அமைச்சர்கள் வேட்புமனுவில் சிக்கல்!

தமிழகத்தில் இன்று வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடந்து வருகிறது. ஒரு சில வேட்பாளர்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட வேட்புமனுக்களை அளித்திருக்கிறார்கள். மொத்தம் 7 ஆயிரத்துக்கும் அதிகமான மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.
சென்னையில் உள்ள 16 தொகுதிகளில் 523 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இதில் அதிகபட்சமாகக் கொளத்தூர் தொகுதியில் 55 மனுக்களும், குறைந்தபட்சமாக ஆயிரம் விளக்கு தொகுதியில் 14 மனுக்களும் தாக்கலாகி உள்ளன. வேட்பு மனு தாக்கல் செய்யக் கடைசி நாளான நேற்று (மார்ச் 19) அதிகமாக சுயேச்சை வேட்பாளர்கள் குவிந்ததால் அவர்களது வேட்புமனு விண்ணப்பம், சொத்துப்பட்டியல் ஆகியவற்றைச் சரிபார்த்து இணையதளத்தில் பதிவேற்றம் செய்யும் தேர்தல் நடத்தும் அதிகாரி அலுவலக ஊழியர்கள் பம்பரம் போல் சுழன்று பணியாற்றினார்கள். இந்த பணி நள்ளிரவைக் கடந்தும் நடைபெற்றது.
இந்நிலையில், வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் அந்தந்த தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரி முன்னிலையில் இன்று(மார்ச் 20) நடைபெற்று வருகிறது.
வேட்புமனுக்கள் மீதான பரிசீலினையின் போது, தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளை கடைப்பிடிக்காத மனுக்கள் நிராகரிக்கப்படும். எனவே அந்த வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிட முடியாது. வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை இன்று முடிந்தவுடன், நிராகரிக்கப்பட்ட பெயர்களைத் தவிர்த்து ஏற்றுக்கொள்ளப்பட்ட வேட்பாளர்கள் பெயர்கள் வரிசைப்படுத்தப்படும்.
வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்ட வேட்பாளர்கள் தங்களுக்குப் போட்டியிட விரும்பவில்லை என்று கருதினால், அவர்கள் தங்களது மனுவை 22 தேதி மதியம் 3 மணிக்குள் திரும்பப் பெற்றுக்கொள்ளலாம் என்று தேர்தல் ஆணையம் கால அவகாசம் அளித்தது.
இன்று வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற்று வரும் நிலையில், “ எடப்பாடியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வேட்பு மனு,, போடி நாயக்கனூரில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் வேட்பு மனு, கொளத்தூர் தொகுதியில் தி.மு.க. தலைவர் மு.க ஸ்டாலின் வேட்புமனு, கோவில்பட்டி தொகுதி அமமுக வேட்பாளர் டிடிவி தினகரன், கோவை தெற்கு தொகுதி மநீம வேட்பாளர் கமல்ஹாசன், திருவொற்றியூர் தொகுதி நாம் தமிழர் வேட்பாளர் சீமான் , ராயபுரம் தொகுதி அதிமுக வேட்பாளர் அமைச்சர் ஜெயக்குமார் வேட்பு மனு, ஈரோடு, கோபிசெட்டிப்பாளையம் தொகுதி அதிமுக வேட்பாளரான அமைச்சர் செங்கோட்டையனின் வேட்பு மனு, கரூர் தொகுதி அதிமுக வேட்பாளரான அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வேட்பு மனு, காட்பாடி தொகுதி திமுக வேட்பாளர் துரைமுருகன் வேட்புமனு, சென்னை, சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதி வேட்பாளர் உதயநிதி ஸ்டாலினின் வேட்புமனு, சென்னை, ஆயிரம்விளக்கு தொகுதி பாஜக வேட்பாளர் குஷ்பு, ஆகியோரின் வேட்பு மனு ஏற்றுக்கொள்ளப்பட்டது.
கோவை தொண்டாமுத்தூர் தொகுதி அதிமுக வேட்பாளர், அமைச்சர் எஸ்.பி வேலுமணியின் வேட்பு மனுவில் சொத்து விவரங்கள் சரியாக இல்லை என திமுக வேட்பாளர் கார்த்திகேய சேனாபதி புகார் கூறியுள்ளார். “அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் வேட்புமனு நிறையக் குறைபாடுகளுடன் இருக்கின்றது. வேட்புமனுவில் வருமானம் எப்படி வந்தது என்பதற்கான ஆதாரங்கள் இல்லை” என்று கூறி புகார் அளித்துள்ளார்.
மதுரை, திருமங்கலம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் அமைச்சர் ஆர்.பி உதயகுமாரின் வேட்பு மனுவில் அரசு தரப்பு வழக்கறிஞர், முன்மொழிந்து கையெழுத்திட்டுள்ளதால் அவரது மனுவை நிராகரிக்க கோரி அமமுக சார்பில் போட்டியிடும் மருது மக்கள் சேவை தலைவர் ஆதிநாராயணன் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் முறையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
இதனால் இரண்டு மணி நேர தாமதத்திற்குப் பின்னர் வேட்பு மனு மீதான பரிசீலனை தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த பிரச்சினையால், தேர்தல் அலுவலர் வேட்புமனு ஏற்பது குறித்து உடனுக்குடன் அறிவிப்பு வெளியிடமுடியாத சூழ்நிலை இருப்பதாகவும், அமைச்சரின் வேட்பு மனு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நெல்லை தொகுதி அமமுக வேட்பாளர் பாலகிருஷ்ணன், சமத்துவ மக்கள் கட்சி வேட்பாளர் அழகேசன், ராசிபுரம் சட்டப்பேரவை (தனி) தொகுதி திமுக வேட்பாளர் டாக்டர் ம.மதிவேந்தன், துறைமுக தொகுதி பாஜக வேட்பாளர் வினோஜ் பன்னீர்செல்வம் ஆகியோரின் வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
-பிரியா