மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 17 மா 2021

காட்டுப்பள்ளி துறைமுகத்துக்கு எதிர்ப்பு, கோவையில் உயர் நீதிமன்ற கிளை : வைகோ வாக்குறுதி!

காட்டுப்பள்ளி துறைமுகத்துக்கு எதிர்ப்பு, கோவையில் உயர் நீதிமன்ற கிளை : வைகோ வாக்குறுதி!

தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்கான மதிமுகவின் தேர்தல் அறிக்கையை, சென்னையில் மதிமுக தலைமை அலுவலகத்தில் பொதுச்செயலாளர் வைகோ இன்று (மார்ச் 17) வெளியிட்டார்.

அதில் கோவையில் உயர் நீதிமன்ற கிளை அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு முக்கிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

55 பிரிவுகளின் கீழ் வாக்குறுதிகள் வெளியிடப்பட்டுள்ள தேர்தல் அறிக்கையில், இந்தியாவில் வளர்ச்சிக்கும் வலிமைக்கும் ஆக்கம் தேட வேண்டுமானால் மாநிலங்கள் வலிமையும் அதிக அதிகாரம் கொண்டவையாகவும் இருக்க வேண்டும். மாறாக பாஜக அரசு டெல்லியில் அதிகாரத்தைக் குவித்து வைத்துக்கொண்டு மாநிலங்களைக் கொத்தடிமையாக நடத்துவதற்கு இடம் தர முடியாது. மாநில உரிமைகளை மீட்க வேண்டும் என்பதில் மதிமுக உறுதியாக உள்ளது.

இந்திய நாட்டுக்கே வழிகாட்டும் வகையில் சாதி சமய நல்லிணக்கத்திற்குக் கலங்கரை விளக்கமாகத் திகழும் தமிழகத்தில் எத்தகைய மதவாத கருத்துக்களுக்கு இடம் அளிக்கவோ, மதச்சார்பின்மை கோட்பாட்டிற்கு ஊறு நேரவோ இடம் தரமாட்டோம்.

மருத்துவம், பொறியியல் மற்றும் உயர் கல்வி நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து படிப்புகளுக்கும் கல்வியில் 69 சதவிகித ஒதுக்கீடு முறை பின்பற்றப்பட வேண்டும். மத்திய மாநில அரசுத் துறை வேலை வாய்ப்புகளில் பட்டியலின, பழங்குடி மற்றும் பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு உறுதியாக கடைப்பிடிக்கப்பட வேண்டும்.

மத்திய மாநில அரசுகளின் ஆதரவோடு இயங்கி வரும் பன்னாட்டு மற்றும் உள்நாட்டுத் தொழில் நிறுவனங்களிலும், தனியார் நிறுவனங்களிலும் 69 சதவிகித இட ஒதுக்கீட்டு முறையைச் செயல்படுத்த மதிமுக குரல்கொடுக்கும். அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற கோட்பாட்டைக் கேரளாவைப் போல் தமிழகத்திலும் செயல்படுத்த வலியுறுத்துவோம்.

இந்தி சமஸ்கிருத மொழித் திணிப்பை எதிர்த்து இந்தியாவின் பொது மொழி இந்தி அல்ல என்பதை உலக மன்றங்களில் மதிமுக எடுத்துரைக்கும். மத்திய அரசின் திட்டங்கள் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு மாநில மொழிகளில் பெயர் சூட்ட வேண்டும் என்று வலியுறுத்தும்.

சட்டமன்ற தேர்தலுக்குப் பின்னர் அமையும் தமிழக அரசு, மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற மதிமுக குரல் கொடுக்கும்.

விவசாயிகளை பாதிக்கும் திட்டங்களான உயர் மின் கோபுரம், சேலம் சென்னை எட்டு வழிச் சாலை ஆகிய திட்டத்தை முற்றிலுமாக கைவிடுவதற்கு மதிமுக தமிழக அரசை வலியுறுத்தும்.

பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தில் தனியார் காப்பீடு நிறுவனங்கள் பகல் கொள்ளை அடிக்கும் நிலைக்கு முற்றுப்புள்ளி வைத்து விவசாயிகள் முழு பயன் பெறுவதற்கு உரிய வகையில் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தைச் செயல்படுத்த வலியுறுத்தப்படும்.

மாவட்டங்கள் தோறும் அரசு வேளாண்மை கல்லூரிகள் அமைக்க வலியுறுத்தப்படும்.

கொரோனா பாதிப்பால் தொழில்துறை பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தொழில் துறையைச் சீரமைக்கவும் தொழில் நிறுவனங்களின் நெருக்கடிகளுக்குத் தீர்வு கண்டு அவை சீராக இயங்கவும் தமிழகம் தொழில் துறையில் முதன்மை பெறவும் ஆக்க படியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

தமிழகத்தை மின் மகை மாநிலமாக மாற்ற வலியுறுத்தப்படும், தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்தின் சார்பில் வெளிமாநிலங்களிலிருந்து மின்சாரம் வாங்குவதில் நடைபெறும் ஒப்பந்தங்கள் வெளிப்படைத் தன்மையுடன் செயல்படுத்துவதன் மூலம் முறைகேடுகள் ஊழல்களை ஒழித்து தமிழ்நாடு மின்சார வாரியத்தைச் சீரமைக்க மதிமுக குரல் கொடுக்கும்.

தமிழக அரசுக்குச் சொந்தமான 8 போக்குவரத்துக் கழகங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு மற்ற துறை ஊழியர்களுக்கு இணையாக ஊதியம் வழங்குவது. ஓய்வு பெற்ற ஊழியர்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பது. புதிய ஓய்வூதிய ஒப்பந்தத்தை இறுதி செய்வது உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தப்படும்.

லோக் ஆயுக்தா சட்டத்தை முழுமையாக முறையாக நடைமுறைப்படுத்தி கிராம ஊராட்சி முதல் தலைமைச் செயலகம் வரை ஊழலற்ற நேர்மையான திறமையான ஆட்சி நடைபெறக் குரல் கொடுப்போம்.

ஊராட்சி மன்றங்களில் பெண்கள், தலித்துகள் மற்றும் பழங்குடியினர் தங்களது அதிகாரங்களை யாருடைய தலையீடும் இன்றி செய்திடப் பாதுகாப்பு அளித்தல் வேண்டும். எனவே ஊராட்சி மன்றங்களுக்கு அதிகாரம் வழங்க வலியுறுத்தப்படும்.

தமிழகத்தை மது இல்லாத மாநிலமாக மாற்ற வேண்டும் என்று மதிமுக வலியுறுத்தும்.

தமிழகத்தில் மக்கள் நல்வாழ்வுத்துறை மற்றும் குடும்ப நலத் துறைக்கு 6 விழுக்காடு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். மாவட்டத்திற்கு ஒரு

பன்னோக்கு மருத்துவமனையுடன் கூடிய அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் செவிலியர் கல்லூரிகள் துவக்கப்பட வேண்டும்.

தொகுப்பூதிய செவிலியர்களை பணிநிரந்தரம் செய்ய வலியுறுத்தப்படும். மருத்துவர்களின் ஊதிய உயர்வு தொடர்பான கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்.

பெண்களுக்கு 50 சதவிகித இட ஒதுக்கீடு அளிக்கவும் மாநில மகளிர் ஆணையம் முறையாக இயங்கவும், சுய உதவிக் குழுக்களுக்குத் தேசிய வங்கிகள் வழங்கியுள்ள கடன்களை ரத்து செய்யவும் வலியுறுத்தும்.

பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் பெண்கள் பணி நேரம் 8 மணி நேரம் என்பதை உறுதி செய்வோம்.

கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்க வலியுறுத்தப்படும்.

மத்திய அரசின் இட ஒதுக்கீடு சலுகைகளைப் பெறுவதற்கு, இதர பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்களின் வருமான உச்சவரம்பு 25 லட்சம் ரூபாயாக உயர்த்தவும் மண்டல் குழு பரிந்துரையின் படி மத்திய அரசுப் பணிகளில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு 27 விழுக்காடு இட ஒதுக்கீடு உறுதிசெய்யவும் குரல் கொடுக்கப்படும்.

பொதுத்துறை நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வலியுறுத்தப்படும்.

மத்திய அரசின் பொதுத்துறை மற்றும் மாநில அரசு பணிகளில் உள்ள பின்னடைவு காலிப் பணியிடங்களை நிரப்ப வலியுறுத்துவோம்.

பட்டியலில் உள்ள அனைத்து பழங்குடியினர்களுக்கும் சாதி சான்றிதழ் தடையின்றி தாமதமில்லாமல் கிடைக்க ஆவன செய்யப்படும்.

மாணவர்களின் கல்விக் கடன்களை முழுமையாகத் தள்ளுபடி செய்ய வலியுறுத்தப்படும்.

தமிழகத்தில் உள்ள மத்திய மற்றும் மாநில கல்வி நிறுவனங்களில் 80 % ஒதுக்கீடு தமிழ்நாட்டு மாணவர்களுக்கு வழங்க குரல் கொடுப்போம்.

60,000 கோடி ரூபாய் அயல்நாட்டுச் செலாவணி ஈட்டித் தரும் மீனவர்களுக்கு வழங்கப்படும் மானிய டீசல் அளவை விசைப்படகுக்கு 1800 லிட்டர் என்பதை 3000 லிட்டர் ஆகவும், நாட்டுப் படகுகளுக்கு 400 லிட்டர் என்பதை 800 லிட்டர் ஆகவும் உயர்த்த ஆவன செய்யப்படும்.

சென்னையில் உள்ள வருமான வரி மேல்முறையீட்டுத் தீர்ப்பாயத்தின் கிளை மதுரையில் அமைப்பதற்கு மத்திய அரசிடம் வலியுறுத்துவோம்.

ஊடகத் துறையில் பணிபுரிவோருக்கு வீட்டுவசதி திட்டம் மருத்துவ காப்பீடு ஓய்வூதியம் உயர்த்துதல், கடன் வழங்குதல் உள்ளிட்ட வாழ்வாதார கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்துவோம்.

உச்சநீதிமன்றம் 2016 இல் வெளியிட்ட உத்தரவின்படி தமிழ்நாட்டில் புதிய காவல் சட்டம் கொண்டுவர முயற்சிகள் மேற்கொள்ளப்படும். காவல்துறை தலைமை பதவியான டிஜிபி நியமனம் வெளிப்படையாகவும் பதவிக்காலம் குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகள் இருக்குமாறும் வலியுறுத்தப்படும்.

காவல் துறையின் அனைத்து நியமனம், இடமாற்றம், பதவி உயர்வு உள்ளிட்ட இதர நடவடிக்கைகள் அனைத்தையும் செயல்படுத்தக் காவல் மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்துவோம்.

காவல் சித்திரவதை, காவல் மரணம் சட்டத்திற்கு எதிரான காவல் அடக்குமுறைகள் போலி மோதல் சாவுகள் போன்றவற்றிற்கு முற்றுப்புள்ளி வைக்க உறுதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

தமிழ் மொழியை அலுவல் மொழியாக வழக்காடு மொழியாக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தப்படும்.

தமிழகத்தில் சுமார் 80 லட்சம் படித்த இளைஞர்கள் வேலை வாய்ப்பு இன்றி தவிக்கும் நிலையில் வெளி மாநிலங்களிலிருந்து பணியாளர்களைக் கொண்டுவந்து மத்திய அரசின் பொது நிறுவனங்களில் திணிப்பதைத் தடுத்து தமிழ்நாட்டிலுள்ள தகுதி வாய்ந்த படித்த இளைஞர்களுக்கு 90 விழுக்காடு வேலை வாய்ப்புகளை வழங்க வேண்டும் என வலியுறுத்தப்படும்.

ஸ்டெர்லைட் நச்சு ஆலையைத் திறக்க விடாமல் செய்து தமிழ் மக்களைக் காக்கும் பணியில் மதிமுக முனைப்புடன் ஈடுபடும். அதுபோன்று தேனியில் நியூட்ரினோ ஆய்வகம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து மதிமுக சட்டமன்றத்தில் குரல் கொடுக்கும்.

