மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 18 மா 2021

அனைத்து முதல்வர் வேட்பாளர்களும் விவாதிக்கலாமா?: சீமான்

அனைத்து முதல்வர் வேட்பாளர்களும் விவாதிக்கலாமா?: சீமான்

வருகிற சட்டமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுகிறது. இதையொட்டி, சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான்.

நீட் தேர்வுக்கு எதிர்ப்பு, இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு, விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து பிரச்சாரம் செய்து மக்களின் கவனத்தைத் திருப்பி வருகிறார். அந்தவகையில் நேற்று சீர்காழி பழைய பேருந்து நிலையம் அருகே, கட்சி வேட்பாளர் கவிதாவுக்கு வாக்கு சேகரித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

அப்போது பேசிய அவர், “தொலைக்காட்சிகளுக்கு எல்லாம் ஒரு விண்ணப்பம் வைக்கிறேன். தேர்தலில் போட்டியிடும் அனைத்து முதல்வர் வேட்பாளர்களையும் ஒன்றாக நிறுத்துங்கள். எடப்பாடி பழனிசாமி, ஸ்டாலின், கமலஹாசன், தினகரன், சீமான் என அனைவரையும் 20 நிமிடங்கள் பேச வைத்து விவாதிக்கலாம். நீங்கள் ஆட்சிக்கு வந்தால் என்ன செய்வீர்கள் என்று கேளுங்கள். யார் சொல்வது சரியாக இருக்கிறதோ அவர்களுக்கு மக்கள் ஓட்டுப்போடட்டும். அமெரிக்காவில் இதுபோன்று தான் நடக்கிறது.

எதற்கெடுத்தாலும் அமெரிக்காவை உதாரணம் காட்டுகிறார்கள். அங்கு வாக்குச் சீட்டு முறைதான் உள்ளது. மனித கழிவுகளை இயந்திரங்கள் தான் அள்ளுகிறது. ஆனால் இங்கு டிஜிட்டல் இந்தியா ஸ்மார்ட் சிட்டி என்று சொல்கிறார்கள், இருப்பினும் மனித கழிவை மனிதர்கள்தான் அள்ளுகிறார்கள்” என்று சுட்டிக்காட்டினார்.

வாக்குப்பதிவுக்கும், வாக்கு எண்ணிக்கைக்கும் எதற்கு இத்தனை நாள், அமெரிக்காவின் ஜனாதிபதி தேர்தல் முடிவு கூட மறுநாளே அறிவிக்கப்பட்டுவிடுகிறது என்று விமர்சித்த சீமான்,

“தேர்தல் ஆணையத்தை ஒரு நாடக கம்பெனியாக வைத்துள்ளார்கள். மருத்துவமனைக்குப் பணம் கட்ட செல்பவர்களிடமும், வியாபாரிகளிடமும் தான் பணத்தைப் பறிமுதல் செய்கிறார்கள். அதற்குப் பெயர் பறக்கும் படை. ஆனால் வீட்டுக்கு வீடு பணம் கொடுப்பவர்களைக் கண்டுகொள்ளமாட்டார்கள்” என்று விமர்சித்தார்.

“நீட் தேர்வு எழுத சொல்லும் போது, காப்பி அடிப்பார்கள் என கூறி மூக்குத்தி, தாலியைக் கழட்டுகிறார்கள், துப்பட்டாவை அகற்றுகிறார்கள். மூக்குத்தியில் பிட் எடுத்துச் சென்று விடுவார்கள் என்று கூறும் இவர்கள், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் எந்த முறைகேடும் செய்ய முடியாது என்கிறார்கள் இதை எப்படி நம்புவது” என்று கேள்வி எழுப்பினார்.

தரங்கம்பாடியில் உள்ள சந்தை வீதியில் பூம்புகார் வேட்பாளர் பி.காளியம்மாளுக்காக பிரச்சாரம் செய்தபோது பேசிய சீமான், “ஆண்களும், பெண்களும் சமம் என்பது தான் எங்கள் கொள்கை, அதனால் தான் 117 தொகுதிகளில் பெண்களைப் போட்டியிட வைக்கிறோம். ஆனால் திமுக 12 இடங்களையும், அதிமுக 14 இடங்களையும்தான் பெண்களுக்குக் கொடுத்திருக்கிறது” என்று சுட்டிக்காட்டினார்.

” என்னை முதல்வராகத் தேர்ந்தெடுத்தீர்கள் என்றால், மீனவர்களைப் பாதுகாப்பதற்காக நெய்தல் படை என்ற படையை உருவாக்குவேன். அப்போது மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்தால் மறு நாளே ராஜினாமா செய்யத் தயார். அதோடு மீனவர்கள் மட்டும் போட்டியிடும் வகையில் தனி தொகுதியையும் உருவாக்குவேன்” என்று கூறி வாக்கு சேகரித்தார் சீமான்.

-பிரியா

பன்னீர் கடிதம்: எடப்பாடி பழனிசாமி நிராகரிப்பு!

3 நிமிட வாசிப்பு

பன்னீர் கடிதம்: எடப்பாடி பழனிசாமி நிராகரிப்பு!

உதவி கேட்ட ஓபிஎஸ்.. மறுத்த முதல்வர் ஸ்டாலின்.. ஏன் தெரியுமா?

5 நிமிட வாசிப்பு

உதவி கேட்ட ஓபிஎஸ்.. மறுத்த முதல்வர் ஸ்டாலின்.. ஏன் தெரியுமா?

இந்த நிலைமைக்கு நீங்கள் தான் காரணம்: பன்னீருக்கு எடப்பாடி கடிதம்! ...

5 நிமிட வாசிப்பு

இந்த நிலைமைக்கு நீங்கள் தான் காரணம்: பன்னீருக்கு எடப்பாடி கடிதம்!

வியாழன் 18 மா 2021