மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 22 மா 2021

மம்தாவை இலக்கு வைத்து ‘அதிகாரி’கள் ஆயுதம்.. மோடி+அமித் இறக்கிவிட்ட மூத்த தலை!

மம்தாவை இலக்கு வைத்து ‘அதிகாரி’கள் ஆயுதம்.. மோடி+அமித் இறக்கிவிட்ட மூத்த தலை!

அன்றாட வாழ்க்கையிலும் இப்படித்தான் இருக்கவேண்டும் என கறாராக இருக்கும் மம்தா பானர்ஜியை, அவருக்குப் பிடித்த கொல்கத்தா நகரத்திலிருந்து 126 கி.மீ. தொலைவில் இருக்கும் நந்திகிராமுக்கு வரவழைத்து, மோதிப் பார்க்கிறது மோடி+அமித்ஷா இரட்டையர் அணி.

இந்த இரட்டையரின் முதல் தாக்குதலில் பொறிக்குள் சிக்கியவர், மம்தாவின் இடதும் வலதுமாக இருந்த சுவேந்து அதிகாரி. சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த இவர், கடந்த ஆண்டு கடைசிவரை மம்தாவின் அமைச்சரவையில் போக்குவரத்துத் துறைக்குப் பொறுப்பாக இருந்தார். கடந்த டிசம்பரில் திடீரென ஒரு நாள் அமைச்சர் பதவியிலிருந்து விலகினார்; பதவிவிலகிய கையோடு அமித்ஷா முன்னிலையில் பாஜகவில் சேர்ந்தார். இப்போது மேற்குவங்க பாஜகவின் முக்கிய பிரமுகராக மம்தாவுக்கு எதிராக மாநிலம் முழுவதும் பேசிவருகிறார்.

இடது முன்னணி ஆட்சியில் நந்திகிராமில் 2007ஆம் ஆண்டில் ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்களை, சிறப்புப் பொருளாதார மண்டலம் அமைப்பதற்காக கையக்கப்படுத்த அரசாங்கம் முயன்றது. அதற்கெதிரான போராட்டத்தில் அப்பகுதியை உள்ளடக்கிய கிழக்கு மித்னாப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த சுவேந்து அதிகாரி முன்னணியில் நின்றார்; அதனால் மாவட்ட அரசியலில் முக்கிய இடமும் பிடித்தார். அந்தப் போராட்டத்தின் பலனை திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்குச் சொந்தமாக்கியதில் அவரின் பங்கு பெரியது.

அதன் அடிப்படையில் சுவேந்துவை தன் நம்பகமான படையில் உறுப்பினராக ஆக்கிக்கொண்டார், மம்தா. கவுன்சிலராக இருந்த சுவேந்து, சட்டமன்ற உறுப்பினராக ஆக்கப்பட்டார். மூன்றே ஆண்டுகளில் 2009 மக்களவைத் தேர்தல் வர, அதில் தம்லக் தொகுதியில் நிறுத்தப்பட்டு, எம்.பி.யாக ஆனார். 2014 மக்களவைத் தேர்தலிலும் அதே தொகுதியில் அவர் வெற்றிபெற்றார். இரண்டு ஆண்டுகளில் அவரை மாநில அரசியலுக்கு அழைத்து, அமைச்சராக்கி தன் அணுக்க சீடராக்கி சுவேந்துவின் அதிகார பலத்தை அதிகரித்தார், மம்தா.

இவ்வளவையும் செய்த அவரே, இன்று சொல்கிறார், “ நான் ஒரு முட்டாளாக இருந்துவிட்டேன். நான் ஒரு பெரிய கழுதை.. ’அதிகாரி’குடும்பத்தைப் பற்றி அறிந்துகொள்வதில் தோற்றுப்போய்விட்டேன்தான். எனக்கு அது தெரியாமல் போய்விட்டது; ஆனால் அவர்களின் குடும்பம் 5ஆயிரம் கோடி சேர்த்துவிட்டதாக மக்கள் சொல்கிறார்கள்.. அதை வைத்துக்கொண்டு வாக்குகளைக்கூட வாங்குவார்கள்.. இந்த மாவட்டத்தையே ஜமீன்தார்களைப் போல அவர்கள் தங்கள் பிடிக்குள் வைத்திருந்தார்கள்.. என்னையேகூட இங்கே பொதுக்கூட்டம் நடத்தவிடாமல் செய்தார்கள்.. இந்த மாவட்டத்தில் செய்யப்பட்டுள்ள எல்லா வசதிகளும் நிறைவேற்றப்பட்டுள்ள திட்டங்களும் அரசாங்கத்தால்தான் நடந்திருக்கிறது.. அவர்கள் குடும்பத்தால் அல்ல..” என சுவேந்து அதிகாரியின் சொந்த ஊரான கொந்தையில் நேற்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மம்தா ஆவேசமாகப் பேசினார்.

அவருடைய பேச்சுக்கு எந்த அளவு வரவேற்பு கிடைத்திருக்கும் என்பது சந்தேகமே! அவரே நேற்று சொன்னதைப்போல, வங்காள மக்கள் தங்கள் வாக்குச்சீட்டு மூலமாகத் தெரிவிக்கும்வரை காத்திருக்கத்தான் வேண்டும்.

ஏனென்றால், சுவேந்து அதிகாரியின் பாய்ச்சல் வேக வளர்ச்சிக்கு பெரும் ஏணியாக இருந்ததும் இதே மம்தாதான். அவரின் துணையில்லாமல் சுவேந்துவின் இந்த வளர்ச்சி உருவாகவில்லை. அவர் மட்டுமல்ல, சுவேந்துவின் தந்தை சிசிர் அதிகாரியும் சகோதரர் திபேந்து அதிகாரியும் இதே மாவட்டத்தில் இரண்டு மக்களவைத் தொகுதி உறுப்பினர்கள்..இப்போதும்!

காங்கிரஸ் பாரம்பரியத்தில் வந்த சிசிர் அதிகாரி, தெற்குகொந்தை சட்டப்பேரவைத் தொகுதியில் 1982ஆம் ஆண்டிலேயே சட்டமன்ற உறுப்பினர் ஆனவர். திரிணமூல் கட்சி உருவானதும் 99-ல் மம்தா பக்கம் தாவியவர், இரண்டு முறை அக்கட்சியின் எம்.எல்.ஏ.ஆகவும் 2009 முதல் மூன்றாவது முறையாக தொடர்ந்து தொகுதியின் எம்.பி.யாகவும் இருக்கிறார்.

கிழக்கு மித்னாப்பூர் மாவட்டத்தில் இவரின் இன்னொரு மகன் 44 வயது திபேந்துவும் 2009 முதல் எம்.எல்.ஏ. பதவிவகித்தார். 2016-ல் சுவேந்து அதிகாரி பதவிவிலகிய தம்லக் எம்.பி. பதவியில் இவரைக் கொண்டுவந்தார், மம்தா.

சுவேந்து அதிகாரி பாஜகவில் சேர்ந்தவுடன் சிசிர் அதிகாரியின் இன்னொரு மகனான சோமேந்து அதிகாரியும், அண்ணனின் வழியில் காவிக்கட்சியில் சேர்ந்துவிட்டார். அதன்பிறகு சிசிர் திரிணமூல் கட்சிப் பக்கம் எட்டிக்கூடப் பார்க்கவில்லை. தன் தந்தையும் பாஜகவில் இணைவார் என சுவேந்து சொன்னாலும் சிசிர் வெளியிலேயே தலைகாட்டாமல் இருந்துவந்தார்.

சில வாரங்களாகவே பேசப்பட்டபடி, ஒருவழியாக சிசிர் அதிகாரியும் நேற்று அமித்ஷாவின் பிரச்சாரக் கூட்டத்தில் பாஜகவில் இணைந்தார். திபேந்து அதிகாரியும் இந்த வரிசையில் சேரலாம் என்கிறார்கள்.

இந்த அதிகாரிகள் குடும்பத்துக்கு கிழக்கு மித்னாப்பூர் மாவட்டத்தில் கணிசமான செல்வாக்கு உண்டு. சக்கர நாற்காலியில் சரமாரியாக பாஜகவினருக்கு பதில்சொல்லிவரும் மம்தா, நேற்று அதிகாரி குடும்பத்தின் மூத்த தலையான சிசாரும் பாஜகவில் சேர்ந்ததை அடுத்து, சுயகழிவிரக்கமாகப் பேசியிருக்கிறார். தன்னையே அந்தக் குடும்பம் மாவட்டத்துக்குள் வரவிடாமல் வைத்திருந்ததாக முதலமைச்சராகவும் கட்சித் தலைவராகவும் இருக்கும் மம்தா பேசுவது, அபத்தமாகவே பார்க்கப்படும்.

நேற்று பாஜகவின் பிரச்சாரக் கூட்டம் நடைபெற்ற ஏக்ரா, கொந்தை நகராட்சிகளிலும் அதிகாரி குடும்பத்துக்கு அணுக்கமானவர்கள்தான், பதவிகளைப் பிடித்தனர். சோமேந்து அதிகாரி தன் அண்ணனின் வழியில் பாஜகவில் ஐக்கியம் ஆனதையடுத்து, கொந்தை நகராட்சியில் போர்டு தலைவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார்.

ஒட்டுமொத்த அதிகாரிகள் குடும்பமும் எந்த அளவுக்கு மம்தாவுக்கு பக்கபலமாக இருந்ததோ, அதைவிட பலமாக அவருக்கு எதிரான ஆட்டத்தில் இறங்கியிருக்கிறது. கொல்கத்தாவில் இருந்துகொண்டு அடுத்து டெல்லிக்கோட்டைக்கு நகரப்போவதாகக் கூறிவரும் மம்தாவை, அவருடைய மாநில அரசியல் எழுச்சி தொடங்கிய கிழக்கு மித்னாப்பூர் மாவட்டத்தில், அவருடைய முன்னாள் நம்பிக்கை நட்சத்திரமாக இருந்த குடும்பத்தை வைத்து, வீழ்த்துவதில் மோடி+அமித் கூட்டு கவனமாகக் காய்நகர்த்தி வருகிறது.

இதில் வெல்லப்போவது யார்?....

இளமுருகு

பன்னீர் கடிதம்: எடப்பாடி பழனிசாமி நிராகரிப்பு!

3 நிமிட வாசிப்பு

பன்னீர் கடிதம்: எடப்பாடி பழனிசாமி நிராகரிப்பு!

உதவி கேட்ட ஓபிஎஸ்.. மறுத்த முதல்வர் ஸ்டாலின்.. ஏன் தெரியுமா?

5 நிமிட வாசிப்பு

உதவி கேட்ட ஓபிஎஸ்.. மறுத்த முதல்வர் ஸ்டாலின்.. ஏன் தெரியுமா?

இந்த நிலைமைக்கு நீங்கள் தான் காரணம்: பன்னீருக்கு எடப்பாடி கடிதம்! ...

5 நிமிட வாசிப்பு

இந்த நிலைமைக்கு நீங்கள் தான் காரணம்: பன்னீருக்கு எடப்பாடி கடிதம்!

திங்கள் 22 மா 2021