மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 17 மா 2021

மம்தா கட்சி எம்.பி யின் 3 டுவீட்டுகள்... மறுநாளே பதவிவிலகிய (பா.ஜ.க.) எம்.பி..!

மம்தா கட்சி எம்.பி யின் 3 டுவீட்டுகள்... மறுநாளே பதவிவிலகிய (பா.ஜ.க.) எம்.பி..!

கொரோனா காலத்தில் நாடாளுமன்ற மக்களவை நடவடிக்கைகளைப் பார்த்தவர்களுக்கு, மகுவா மொய்த்ராவைத் தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை. எந்தவிதப் பதற்றமும் இல்லாமல் ஆளும் பாஜக அமைச்சர்களைக் கேள்விகளால் துளைத்து, அவ்வப்போது பரவலான கவனத்தை ஈர்க்கும் மகுவா, மேற்குவங்க மம்தாவின் திரிணமூல் காங்கிரஸ் உறுப்பினர். அவர் போட்ட மூன்று டுவீட்டுகளை அடுத்து வங்கத்துக்காரரான மாநிலங்களவை உறுப்பினர் பா.ஜ.க.வின் ஸ்வபன் தாஸ் குப்தா, பதவியிலிருந்து விலகியிருக்கிறார்.

மாநிலங்களவை உறுப்பினராக 2016 ஏப்ரலில் நியமிக்கப்பட்டவர், ஸ்வபன் தாஸ் குப்தா. அவருடைய பதவிக்காலம் முடிவடைய இன்னும் ஓராண்டு ஒரு மாதம் இருக்கும்நிலையில், மேற்குவங்க சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக வேட்பாளராக இறக்கிவிடப்பட்டுள்ளார். முதலமைச்சர் வேட்பாளர்களில் ஒருவர் என இவர் முன்னிறுத்தப்படுகிறார்.

மேற்குவங்கத்தில் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெறும் மூன்றாம் கட்ட, 10ஆம் தேதி நடைபெறும் நான்காம் கட்டத் தேர்தல் தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை கடந்த ஞாயிறன்று பாஜக தலைமை டெல்லியில் வெளியிட்டது. மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் தாரகேஸ்வர் தொகுதியில் ஸ்வபன் தாஸ் குப்தா போட்டியிடுகிறார் என அறிவிக்கப்பட்டது.

சரி, இதில் மகுவா மொய்த்ரா எங்கு வருகிறார்?

அதையடுத்த நாள் இரவு 8.31 மணிக்கு, ஸ்வபன் தாஸ் குப்தாவுக்கு அதிர்ச்சியளிக்கும் ஒரு குறிப்பை தன் டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டார், மகுவா மொய்த்ரா.

“மேற்குவங்க பாஜக சட்டப்பேரவைத் தேர்தல் வேட்பாளராக குப்தா அறிவிக்கப்பட்டிருக்கிறார். ஆனால் மாநிலங்களவை நியமன உறுப்பினரான அவர், பதவியேற்று ஆறு மாதத்துக்குப் பிறகு எந்த அரசியல் கட்சியில் இணைந்தாலும் அவரின் பதவி செல்லாதது ஆகிவிடும். இவர், 2016-ல் பதவியேற்றார். பாஜகவில் சேர்ந்ததற்காக அவர் தகுதிநீக்கம் செய்யப்படவேண்டும்.” என்பதே மகுவா மொய்த்ராவின் முக்கியப் பதிவு.

ஒரு மணி நேரம் ஒன்பது நிமிடங்களுக்குப் பிறகு, இது தொடர்பாகவே இரண்டாவதாக இன்னொரு டுவீட்டையும் பதிவுசெய்தார், மகுவா.

”என் முந்தைய டுவீட்டின் தொடர்ச்சி இது... ஸ்வபன் தாஸ் குப்தா நியமன உறுப்பினர்தான், பாஜகவைச் சேர்ந்தவர் அல்ல என்று மாநிலங்களவை இணையதளத்தில் இப்போதைக்கு இருக்கிறது. அவர் பாஜக வேட்பாளராக மனுத்தாக்கல் செய்தால், அரசியல்சாசனம் 10ஆவது அட்டவணை 2ஆவது பத்தி மூன்றாவது பிரிவின்படி, அவர் தகுதிநீக்கம் செய்யப்படவேண்டும்.” என்று குறிப்பிட்டதுடன்,

நியமன எம்.பி. பட்டியலில் குப்தா இருக்கும் பட்டியலையும் ஸ்கிரீன்சாட் எடுத்து அதையும் பதிவிட்டிருந்தார், மகுவா மொய்த்ரா.

