பினராயியை எதிர்கொள்ள காங்கிரஸில் தயக்கம்… கடைசிவரை இழுபறி!

politics

கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயன், கண்ணூர் மாவட்டம் தர்மடம் தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து பாஜக சார்பில் மாநில பாஜக முன்னாள் தலைவர் சி.கே.பத்மநாபன் நிறுத்தப்பட்டுள்ளார். ஆனால், காங்கிரஸ் வேட்பாளர் அறிவிப்பில் மட்டும் தாமதமோ தாமதம்..!

மனுத் தாக்கலுக்கு இன்று (மார்ச் 19) தான் கடைசி நாள் எனும் நிலையில், நேற்று (மார்ச் 18) மதியம்வரை காங்கிரஸ் கட்சியின் சார்பில் தர்மடம் தொகுதியில் யார் வேட்பாளர் என்பதை அக்கட்சி மேலிடம் அறிவிக்கவே இல்லை.

கேரளப் பிரதேச காங்கிரஸ் கமிட்டியின் செயல்தலைவர் கே. சுதாகரனை தர்மடம் தொகுதியில் போட்டியிடுமாறு மாநிலத் தலைவர் முல்லப்பள்ளி ராமச்சந்திரன் அவரிடம் பேசினார். முன்னாள் முதலமைச்சர் உம்மன் சாண்டி, ரமேஷ் சென்னிதாலா ஆகியோரும் அவரிடம் தர்மடத்தில் நிற்குமாறு பேசிப் பார்த்தனர். மாவட்ட நிர்வாகிகளும் தொகுதியில் உள்ள காங்கிரஸ் கூட்டணிக் கட்சியினரும்கூட சுதாகரனிடம் இது குறித்து வலியுறுத்தினார்கள்.

கடைசியாக, காங்கிரஸ் மேலிடத்திலிருந்து சுதாகரனை நேரடியாக அழைத்து, பினராயி விஜயனை எதிர்த்து போட்டியிடுமாறு கூறினர். காங்கிரஸைப் பொறுத்தவரை, தற்போது பாஜக வசமுள்ள நேமம் தொகுதியில் கே.முரளீதரனை நிறுத்தியிருக்கிறது காங்கிரஸ். சிபிஎம், பாஜகவுடன் சரிக்குச் சமமாக மல்லுக்கட்டக்கூடிய வலு தங்களுக்கு இருக்கிறது என்பதை நிரூபிக்க வேண்டும் என காங்கிரஸ் தலைமை விரும்புகிறது.

கட்சியில் யார் என்ன சொன்னாலும் சுதாகரன் அதைக் காதில் வாங்கிக்கொள்வதாகவே இல்லை. கட்சித் தலைமையிடமே முடியாது என மறுத்துவிட்டார்.

பினராயிக்கு எதிராக தன்னை நிற்கச்சொன்னதற்காக கட்சித் தலைமைக்கு நன்றி தெரிவித்துக்கொள்வதாகவும் இந்தச் சூழல் தனக்கு சாதகமாக இல்லாத நிலை என்றும் கண்ணூரில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய சுதாகரன் விளக்கம் சொன்னார்.

”கண்ணூரில் உள்ள ஐந்து தொகுதிகளிலும் தேர்தல் பணியாற்றுவது என்னுடைய பொறுப்பு. தர்மடம் தொகுதியில் போட்டியிட்டால் அதிலேயே முடங்கிப்போக வேண்டியிருக்கும். இதில் இன்னொரு விஷயம், தர்மடத்தில் போட்டியிடுவதற்கான எந்தத் தயாரிப்பையும் நான் அங்கு செய்திருக்கவில்லை. அதற்கான அவகாசமும் எனக்கு இல்லை. ஒருவேளை முன்கூட்டியே அந்த வேலையைத் தொடங்கியிருந்தால் பிரச்சாரமும் ஒரு கட்டத்துக்கு நகர்ந்து, தர்மடம் தொகுதியில் உறுதியான வெற்றி கிடைக்க வாய்ப்பு ஏற்பட்டிருக்கும்” என்று சுதாகரன் ஒரு விரிவுரையே நிகழ்த்திவிட்டார்.

இந்த நிலையில்தான், நேற்று பிற்பகலில் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் ரகுநாத் தர்மடம் தொகுதியில் வேட்பு மனுவைத் தாக்கல்செய்தார். அவர் மனுத் தாக்கல் செய்யும்வரை காங்கிரஸ் கட்சி தர்மடம் தொகுதிக்கான வேட்பாளரை முறைப்படி அறிவிக்கப்படவில்லை.

**- இளமுருகு**

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *