மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 19 மா 2021

அதிரடி ஐ.டி., ரெய்டுகள்...எதிர்க்கட்சிகளை முடக்கவா...தேர்தலை நேர்மையாக நடத்தவா?

அதிரடி ஐ.டி., ரெய்டுகள்...எதிர்க்கட்சிகளை முடக்கவா...தேர்தலை நேர்மையாக நடத்தவா?

தமிழகம் எதில் வெற்றி நடை போடுகிறதோ இல்லையோ, ஓட்டுக்குப் பணம் கொடுப்பதில் வெற்றி நடை, வீரநடை போட்டுக் கொண்டிருக்கிறது. இதில் தமிழகத்துடன் போட்டி போட எந்த மாநிலங்களுமே பக்கத்தில் கூட இல்லை. இந்திய அரசியல் வரலாற்றிலேயே பணம் கொடுப்பதைத் தடுக்க இயலாத காரணத்தால் தேர்தல்கள் ரத்து செய்யப்பட்டது, தமிழகத்தில் மட்டுமே. முன்பெல்லாம் இடைத்தேர்தலில்தான் இப்படிப் பணம் கொடுப்பது உச்சத்தில் இருந்தது. பணம் கொடுத்து ஜெயிப்பதை ‘திருமங்கலம் பார்முலா’ என்று ஏதோ புதிய தொழில் நுட்பத்தைக் கண்டு பிடித்ததைப் போலக் கொண்டாடும் அவலமும் இங்குதான் அரங்கேறியது. அதற்குப் பின்பே, அதிகமாகப் பணம் கொடுப்பது உறுதி செய்யப்பட்டால், தேர்தலை நிறுத்துவது என்ற புதிய அஸ்திரத்தை தேர்தல் ஆணையம் எடுத்தது.

கடந்த 2016 சட்டமன்றத் தேர்தலில் அரவக்குறிச்சி, தஞ்சை தொகுதிகளில் இப்படித்தான் தேர்தல் நிறுத்தப்பட்டது. அதன் தொடர்ச்சியாக 2017 ஆம் ஆண்டில் ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலும் ரத்து செய்யப்பட்டது. கடந்த 2019 ஆம் ஆண்டில் நடந்த பாராளுமன்றத் தேர்தலின்போது வேலுார் பாராளுமன்றத் தொகுதிக்கான தேர்தலும் நிறுத்தப்பட்டு, பின்பு தனியாக நடத்தப்பட்டது. இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இந்த நிலை இல்லாததால், தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் மீது கடுமையான அதிருப்தியும் விமர்சனங்களும் எழுந்தன. இது தேர்தல் ஆணையத்தின் தமிழக அதிகாரிகளுக்கு பெரும் அவமானத்தையும் தலைக்குனிவையும் கூட ஏற்படுத்தியுள்ளது.

