மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 19 மா 2021

மக்கள் கேண்டீன், 'நீட்'டுக்கு பதில் 'சீட்', இல்லத்தரசிகளுக்கு ரூ.3,000: மநீம!

மக்கள் கேண்டீன், 'நீட்'டுக்கு பதில் 'சீட்', இல்லத்தரசிகளுக்கு ரூ.3,000: மநீம!

வீட்டு வேலை செய்யும் இல்லத்தரசிகளுக்கு மதிப்பு உரிமைத் தொகையாக 3,000 ரூபாய் வழங்கப்படும் என்று மக்கள் நீதி மய்யம் தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன், சமத்துவ மக்கள் கட்சி, ஐஜேகே கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறார்.

இந்நிலையில் இன்று (மார்ச் 19) கோவையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார்.

41 தலைப்புகளில் வெளியிடப்பட்டுள்ள இந்த அறிக்கையில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்....

விவசாயம், தொழில்துறை மற்றும் உற்பத்தி துறை, சேவைத் துறையின் பொருளாதார வளர்ச்சியை உறுதி செய்து 15 முதல் 20 சதவிகித வளர்ச்சியை அடுத்த 10 ஆண்டுகளுக்கு நிலையாக தொடர நடவடிக்கை எடுத்து தமிழகத்தின் ஒட்டுமொத்த பொருளாதாரம் 70 லட்சம் கோடி ரூபாய் அளவில் இன்றைய நிலையில் இருந்து, சுமார் 4 மடங்கு உயர்த்தி வளர்ந்த நாடுகளுக்கு இணையாக தமிழ்நாட்டை மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.

அடுத்த 5 ஆண்டுகளில் வரிக்கு நிகரான வருமானத்தை உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும்.

மாநில சுயாட்சியை மீட்டெடுக்கவும், மாநில பட்டியலில் இருக்கும் விவசாயத்தை மாநில அரசின் விவசாய மேம்பாட்டு சட்டமியற்றி தமிழக விவசாயிகளை பாதுகாக்க உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும்.

எந்த பகுதிகளில் வறட்சி, தண்ணீர் குறைபாடு இருக்கிறதோ அங்கெல்லாம் குறைந்த தண்ணீரை பயன்படுத்தி அறிவியல் சார்ந்த இயற்கை விவசாயம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

நலிவடைந்த தொழிலை மீட்டெடுக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுப்போம்.

குடிசை இல்லா தமிழகத்தை உருவாக்க, தமிழ்நாடு வீட்டுவசதி கார்ப்பரேஷன் - நவீன பசுமை வீடுகள் கட்டமைப்பு நிறுவனமாக மாற்றி, அதன் மூலம் 20 லட்சம் நவீன பசுமை வீடுகள் கட்டிக் கொடுக்கப்படும்.

ஆற்றங்கரையோரம் வசிக்கும் குடிசை வாசிகளுக்கு, அந்த ஆற்றங்கரை பகுதியில் அடுக்குமாடி வீடுகள் கட்டிக் கொடுத்து அவர்கள் வாழ்வாதாரத்தை பாதுகாப்போம். அதில் விளையாட்டு மைதானம், பள்ளி, மருத்துவமனை மற்றும் வர்த்தக நிறுவனங்கள், ஐமேக்ஸ் சினிமா தியேட்டர், வசதிகளுடன் வீடுகள் கட்டித் தரப்படும்.

நேர்மையான ஊழலற்ற விரைந்து செயல்பட கூடிய ஆட்சி முறை நிர்வாகம் அமைக்கப்படும். ஊழலை ஒழிக்க வெளிப்படையான கொள்கைகள் சட்டங்கள் உருவாக்கப்படும்.

ஊழலை ஒழிக்க கிராம நிர்வாக அலுவலர் முதல் முதல்வர் வரை காகிதமில்லா பாதுகாப்பான வெளிப்படையான, உடன் பதிலளிக்கும் பொறுப்பான, விரைந்து நடவடிக்கை எடுக்கும், மின் ஆளுமை அரசாட்சி திட்டம் அமலாக்கப்படும்.

