மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 18 மா 2021

சிபிஐ: தமிழகத்தின் ஏழை வேட்பாளர்!

சிபிஐ: தமிழகத்தின் ஏழை வேட்பாளர்!

தமிழகத்தைக் குடிசை இல்லா மாநிலமாக மாற்றுவோம் என அரசியல் கட்சிகள் சொல்லி வருகின்றன.  ஆனால் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவரே குடிசை வீட்டில் வாழ்ந்து வருவது  தெரியவந்துள்ளது.

கோடிக்கணக்கில் சொத்து இருப்பதாக வேட்புமனுவில் கணக்குக் காட்டும்  வேட்பாளர்கள் மத்தியில் மிகவும்  எளிமையான ஒரு வேட்பாளரைக் களமிறக்கியிருக்கிறது  ஒரு தேசியக் கட்சி.

2021 சட்டமன்ற தேர்தலையொட்டி, திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள  இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.  விவசாயத் தொழிலாளர்கள், கூலி தொழிலாளர்கள் அதிகம் உள்ள தொகுதியாக திருத்துறைப்பூண்டி சட்டமன்றத் தொகுதி சிபிஐக்கு ஒதுக்கப்பட்டது. இந்த தொகுதியிலிருந்து மாரிமுத்து என்பவர் போட்டியிடுகிறார்.

தேர்தலில் போட்டியிடுவதற்காக நேற்று வேட்பு மனுவை தாக்கல் செய்தார்  மாரிமுத்து. அதில், ’அவருக்கு 75 சென்ட் நிலம்  உள்ளது. அதன் மதிப்பு ரூ.1.75 லட்சம். கையில் இருக்கும் ரொக்கப் பண மதிப்பு ரூ.3000.  மனைவி கையில் ரூ. 1000 உள்ளது. தனது வங்கிக் கணக்கில் ரூ.58,156 , மனைவியின் வங்கிக் கணக்கில் ரூ.3,304 இருப்பு உள்ளது.  மனைவி, மகளுக்கு 3 பவுன் தங்க நகைகள் உள்ளன’ என தனது சொத்து விவரங்களைக் குறிப்பிட்டுள்ளார்.

கோடிக்கணக்கில் சொத்து வைத்திருக்கும் அரசியல்வாதிகள் மத்தியில்,  எளிமையாக இருக்கும் மாரிமுத்துக்கு தற்போது வாழ்த்துகள் குவிந்து வருகிறது.

இந்நிலையில், சாமானிய மக்களின் குரலாக சட்டமன்றத்தில் என் குரல் ஒலிக்கும் என்று நம்மிடம் தெரிவிக்கும் மாரிமுத்து, “நான் 25 ஆண்டுகளுக்கும் மேலாக  இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் உள்ளேன். குறிப்பாக 13 ஆண்டு காலமாக கோட்டூர் ஒன்றிய செயலாளராக உள்ளேன்.  மக்களுடைய பிரச்சினைக்காகக் கட்சி அறிவிக்கும் போதெல்லாம்  தலைமை ஏற்று போராட்டம் நடத்தியுள்ளேன்.  விவசாயிகளுக்கான கடன், அவர்களுக்கான நிவாரணம், அனைவருக்கும் காப்பீடு வேண்டும், ஓஎன்ஜிசி, ஹைட்ரோ கார்பன் எதிர்ப்பு போராட்டம் என மக்களுக்காகப் பலமுறை போராடியிருக்கிறேன். இதற்காக என் மீது வழக்கும் பதியப்பட்டுள்ளது.

எங்கள் பகுதி மிகவும் பின் தங்கிய பகுதி. பெரும்பாலான மக்கள் குடிசை வீட்டில் தான் வாழ்கிறோம்.  இங்கு குடியிருப்பவர்களுக்கு வீட்டு மனை கூட சொந்தமாக இல்லை.  நீண்ட காலமாக இங்கு குடியிருப்பவர்கள் பட்டா கிடைக்காமல், வீடு கூட கட்ட முடியாமல் இருக்கின்றனர். இதுபோன்ற பல பிரச்சினைகள் இருக்கிறது.

எனவே என் தொகுதி மக்களுக்கு வீட்டுமனை பட்டா கிடைக்கவும், அரசு வீடு கட்டி கொடுக்கவும் சட்டமன்றத்தில் நான் பேசுவேன். அதுபோன்று விவசாயிகள் நலன் பாதிக்கப்படாமல் இருக்கக் குரல் கொடுப்பேன்.

எங்கள் பகுதியில் படித்துவிட்டு இளைஞர்கள் வேலை இல்லாமல், திருப்பூர் , சென்னை உள்ளிட்ட மாவட்டங்களுக்கும், வெளி மாநிலங்களுக்கும் செல்கின்றனர். அதனால் அவர்களுக்கு உள்ளூரிலேயே வேலை  கிடைக்க ஏற்பாடு செய்வேன். எங்கள் பகுதியில் அதிகம் நெல் விளைகிறது. எனவே வைக்கோலை மூலப்பொருளாக வைத்து  காகித தொழிற்சாலை தொடங்குவதற்கான முயற்சிகளில் ஈடுபடுவேன்” என்று தெரிவித்தார்.

இதே தொகுதியில், அதிமுக சார்பில் வழக்கறிஞர் சுரேஷ் குமார் போட்டியிடுகிறார். இவரின் சொத்து மதிப்பு  ரூ.20 லட்சத்துக்கும் மேல் உள்ளதாக வேட்புமனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

-பிரியா

நான் இணை ஒருங்கிணைப்பாளர்- உச்ச நீதிமன்றத்தில் உறுதியளித்த ...

8 நிமிட வாசிப்பு

நான் இணை ஒருங்கிணைப்பாளர்- உச்ச நீதிமன்றத்தில் உறுதியளித்த எடப்பாடி:  ஏன்?

பன்னீர்செல்வத்தைப் பாராட்டுகிறேன்: டிடிவி தினகரன்

4 நிமிட வாசிப்பு

பன்னீர்செல்வத்தைப் பாராட்டுகிறேன்: டிடிவி தினகரன்

ஆ.ராசாவின் பேச்சால் திமுக பிளவுபடும்: பாஜக ரியாக்‌ஷன்!

3 நிமிட வாசிப்பு

ஆ.ராசாவின் பேச்சால் திமுக பிளவுபடும்: பாஜக ரியாக்‌ஷன்!

வியாழன் 18 மா 2021