மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 22 மா 2021

விடுதலைச் சிறுத்தைகளின் சின்னம் என்ன? ஆவலோடு அதிமுக!

விடுதலைச் சிறுத்தைகளின் சின்னம் என்ன? ஆவலோடு அதிமுக!

திமுக கூட்டணியில் ஆறு இடங்களைப் பெற்றிருக்கும் விடுதலைச் சிறுத்தைகள் தனி சின்னத்தில் போட்டியிட முடிவு செய்திருக்கிறது.

திமுக கூட்டணியில் வானூர் (தனி), செய்யூர் (தனி), காட்டுமன்னார் கோயில் (தனி), அரக்கோணம் (தனி), நாகப்பட்டினம், திருப்போரூர் ஆகிய தொகுதிகளில் விசிக போட்டியிடுகிறது. இவற்றில் திருப்போரூர் தொகுதியில் நேரடியாக பாமகவோடும், மற்ற தொகுதிகளில் அதிமுகவோடும் மோதுகிறது விடுதலைச் சிறுத்தைகள்.

இந்தத் தேர்தலில் ஆறு தொகுதிகளைப் பெற்ற மதிமுக திமுகவின் உதயசூரியன் சின்னத்திலேயே போட்டியிடுவது என்று முடிவெடுத்த நிலையில், விடுதலைச் சிறுத்தைகளோ தனி சின்னத்தில் போட்டியிடுவதாக அறிவித்துத் தேர்தலை சந்திக்கிறது. தனி சின்னத்தால் வெற்றி வாய்ப்பு குறையும் வாய்ப்பு இருப்பதாக திமுக பேச்சுவார்த்தைக் குழுவினர் தெரிவித்தும் திருமாவளவன், “எங்களுக்கு கிடைத்திருக்கும் தொகுதிகள் மிகக் குறைவானவை. எனவே கட்சியினரின் அதிருப்தியை சமாளிக்க தனி சின்னத்தில்தான் போட்டியிட வேண்டும்”என்று தன் நிலையில் உறுதியாக இருந்து இந்த முடிவுக்கு திமுகவை சம்மதிக்க வைத்தார்.

கடந்த மக்களவைத் தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் சார்பில் விழுப்புரத்தில் ரவிக்குமாரும், சிதம்பரத்தில் திருமாவளவனும் போட்டியிட்டனர். அதில் திருமாவளவன் மட்டும் தனி சின்னத்தில் போட்டியிட்டார். மோதிரம் சின்னம் கேட்ட திருமாவளவனுக்கு பானை சின்னம் ஒதுக்கப்பட்டது.

அதேபோல இந்த சட்டமன்றத் தேர்தலிலும் ஆறு தொகுதிகளிலும் தங்களுக்கு பொது சின்னம் கிடைப்பதற்காக விடுதலை சிறுத்தைகள் முயற்சிகள் மேற்கொண்டிருக்கிறார்கள். மனுக்கள் பரிசீலனை முடிந்து இன்று மனுக்களை வாபஸ் வாங்க கடைசி நாள். அதற்குப் பின்னர் ஒவ்வொரு தொகுதியிலும் தேர்தல் அலுவலர்கள் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் தவிர பிற கட்சியினர், சுயேச்சைகளுக்கு சின்னம் ஒதுக்கீடு செய்வார்கள்.

இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர்கள் தாங்கள் போட்டியிடும் ஆறு தொகுதிகளிலும் பானை அல்லது மோதிரம் சின்னத்தைக் கேட்க முடிவு செய்திருக்கிறார்கள். ஆறு தொகுதிகளிலும் ஒரே சின்னம் கிடைக்க வாய்ப்புகள் குறைவு என்றாலும், அப்படிக் கிடைத்தால் அது சிறுத்தைகளின் நல்வாய்ப்பாக இருக்கும்.

மார்ச் 19 ஆம் தேதி நாகையில் செய்தியாளர்களிடம் பேசிய விடுதலை சிறுத்தை கட்சியின் துணைப் பொதுச் செயலாளரும், நாகை சட்டமன்ற தொகுதி வேட்பாளருமான ஆளூர் ஷாநவாஸ், “எங்களுக்கு என்ன சின்னம் என்று மார்ச் 22 ஆம் தேதிதெரியவரும். அன்றில் இருந்து ஏப்ரல் 4 ஆம் தேதி மாலை வரை இந்த சின்னத்தை மக்களிடம் எடுத்துச் செல்ல அவகாசம் இருக்கிறது. சின்னம் முக்கியமல்ல மக்களின் எண்ணம்தான் முக்கியம்” என்று தெரிவித்திருந்தார்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினருக்கு ஒவ்வொரு தொகுதியிலும் ஒவ்வொரு சின்னம் ஒதுக்கப்படும் என்று அதிமுக கருதுகிறது. போட்டியிடும் ஆறில் ஐந்து தொகுதிகளில் அதிமுகவை எதிர்த்து விசிக களமிறங்கியிருக்கும் நிலையில் ஏற்கனவே இரட்டை இலையின் பிரச்சாரம் சூடுபிடித்திருக்கிறது. ஆனால் விடுதலைச் சிறுத்தையினரோ என்ன சின்னத்தில் வாக்கு கேட்பது என்று இன்றுவரை தெரியாமல் மக்களை சந்தித்து வருகிறார்கள். திமுகவும் இதை கவலையோடு பார்த்துக் கொண்டிருக்கிறது.

நயினார் நாகேந்திரன் பேச்சு: ஓபிஎஸ் அறிக்கை!

10 நிமிட வாசிப்பு

நயினார் நாகேந்திரன் பேச்சு: ஓபிஎஸ் அறிக்கை!

டிஜிட்டல் திண்ணை: ஐஏஎஸ்-ஐபிஎஸ் அதிகாரிகள் சட்டம்: பாஜகவின் தேர்தல் ...

6 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: ஐஏஎஸ்-ஐபிஎஸ் அதிகாரிகள் சட்டம்: பாஜகவின் தேர்தல் திட்டம்!

அதிமுக-பாஜக:என்ன நடக்கிறது?

10 நிமிட வாசிப்பு

அதிமுக-பாஜக:என்ன நடக்கிறது?

திங்கள் 22 மா 2021