தமிழ்நாட்டின் இயற்கை வளத்தைச் சுரண்டி வரும் அதானி குழுமம் 2018ல் காட்டுப்பள்ளி துறைமுகத்தை எல்என்டி நிறுவனத்திடமிருந்து 1950 கோடி ரூபாய்க்கு வாங்கியது. தற்போது அதை 320 மில்லியன் டன் அளவு சரக்கைக் கையாளக் கூடியதாக உயர்த்துவதற்காக 52 ஆயிரத்து 400 கோடி ரூபாய் செலவில் திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது. அதானியின் துறைமுகத் திட்டம் மிகப்பெரிய அளவில் எண்ணூர் பகுதியில் உள்ள நீர்நிலைகள் மற்றும் நீரோட்டம் ஆகியவற்றை அழித்து உருவாக உள்ளது. எனவே அதானி குழுமத்திற்குத் தாரை வார்க்கப்படும் காட்டுப்பள்ளி துறைமுகத் திட்டத்தைக் கைவிடக் குரல் கொடுப்போம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தொல்லியல் ஆய்வு ,சுற்றுலா வளர்ச்சி. தேர்தல் சீர்திருத்தம், ஏழு தமிழர்களை விடுதலை செய்ய வலியுறுத்தல் உள்ளிட்ட அம்சங்களும் இடம்பெற்றுள்ளன.

உச்ச நீதிமன்றத்தின் கிளையைத் தமிழகத்தின் தலைநகர் சென்னையிலும், சென்னை உயர்நீதிமன்ற கிளை கோவையில் அமைத்திடவும் குரல் கொடுப்போம் என்று வைகோ வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இன்று தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்ட நிலையில், நாளை முதல் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்குகிறார் வைகோ,

மார்ச் 18 ஆம் தேதி மாலை 5 மணி- சென்னை கொளத்தூர். 7 மணி - வில்லிவாக்கம் 8.30 மணி- துறைமுகம்,

19-மதுராந்தகம்.

20- அரியலூர்.

21- பல்லடம்

22-மதுரை தெற்கு

23-சாத்தூர்

24-வாசுதேவநல்லூர்.

25-கோவில்பட்டி, விளாத்திகுளம், ஒட்டப்பிடாரம்.

26- சங்கரன்கோவில், கடையநல்லூர், தென்காசி,

27-திருநெல்வேலி, பாளையங்கோட்டை, தூத்துக்குடி, திருச்செந்தூர்.

28- சிவகாசி, விருதுநகர், அருப்புக்கோட்டை, திருச்சுழி.

29- தேனி மாவட்டம்

30- திண்டுக்கல் மாவட்டம்.

31-மதுரை தெற்கு, வடக்கு, மேற்கு

ஏப்ரல் 1ஆம் தேதி - அரியலூர்

2- வாசுதேவநல்லூர்

3- சாத்தூர் என 17 நாட்கள் சூறாவளி பிரச்சாரத்தில் வைகோ ஈடுபடுவார் என அக்கட்சி அறிவித்துள்ளது.

-பிரியா

நான் இணை ஒருங்கிணைப்பாளர்- உச்ச நீதிமன்றத்தில் உறுதியளித்த ...

8 நிமிட வாசிப்பு

நான் இணை ஒருங்கிணைப்பாளர்- உச்ச நீதிமன்றத்தில் உறுதியளித்த எடப்பாடி:  ஏன்?

பன்னீர்செல்வத்தைப் பாராட்டுகிறேன்: டிடிவி தினகரன்

4 நிமிட வாசிப்பு

பன்னீர்செல்வத்தைப் பாராட்டுகிறேன்: டிடிவி தினகரன்

ஆ.ராசாவின் பேச்சால் திமுக பிளவுபடும்: பாஜக ரியாக்‌ஷன்!

3 நிமிட வாசிப்பு

ஆ.ராசாவின் பேச்சால் திமுக பிளவுபடும்: பாஜக ரியாக்‌ஷன்!

புதன் 17 மா 2021