இதனால் அடுத்த மாதம் நடக்கவுள்ள சட்டமன்றத் தேர்தலில், வாக்காளர்களுக்குப் பணம் கொடுப்பதை எந்தெந்த வகையில் தடுக்க முடியுமோ, அந்தளவுக்குத் தடுப்பது என்பதில் தேர்தல் ஆணையம் மிகவும் உறுதியாகவுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின், இது தொடர்பாக மிக முக்கியமான ஒரு கூட்டத்தை தலைமைச் செயலகத்தில் வைத்து தேர்தல் ஆணையம் நடத்தியது. அதில் சில தேர்தல் ஆணையம் எடுத்துள்ள பல அதிரடி நடவடிக்கைகள் குறித்தும் விளக்கப்பட்டது. வழக்கமாக தேர்தலுக்குப் பணியாற்றும் அதிகாரிகளைத் தவிர்த்து, ஓட்டுக்குப் பணம் கொடுப்பதைத் தடுப்பதற்காக மட்டுமே, ஒரு சிறப்பு அதிகாரியை நியமித்துள்ளது தேர்தல் ஆணையம். ஓய்வு பெற்ற வருமான வரித்துறை அதிகாரி பாலகிருஷ்ணன் என்பவர்தான் இதற்காக சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். இவருடைய தலைமையில் ஒரு குழுவும் அமைக்கப்பட்டிருக்கிறது. அந்தக் குழுவிற்கு சில சிறப்பு அதிகாரங்களும் பகிர்ந்தளிக்கப்பட்டிருக்கிறது என்பதும் அந்தக் கூட்டத்தில் விளக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசின் மிக முக்கியமான ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் பங்கேற்ற அந்தக் கூட்டத்தில் தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ ரொம்பவே மனம் வருந்திப் பேசியிருக்கிறார். வழக்கமான கூட்டம் முடிந்தபின், அதிகாரிகளுடன் மனம் விட்டுப் பேசிக்கொண்டிருந்த அவர், ‘‘தமிழ்நாட்டுல தேர்தல் ஆணையத்துக்குப் பொறுப்பா இருக்குறது ரொம்பவே கேவலமா இருக்கு. வடமாநிலத்துல இருக்குற அதிகாரிகள் எல்லாம் நம்மளைப் பார்த்து கேள்வி கேக்குறதை நினைச்சா வேதனையாவும் இருக்கு. அதனால இந்த முறை எவ்வளவுக்கு எவ்வளவு கடுமையான நடவடிக்கை எடுக்க முடியுமோ அவ்வளவுக்கு எடுத்து, கூடுமான வரைக்கும் தப்பு நடக்காம தேர்தலை நடத்த முயற்சி பண்ணுவோம். இதுல மத்திய அரசு தலையிடும்னு யாருமே பயப்பட வேண்டாம்!’’ என்று சொல்லியிருக்கிறார்.

இந்தத் தகவல் தெரிந்து சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள பாலகிருஷ்ணன் யார் என்ற கேள்வி பல தரப்பிலும் எழுந்திருக்கிறது. தமிழகத்தில் வருமானவரித்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற பாலகிருஷ்ணன், மிகவும் ‘ஸ்ட்ரிக்ட்’ ஆன அதிகாரி என்பதோடு, எந்தவிதமான பாரபட்சமும் காட்டாதவர் என்ற தகவலும் தெரியவந்திருக்கிறது. அவரை யாராலும் பேசி சரி செய்யவே முடியாது என்பதை, இப்போது பணியாற்றும் வருமான வரித்துறை அதிகாரிகள் பலரும் ஒப்புக் கொள்கின்றனர்.

இதுபற்றி நம்மிடம் சில விஷயங்களை வருமானவரித்துறையின் அதிகாரிகள் பகிர்ந்து கொண்டனர்...

‘‘வருமானவரித்துறையில் புலனாய்வுப் பிரிவில் பணியாற்றியவர் பாலகிருஷ்ணன். அவருக்கு வரி ஏய்ப்பு செய்யும் நிறுவனங்களின் யுக்திகள், சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடக்கும் வழிமுறைகள் எல்லாமே அத்துப்படியாய்த் தெரியும். புலனாய்வுப் பிரிவுக்கு போன் உரையாடல்களைப் பதிவு செய்யும் அதிகாரம் இருக்கிறது. இப்போதும் அந்த அதிகாரம் தரப்பட்டு, தேர்தல் வாக்குப்பதிவுக்கு முன்பாகவே, கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதேபோல வங்கிக் கணக்குகளில் இருந்து பரிமாறப்பட்ட பெரும்தொகைகள், யாரிடமிருந்து யாருக்கு அனுப்பப்பட்டுள்ளது போன்ற விபரங்களும் அவர்களுக்கு வந்து கொண்டிருக்கின்றன. அவ்வாறு தொடர் கண்காணிப்பு மேற்கொண்டதில்தான், திருப்பூர் அனிதா டெக்ஸ்காட் நிறுவனத்திற்குச் சொந்தமான இடங்களில் ஐ.டி.ரெய்டு நடந்துள்ளது. அதில் 11 கோடியே 50 லட்ச ரூபாய் மட்டுமே ரொக்கமாகக் கைப்பற்றப்பட்டிருக்கிறது. ஆனால் பரிமாற்றம் நடந்த தொகை, கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் மதிப்பு மிக அதிகம் என்று தெரியவந்திருக்கிறது.