நீதித்துறை முற்றிலுமாக கணினி மயமாக்கப்பட்டு, தேங்கும் வழக்குகளை விரைந்து முடிக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். வழக்கறிஞர்களின் சேமநலநிதி இரண்டு மடங்காக உயர்த்தப்படும்.

தண்ணீர் புரட்சி ஒன்றே தமிழகத்தில் மறுமலர்ச்சியை உருவாக்கும்.

தமிழக நதிகளை இணைத்து தமிழ்நாடு நீர்வழிச்சாலை அமைப்போம். அண்டை மாநிலங்களுடன் இணக்கமான சூழலை ஏற்படுத்தி அதிதிறன் நீர்வழிச்சாலை உருவாக்க முயற்சி எடுத்து வீணாக கடலுக்கு செல்லும் 3000 டிஎம்சி நீரை பகிர்ந்து கொள்ள முயற்சி எடுப்போம்.

30 ஆண்டுகளாக நிறைவேற்றப்படாத நீர்பாசன திட்டங்கள் விரைந்து முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும்.

நகரங்களில் சிக்கலில்லாத பாதாள சாக்கடை திட்டம் மாநிலம் முழுவதும் செயல்படுத்தப்படும்.

மனிதக் கழிவுகளை மனிதனே அகற்றும் முறையை ஒழிக்கவும் பாதாள சாக்கடைகளை சுத்தப்படுத்தவும் ரோபோட் போன்ற தொழில்நுட்பம் செயலாக்கத்திற்கு வரும்.

விவசாயிகளுக்கு நதிகளை இணைத்து ஏரி, குளங்களை தூர்வாரி மழை நீரையும், வெள்ள நீரை சேமித்து அவர்களது விவசாய விளைச்சலை இரண்டு போகமாவது வெற்றிகரமாக விளைவித்து அவர்கள் உற்பத்திப் பொருள்களை அவர்களே விலை நிர்ணயம் செய்யும் உரிமையை ஏற்படுத்திக் கொடுக்கும் வரை, விவசாய கடன் வசூல் நிறுத்தம் செய்யப்படும். வட்டி தள்ளுபடி செய்யப்படும்.

கோவை ,ஈரோடு, சேலம், தர்மபுரி, செங்கல்பட்டு, வேலூர், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் சமூக நல காடுகள், வீடுகளில் சந்தன மரம் செம்மரம் வளர்த்துப் பின் அரசின் அனுமதியோடு விற்க பொருளாதார மேம்பாட்டு சிறப்பு திட்டம் செயல்படுத்தப்படும்.

விவசாய மேம்பாட்டிற்காக விவசாய அமைச்சகத்தின் கீழ், அணைகளின் தண்ணீர் மேலாண்மை, நீர் திறப்பு அடைப்பு , நதிநீர் மேலாண்மை, கால்வாய் மேலாண்மை ஆகியவை ஒருங்கிணைக்கப்படும்.

எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்பது கட்டாயமாக்கப்படும். இருமொழிக் கொள்கை தொடரும். தமிழில் படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்கப்படும்.

கிராம மறுமலர்ச்சிக்கு அப்துல்கலாமின், providing urban amenities in rural areas என்கிற புரா திட்டம் உருவாக்கப்படும்.

ஒவ்வொரு கிராமத்திற்கும் 20 ஆயிரம் முதல் 50 ஆயிரம் லிட்டர் சுத்தமான குடிநீர் சவ்வூடுபரவல் மூலம் உற்பத்தி செய்யப்படும். இதன்மூலம் கிராம பஞ்சாயத்திற்கு மாதம்தோறும் ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் வரை வருமானமும், ஒரு கிராமத்திற்கு பத்து பேருக்கு வேலை வாய்ப்பும் உருவாகும்.

தொலைத்தொடர்பு மருத்துவ வசதி அனைத்து கிராமங்களுக்கும் ஏற்படுத்தப்படும்.

