மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 22 மா 2021

திமுகவுக்குக் கடைசி தேர்தலாக இருக்க வேண்டும்: நடிகை விந்தியா

திமுகவுக்குக் கடைசி தேர்தலாக இருக்க வேண்டும்: நடிகை விந்தியா

2021 சட்டமன்றத் தேர்தல் திமுகவுக்குக் கடைசி தேர்தலாக இருக்க வேண்டும் என்ற முடிவை மக்கள் எடுக்க வேண்டும் என்று நடிகை விந்தியா தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் தேர்தல் என்றால் நடிகர் நடிகைகள் பிரச்சாரம் இல்லாமல் இருக்காது. ராஜபாளையம், சாத்தூர், சிவகாசி ஆகிய தொகுதியில் அதிமுக வேட்பாளர்களுக்கு இரட்டை இலை சின்னத்தில் ஓட்டு கேட்டு நேற்று (மார்ச் 21) நடிகை விந்தியா பிரச்சாரம் செய்தார்.

திருமங்கலம் தொகுதியில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரை ஆதரித்து அவர் பேசுகையில், “இன்றைக்குத் தமிழகத்தில் அம்மா வழியில் நல்லாட்சியை முதலமைச்சர் நடத்தி வருகிறார். அவருக்குத் துணையாக, துணை முதலமைச்சர் இருந்து வருகிறார். ஜல்லிக்கட்டுப் போட்டியை ராகுல் காந்தியும், உதயநிதியும் வேடிக்கை பார்க்க வந்தனர். ஜல்லிக்கட்டு மீதான தடையைக் கொண்டு வந்தது காங்கிரஸ், திமுக கூட்டணிதான். ஆனால் ரோஷம் இல்லாமல் இருவரும் வேடிக்கை பார்த்தனர்.

மக்களின் ஜல்லிக்கட்டுப் போராட்டத்துக்கு மதிப்பளித்து அப்போது முதலமைச்சராக இருந்த ஓபிஎஸ் பிரதமரை நேரில் சந்தித்து அதற்கு அனுமதி பெற்றுத் தந்தார். இதே ராகுல் காந்தி தமிழ் கலாச்சாரம், மொழி, இனம் என்று பேசியுள்ளார். இலங்கையில் ஒன்றரை லட்சம் ஈழ தமிழர்களைக் காவு கொடுத்தது திமுக - காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில்தான். அதேபோல் நமது பாரம்பரிய பொங்கல் விழாவில் ஸ்டாலினும், ராகுலும் செருப்பு போட்டுக்கொண்டனர். அடுப்பே பற்ற வைக்காமல் ஸ்டாலின் பொங்கல் கிண்டுகிறார். இவர்களுக்கு எல்லாம் தமிழ் மொழி கலாச்சாரம் பேச எந்த தகுதியும் கிடையாது.

கழனி முதல் கல்யாண வீடு வரை செருப்பைக் கழற்றிவிட்டு நமது முதல்வரும், துணை முதல்வரும் உள்ளிட்ட அனைத்து அதிமுக நிர்வாகிகளும் தமிழக கலாசாரத்தை மதிப்பார்கள். தற்போது தேர்தல் களத்தில் ஸ்டாலின் டிசைன் டிசைனாக விளம்பரம் கொடுக்கிறார். கிராம சபைக் கூட்டம் போட்டார்” என்று விமர்சித்தார்.

மேலும் அவர், “விடியலை நோக்கி ஸ்டாலின் என்று ஊர் ஊராக கடைகளில் போர்டு வைத்துள்ளார். வியாபாரிகள் நீங்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் ஐந்து பைசா வருமானம் உங்களுக்குக் கிடைத்தாலும் அப்படியே கல்லாப்பெட்டியை திமுகவினர் தூக்கி போய்விடுவார்கள்.

இன்றைக்கு அதிமுகவைப் பார்த்து திமுகவுக்கு மரண பீதி ஏற்பட்டுள்ளது. திமுகவைப் போல் ஏமாற்றி பொய்யான வாக்குறுதி கொடுக்க மாட்டோம். இன்றைக்கு 100 யூனிட் மின்சாரம், தாலிக்கு 8 கிராம் தங்கம், மாணவர்களுக்கு மடிக்கணினி, உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை அம்மா அரசு செய்துள்ளது.

திமுக ஆட்சிக்கு வரத் துடிக்கிறது. மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தின் சொத்துகள் சூறையாடப்படும். ஓட்டுப் போடும் மக்கள் நீங்கள் ஒரு நிமிடம் நினைத்துப்பாருங்கள் திமுக ஆட்சிக்கு வந்தால் அராஜக ஆட்சியாக இருக்கும். உங்கள் விரலில் தான் உங்கள் வாழ்க்கை உள்ளது. சொன்னதைச் செய்யும் அரசு அம்மா அரசு, சொல்லாததையும் செய்யும். இன்றைக்கு அதிமுக தேர்தல் அறிக்கையில், ஆண்டுக்கு ஆறு காஸ் சிலிண்டர், மாதம் தோறும் இல்லத்தரசிகளுக்கு 1,500 ரூபாய், வீட்டுக்கு ஒருவருக்கு அரசுப் பணி, மாணவர்கள் கல்விக் கடன் ரத்து, ஓய்வு திட்டம் 1,000 இருந்து 2,000 ஆக உயர்வு என மக்களின் உயர்வுக்காகப் பல வாக்குறுதிகள் இடம்பெற்றுள்ளன.

இந்தத் தேர்தல் திமுகவுக்குக் கடைசி தேர்தலாக இருக்க வேண்டும் என்ற முடிவை மக்கள் நீங்கள் எடுக்க வேண்டும். தமிழகம் தற்போது வெற்றி நடை போட்டு வருகிறது. இந்தத் தேர்தல் மூலம் வீரநடை போட எடப்பாடி பழனிசாமி மீண்டும் தமிழக முதலமைச்சராக அரியணையில் அமர வைக்க வேண்டும்” என்று வாக்கு சேகரித்தார்.

-சக்தி பரமசிவன்

நான் இணை ஒருங்கிணைப்பாளர்- உச்ச நீதிமன்றத்தில் உறுதியளித்த ...

8 நிமிட வாசிப்பு

நான் இணை ஒருங்கிணைப்பாளர்- உச்ச நீதிமன்றத்தில் உறுதியளித்த எடப்பாடி:  ஏன்?

பன்னீர்செல்வத்தைப் பாராட்டுகிறேன்: டிடிவி தினகரன்

4 நிமிட வாசிப்பு

பன்னீர்செல்வத்தைப் பாராட்டுகிறேன்: டிடிவி தினகரன்

ஆ.ராசாவின் பேச்சால் திமுக பிளவுபடும்: பாஜக ரியாக்‌ஷன்!

3 நிமிட வாசிப்பு

ஆ.ராசாவின் பேச்சால் திமுக பிளவுபடும்: பாஜக ரியாக்‌ஷன்!

திங்கள் 22 மா 2021