மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 21 மா 2021

அசாம் எஸ்டேட் மக்களைக் குறிவைக்கும் ராகுல்... கணக்கு எடுபடுமா?

அசாம் எஸ்டேட் மக்களைக் குறிவைக்கும் ராகுல்... கணக்கு எடுபடுமா?

அறிவிக்கப்பட்டுள்ள ஐந்து சட்டப்பேரவைத் தேர்தல்களில் முதல்கட்டத் தேர்தல் வரும் 27ஆம் தேதி அசாம் மாநிலத்தில் நடைபெறுகிறது.

மூன்று கட்டங்களாக தேர்தல் நடைபெறவுள்ள அசாமில் முதல் கட்டமாக வரும் 27ஆம் தேதி 47 தொகுதிகளுக்கும் இரண்டாம் கட்டமாக ஏப்ரல் 1ஆம் தேதி 39 தொகுதிகளுக்கும் மூன்றாம் கட்டமாக ஏப்ரல் 6ஆம் தேதி 40 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெறும்.

ஆளும் பாஜக - அசாம் கணபரிஷத் கட்சிகளின் நான்கு கட்சிக் கூட்டணியை எதிர்த்து, காங்கிரஸ் கட்சி தலைமையிலான ஏழு கட்சிக் கூட்டணி போட்டியிடுகிறது. ஜனவரி மாதம் முதலே பிரதமர் மோடி, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் முதலிய இரு தரப்பு தலைவர்களும் அசாமில் பிரச்சாரத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

தற்போதைய பாஜக கூட்டணி அரசாங்கத்தை எதிர்த்து பிரச்சாரம் செய்வதற்கு வலுவான தலைவர்கள் காங்கிரஸில் இல்லை. அசாமில் 15 ஆண்டுகள் முதலமைச்சர் பதவியிலிருந்த தருண் கோகாய் கடந்த நவம்பரில் இறந்துபோனதை அடுத்து, காங்கிரஸில் அவருடைய இடம் இன்னும் நிரப்பப்படாமலே இருக்கிறது. ராகுல் காந்தியும் அவரின் சகோதரி பிரியங்காவும் மாறிமாறி அசாமில் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தப் பின்னணியில், தனக்கான வாக்கு வங்கியை வலுவாக்கிக்கொள்ளும் வியூகங்களை காங்கிரஸ் கையில் எடுத்திருக்கிறது. குறிப்பாக, மாநிலத்தில் மூன்றில் ஒரு பங்கினராக இருக்கும் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் பக்கம் அந்தக் கட்சி கவனத்தைக் குவித்திருக்கிறது. நீண்ட காலமாக கோரிக்கையாகவே இருந்துவரும் அன்றாடக் கூலியை 365 ரூபாயாக அதிகரிப்போம் என காங்கிரஸ் அளித்த வாக்குறுதி முக்கியத்துவம் பெற்றுள்ளது.

மார்ச் 19ஆம் தேதி வெள்ளியன்று அசாமின் மலைப்பகுதியில் ராகுல் இரண்டு இடங்களில் பேசியபோதும், காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் அடுத்த ஆறு மணி நேரத்தில் இந்த வாக்குறுதி நிறைவேற்றுவோம் என்று அழுத்தமாகச் சொன்னார்.

டின்சுகியா மாவட்டத்தில் உள்ள சபுவாவிலும் திப்ரூகரிலும் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களிடம் ராகுல் பக்கத்தில் அமர்ந்து கலந்துரையாடினார். அவர்களின் வாழ்க்கை, தொழில் பிரச்சினைகள் குறித்து விவரமாகக் கேட்டறிந்தார். சபுவாவில் தேயிலைத் தொழிலாளர்களுடன் வரிசையில் தரையில் உட்கார்ந்து ராகுலும் சாப்பிட்டார்.

சாப்பிட்டுக்கொண்டே அவர்களிடம் ராகுல் பேச, ஒரு பக்கத்தில் பெண் தொழிலாளர் ஒருவர் இயல்பாகப் பேசிக்கொண்டிருக்க, இன்னொரு புறம் அமர்ந்திருந்த தொழிலாளர் ஏதோ மூக்கில் வந்து ஒட்டியதைத் துடைத்துவிட்டபடி, தன் உணவில் கவனமாக இருக்கும் காட்சி ராகுலின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவுசெய்யப்பட்டுள்ளது.

