மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 22 மா 2021

பாஜக அணியின் 3 மனுக்கள் : கேரள உயர் நீதிமன்றம் கைவிரிப்பு!

பாஜக அணியின் 3 மனுக்கள் : கேரள உயர் நீதிமன்றம் கைவிரிப்பு!

கேரள மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் மூன்று தொகுதிகளில், பாஜக கூட்டணி வேட்பாளர்களின் வேட்புமனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. அதை கேரள உயர் நீதிமன்றமும் இன்று உறுதி செய்துள்ளது.

கேரள மாநிலத்தில் தமிழர் பகுதியான தேவிகுளம் உள்பட மூன்று தொகுதிகளில் பாஜக கூட்டணி வேட்பாளர்களின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. இது பற்றி நாம் ஏற்கெனவே செய்தி வெளியிட்டிருந்தோம்.

வேட்பு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டு பிரச்னைக்குத் தீர்வுகாண்போம் என்று பாஜக தலைவர்கள் கூறினர். ஆனால், தள்ளுபடி செய்யப்பட்ட வேட்பாளர்களின் சார்பில் கேரள உயர் நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது. தேர்தல் முக்கியத்துவம் கருதி உயர் நீதிமன்றமும் அவசர வழக்காக ஞாயிறன்றும் விசாரணை நடத்தியது.

நீதிபதி நாகரேஷ் நேற்று மதியம் 2 மணிக்கு இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்டார். தமிழர் பகுதியான தேவிகுளம் தொகுதி அதிமுக வேட்பாளர் தனலட்சுமி, குருவாயூர் வேட்பாளர் நிவேதிதா, தலச்சேரி வேட்பாளர் அரிதாஸ் ஆகியோரின் சார்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன. அரசியல் காரணங்களால் அவர்கள் மனுக்கள் நிராகரிக்கப்பட்டதாக அந்த வேட்பாளர்களின் தரப்பில் வாதிடப்பட்டது. அதைப் பதிவுசெய்துகொண்ட நீதிபதி, இன்று பதில் அளிக்குமாறு தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டார்.

இன்று மதியம் 12 மணிக்கு விசாரணை தொடர்ந்தது. தேர்தல் ஆணையத்தின் சார்பில் விளக்கமான பதில் மனு தாக்கல்செய்யப்பட்டது.

‘நிவேதிதாவின் வேட்பு மனுவில் ஆ படிவத்தை சரியாக நிரப்பவில்லை என குருவாயூர் தொகுதியின் தேர்தல் நடத்தும் அலுவலர் தள்ளுபடி செய்தது தவறு; அ படிவமோ ஆ படிவமோ குறையாக இருந்தால், அதை தள்ளுபடி செய்ய முகாந்திரமில்லை’ என அவரின் வழக்குரைஞர் வாதிட்டார்.

தேர்தல் அலுவலர் தன்னுடைய அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தியுள்ளதாகவும் நிவேதிதா தரப்பில் வாதிடப்பட்டது.

பல இடங்களில் வெவ்வேறு முறைகளை தேர்தல் அதிகாரிகள் கடைப்பிடித்ததாக, தலச்சேரி வேட்பாளர் அரிதாசின் வழக்குரைஞர் குறிப்பிட்டார்.

படிவத்தை சரிசெய்ய தங்களுக்கு அதிகாரிகள் வாய்ப்பளித்திருக்க வேண்டும் என்று இரண்டு பாஜக வேட்பாளர்களின் தரப்பிலும் வாதங்களை முன்வைத்தனர்.

ஆனால், தேர்தல் நடைமுறைகள் தொடங்கி நடந்துவரும் நிலையில், நீதிமன்றம் குறுக்கிடமுடியாது என அரசியல்சாசனம் கூறுவதை தேர்தல் ஆணையம் நீதிமன்றத்தில் தெரிவித்தது. அதை ஏற்றுக்கொண்ட உயர் நீதிமன்ற நீதிபதி, மனுக்களைத் தள்ளுபடி செய்தார்.

இதனால், 140 தொகுதிகளில் மூன்று இடங்களில் பாஜக கூட்டணி போட்டியிடமுடியாத நிலை உறுதியாகியுள்ளது.

இளமுருகு

நயினார் நாகேந்திரன் பேச்சு: ஓபிஎஸ் அறிக்கை!

10 நிமிட வாசிப்பு

நயினார் நாகேந்திரன் பேச்சு: ஓபிஎஸ் அறிக்கை!

டிஜிட்டல் திண்ணை: ஐஏஎஸ்-ஐபிஎஸ் அதிகாரிகள் சட்டம்: பாஜகவின் தேர்தல் ...

6 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: ஐஏஎஸ்-ஐபிஎஸ் அதிகாரிகள் சட்டம்: பாஜகவின் தேர்தல் திட்டம்!

அதிமுக-பாஜக:என்ன நடக்கிறது?

10 நிமிட வாசிப்பு

அதிமுக-பாஜக:என்ன நடக்கிறது?

திங்கள் 22 மா 2021