மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 18 மா 2021

ஒரு விவசாயி முதல்வராகக் கூடாதா? எடப்பாடி பழனிசாமி

ஒரு விவசாயி முதல்வராகக் கூடாதா? எடப்பாடி பழனிசாமி

நீட் தேர்வைக் கொண்டுவந்த காங்கிரஸுடன் கூட்டணி அமைத்த திமுகவுக்கு அப்போது நீட்டைத் தடுக்க திராணி இல்லை என்று விமர்சித்துள்ளார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தில் அதிமுக வேட்பாளர் கோபிநாத்தை ஆதரித்து முதல்வர் பழனிசாமி நேற்று (மார்ச் 17) பிரச்சாரம் செய்து பேசினார். அப்போது அவர், “நான் எப்படி முதல்வர் ஆனேன் என்பது நாட்டுக்கே தெரியும். எங்கள் ஆட்சியைக் கவிழ்க்க எவ்வளவு நெருக்கடிகள் இருந்தது என்று மக்களுக்குத் தெரியும். நான் பேசுவதைக் கவனமாக கவனித்தால் நான் பேசுவது ஸ்டாலினுக்குப் புரியும். அதைக் கவனிக்காமல் ஒருவர் எழுதி கொடுத்ததை வாசிக்கிறார். சொந்தமாகச் சிந்தியுங்கள். ஒரு விவசாயி முதல்வர் ஆகக் கூடாதா? நான் விவசாயி என்பதால் விவசாயிகளின் பிரச்சினைகளைத் தீர்த்து வைத்துள்ளேன். ஸ்டாலின் டெல்டா மாவட்டங்களுக்கு என்ன செய்துள்ளார்? விவசாயிகளின் நிலத்தைப் பிடுங்கி தனியாருக்குத்தான் கொடுத்துள்ளார்.

நாங்கள் டெல்டா மாவட்டங்களைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக்க சட்டம் கொண்டு வந்தோம். இந்தியாவிலேயே பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு அதிக இழப்பீட்டைப் பெற்றுத் தந்த ஒரே அரசு அதிமுக அரசு. மக்களின் ஆதரவுடன் கோதாவரி - காவிரி இணைப்பு திட்டம் நிச்சயமாக நிறைவேற்றப்படும். நீட் தேர்வு பற்றி திமுக பேசிவருகிறது. நீட் பற்றி அவர்களுக்கு என்ன தெரியும்? நீட் தேர்வைக் கொண்டுவந்த காங்கிரஸுடன் கூட்டணி அமைத்து இருந்த திமுகவுக்கு அப்போது நீட்டைத் தடுக்க திராணி இல்லை. ஆனால், அதிமுக இன்று வரையில் நீட் தேர்வை எதிர்த்து வருகிறது.

நாங்கள் கிராமப்புற மாணவர்கள் பாதிக்காத வகையில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவிகிதம் இட ஒதுக்கீடு வழங்கினோம். அதிமுக அரசு கூறியவாறு இலவச மிக்ஸி, கிரைண்டர் கொடுத்தோம். ஆனால், 2006இல் திமுக கூறிய நிலமற்ற ஏழைகளுக்கு நிலம் தருவதாகக் கூறி ஏமாற்றிவிட்டு, இப்போது நாடகமாடுகின்றனர். 10 ஆண்டுகள் ஆட்சியில் இல்லாததால் எப்படியாவது பொய் பேசி, மக்களைக் குழப்பி, அந்தக் குழப்பத்தில் திமுக வெற்றி பெற நினைக்கிறது” எனப் பேசினார்.

தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு தேரடியில் பாஜக வேட்பாளர் பூண்டி எஸ். வெங்கடேசனை ஆதரித்து பிரச்சாரம் செய்த முதல்வர் பழனிசாமி பேசியதாவது:

“ஹைட்ரோ கார்பன் திட்டத்தால் தங்களுடைய நிலமெல்லாம் பறிபோய்விடும் என்ற அச்சத்தில் டெல்டா விவசாயிகள் இருந்தனர். இம்மாவட்ட விவசாயிகளின் அச்சத்தையும், துன்பத்தையும் போக்குவதற்காகப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலச் சட்டத்தை நாங்கள் நிறைவேற்றினோம். கர்நாடகாவிடமிருந்து போராடித்தான் காவிரியில் நம்முடைய தண்ணீரைப் பெற்று வரும் நிலை இருந்து வந்தது. அதுவும் கர்நாடகத்தில் தேக்கி வைக்க முடியாத அளவுக்கு இருக்கும் உபரி நீர் மட்டும்தான் நமக்குத் தரப்பட்டது.

அந்த நிலைமையை மாற்ற ஜெயலலிதா உச்ச நீதிமன்றம் வரை சென்று, சட்டப் போராட்டம் நடத்தி மரணம் அடைந்தார். தற்போது நடைபெறும் அவருடைய ஆட்சியில்தான் காவிரியில் நமக்குச் சட்டபூர்வமாகத் தண்ணீர் கிடைக்க உறுதியான நடவடிக்கை எடுக்கப்பட்டது. கோதாவரி - காவிரி இணைப்புத் திட்டத்தை இந்த அரசுதான் முன்னெடுத்துச் செல்கிறது. இந்த ஆட்சியில்தான் விவசாயிகளுக்கு நன்மை கிடைக்கிறது. தமிழக விவசாயிகளுக்குச் சாகுபடி செய்வதற்குத் தண்ணீர் பெற்றுத் தருவதுதான் இந்த அரசின் லட்சியம்" என்று கூறிய முதல்வர், "நானும் ஒரு விவசாயிதான், ஒரு விவசாயி முதல்வராகக்கூடாதா..." என்றார்.

-சக்தி பரமசிவம்

2026 க்கு முன்பே சட்டமன்றத் தேர்தல்: அமமுகவினருக்கு தினகரன் அலர்ட்  ...

5 நிமிட வாசிப்பு

2026 க்கு முன்பே சட்டமன்றத் தேர்தல்: அமமுகவினருக்கு தினகரன் அலர்ட்   

எடப்பாடியின் ட்விட்டர் அப்டேட்: அதிமுகவில் அனைவரும் பதவி இழக்கிறார்களா? ...

4 நிமிட வாசிப்பு

எடப்பாடியின் ட்விட்டர் அப்டேட்:  அதிமுகவில் அனைவரும் பதவி இழக்கிறார்களா?

இதை அன்றே செய்திருக்கலாமே?  அமித் ஷாவுக்கு உத்தவ் தாக்கரே கேள்வி! ...

2 நிமிட வாசிப்பு

இதை அன்றே செய்திருக்கலாமே?  அமித் ஷாவுக்கு உத்தவ் தாக்கரே கேள்வி!

வியாழன் 18 மா 2021