இந்த விவகாரத்தில் இதுவரை தேர்தல் ஆணையம் உள்ளே வரவில்லை. ஆனால் தேர்தல் ஆணையத்துக்குக் கிடைத்த தகவல்கள் பரிமாறப்பட்டதன் அடிப்படையில்தான் இந்த ரெய்டு நடந்துள்ளது. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், ரெய்டு நடந்த நிறுவனம், மக்கள் நீதி மய்யத்தின் பொருளாளராகவுள்ள சந்திரசேகரனுக்குச் சொந்தமானது. இவருடைய அண்ணன் கவின் நாகராஜ், தாராபுரத்தில் இருக்கிறார். அவர் மதிமுக மாவட்ட துணைச் செயலாளராகவும் இருக்கிறார். அவருடைய வீட்டிலும், தாராபுரம் திமுக நகர செயலாளர் தனசேகர் வீட்டிலும் ஐ.டி.ரெய்டு நடந்துள்ளது. இந்த ரெய்டுகள் அனைத்தும் அரசியல் காழ்ப்புணர்ச்சியால் நடத்தப்படுவதாக திமுகவினர் குற்றம்சாட்டுவதிலகின்றனர். நாங்கள் அப்படிக் கருதவில்லை. தமிழக அமைச்சர் சம்பத் ஆதரவாளர்கள் வீடுகளிலும் ரெய்டு நடந்திருக்கிறது. கிடைக்கிற தகவல்களின் அடிப்படையில்தான் ரெய்டு நடத்துகிறோமே தவிர, வேறு எந்த நோக்கமும் கிடையாது. இனிவரும் நாட்களில் நடக்கும் ரெய்டுகள், இதை உறுதிப்படுத்துவதாக இருக்கும்!’’ என்றார்கள்.

இதை மறுக்கும் கோவை மாவட்ட திமுக நிர்வாகி ஒருவர், ‘‘வருமானவரித்துறை, அமலாக்கத்துறை அனைத்தையும் பாரதிய ஜனதா கட்சியின் சிறப்புப் பிரிவுகளாக மாற்றி வைத்திருக்கிறார்கள். கடந்த ஐந்தாண்டுகளில் வருமானவரித்துறையால் எந்த அதிமுக அமைச்சர் வீடுகளிலும் ரெய்டு நடந்ததில்லை. விஜயபாஸ்கர், சேகர் ரெட்டி வீடுகளில் நடந்த ரெய்டுகளுக்கான விடையே இன்னும் தெரியவில்லை. இப்போதும் கோவையில் யார் யாருடைய வீடுகளில் கோடிக்கணக்கில் பணம் பதுக்கப்பட்டிருக்கிறது, அவை யார் யார் மூலமாக எங்கெங்கே விநியோகிக்கப்படுகிறது என்ற விபரங்கள் அனைத்தும் வருமான வரித்துறை அதிகாரிகளுக்குத் தெரியாமலிருக்க வாய்ப்பேயில்லை. ஆனால் அவர்கள் அங்கே எட்டிக்கூடப் பார்க்க மாட்டார்கள். தாராபுரத்தில் பாரதிய ஜனதா கட்சித் தலைவர் முருகன் தேர்தலில் நிற்கிறார். அங்குள்ள திமுக, மதிமுக நிர்வாகிகள், அவருக்கு எதிராக தீவிரமாகக் களமிறங்கி வேலை பார்க்கிறார்கள். அவர்களை மிரட்டி முடக்கும் நோக்கத்துடன்தான் இந்த ரெய்டு நடத்தப்பட்டிருக்கிறது.