அவர்கள் மத்தியில் ராகுல் பேசுகையில், "நான் நரேந்திரமோடி அவர்களைப் போல இல்லை. பொய்களைச் சொல்லும் பழக்கம் எனக்கு இல்லை. உங்களுடைய நேரத்தை வீணடிப்பதற்காக நான் வரவுமில்லை. நன்றாகக் கேட்டுக்கொள்ளுங்கள், காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் அடுத்த ஆறு மணி நேரத்தில் நிச்சயமாக உங்களின் அன்றாட சம்பளத்தை 365 ரூபாயாக ஆக்குவோம். சத்தீஷ்கரில் ஏற்கெனவே இப்படி அளித்த வாக்குறுதியை ஆட்சிக்கு வந்த ஆறு மணி நேரத்தில் செய்துகாட்டியிருக்கிறோம். இதுதான் நாங்கள் அளிக்கும் உத்தரவாதம்” என அழுத்தமாகச் சொன்னார்.

பிறகு, டின்சுகியா மாவட்டத்தின் டூம்டூமாவில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் பேசியபோதும், இந்த வாக்குறுதியை வலியுறுத்தினார் ராகுல்.

முன்னதாக, சபுவாவில் பேசும்போது, இந்த சம்பள உயர்வு ஒன்றும் உங்களுக்கு யாரோ தரும் பரிசு அல்ல; உங்களுடைய உரிமை; கேரளத்தில் தேயிலைத் தொழிலாளர்கள் அன்றாடக் கூலியாக 380 ரூபாய் பெறுகிறார்கள் என்றார் ராகுல்.

அசாமிலோ தேயிலைத் தொழிலாளர்களுக்கு இப்போது 167 ரூபாய்தான் அன்றாடக் கூலியாக வழங்கப்படுகிறது; பல கட்டப் போராட்டங்கள், கோரிக்கைகளுக்குப் பிறகு மாநில அரசாங்கம் அண்மையில் இதை 217 ரூபாயாக உயர்த்தி அறிவித்தும், நீதிமன்றத்தில் அதை எதிர்த்து வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.

இதைப் பூடகமாக உணர்த்திய ராகுல், கூலி உயர்வையொட்டி தேயிலைத் தோட்டக்காரர்கள் கவலைப்படவேண்டியதில்லை; ஏனென்றால் இதில் அரசாங்கத்தின் பங்களிப்பும் இருக்கும் என்றும் கூறினார்.

இது மட்டுமின்றி, தேயிலைத் தொழிலாளர்களின் பிரச்சினைகளைக் களைவதற்காக, தனி அமைச்சகம் அமைக்கப்படும் என்றும் ராகுல் இன்னொரு முக்கிய வாக்குறுதியை அளித்தார்.

மேலும், ஒவ்வொரு வீட்டுக்கும் 200 யூனிட் மின்சாரம் இலவச மின்சாரம், குடும்பத்தலைவிக்கு மாதம் 2,000 ரூபாய், குடியுரிமைத் திருத்தச் சட்டம் ரத்து, 5 லட்சம் வேலைவாய்ப்புகள் ஆகிய வாக்குறுதிகளையும் அவர் வழங்கினார்.

தேயிலைத் தொழிலாளர்களுடன் ராகுல் உணவருந்திய தீஞ்சோய் எஸ்டேட் பங்களாவில்தான், அவரின் கொள்ளுத்தாத்தா நேரு 1936இல் தங்கியிருக்கிறார். ராகுல் பெரிய பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய டூம்டூமா ஊரில்தான், 1962இல் நேருவும், 71இல் ராகுலின் பாட்டி இந்திராவும் பிரமாண்டக் கூட்டத்தில் பேசியுள்ளனர். இந்த உள்ளூர்ப் பிணைப்பும் ஏதாவது ஒரு பலனைத் தராதா என்பது காங்கிரஸின் கணக்கு.

- இளமுருகு

2026 க்கு முன்பே சட்டமன்றத் தேர்தல்: அமமுகவினருக்கு தினகரன் அலர்ட்  ...

5 நிமிட வாசிப்பு

2026 க்கு முன்பே சட்டமன்றத் தேர்தல்: அமமுகவினருக்கு தினகரன் அலர்ட்   

எடப்பாடியின் ட்விட்டர் அப்டேட்: அதிமுகவில் அனைவரும் பதவி இழக்கிறார்களா? ...

4 நிமிட வாசிப்பு

எடப்பாடியின் ட்விட்டர் அப்டேட்:  அதிமுகவில் அனைவரும் பதவி இழக்கிறார்களா?

இதை அன்றே செய்திருக்கலாமே?  அமித் ஷாவுக்கு உத்தவ் தாக்கரே கேள்வி! ...

2 நிமிட வாசிப்பு

இதை அன்றே செய்திருக்கலாமே?  அமித் ஷாவுக்கு உத்தவ் தாக்கரே கேள்வி!

ஞாயிறு 21 மா 2021