று நம்புகிறோம்.

மதிமுக, மமக, கொங்கு கட்சி, விடுதலைச் சிறுத்தைகள், காங்கிரஸ் நிற்கும் தொகுதிகளில் எல்லாம் நாங்கள் கண்டிப்பாக ஜெயிப்போம். அதற்கான வேலைகளை எல்லாம் நாங்கள் செய்து கொண்டிருக்கிறோம். திமுக ஆட்சிக்கு வந்து விட்டதாக நினைத்துக் கொண்டு, இப்போதே அமைச்சர்கள் லிஸ்ட் தயார் செய்து விட்டதாக எங்களுக்குத் தகவல் வருகிறது. தலைமைதான் அப்படி நினைக்கிறதே தவிர, கீழ்மட்டத்தில் வேலை பார்ப்பவர்கள் யாருக்கும் அந்த நம்பிக்கை இன்னும் வரவில்லை.

எங்களுடைய தேர்தல் அறிக்கை வேலை என்ன மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்பது இன்னும் சில நாட்களில்தான் தெரியவரும். இப்போதைய நிலவரப்படி திமுகதான் முன்னணியில் இருக்கிறது. திமுக 130–135 தொகுதிகளிலும், 90–95 தொகுதிகளில் நாங்களும் முன்னணியில் இருப்பதாகத் தகவல் கிடைத்துள்ளது. திமுக ஜெயிக்கும் தொகுதிகளின் எண்ணிக்கையைக் குறைக்கவும், அதிமுக ஜெயிக்கும் தொகுதிகளின் எண்ணிக்கையைக் குறைக்கவும் என்ன செய்ய வேண்டுமோ நாங்கள் அதைச் செய்து கொண்டிருக்கிறோம். அது சரியாக முடிந்து விட்டால் கட்டாயம் எங்கள் ஆட்சிதான் மீண்டும்!’’ என்றார்கள்.

இந்த இரண்டு தரப்பு யூகங்களும், வியூகங்களும் களத்தில் எப்படி ஒர்க் அவுட் ஆகுமென்று, தமிழக காவல்துறையின் முக்கியமான போலீஸ் அதிகாரி ஒருவரிடம் கேட்டோம்…

‘‘திமுக அமோக வெற்றி பெற்றுவிடுமென்று முதலில் எல்லோரும் நினைத்தது உண்மைதான். ஸ்டாலினும் அதை மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டிருக்கிறார். இந்தத் தகவலை வைத்துக் கொண்டு, திமுக வேட்பாளர்கள் பலரும் காசைக் கையில் எடுக்காமல் மிதப்பில் இருக்கிறார்கள். சில வேட்பாளர்கள் இப்போதே ஜெயித்து விட்டதைப் போல உதாசினமாக நடந்து கொண்டிருக்கிறார்கள். அதெல்லாம் அந்தக் கட்சியின் நிர்வாகிகளையே கடுப்பாக்கியிருக்கிறது. ஏற்கெனவே பத்தாண்டுகளாகக் காய்ந்து கிடக்கும் அந்தக் கட்சியினர் எளிதில் விலை போவதற்கும் வாய்ப்பு அதிகமுள்ளது. ஆனால் அதிமுக நேரடியாக நிற்கும் தொகுதிகளில் பணத்தாலேயே எல்லோரையும் அடித்துத் துவைத்துக் கொண்டிருக்கிறார்கள். அது ஒரு மாற்றத்தையும் ஏற்படுத்துவதைப் பார்க்க முடிகிறது. தேர்தல் நெருங்க நெருங்க பணப்பட்டுவடா பெரிய மோதலாக வெடிக்கும் அபாயம் அதிகமிருக்கிறது. மேற்கு மாவட்டங்களில் சில விஐபிக்கள் நிற்கும் தொகுதிகளில் தேர்தல் நிறுத்தப்படவும் கூட வாய்ப்பிருக்கிறது. இன்றைய நிலையில் திமுகவுக்கு வாய்ப்பு அதிகமிருந்தாலும், கொஞ்சம் அசந்தால் அதிமுக 2016 வரலாற்றை மீண்டும் எழுதிவிடுவது உறுதி!’’ என்றார்.

பணத்தை வைத்து ஆட்சி…ஆட்சியை வைத்து பணம்…எங்கே போகிறது தமிழ்நாடு?

**–பாலசிங்கம்**

.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *