மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 18 மா 2021

தஞ்சையில் சசிகலா

தஞ்சையில் சசிகலா

மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா தஞ்சாவூருக்கு நேற்று (மார்ச் 17) இரவு வந்ததால் தஞ்சை தரணியில் பரபரப்பு நிலவி வருகிறது.

தமிழகத்தில் ஜெயலலிதா, சசிகலா என்றாலே பரபரப்புக்குப் பஞ்சமில்லை.

சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூரு சிறையிலிருந்த சசிகலா கடந்த ஜனவரி மாதம் விடுதலையானார். விடுதலையாகி ஓய்வுக்குப்பின் பெங்களூருவிலிருந்து சென்னை வரை காரில் வந்தபோது வழியெங்கும் பெரும் வரவேற்பை மக்கள் கொடுத்தது ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி, உதிரிகட்சி என அனைத்து அரசியல்வாதிகளும் வரவேற்பைப் பார்த்துப் பிரமித்துப் போனார்கள்.

சசிகலா சென்னை தி.நகரில் உள்ள இளவரசியின் வீட்டில் தங்கி இருந்தார். தீவிர அரசியலில் ஈடுபட போவதாக முதலில் கூறிய அவர் திடீரென யாரும் எதிர்பார்க்காத வகையில் அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்தார். அரசியலிலிருந்து விலகுவதாக அறிவித்த சசிகலா சென்னையில் வசித்து வரும் வீட்டில் மிக முக்கிய பிரமுகர்களை மட்டும் சந்தித்தார். மேலும் அவர் தஞ்சாவூர் செல்ல இருப்பதாக தகவல் வெளியானது. இதுகுறித்து மின்னம்பலத்தில் தஞ்சை செல்கிறாரா சசிகலா? என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம்.

இந்நிலையில் தஞ்சாவூருக்கு கார் மூலம் நேற்று இரவு வந்தார். தஞ்சாவூர் அருளானந்த நகரிலுள்ள கணவர் நடராஜன் இல்லத்தில் தற்போது தங்கியுள்ளார். தஞ்சாவூர் அருகே விளார் கிராமத்தில் உள்ள குல தெய்வமான வீரனார் கோவிலில் இன்று காலை சுவாமி தரிசனம் செய்து இங்கு நடைபெற்ற நடராஜன் சகோதரரின் பேரக் குழந்தைகளுக்கான காதணி விழாவில் பங்கேற்றார்.

மேலும், தஞ்சாவூரில் தொடர்ந்து மூன்று நாள்களுக்குத் தங்க உள்ளார் என்றும், மார்ச் 20 ஆம் தேதி நடராஜனின் நினைவு நாளையொட்டி விளார் சாலையில் உள்ள அவரது சமாதிக்கு சென்று அஞ்சலி செலுத்த உள்ளார் எனவும் கூறப்படுகிறது. போலீசார் தஞ்சாவூர் மாவட்டத்தில் அதிகளவில் முகாமிட்டுள்ளனர்.

-சக்தி பரமசிவன்

உள்ளாட்சி வெற்றி: திமுகவினர் நடத்தும் கூவத்தூர் பாலிடிக்ஸ்! ...

6 நிமிட வாசிப்பு

உள்ளாட்சி வெற்றி: திமுகவினர் நடத்தும் கூவத்தூர் பாலிடிக்ஸ்!

மாற்றப்படும் அதிமுக தலைமை அலுவலகத்தின் பெயர்!

4 நிமிட வாசிப்பு

மாற்றப்படும் அதிமுக தலைமை அலுவலகத்தின் பெயர்!

ஆலயங்களில் பக்தர்கள்: அண்ணாமலை அழுத்தமா? ஆளுநர் அழுத்தமா?

6 நிமிட வாசிப்பு

ஆலயங்களில் பக்தர்கள்: அண்ணாமலை அழுத்தமா? ஆளுநர் அழுத்தமா?

வியாழன் 18 மா 2021