மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 21 மா 2021

தேவிகுளம் உள்பட 3 இடங்களில் கேரள பாஜக அணி மனு தள்ளுபடி!

தேவிகுளம் உள்பட 3 இடங்களில் கேரள பாஜக அணி மனு தள்ளுபடி!

கேரள மாநிலத்தில் தமிழர் பகுதியான தேவிகுளம் உள்பட மூன்று தொகுதிகளில் பாஜக கூட்டணி வேட்பாளர்களின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. இதனால் அதிமுக உள்பட பாஜக கூட்டணி கட்சிகள் அந்த தொகுதிகளில் போட்டியிடமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

கேரளத்தின் மொத்தமுள்ள 140 தொகுதிகளில் ஆளும் இடது ஜனநாயக முன்னணி, காங்கிரஸ் கூட்டணி தவிர்த்து, பாஜக தலைமையிலான மூன்றாவது அணியும் போட்டியிடுகிறது. இதில் தமிழர்களின் பூர்வீகப்பகுதியான இடுக்கி மாவட்டம் தேவிகுளம் தொகுதியில் அதிமுக சார்பில் தனலட்சுமி வேட்பாளராக நிறுத்தப்பட்டார்.

இவர் கடந்த தேர்தலில் சுயேச்சையாகப் போட்டியிட்டு 11, 613 வாக்குகளைப் பெற்றார். இந்த முறை பாஜக கூட்டணியில் அதிமுக சார்பில் நிறுத்தப்பட்ட தனலட்சுமியின் வேட்புமனுவை அவர் முழுமையாக நிரப்பவில்லை என நேற்று தள்ளுபடி செய்யப்பட்டது. அவர் தாக்கல்செய்த படிவம்-26இல் குறைகள் இருப்பதாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தனலட்சுமிக்கு மாற்று வேட்பாளர்களாக மனுத்தாக்கல் செய்தவர்களின் மனுக்களும் அரைகுறையாக இருந்ததால், அவையும் தள்ளுபடி செய்யப்பட்டன.

தலச்சேரி தொகுதியில் பாஜக வேட்பாளரின் மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது. அவர் சமர்ப்பித்த படிவம்-’அ’வில் கட்சியின் தலைவர் கையெழுத்து இல்லாமல், வெறும் முத்திரை மட்டுமே இருந்ததுதான், காரணம் என அதிகாரிகள் கூறியுள்ளனர். அ படிவத்தில் குறிப்பிட்ட வேட்பாளருக்கு கட்சியின் சின்னத்தை ஒதுக்க மாநிலத் தலைவருக்கு தேசியத் தலைவர் அங்கீகாரம் அளிக்கும் சான்று ஆகும். அதிகாரப்பூர்வ வேட்பாளர் ஹரிதாசின் மனுதான் இப்படி என்றால், அவருக்கு மாற்று வேட்பாளராக மனுத்தாக்கல் செய்த லிஜேசின் மனுவிலும் இதேபோல முத்திரை மட்டுமே இருக்க, கட்சித் தலைவரின் கையெழுத்தைக் காணவில்லை.

தலச்சேரி தொகுதியானது பாஜகவின் வெற்றிப் பட்டியலில் இடம்பெற்றிருந்த நிலையில், வேட்புமனுவே தள்ளுபடி ஆகியிருப்பது அக்கட்சியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த தேர்தலில் இந்தத் தொகுதியில் பாஜக 22,125 வாக்குகளைப் பெற்றிருந்தது.

புகழ்பெற்ற குருவாயூர் தொகுதியிலும் பாஜக வேட்பாளர் நிவேதிதா சுப்பிரமணியனின் மனுவையும் தேர்தல் அதிகாரிகள் தள்ளுபடி செய்தனர். அவருடைய மனுவில், கட்சியின் மாநிலத் தலைவர் இவர்தான் வேட்பாளர் என ஒப்புதல் அளிக்கும் இடத்தில் கையெழுத்தே இல்லை என்பதே காரணம். இவருடைய மாற்று வேட்பாளர்களின் மனுக்களும் குறைகளுடன் இருக்கவே தள்ளுபடி ஆகியுள்ளன.

தேவிகுளம் தொகுதியில் கணேஷ் எனும் சுயேச்சை வேட்பாளரை அதிமுக வேட்பாளராக ஆக்குவதற்காக, அவரை திடீரென அதிமுக உறுப்பினராகச் சேர்க்கும் வேலையில் ஈடுபட்டனர். அந்த முயற்சி கைகொடுக்குமா என்பது இன்று தெளிவாகிவிடும்.

தலச்சேரியைப் பொறுத்தவரை உச்ச நீதிமன்றத்தை நாடப்போவதாக பாஜக நிர்வாகிகள் கூறியுள்ளனர்.

- இளமுருகு

டாஸ்மாக் அட்டைப் பெட்டி டெண்டர்: அமலானது செந்தில்பாலாஜி மாடல்! ...

8 நிமிட வாசிப்பு

டாஸ்மாக் அட்டைப் பெட்டி டெண்டர்: அமலானது செந்தில்பாலாஜி மாடல்!

அன்று குணசேகரன் இன்று கரு. பழனியப்பன்: பாஜகவின் டெர்மினேஷன் ...

4 நிமிட வாசிப்பு

அன்று குணசேகரன் இன்று கரு. பழனியப்பன்: பாஜகவின் டெர்மினேஷன் ஆபரேஷன்

டிஜிட்டல் திண்ணை: சசிகலா- தினகரன் இடைவெளி: தூது போன குடும்பப் ...

7 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: சசிகலா- தினகரன் இடைவெளி: தூது போன குடும்பப் பிரமுகர்!

ஞாயிறு 21 மா 2021