அதேபோல கோவையில் வானதி சீனிவாசனை எதிர்த்து கமல் போட்டியிடுகிறார். அவருக்கு நிதியுதவி செய்யும் முக்கியமான பொறுப்பில் சந்திரசேகரன் இருக்கிறார். அவருடைய நிறுவனத்துக்கு இதே தமிழக அரசுதான் கடந்த இரண்டு மூன்று ஆண்டுகளில் 450 கோடி ரூபாய் மதிப்பிற்கு ஆர்டர் கொடுத்துள்ளது. அதிமுக அமைச்சர்கள், தற்போதுள்ள ஐஏஎஸ் அதிகாரிகள் ஆதரவு இல்லாமல் இவருக்கு இவ்வளவு பெரிய ஆர்டர் கிடைத்திருக்க வாய்ப்பேயில்லை. வரி ஏய்ப்பு செய்திருக்கிறார் என்றால் இவ்வளவு காலமாக அது தெரியவில்லையா...தேர்தல் நேரத்தில் இப்படிச் செய்வது நிச்சயமாக எதிர்க்கட்சிகளை முடக்குகிற யுக்திதான். தேர்தல் ஆணையமும் இதன் பின்னணியில் இருக்குமென்றுதான் நாங்கள் நினைக்கிறோம்!’’ என்று கொதிப்போடு பேசினார்.

தேர்தல் நேரத்தில் நடக்கும் இந்த ரெய்டுகள் குறித்து, அரசியல் கட்சியினரைத் தாண்டி, பொதுமக்கள் மத்தியில் நிலவும் கருத்துகளை, சமூக ஊடகங்களில் பரவும் தகவல்களாக பரப்பப்படுகின்றன. அவற்றில் பெரும்பாலான மெசேஜ்களும், மீம்ஸ்களும் மத்தியில் ஆளும் பாரதிய ஜனதாவின் துாண்டுதலின்பேரிலேயே வருமான வரித்துறை இந்த ரெய்டுகளை நடத்துவதாகக் கடுமையான விமர்சனங்களை முன் வைக்கின்றன. முகநுாலில் இது குறித்து இரு தரப்பிலுமான எதிர்வாதங்கள் வலுத்து வருவதையும் பார்க்க முடிந்தது. ஆனால் வாக்குப்பதிவு நாளுக்கு முன்பாக வரும் நாட்களில் வருமான வரித்துறை மற்றும் தேர்தல் ஆணையம் எடுக்கும் நடடிக்கைகளை வைத்தே அவற்றின் நேர்மை மற்றும் நடுநிலைத் தன்மையை உறுதி செய்ய முடியுமென்றே பெரும்பாலானவர்கள் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.

நேர்மையாக தேர்தல் நடக்க வேண்டும்...அதற்கு தேர்தல் ஆணையமும் நேர்மையாக நடக்க வேண்டும்!

–பாலசிங்கம்

கரூரில் கடல்- பிரம்மாண்டத்தை மிஞ்சும் பிரம்மாண்டம்: செந்தில்பாலாஜியைப் புகழ்ந்த ...

4 நிமிட வாசிப்பு

கரூரில் கடல்- பிரம்மாண்டத்தை மிஞ்சும் பிரம்மாண்டம்: செந்தில்பாலாஜியைப் புகழ்ந்த ஸ்டாலின்

சரவணா ஸ்டோர்ஸ் கோல்டு பேலஸ் சொத்துகள் முடக்கம்!

3 நிமிட வாசிப்பு

சரவணா ஸ்டோர்ஸ் கோல்டு பேலஸ் சொத்துகள் முடக்கம்!

சென்னை வரும் திரௌபதி முர்மு: பன்னீர்- எடப்பாடி இணைந்து சந்திப்பார்களா? ...

3 நிமிட வாசிப்பு

சென்னை வரும் திரௌபதி முர்மு: பன்னீர்- எடப்பாடி இணைந்து சந்திப்பார்களா?

வெள்ளி 19 மா 2021