ஏற்கெனவே இதை மையமாக வைத்து, வட இந்திய ஊடகங்கள் அலசல் விவாதங்களில் ஈடுபட்டிருந்தநிலையில், இரண்டாவது டுவீட் அதில் எண்ணெயை ஊற்றியது. ஆனாலும் அதில் மகுவாவுக்கு திருப்தி இல்லை போலும்!

அடுத்த இரண்டு மணி நேரம் 12 நிமிடங்களில் மூன்றாவதாகவும் ஒரு டுவிட்டை வெளியிட்டார். மூத்த தலைவர்களைப் பற்றி ஊடகங்கள் குறும்புத்தனம் என பூடகமாகவும் நகைப்புக் குறிப்பாகவும் இருந்தது, அந்த டுவீட்.

” சரியான செய்தி இதுதான்:

ஒன்று, தாஸ்குப்தா போட்டியிடமுடியும்; மாநிலங்களவை உறுப்பினர் என்பதால் அவரின் வேட்புமனு நிராகரிக்கப்படாது. ஆனால், அவர் பாஜக வேட்பாளர் என்கிற காரணத்தால், மாநிலங்களவைப் பதவியை தானாகவே இழந்துவிடுவார். இரண்டே வாய்ப்புகள்தான் இருக்கின்றன; மாநிலங்களவை உறுப்பினர் பதவியிலிருந்து விலகவேண்டும் அல்லது தகுதிநீக்கம் செய்யப்படுவார். வேறு சாதக அம்சம் எதுவும் அவருக்கு இல்லை.” - என்பதே மகுவாவின் அந்த டுவீட்.

இந்த மூன்று டுவீட்டுகளுக்கும் கைமேல் பலன் கிடைத்தது என்றுதான் சொல்லவேண்டும்.

நேற்று மார்ச் 16 மதியம் 1.17 மணிக்கு ஸ்வபன் தாஸ் குப்தா, தன் பதவிவிலகல் அறிவிப்பை வெளியிட்டார்; அதே டுவிட்டரிலேயே!

“ மாநிலங்களவை உறுப்பினர் பதவியிலிருந்து நான் விலகுகிறேன். இன்னும் சிறந்த வங்கத்துக்காகப் போராடுவதென முடிவுசெய்திருக்கிறேன். தாரகேஸ்வர் தொகுதியில் சில நாள்களில் பாஜக சார்பில் மனுத்தாக்கல் செய்வேன்.” என்று தெரிவித்திருந்தார், தாஸ்குப்தா.

அவருக்கு வேறு வழியும் இல்லை. கேரள வயநாட்டு மணிகண்டனைப் போல, என்னைக் கேட்காமல் வேட்பாளராக அறிவித்துவிட்டார்கள் என்கிறபடி தாஸ்குப்தாவால் எதையும் சொல்லமுடியாது. ஏனென்றால், மார்ச் 14ஆம் தேதி வேட்பாளர் பட்டியலில் அவர் பெயர் அறிவிக்கப்பட்டதும், அவரே சமூக ஊடகம் மூலமாக அந்த செய்தியைப் பகிர்ந்திருந்தார். சட்டரீதியாக மட்டுமின்றி டெல்லிவாசியான அவரை இதற்காகவே வங்கத்துக்கு அனுப்பி, மாநிலம் முழுவதும் பாஜக தலைமை வலம்வரச் செய்திருக்கிறது. ஊர் உலகம் பார்க்க நடந்துவரும் இந்த யதார்த்தத்தை மறைக்கவோ மறுக்கவோ அவரும் விரும்பமுடியாது.

இப்போதைக்கு, வங்கத் தேர்தல் களத்தில் பாஜகவுக்கு எதிரான மம்தா கட்சியின் போட்டியில் அவர்களுக்குக் கிடைத்த முதல் வெற்றியாகவும் எதிர்த்தரப்புக்கு முதல் சேதமாகவும் இதைக் கருதமுடியும்.

- இளமுருகு

நான் இணை ஒருங்கிணைப்பாளர்- உச்ச நீதிமன்றத்தில் உறுதியளித்த ...

8 நிமிட வாசிப்பு

நான் இணை ஒருங்கிணைப்பாளர்- உச்ச நீதிமன்றத்தில் உறுதியளித்த எடப்பாடி:  ஏன்?

பன்னீர்செல்வத்தைப் பாராட்டுகிறேன்: டிடிவி தினகரன்

4 நிமிட வாசிப்பு

பன்னீர்செல்வத்தைப் பாராட்டுகிறேன்: டிடிவி தினகரன்

ஆ.ராசாவின் பேச்சால் திமுக பிளவுபடும்: பாஜக ரியாக்‌ஷன்!

3 நிமிட வாசிப்பு

ஆ.ராசாவின் பேச்சால் திமுக பிளவுபடும்: பாஜக ரியாக்‌ஷன்!

புதன் 17 மா 2021