மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 17 மா 2021

ஸ்டாலின் அழுத்தம்: வெளியான காங்கிரஸ் மீதப் பட்டியல்!

ஸ்டாலின் அழுத்தம்: வெளியான காங்கிரஸ் மீதப் பட்டியல்!

தமிழக காங்கிரஸ் வரும் சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் 25 இடங்களில் போட்டியிடும் நிலையில்... 21 தொகுதிகளுக்கான முதல் பட்டியல் மார்ச் 13ஆம் தேதி வெளியிடப்பட்டது.

அதில் கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு, குளச்சல், வேளச்சேரி, மயிலாடுதுறை ஆகிய தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்படவில்லை. இந்த நிலையில் நேற்று (மார்ச் 16) இரவு அத்தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டிருக்கிறார்கள்.

விளவங்கோடு, குளச்சல் தொகுதிகளுக்கு தற்போது அங்கே இருக்கும் சிட்டிங் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களான விஜயதாரணி, பிரின்ஸ் ஆகியோரே மீண்டும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

மார்ச் 14 ஆம் தேதியன்று மின்னம்பலத்தில் வெளியிட்ட காங்கிரஸ்: 4 வேட்பாளர்கள் அறிவிப்பு தாமதம் ஏன்? என்ற செய்தியில் சொல்லப்பட்டது மாதிரியே வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

அச்செய்தியில், “விளவங்கோடு தொகுதியில் விஜயதாரணி இரண்டு முறை எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதேபோல குளச்சல் தொகுதியில் பிரின்ஸ் இரண்டு முறை எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர்கள் இருவரும் தலா இரு முறை எம்எல்ஏ பதவி வகித்து விட்டதால் சிட்டிங் எம்எல்ஏ வாக இருந்தாலும் அவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு கொடுக்க வேண்டாம் என்று அந்தந்த பகுதிகளில் இருந்து காங்கிரஸ் தலைமைக்கு புகார்கள் போயிருக்கின்றன. விளவங்கோடு தொகுதியில் விஜயதாரணிக்கு மீண்டும் வாய்ப்பு கொடுப்பதில் தமிழக காங்கிரஸ் தலைமைக்கும் விருப்பமில்லை என்று தெரிகிறது. நேற்று கூட விஜயதாரணிக்கு எதிராக சத்தியமூர்த்தி பவனில் போராட்டம் நடந்தது.

இது தவிர அறிவிக்கப்பட்ட 21 வேட்பாளர்களில் இஸ்லாமிய சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் ஒருவரும் இல்லை. அதனால் வேறு எந்த தொகுதிகளில் இஸ்லாமிய வேட்பாளரை நியமிக்கலாம் என்று ஆலோசனை நடந்தது. வேளச்சேரியில் முன்னாள் எம்பி ஆரூணின் மகனான இளைஞர் காங்கிரஸ் ஹஸன் மௌலானா வேட்பாளராக நிறுத்தலாம் என தமிழகத் தலைமை கருதுகிறது. ஆனால் அகில இந்தியச் செயலாளர் சி டி மெய்யப்பன் வேளச்சேரி தொகுதியை தனக்குக் கேட்டு டெல்லி வரை அழுத்தம் கொடுக்கிறார்.

மீதமிருப்பது மயிலாடுதுறை தொகுதிதான். அந்தத் தொகுதியில் இஸ்லாமியர்கள் குறிப்பிட்ட அளவு இருந்தாலும் அங்கே ஹசன், மாநில செயலாளர் நாகூர் நவுஷத் என ஒரு இஸ்லாமிய வேட்பாளரை நிறுத்தலாமா... அதற்கு மூத்த காங்கிரஸ் தலைவர் மணி சங்கர் அய்யர் சம்மதிப்பாரா என்ற கேள்விகள் எழுந்தன. சென்னை ரெயின் ட்ரீ ஹோட்டலில் தங்கியுள்ள தமிழக தேர்தல் பொறுப்பாளர் குழுவின் தலைவர் திக்விஜய்சிங் இது தொடர்பாக மணி சங்கரய்யரிடம் தொலைபேசியில் பேசியுள்ளார். தான் கேட்டு வாங்கி இருக்கிற ஒரே ஒரு தொகுதி அதை விட்டுக்கொடுக்க முடியாது என்று மணிசங்கர் அய்யர் மறுத்துவிட்டார். அத்தொகுதியில் அய்யரின் ஆதரவாளரான ராஜ்குமார் போட்டியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது”என்று தெரிவித்திருந்தோம்.

அதன்படியே வேளச்சேரி ஹசன் மௌலானா, மயிலாடுதுறை ராஜ்குமார் ஆகிய வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டிருக்கிறார்கள்.

“விஜயதாரணி கட்சிக்குள்ளேயே போராடி சீட் பெற்றிருக்கிறார். அவருக்கு சீட் ஒதுக்கப்பட்டதால் வேறு வழியின்று பிரின்ஸுக்கும் கொடுக்கப்பட்டுள்ளது. கடந்த மார்ச் 15 ஆம் தேதி திங்கள் கிழமை திருவாரூர் வந்த ஸ்டாலின் சுற்றுப்புற மாவட்ட தேர்தல் நிலவரம் பற்றி அம்மாவட்ட திமுக நிர்வாகிகளோடு ஆலோசனை நடத்தியிருக்கிறார். அப்போது மயிலாடுதுறை தொகுதியில் காஙகிரஸ் வேட்பாளர் அறிவிக்காததால் இன்னும் பணிகள் தொடங்கப்படவில்லை என்று தெரிவித்திருக்கிறார்கள் திமுகவினர். இதையடுத்து காங்கிரஸ் தலைவரைத் தொடர்புகொண்ட ஸ்டாலின், வேட்பாளர் பட்டியலை விரைவில் அறிவிக்குமாறு கூறியதோடு சில ஆலோசனைகளையும் கூறினார். அதன் அடிப்படையிலேயே நேற்றைய பட்டியல் வெளிவந்திருக்கிறது” என்கிறார்கள் காங்கிரசார்.

வேந்தன்

நயினார் நாகேந்திரன் பேச்சு: ஓபிஎஸ் அறிக்கை!

10 நிமிட வாசிப்பு

நயினார் நாகேந்திரன் பேச்சு: ஓபிஎஸ் அறிக்கை!

டிஜிட்டல் திண்ணை: ஐஏஎஸ்-ஐபிஎஸ் அதிகாரிகள் சட்டம்: பாஜகவின் தேர்தல் ...

6 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: ஐஏஎஸ்-ஐபிஎஸ் அதிகாரிகள் சட்டம்: பாஜகவின் தேர்தல் திட்டம்!

அதிமுக-பாஜக:என்ன நடக்கிறது?

10 நிமிட வாசிப்பு

அதிமுக-பாஜக:என்ன நடக்கிறது?

புதன் 17 மா 2021