ரேஷன் கடைகளை நவீனமயமாக மாற்றி மின் ஆளுமையில் சூப்பர் மார்க்கெட் பல்பொருள் அங்காடிகளாக மாற்றப்படும். ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஸ்மார்ட் ரேஷன் கார்டு வழங்கப்படும். நடுத்தர மக்களுக்கு சந்தை விலையை விட குறைவான விலையில் தரமான பொருட்கள் ஸ்மார்ட் கார்டு மூலம் விற்கப்படும். தேவையானவற்றை மக்கள் அலைபேசி மூலம் வீட்டுக்கு ஆர்டர் செய்தால் வீட்டிலேயே அந்த பொருள்கள் டெலிவரி செய்யப்படும்.

அரசு வழங்கும் ரேஷன் பொருட்கள் குடும்பத்திற்கு தனித்தனியாக சரியான எடையில் பாக்கெட்டுகளில் அடைத்து வழங்கப்படும்.

வறுமைக் கோட்டிற்கு கீழே இருக்கும் மக்களை செழுமை கூட்டிற்கு கொண்டு வரும் முதல் அரசாக எங்கள் அரசு செயல்படும்.

ஒன்றியம், பேரூராட்சி, நகராட்சிகளில் ஒரு நவீன ஷாப்பிங் மால் அல்லது வணிகம் மற்றும் ஏற்றுமதி வளாகம் கட்டப்படும்.

கல்வி மேம்பாட்டுக்கு தமிழகத்தின் ஒட்டுமொத்த பொருளாதார உற்பத்தி மதிப்பில் 6 சதவிகிதம் ஒதுக்கப்படும்.

கல்வியை மாநிலப் பட்டியலுக்கு கொண்டு வரும் வகையில் அரசியல் சட்ட நடவடிக்கைகள் கொள்கை கூட்டணிகள் மூலம் முன்னுரிமை அளித்து நடவடிக்கை எடுக்கப்படும்.

ஆசிரியர்களுக்கு இப்போது இருக்கும் சம்பந்தமில்லாத வேலைப்பளு முற்றிலுமாக அகற்றப்படும். ஆசிரியர்கள் ஆசிரியர் பணி மட்டும் பார்த்தால் போதும். மத்திய அரசுக்கு இணையான ஊதியம் ஆசிரியர்களுக்கு வழங்கப்படும். ஆசிரியர்கள் கணவனும் மனைவியும் ஒரே இடத்தில் இருக்க வழிவகை செய்யப்படும் .

ஆசிரியர்களையும், பெற்றோர்களையும், மாணவர்களையும் இணைத்து கற்றல் முறை சுலபமாக்கப்படும். 9 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 10 இன்ச் டேப் விலையில்லாமல் வழங்கப்படும்.

அரசு பள்ளி மாணவர்களுக்கு பள்ளி சென்று வர தனி பேருந்து வசதி. அரசு பள்ளி மாணவர்கள் எட்டாம் வகுப்பு முடிப்பதற்குள் சரளமாக ஆங்கிலம் பேச புதுவித ஆங்கில மொழி பாடத்திட்டம் கொண்டு வரப்படும். அரசு பள்ளி அமைந்திருக்கும் இடத்தில் இருந்து 5 கிலோ மீட்டர் சுற்றளவில் தனியார் பள்ளி தொடங்க அனுமதி இல்லை.

மாநில அரசின் சுயாட்சிக்கான சட்டம் மற்றும் அரசியல் போராட்டத்தின் மூலம் நீட் தேர்வு ரத்து செய்ய சட்டமன்றத்தில் சட்டம் இயற்றி சீட் தேர்வு முறை சட்டம் கொண்டு வரப்படும். சீட் (SEET) தேர்வு மாநில அரசின் பாடத்திட்டத்தின் மூலம் செயல்படுத்தப்பட்டு 100 சதவிகிதம் மருத்துவ மாணவர்கள் தமிழ்நாட்டின் மருத்துவக் கல்லூரிகளில் படிக்கும் வாய்ப்பு உருவாக்கப்படும்.

7.5 சதவிகிதம் என்ற உள் ஒதுக்கீடு ஏமாற்று முறை ஒழிக்கப்பட்டு 85 சதவிகித எம்பிபிஎஸ் ஒதுக்கீட்டில் 100% பெறும் நிலை உருவாக்கப்படும்.

அரசு பள்ளியில் ஐஐடி, ஐஐஎம் போன்ற கல்வி நிறுவனங்களின் நுழைவுத் தேர்வுகளும் அகில இந்திய மருத்துவக் கல்லூரிகளுக்கான போட்டித் தேர்வுகளுக்கும் தயார் படுத்திக்கொள்ள ஒன்பதாம் வகுப்பு முதல் சிறப்பு பயிற்சி அளிக்கப்படும்.

பள்ளிப்படிப்பை விட்டு இடை நிற்கும் இளைஞர்கள் அனைவருக்கும் 4 வருட கட்டாய கமாண்டோ பயிற்சி கொடுக்கப்படும். அதோடு தனித் திறன் மேம்பாட்டு பயிற்சி கொடுக்கப்படும். அவர்கள் அரசின் ஆக்க பணியில் ஈடுபடுத்தப்பட்டு பின்னர் தொழில் தொடங்குவதற்கும் அரசு பணிக்கு தயார் செய்வதற்கும் பயிற்சி கொடுக்கப்படும்.

மருத்துவக் கல்வி மாநிலப் பட்டியலுக்கு கொண்டு வரும் வகையில் அரசியல் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும். மாவட்டங்களுக்கு இரண்டு அரசு மருத்துவ கல்லூரிகள் தனியார் பங்களிப்போடு தொடங்கப்படும். அவை அரசு மாவட்ட மருத்துவமனை அடிப்படையாகக்கொண்டு தொடங்கப்படும்.

திருப்பூரில் 250 கோடி ரூபாய் மதிப்பில் அரசு பல்நோக்கு மருத்துவமனை அமைக்கப்படும். புற்றுநோய் மற்றும் இதர கொடிய நோய்களுக்கு அதிக விலை கொண்ட மருந்துகள் அரசு மருத்துவமனைகளில் கிடைக்க செய்யப்படும்.

தமிழக அரசு காப்பீட்டு கழகம் உருவாக்கப்படும். மருத்துவ காப்பீட்டு திட்டம் மறு சீரமைக்கப்படும். மருத்துவ காப்பீடு, குடும்பத்திற்கு 10 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டு அனைவருக்கும் தரமான மருத்துவம் இலவசமாக வழங்கப்படும்.

போக்குவரத்து கழகம் நஷ்டத்தில் இருந்து மீட்க அதி தீவிர நடவடிக்கை எடுக்கப்படும்.

குளிர்சாதன பேருந்துகளின் எண்ணிக்கை அனைத்து மாநகரங்களிலும், தொலைதூரப் பேருந்துகளிலும் அதிகரிக்கப்படும்.

மாநகரங்களில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் அதிவேக wi-fi வசதி செயல்பாட்டுக்கு கொண்டு வரப்படும்.

நகர சாலைகளில் பாதசாரிகளுக்கு தனிப் பாதை அமைத்து தரப்படும்.

பிளாஸ்டிக் மற்றும் பாலித்தீன் பைகளுக்கு தடை.

சென்னை விமான நிலையத்தின் கட்டமைப்பை 20 மில்லியன் பயணிகளிலிருந்த 50 மில்லியன் பயணிகள் உபயோகிக்கும் வகையில் உயர்த்துவோம். கோவை திருச்சி மற்றும் மதுரை விமான சேவையை 12 மில்லியன் பயணிகள் உபயோகிக்கும் வகையில் உயர்த்துவோம்..

கோவையில் ரயில் பெட்டி தயாரிக்கும் தொழிற்சாலை கொண்டுவரப்படும்.

தமிழ்நாட்டு பட்டாசு தொழிலை காக்க வெளிநாட்டு பட்டாசு இறக்குமதி முற்றிலும் தடை செய்யப்படும். விபத்தில் சிக்கும் பட்டாசு தொழிலாளர்களுக்கு டேர்ம் இன்சூரன்ஸ் அறிமுகப்படுத்தப்படும்.

