மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 17 மா 2021

செல்லும் இடமெல்லாம் பொய் பேசுகிறார் ஸ்டாலின்: எடப்பாடி

செல்லும் இடமெல்லாம் பொய் பேசுகிறார் ஸ்டாலின்: எடப்பாடி

திமுக தலைவர் ஸ்டாலின், போகும் இடமெல்லாம் பச்சைப் பொய் கூறிவருகிறார் என முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி குற்றம்சாட்டினார்.

புதுக்கோட்டை, விராலிமலை, இலுப்பூர், அறந்தாங்கி, திருமயம் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று காலை முதல் பல்வேறு பகுதிகளிலும் காலையிலிருந்து சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டார். பட்டுக்கோட்டை, ஒரத்தநாடு, தஞ்சாவூர் ஆகிய இடங்களில் அதிமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து நேற்று முதல்வர் பிரச்சாரம் செய்தார்.

புதுக்கோட்டை சட்டசபை தொகுதி அதிமுக வேட்பாளர் வி.ஆர்.கார்த்திக் தொண்டைமானை ஆதரித்து நேற்று (மார்ச் 16) பஸ் ஸ்டாண்ட் அருகே வேனில் இருந்தபடியே பிரச்சாரம் மேற்கொண்ட அவர் மேலும் பேசியதாவது...

“அதிமுக அரசு என்ன செய்தது எனத் தொடர்ந்து ஸ்டாலின் கேட்டுக் கொண்டே இருக்கிறார். புதுக்கோட்டை மாவட்டத்துக்கு அரசு மருத்துவக் கல்லூரி வேண்டும் என ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது கேட்டீர்கள். கட்டுமானப் பணிகள் முடிவுற்று நானே நேரில் வந்து திறந்து வைத்தேன். போய் பாருங்கள். யாரும் மறைக்க முடியாது.

அதன்பிறகு, சென்னைக்கு அடுத்ததாக அரசு பல் மருத்துவக் கல்லூரி வேண்டும் என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் கேட்டார். அந்தக் கோரிக்கையும் நிறைவேற்றப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

கூட்டுக் குடிநீர்த் திட்டம் தொடங்கப்பட்டு, பாதுகாக்கப்பட்ட குடிநீர் புதுக்கோட்டை மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. நகர்ப்புறங்களிலும், கிராமப்புறங்களிலும் சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன.

புதுக்கோட்டையின் 100 ஆண்டுக்காலக் கனவுத் திட்டம் காவிரி - குண்டாறு இணைப்புத் திட்டம் ரூ.14,400 கோடியில் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. முழுமையாக நிறைவேறும்போது, மஞ்சள், வாழை, கரும்பு விளையும் வளமான பகுதியாக புதுக்கோட்டை மாறும்.

கூட்டுறவு வங்கிகளில் பெற்ற விவசாயக் கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டு, அதற்கான ரசீதுகள் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டு வருகின்றன. ஆனால், ஒன்றுமே நடக்கவில்லை என பச்சைப் பொய் கூறி வருகிறார் ஸ்டாலின்.

விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம் வழங்கப்படவுள்ளது. ஆண்டுக்கு ஆறு எரிவாயு உருளைகள் வழங்கப்படவுள்ளன. குடும்பத்துக்கு மாதம்தோறும் ரூ.1500 வழங்கப்படவுள்ளது.

புதுக்கோட்டையில் துணை நகரம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. 2,000 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன.

நான் முதல்வராகப் பதவியில் அமர்ந்த உடனேயே ஒரு மாதத்தில் ஆட்சி கவிழும், ஆறு மாதங்களில் ஆட்சி கவிழும் என்று சொன்னார்கள். இப்போது நான்கு ஆண்டுகள் ஆட்சியை நடத்தி முடித்து ஐந்தாவது ஆண்டில் இருக்கிறேன். தன்னம்பிக்கை உடைய விவசாயி நான்; நேர்மையும் விசுவாசமும் எங்களிடம் உள்ளது.

எங்கள் ஆட்சிக்கான பெரும்பான்மையை நிரூபிக்க சபாநாயகர் கேட்டபோது புனிதமான அந்தப் பேரவையில் என்ன நடந்தது என நாட்டுக்கே தெரியும். திமுகவினர் செய்த அராஜகம், அட்டகாசத்தை எல்லோரும் அறிவீர்கள். சபாநாயகர் தனபாலை அந்த இருக்கையில் இருந்து இறக்கி அதிலே உட்கார்ந்தார்கள். நடந்ததா இல்லையா? பதில் சொல்லுங்கள்.

அதன்பிறகு சட்டையைக் கிழித்துக் கொண்டு வெளியே வந்தார் ஸ்டாலின். இவர்கள்தான் நாட்டை ஆள ஆசைப்படுகிறார்கள். இவர்கள் ஆட்சிக்கு வந்தால் நாடு வளம்பெறுமா? உருப்படி ஆகுமா? அராஜக கட்சி திமுக. இவர்கள் இந்தத் தேர்தலில் படுதோல்வி அடைய வேண்டும்.

ஊர் ஊராகப் போய் மக்களிடம் மனு வாங்குவதாக நாடகமாடுகிறார்கள். எங்கள் அமைச்சர்கள் மாவட்டங்கள் தோறும் சென்று மக்களிடம் கோரிக்கை மனுக்களைப் பெற்றார்கள். 9 லட்சம் மனுக்கள் பெறப்பட்டு, 5.25 லட்சம் மனுக்களுக்குத் தீர்வு காணப்பட்டுள்ளது. முதல்வரின் சிறப்பு குறைகேட்பாக தொலைபேசி எண் அளிக்கப்பட்டு மக்களின் குறைகள் தீர்க்கப்பட்டுள்ளன.

எனவே, நீங்கள் வாங்கும் மனுக்களுக்கு வேலையே இல்லை. அந்தப் பெட்டிக்கு இன்னொரு பூட்டைப் போட்டு பூட்ட வேண்டியதுதான்” என்றார் எடப்பாடி கே. பழனிசாமி.

"விராலிமலை தொகுதியில் பிரச்சாரம் செய்த முதல்வர் தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டுவந்தவர் இங்கு போட்டியிடும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர். மக்கள் எல்லோரும் பொது இடங்களில் முகக்கவசங்கள் அணிந்து செல்லுங்கள். குடும்பத்தோடு கொரோனா தடுப்பூசி போடுங்கள்” என்றார்.

பிரச்சாரத்தில் மாநில மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சரும் வடக்கு மாவட்ட அதிமுக செயலருமான சி.விஜயபாஸ்கர், புதுக்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் வி.ஆர்.கார்த்திக் தொண்டைமான் ஆகியோரும் உடனிருந்தனர்.

சக்தி பரமசிவன்

நயினார் நாகேந்திரன் பேச்சு: ஓபிஎஸ் அறிக்கை!

10 நிமிட வாசிப்பு

நயினார் நாகேந்திரன் பேச்சு: ஓபிஎஸ் அறிக்கை!

டிஜிட்டல் திண்ணை: ஐஏஎஸ்-ஐபிஎஸ் அதிகாரிகள் சட்டம்: பாஜகவின் தேர்தல் ...

6 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: ஐஏஎஸ்-ஐபிஎஸ் அதிகாரிகள் சட்டம்: பாஜகவின் தேர்தல் திட்டம்!

அதிமுக-பாஜக:என்ன நடக்கிறது?

10 நிமிட வாசிப்பு

அதிமுக-பாஜக:என்ன நடக்கிறது?

புதன் 17 மா 2021