மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 18 மா 2021

பாமக வேட்பாளர் மாற்றம்: களம் காணும் ராமதாஸின் வலது கரம்!

பாமக வேட்பாளர் மாற்றம்:  களம் காணும்  ராமதாஸின் வலது கரம்!

பாமகவிலும் வேட்பாளர் மாற்றம் நடந்திருக்கிறது. அதிமுக கூட்டணியில் நாகை மாவட்டம் கீழ்வேளூர் சட்டமன்றத் தொகுதி( தனி) பாமகவுக்கு ஒதுக்கப்பட்டது. பாமக வேட்பாளராக வேத முகுந்தன் அறிவிக்கப்பட்டார். அவர் நிர்வாகிகளை சென்று சந்தித்துக் கொண்டிருந்த நிலையில் திடீரென, இன்று (மார்ச் 18) மாற்றப்பட்டு பாமகவின் பொதுச் செயலாளர் வடிவேல் ராவணன் கீழ்வேளூர் சட்டமன்றத் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கிறார்.

ஏற்கனவே கீழ்வேளூர் தொகுதி வேட்பாளராக பாமக சார்பில் வேத முகுந்தன் அறிவிக்கப்பட்டிருந்தார். அவர் அமெரிக்காவில் சாஃப்ட்வேர் இன் ஜினியர் ஆக இருந்தவர். அண்மையில்தான் பாமகவில் தன்னை இணைத்துக் கொண்டார். இந்நிலையில் தொகுதிக்குப் புதியவர், அரசியலுக்கு பெரிதும் பரிச்சயம் இல்லாதவர் என்று இவர் பற்றி தலைமைக்கு புகார்கள் சென்ற நிலையில்தான்... இன்று திடீரென டாக்டர் ராமதாஸின் வலதுகரம் என்று சொல்லக் கூடிய வடிவேல் ராவணன் வேட்பாளர் ஆக்கப்பட்டுள்ளார்.

1980கள் முதல் ராமதாஸுடன் நெருக்கமான தொடர்புகொண்டவர் வடிவேல் ராவணன். பாமகவின் செய்தித் தொடர்பாளர், கலை இலக்கிய அணிச் செயலாளர் என்று பல்வேறு பொறுப்புகளை வகித்து பொதுச் செயலாளர் ஆக தற்போது இருக்கிறார். தேனி மாவட்டம் கோட்டூரைச் சேர்ந்த வடிவேல் ராவணன் பல ஆண்டுகளாக ராமதாஸுடன் தைலாபுரம் தோட்டத்தில்தான் இருக்கிறார். அவருக்கென தனியாக ஒரு வீடு அங்கே ஒதுக்கப்பட்டிருக்கிறது. 1989 இல் பாமக சார்பில் போடி சட்டமன்றத் தொகுதியில் போட்டு 14 ஆயிரம் வாக்குகள் பெற்றவர்.

ஸ்டேட் பேங்க்கில் பணி மற்றும் அகில இந்திய வானொலி செய்தி அறிவிப்பாளர், கொடைக்கானல் டிவி நிலைய இயக்குனர் என அரசுப் பதவிகளை வகித்தவர். கொடைக்கானல் தொலைக்காட்சி நிலையத்தில் குண்டு வீசிய வழக்கில் இவர் முக்கிய சாட்சியாக இருந்து விமர்சனங்களுக்கு ஆளானவர்.

வடக்கே வன்னியர் தெற்கே தேவேந்திரர் என்ற ராமதாசின் தொடக்க கால முழக்கத்துக்கு ஒரு வகையில் தூண்டுதலாக செயல்பட்டவர். வன்னியர் சங்கம் பாமகவாக பரிணாமம் பெற்றதிலும் இவருக்கு முக்கிய பங்கு உண்டு. ராமதாஸின் வலது கரம் என்று வர்ணிக்கப்படும் வடிவேல் ராவணன் கடந்த 2014 நாடாளுமன்றத் தொகுதியில் நாகப்பட்டினம் தொகுதியில் போட்டியிட்டார். 2019 நாடாளுமன்றத் தேர்தலில் விழுப்புரம் தொகுதியில் போட்டியிட்டார். இரு தொகுதிகளிலுமே வெற்றிவாய்ப்பை இழந்தவர்.

தற்போது கீழ்வேளூர் தொகுதி வேட்பாளர் மாற்றப்பட வேண்டும் என்ற நிலையில், ‘ராவணன் நீங்க நில்லுங்க. ஏற்கனவே நாகப்பட்டினம் பார்லிமென்ட்ல நின்னுருக்கீங்கள்ல’என்று ராமதாஸ் கேட்டதும் சரி என்று சொல்லிவிட்டார்.

பொதுவாகவே வடிவேல் ராவணன் தேர்தல்களில் போட்டியிடுவதையும் செலவு செய்வதையும் விரும்பாதவர், பாமகவின் அறிவுக் களஞ்சியங்களில் ஒருவராக இருப்பவர்.

சீட் வேண்டும் வேண்டும் என்று பலர் போராடி கிடைக்காமல் அதிருப்தியில் இருக்கும் நிலையில் விருப்ப மனு கூட கொடுக்காத வடிவேல் ராவணனை கீழ்வேளூர் தொகுதி வேட்பாளர் ஆக்கியிருக்கிறார் ராமதாஸ்.

இதுகுறித்து மின்னம்பலம் சார்பில் வடிவேல் ராவணனிடம் பேசினோம்.

“நான் பாமகவின் பொதுச் செயலாளரா இருக்கேன். எல்லாவற்றையும் மேற்பார்வை பார்க்க வேண்டிய பொறுப்புல இருக்கேன். பொதுவா நான் விருப்ப மனு கூட கொடுக்கறதில்லை. ஐயா நில்லுனு சொன்னால் நிற்பேன். அவ்வளவுதான்” என்றார் சுருக்கமாக.

-ராகவேந்திரா ஆரா

2026 க்கு முன்பே சட்டமன்றத் தேர்தல்: அமமுகவினருக்கு தினகரன் அலர்ட்  ...

5 நிமிட வாசிப்பு

2026 க்கு முன்பே சட்டமன்றத் தேர்தல்: அமமுகவினருக்கு தினகரன் அலர்ட்   

எடப்பாடியின் ட்விட்டர் அப்டேட்: அதிமுகவில் அனைவரும் பதவி இழக்கிறார்களா? ...

4 நிமிட வாசிப்பு

எடப்பாடியின் ட்விட்டர் அப்டேட்:  அதிமுகவில் அனைவரும் பதவி இழக்கிறார்களா?

இதை அன்றே செய்திருக்கலாமே?  அமித் ஷாவுக்கு உத்தவ் தாக்கரே கேள்வி! ...

2 நிமிட வாசிப்பு

இதை அன்றே செய்திருக்கலாமே?  அமித் ஷாவுக்கு உத்தவ் தாக்கரே கேள்வி!

வியாழன் 18 மா 2021