சீருடை பணியில் 50 சதவிகிதம் பெண்களுக்கு ஒதுக்கப்படும்.

வீட்டு வேலை மட்டும் செய்யும் இல்லத்தரசிகளுக்கு மதிப்பு உரிமை தொகை ரூபாய் 3 ஆயிரம் வழங்கப்படும். மாவட்டம் தோறும் கிராமங்களில் 250 கிராமப்புற பிபிஓ மையங்கள் ஏற்படுத்தப்பட்டு, அரசு மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்கள் மூலமாக வேலை வாய்ப்பு ஏற்பாடு செய்யப்படும். இதன் மூலம் நேரடியாக 1500 இளைஞர்களுக்கு நேரடியாகவும் மற்றும் ஒரு லட்சம் கிராமப்புற மக்களுக்கு கூடுதல் வேலைவாய்ப்பு ஏற்படுத்தப்படும்.

பெண் காவலர்களுக்கு ஏற்ற முறையில் சீருடை மாற்றி அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

ஆளில்லா விமானம் மூலம் உளவு கண்காணிப்பு படை மாவட்டம்தோறும் உருவாக்கப்படும்.

பெண் காவலர்கள் பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கப்படுவதை தடுப்பதற்கு சிறப்பு திட்டம் அமலாக்கப்படும்.

அரசு ஊழியர்களுக்கு தனி கடன் வங்கி தொடங்கப்படும்.

லஞ்சம் பெறாத அரசு ஊழியர்கள் பாராட்டப்பட்டு கௌரவிக்கப்படுவார்கள் 5 ஆண்டு பணி நீடிப்பு வழங்கப்படும் அவரது நேர்மையை பாராட்டி அவரது வாரிசுக்கு அரசு வேலைவாய்ப்பு தகுதி தேர்வில் நேர்முகத் தேர்வில் கூடுதலாக 5 மதிப்பெண்கள் வழங்கப்படும்.

தேவை இல்லாமல் அதிகாரிகளின் மேல் நிலுவையில் உள்ள வழக்குகள் திரும்பப் பெறப்படும்.

12,500 கிராம ஊராட்சிகளில் சீரமைக்கப்பட்ட பால் பண்ணைகள் தொடங்கப்படும. ஆக்கிரமிக்கப்பட்ட கோவில் நிலங்கள் மீட்கப்பட்டு வருமானம் அதிகரிக்கப்படும்.

கணவனால் கைவிடப்பட்ட பெண்களுக்கு மாதம் குறைந்தது பத்தாயிரம் ரூபாய் சம்பாதிக்கும் அளவில் பயிற்சியுடன் கூடிய வேலைவய்ப்பு ஏற்படுத்தித் தரப்படும்.

ராணுவ கேண்டீன் போல அனைத்து பொருட்களும் விலை மலிவாக மக்களுக்கு கிடைக்கும் வகையில் மக்கள் கேண்டீன் தொடங்கப்படும்.

டாஸ்மாக் மது கடைகள் பாதியாக குறைக்கப்படும் உட்பட பல்வேறு முக்கிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

-பிரியா

2026 க்கு முன்பே சட்டமன்றத் தேர்தல்: அமமுகவினருக்கு தினகரன் அலர்ட்  ...

5 நிமிட வாசிப்பு

2026 க்கு முன்பே சட்டமன்றத் தேர்தல்: அமமுகவினருக்கு தினகரன் அலர்ட்   

எடப்பாடியின் ட்விட்டர் அப்டேட்: அதிமுகவில் அனைவரும் பதவி இழக்கிறார்களா? ...

4 நிமிட வாசிப்பு

எடப்பாடியின் ட்விட்டர் அப்டேட்:  அதிமுகவில் அனைவரும் பதவி இழக்கிறார்களா?

இதை அன்றே செய்திருக்கலாமே?  அமித் ஷாவுக்கு உத்தவ் தாக்கரே கேள்வி! ...

2 நிமிட வாசிப்பு

இதை அன்றே செய்திருக்கலாமே?  அமித் ஷாவுக்கு உத்தவ் தாக்கரே கேள்வி!

வெள்ளி 19 மா 2021