மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 19 மா 2021

'இடதுசாரி நண்பர்களே..'- மம்தாவின் திடீர்ப் பாசம்!

'இடதுசாரி நண்பர்களே..'- மம்தாவின் திடீர்ப் பாசம்!

எட்டு கட்டங்களாக தேர்தல் நடப்பதாலோ என்னவோ, மேற்குவங்க மாநிலத்தில் கட்டுக்கடங்காத வன்முறைகள் ஆங்காங்கே வெடித்து வருகின்றன.

முதலமைச்சர் மம்தா போட்டியிடும் நந்திகிராமில் மோதல்கள் தலைதூக்கியுள்ளன. அங்குள்ள பெகுதியா எனும் இடத்தில் புதன் இரவு பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த திரிணமூல் கட்சியின் இளைஞரணி நிர்வாகிகள் 2 பேரை, 150-க்கும் மேற்பட்ட பாஜக தொண்டர்கள் தாக்கியதாக பிரச்னை..! அதில் திரிணமூல் கட்சி நிர்வாகி தபதார் என்பவரின் மண்டை உடைக்கப்பட்டது. அவர்களின் வாகனங்களின் கண்ணாடிகள் அடித்து நொறுக்கப்பட்டன. படுகாயமடைந்த இருவரும் நந்திகிராம் அதிசிறப்பு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பெகுதியா தாக்குதலைக் கண்டித்து மறுநாள் காலையில் சோனாச்சுரா எனும் ஊரில் திரிணமூல் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்த நேரத்தில், அங்கு சென்றது, பாஜக வேட்பாளரும் மம்தாவின் முன்னாள் அணுக்க அமைச்சருமான சுவேந்து அதிகாரியின் பிரச்சாரப் படை. உடனே அங்கு பதற்றம் உருவானது. ’சுவேந்துவே திரும்பிப்போ’ என மம்தா கட்சியினர் முழக்கமிட, இரு தரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அதில் 4 பாஜகவினரும் திரிணமூல் தொண்டர் ஒருவரும் படுகாயம் அடைந்தனர். சம்பவம் தொடர்பாக இரு தரப்பினரும் ஒருவருக்கொருவர் குற்றம்சாட்டிக்கொண்டனர்.

மேற்குவங்கத்தைப் பொறுத்தவரை மம்தாவின் திரிணமூல் கட்சியும் இடதுசாரி கட்சிகள் குறிப்பாக சிபிஎம் கட்சியும் எலியும், பூனையும் போலத்தான்...இப்போதைக்கு! பத்து ஆண்டுகளுக்குப் பிறகு இடதுசாரிகளை நோக்கி நட்புக் குரல் கொடுத்திருக்கிறார், மம்தா.. வேறெதற்கு, வாக்குக்காகத்தான்! கடந்த புதன்கிழமையன்று, ஜாக்ரம் மாவட்டத்தில் உள்ள லால்கர் பகுதியில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய அவர், அங்குள்ள கோபிபல்லாபூர் பகுதியில் இடது முன்னணியினரின் செயல்பாடுகள் நன்றாக இருக்கின்றன என பாராட்டினார்.

அத்துடன், ”பாஜகவை எதிர்த்துப் போராட விரும்புகின்ற இடதுசாரி நண்பர்களே, ஜம்போனி, லால்கர், பின்பூர் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களே, உண்மையில் பாஜகவை வீழ்த்தவேண்டுமென நீங்கள் விரும்பினால், எங்களுக்கு வாக்களியுங்கள். சிபிஎம் கட்சிக்கு வாக்களிக்க நினைத்து உங்கள் வாக்குகளை வீணாக்காதீர்கள். பாஜகவுக்கு எதிராக அனைவரும் ஒருங்கிணைந்து நிற்போம், வாருங்கள்.”என அழைப்பு விடுத்தார், மம்தா.

கடந்த மக்களவைத் தேர்தலில் ஜாக்ரம் தொகுதியை பாஜக கைப்பற்றியது. அங்கு திரிணமூல் காங்கிரஸ் வெற்றி பெற்றுவிடக் கூடாது என்பதற்காக பாஜக பக்கம் வாக்குகள் மாறியதுதான் அதற்குக் காரணம் என்பதை பூடகமாகச் சொன்னார், மம்தா.

லால்கர் கூட்டத்துக்குப் பிறகு, கொல்கத்தாவில் தன் வீட்டில் கட்சியின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டபோதும், மம்தா இடதுசாரிகளுக்கு , ” இன்னும் இடதுசாரிகளாக இருக்கக்கூடியவர்கள் என் நண்பர்கள்தான்.. அவர்களில் பாஜகவுக்கு வாக்களிக்கப் போவதில்லை என்று கூறுவோரை நான் பாராட்டுகிறேன். ஆனால் இடது முன்னணி மீண்டும் ஆட்சிக்கு வரப்போவதில்லை என்பது இடது வாக்காளர்களுக்குத் தெரியும். அவர்கள் பாஜக அல்லாத மற்ற கட்சிகளுக்கு வாக்களித்துவிடாமல், திரிணமூல் கட்சிக்கு மட்டுமே வாக்களிக்கவேண்டும். எல்லா இடதுசாரி நண்பர்களுக்கும் என்னுடைய வேண்டுகோள், இது.” என்று கூறினார்.

ஒரே நாளில் இரண்டு முறை மம்தா வேண்டுகோள் விடுத்ததைக் கேட்டு, இடது முன்னணி முகாமில் கோபமும் எள்ளலுமே வெளிப்பட்டிருக்கிறது.

”இப்படிப் பேசுவதற்கு முன் மம்தா முன்பின் யோசிக்கக்கூட இல்லைபோலும்.. வங்கத்தில் இடதுசாரிகள் மீண்டும் வந்துவிடக்கூடாது என திட்டமிட்டு, அமைப்புரீதியாக தீவிரமாக வேலைசெய்துவிட்டு, இப்போது, தோல்வி பயத்தால் இப்படியெல்லாம் பேசுகிறார். தான் தொடங்கிவைத்த காரியத்துக்கு உரிய விளைவுகளை அவராலேயே எதிர்கொள்ள முடியவில்லை.” எனக் கூறியிருக்கிறார், ஜாக்ரம் மாவட்ட சிபிஎம் தலைவர் பிகாரி பாஸ்க்.

- இளமுருகு

நான் இணை ஒருங்கிணைப்பாளர்- உச்ச நீதிமன்றத்தில் உறுதியளித்த ...

8 நிமிட வாசிப்பு

நான் இணை ஒருங்கிணைப்பாளர்- உச்ச நீதிமன்றத்தில் உறுதியளித்த எடப்பாடி:  ஏன்?

பன்னீர்செல்வத்தைப் பாராட்டுகிறேன்: டிடிவி தினகரன்

4 நிமிட வாசிப்பு

பன்னீர்செல்வத்தைப் பாராட்டுகிறேன்: டிடிவி தினகரன்

ஆ.ராசாவின் பேச்சால் திமுக பிளவுபடும்: பாஜக ரியாக்‌ஷன்!

3 நிமிட வாசிப்பு

ஆ.ராசாவின் பேச்சால் திமுக பிளவுபடும்: பாஜக ரியாக்‌ஷன்!

வெள்ளி 19 மா 2021