மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 22 மா 2021

எங்கே, எப்படி, என்ன?: எடப்பாடி பிரச்சாரத்தின் பின்னணி!

எங்கே, எப்படி, என்ன?: எடப்பாடி பிரச்சாரத்தின் பின்னணி!

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வர இருக்கும் சட்டமன்றத் தேர்தலுக்காக தீவிரப் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.

ஒவ்வொரு நாளும் காலை முதல் முற்பகல் வரையிலும், பின்னர் மாலை முதல் இரவு வரையிலும் எனத் திட்டமிட்டிருந்தாலும், ஆங்காங்கே நிலவும் மக்கள் கூட்டம், பேசுவதற்காக திட்டமிடப்பட்ட நேரம் நீண்டு விடுதல் ஆகியவற்றால், பல இடங்களில் பேசும் நேரம் தள்ளிப் போகிறது. இதனால் வெயில், இரவு எனப் பார்க்காமல் சுற்றிக்கொண்டே இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.

சென்னையில் இருந்தாலும், சேலத்தில் இருந்தாலும் கடந்த ஓராண்டாகவே முதல்வருக்கு வீட்டில் இருந்து அவருடைய இல்லத்தரசி தயாரித்துக் கொடுக்கும் கஷாயம் தயாராகவே இருக்கும். சில மணி நேர இடைவெளியில் அந்தக் கஷாயத்தைக் குடித்துக் கொள்வார் முதல்வர்.

அதேபோல வடமாவட்டங்களைச் சுற்றிக் கொண்டிருக்கும் இப்போதும் சேலத்தில் இருந்து ஒவ்வொரு நாளும் முதல்வருக்கான கஷாயம் வந்து சேர்ந்துவிடுகிறது. கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டிருந்தபோதும் ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான மக்களைச் சந்திக்கும் சூழல், ஒவ்வொரு பகுதியிலும் கட்சி வேட்பாளர்கள் நிர்வாகிகளைச் சந்திக்க வேண்டிய சூழல் இருப்பதால் முதல்வர் கஷாய விஷயத்தில் கவனமாகவே இருக்கிறார்.

பிரச்சாரம் தொடங்கும் முன்பே நிர்வாகிகளையும் வேட்பாளர்களையும் சந்திக்கும் முதல்வர் தைரியமா வேலை பாருங்க. நாமதான் ஜெயிப்போம் என்கிறார். ஆங்காங்கே அதிமுகவில் அதிருப்தியாக இருப்பவர்களையும் வரச் சொல்லும் முதல்வர், தொகுதி கூட்டணிக்குப் போனதையும், கட்சியிலேயே இன்னொருவருக்குப் போனதையும் எடுத்துச் சொல்லி அடுத்த ஆட்சியில் உங்களைக் கைவிட மாட்டோம். மனசு கோணாம வேலை பாருங்க என்று அதிருப்தியாளர்களையே நேரடியாகச் சந்திக்கிறார் அல்லது அவர்களுடன் தொலைபேசியில் பேசுகிறார்.

“ஒரு முதல்வர் பிரச்சாரத்துக்கு வரும்போது இவ்வளவு இறங்கிவந்து கட்சி வேலையில் ஈடுபடுவதை இதற்கு முன் நாங்கள் பார்த்ததே கிடையாது” என்கிறார்கள் அதிமுகவினர்.

ஒவ்வொரு நாள் பிற்பகலும், இரவும் பிரச்சாரம் முடிந்ததும்... தங்கியிருக்கும் இடத்தில் இருந்தபடியே அன்றைக்கு முழுதும் எதிர்க்கட்சியினர் குறிப்பாக ஸ்டாலின் தன்னைப் பற்றி என்ன பேசியிருக்கிறார்கள் என்பதை முழுவதுமாக அறிந்துகொள்கிறார் எடப்பாடி. தனது பிரச்சார உத்தி குழுத் தலைவரான சுனிலோடு இதுபற்றி அலசுகிறார். தன்னைப் பற்றிய எந்த விமர்சனம் அன்று தீவிரமாக விவாதிக்கப்பட்டிருக்கிறது என்பதை ஆராய்ந்து அதற்கான பதிலை அடுத்த நாள் பிரச்சாரத்தில் முக்கியத்துவம் கொடுக்கிறார்.

கிராமப்புறம் சார்ந்த பகுதிகளை அதிகமாகக்கொண்டிருக்கும் விழுப்புரத்தில் வானூர் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட எடப்பாடி பழனிசாமி, “இன்னிக்கு சாதாரண மனிதன் முதலமைச்சராகி தாக்குப் பிடிக்கிறது சாதாரண விஷயமில்லை. அனுபவ ரீதியா பாத்துட்டேன். ஏயப்பா எவ்வளவு கஷ்டம். எவ்வளவு கஷ்டம் தெரியுங்களா... ஒரு நாள் நிம்மதியா தூங்கவிட மாட்டாங்க. தினம் ஏதாவது ஒரு போராட்டம், தினம் ஏதாவது ஒரு தொல்லையைக் கொடுத்துக்கிட்டே இருப்பாங்க. அத்தனையும் சமாளிச்சு இரும்பப் பழுக்கக் காய்ச்ச்சி அடிச்சி உறுதிப்படுத்தறதுபோல போராட்டத்தை சந்திச்சு சந்திச்சு பக்குவப்பட்டுட்டேன். இரும்பைப் போல உறுதியாயிட்டேன். இனி ஸ்டாலினால என்னை அசைச்சுகூட பார்க்க முடியாது” என்று பேசினார் எடப்பாடி பழனிசாமி.

இதுபோல ஒவ்வொரு நாளும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது பிரச்சாரத்தைத் திட்டமிட்டு நடத்தி வருகிறார். பேசிப்பேசி குரல் கம்மிவிட்டதால் தொண்டைக்கு இதமான சில மூலிகை பானங்களையும் இப்போது அருந்தத் தொடங்கியிருக்கிறார்.

-வேந்தன்

டாஸ்மாக் அட்டைப் பெட்டி டெண்டர்: அமலானது செந்தில்பாலாஜி மாடல்! ...

8 நிமிட வாசிப்பு

டாஸ்மாக் அட்டைப் பெட்டி டெண்டர்: அமலானது செந்தில்பாலாஜி மாடல்!

டிஜிட்டல் திண்ணை: சீமானை விட்டுப் பிடிக்கும் ஸ்டாலின்

12 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: சீமானை விட்டுப் பிடிக்கும் ஸ்டாலின்

சட்டமன்றத்தை கலைக்கத் தயாரா: முதல்வருக்கு ஜெயக்குமார் கேள்வி! ...

3 நிமிட வாசிப்பு

சட்டமன்றத்தை கலைக்கத் தயாரா: முதல்வருக்கு ஜெயக்குமார் கேள்வி!

திங்கள் 22 மா 2021