மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 19 மா 2021

கட்சிமாறிகளுக்கு 150 சீட்டா.. தீவைப்பு, சூறையாடல்.. திணறிப்போன பாஜக மேலிடம்!

கட்சிமாறிகளுக்கு 150 சீட்டா.. தீவைப்பு, சூறையாடல்.. திணறிப்போன பாஜக மேலிடம்!

மேற்குவங்கத்தின் மொத்தமுள்ள 294 சட்டப்பேரவைத் தொகுதிகளில் ஏற்கெனவே நான்கு கட்டங்களுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டிருந்தனர். 148 பேரைக் கொண்ட அடுத்த பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது.

இனி 11 வேட்பாளர்கள் அறிவிக்கப்பட வேண்டியநிலையில், இதுவரை வெளியான 283 பேர் பட்டியலில் 150 பேர் கட்சிமாறி வந்தவர்கள் என கொதிக்கிறார்கள், வங்க பாஜகவில்.

மாநிலத்தில் முழுமையான மாற்றம், தங்க வங்கத்தைப் படைப்போம் என பிரதமர் மோடி சொன்னதெல்லாம், இப்படியானவர்களை வைத்துக் கொண்டுதானா எனக் கேட்கிறார்கள், அதிருப்தி பாஜகவினர்.

முதல் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டதில் இருந்தே, பாஜகவில் எதிர்ப்பு இருந்து வருகிறது. பல இடங்களில் கட்சி அலுவலகங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு, சூறையாடல் வரை சென்றது. சில மூத்த தலைவர்கள் மீது தாக்குதலும் நடைபெற்றது.

நேற்று வடக்குப் பகுதியான ஜல்பைகுரியில் மாவட்ட கட்சி அலுவலகத்தைச் சூறையாடிய உள்ளூர் பாஜகவினர், அங்கிருந்த விளம்பரப் பொருள்களுக்கு தீவைத்தனர் தீயணைப்புத் துறையினரும் காவல்துறையினரும் போய் நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

பழைய மால்டா, அரிஸ்சந்திரப்பூர் ஆகிய இடங்களிலும் இதைப்போன்ற வன்முறைகள் அரங்கேற்றப்பட்டன.

ஜகடால், தெற்கு நாடியா, ரானாகட், சக்டா மற்றும் வடக்கு 24பர்கானா மாவட்டத்தின் பல பகுதிகளிலும் அதிருப்தியாளர்கள் வன்முறையில் ஈடுபட்டனர்.

கூச்பிகார் மாவட்டத்தின் சிதையில் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான பபேன் ராய் பாஜகவிலிருந்து விலகி திரிணமூல் காங்கிரஸ் கட்சியிலேயே சேர்ந்துவிட்டார். தெற்குப் பகுதியில், வேட்பாளர்களை மாற்றக்கோரி துர்காபூர் மாவட்ட அலுவலகத்தின் முன்பாக மாவட்ட பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கேரள வயநாட்டில் அறிவிக்கப்பட்ட வேட்பாளரே தனக்குத் தெரியாமல் பெயரை அறிவித்ததாக மறுத்ததைப் போல, நேற்றைய பட்டியலில் இடம்பெற்ற இரண்டு பேரும் கூறியிருக்கின்றனர்.

காசிப்பூர்-பெல்கச்சியா தொகுதியில் அறிவிக்கப்பட்ட சாகா என்பவர், சொல்வதைக் கேட்டால் இப்படியும் நடக்குமா எனத் தோன்றுகிறது.

” பாஜக தலைவர் யாரும் என்னிடம் பேசவில்லை. அந்தக் கட்சியின் சார்பில் நியமிக்கப்பட்ட தனியார் சர்வே கம்பெனியிலிருந்துதான் பேசினார்கள். பாஜகவில் சேர எனக்கு நேரமில்லையென சொல்லிவிட்டேன்.” என்று சொல்லும் சாகாவுக்கு, பாஜகவிடமிருந்து பதில் இல்லை.

சௌரிங்கீ தொகுதியில் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட மித்ரா சௌத்ரியோ, “ காங்கிரஸ் கலாச்சார பாரம்பரியம் உள்ள குடும்பத்தைச் சேர்ந்தவன், நான். பாஜக வேட்பாளராக நான் ஏன் போட்டியிடவேண்டும்?” என்று கேட்கிறார்.

என்ன நடந்தது, ஏன் நடந்தது என்பதைப் பற்றி கட்சி தீவிரமாக விசாரணை நடத்தும் என பொத்தாம்பொதுவாகப் பேசியிருக்கிறார், மாநில பாஜகவின் முன்னாள் தலைவர் ராகுல் சின்கா.

உள்கட்சிப் போராட்டங்களை அடுத்து, வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பொருளாதார வல்லுநர் அசோக் லாகிரி திரும்பப்பெறப்பட்டிருப்பது, குறிப்பிடத்தக்கது. அதில்கூட அவரின் பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லை என்பதால்தான் வேறு ஒருவர் அறிவிக்கப்பட்டதாகக் கூறுகிறார்கள், வங்க பாஜகவில்.

நேற்றைய வேட்பாளர் பட்டியலால் அதிகரித்த உட்கட்சி எதிர்ப்பைச் சமாளிப்பது குறித்து, டெல்லியில் அமித்ஷா தலைமையில் நேற்று திடீர் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

- இளமுருகு

டிஜிட்டல் திண்ணை: சென்னை யார் கையில்? சேகர்பாபு vs மா.சுப்பிரமணியன் ...

10 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: சென்னை யார் கையில்?  சேகர்பாபு vs  மா.சுப்பிரமணியன்

மீண்டும் எட்டு வழிச் சாலை! காய் நகர்த்தும் கட்கரி

10 நிமிட வாசிப்பு

மீண்டும் எட்டு வழிச் சாலை!  காய் நகர்த்தும் கட்கரி

டிஜிட்டல் திண்ணை: கனிமொழியா? உதயநிதியா? மேயர் ரேஸ்

11 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை:  கனிமொழியா? உதயநிதியா?  மேயர் ரேஸ்

வெள்ளி 19 மா 2021