மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 21 மா 2021

'ஆசிபெற்ற வேட்பாளர்...'- எத்தனை பேர் இப்படி கிளம்பியிருக்கீங்க..?

'ஆசிபெற்ற வேட்பாளர்...'- எத்தனை பேர் இப்படி கிளம்பியிருக்கீங்க..?

முப்பது தொகுதிகளைக் கொண்ட புதுச்சேரியில் பாரதிய ஜனதா கூட்டணியில் என்ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரங்கசாமி, ஏனாம் தொகுதியில் போட்டியிடுகிறார்.

காங்கிரஸ் உள்பட மற்ற கட்சிகளின் சார்பில் யாரும் அவரை எதிர்த்துப் போட்டியிடவில்லை. காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஏ.வி. சுப்பிரமணி சில நாள்களுக்கு முன்னர், ஏனாம் தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் யாரும் போட்டியிடவில்லை என்றாலும், சுயேச்சையாகப் போட்டியிடும் யாராவது ஆதரவு கேட்டால் நாங்கள் ஆதரிப்போம் என்று கூறியிருந்தார்.

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் காலாப்பட்டு தொகுதியில் பாஜக வேட்பாளராகக் கல்யாணசுந்தரம் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து என்.ஆர். காங்கிரஸ் ஆதரவு பெற்ற சுயேச்சை வேட்பாளராக தட்டாஞ்சாவடி செந்தில் போட்டியிடுகிறார். வேட்பு மனு தாக்கல்செய்த பிறகு, இரண்டு வேட்பாளர்களுமே ரங்கசாமியைச் சந்தித்து, வாழ்த்துப்பெற்றனர்.

ரங்கசாமி ஆதரவு பெற்ற வேட்பாளர் என இருவருமே போட்டிப்போட்டு பிரச்சாரம் செய்து வருகிறார்கள்.

அதேபோல உருளையன்பேட்டை தொகுதியில், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் அதிமுக வேட்பாளர் ஓம்சக்தி சேகர், என்.ஆர். காங்கிரஸ் கட்சித் தலைவர் ரங்கசாமியின் ஆசிபெற்ற வேட்பாளர் என விளம்பரம் செய்து வாக்கு சேகரித்து வருகிறார். அதேபாணியில் சுயேச்சையாகப் போட்டியிடும் நேருவும், உண்மையாக நான்தான் ரங்கசாமியின் ஆசிபெற்ற வேட்பாளர்; எனக்கு வாக்களியுங்கள் என்று பிரச்சாரம் செய்துவருகிறார்.

இதையெல்லாம் பார்த்துக்கொண்டு இருந்த பாஜக மேலிடப் பொறுப்பாளர்கள், என்ஆர் காங்கிரஸ் கட்சித் தலைவரிடம் முறையிட்டுள்ளனர். அதற்கு அவரோ, என் கட்சியில் கீழ் யாரையும் நிர்வாகிகளை நியமிக்கவில்லை; நியமனமே செய்யாதபோது அவர்களை எப்படி கட்சியிலிருந்து நீக்கமுடியும் என எதிர்க்கேள்வி கேட்டிருக்கிறார்.

அவர் சொல்வதும் உண்மைதான். இதுவரையில் என்ஆர் காங்கிரஸ் ஆரம்பித்ததிலிருந்தே மாநில கமிட்டியை மட்டுமே வைத்துக்கொண்டு, மாவட்டம், ஒன்றியம், கிளை என எந்த குழுவையும் அவர் அமைக்கவில்லை; மேல்மட்ட கமிட்டியை மட்டுமே வைத்துக்கொண்டு அரசியல் செய்துவருகிறார்.

இது ஒருபக்கம் இப்படி நடக்கிறது என்றால், காமராஜர் நகர் தொகுதியில் பாரதிய ஜனதா கட்சி சார்பாகப் போட்டியிடும் ஜான் குமார் வீடுவீடாக வாக்குக்கேட்டபோது, சறுக்கிவிட்டதில் அவரது காலில் காயம் ஆகிவிட்டதாக, அரசு மருத்துவமனைக்குச் சென்று காட்டினார். நல்லவேளையாக முறிவு ஏதும் இல்லை; தாராளமாக நீங்கள் பிரச்சாரம் செய்யலாம் என மருத்துவர்கள் கூறிவிட்டனர்.

வழக்கம்போல நடக்கலாம் என மருத்துவர்கள் கூறியும். மஞ்சள் பற்று போட்டுக்கொண்டு, காலில் கட்டையும் போட்டுக்கொண்டு, மம்தா பாணியில் சக்கர நாற்காலியில் சென்று வாக்கு கேட்டு வருகிறார்.

அவர் சொல்வதை நம்பாமல், இப்படியெல்லாம் செய்தால் நீங்கள் மம்தாவைப் போல ஆகிவிடமுடியுமா என கிண்டல் செய்கிறார்கள், தொகுதி வாக்காளர்கள்.

புதுச்சேரி அரசியல் இப்போதைக்கு இப்படிதான் போய்க்கொண்டு இருக்கிறது!

- வணங்காமுடி

கரூரில் கடல்- பிரம்மாண்டத்தை மிஞ்சும் பிரம்மாண்டம்: செந்தில்பாலாஜியைப் புகழ்ந்த ...

4 நிமிட வாசிப்பு

கரூரில் கடல்- பிரம்மாண்டத்தை மிஞ்சும் பிரம்மாண்டம்: செந்தில்பாலாஜியைப் புகழ்ந்த ஸ்டாலின்

சரவணா ஸ்டோர்ஸ் கோல்டு பேலஸ் சொத்துகள் முடக்கம்!

3 நிமிட வாசிப்பு

சரவணா ஸ்டோர்ஸ் கோல்டு பேலஸ் சொத்துகள் முடக்கம்!

சென்னை வரும் திரௌபதி முர்மு: பன்னீர்- எடப்பாடி இணைந்து சந்திப்பார்களா? ...

3 நிமிட வாசிப்பு

சென்னை வரும் திரௌபதி முர்மு: பன்னீர்- எடப்பாடி இணைந்து சந்திப்பார்களா?

ஞாயிறு 21 மா 2021