வாரிசு அரசியல் என்றால் நிராகரிக்கட்டும்: உதயநிதி

திமுகவினர் மீது வாரிசு அரசியல் என்று விமர்சனம் உள்ள நிலையில், வாரிசு அரசியல் என்றால் மக்கள் நிராகரிக்கட்டும் என்று தெரிவித்துள்ளார் உதயநிதி ஸ்டாலின்.
சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடுகிறார் திமுக இளைஞரணி தலைவர் உதயநிதி ஸ்டாலின். இதற்காக நிர்வாகிகள் - தொண்டர்கள் - கூட்டணி கட்சிகளுடன் ஊர்வலமாக சென்று மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் நேற்று வேட்புமனுத் தாக்கல் செய்தார்.
இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த உதயநிதி ஸ்டாலின், “குடியுரிமை திருத்தச் சட்டத்தால், யாருக்கும் எந்தப் பாதிப்பும் இல்லை என்று சட்டப்பேரவையில் முதல்வா் எடப்பாடி பழனிசாமி தான் சொன்னார். தற்போது அதிமுகவின் தோ்தல் அறிக்கையில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தைத் திரும்பப் பெற மத்திய அரசுக்கு வலியுறுத்தப்படும் என்று வாக்குறுதி கொடுத்துள்ளார். சிறுபான்மை மக்களின் பாதுகாவலன் திமுகதான் என்பதை மக்கள் அறிவா்” என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், “சட்டமன்ற உறுப்பினர் என்பது நியமன பதவி அல்ல. மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் பதவி. நான் போட்டியிடுவது வாரிசு அரசியல் என்று கருதினால் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி மக்கள் என்னை நிராகரிக்கட்டும். வெற்றி வாய்ப்பு இருக்கும் என்று தான் களம் இறங்கினேன். மக்கள் நல்ல வரவேற்பு கொடுக்கின்றனர் ” என்றார்.
கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்தவர்கள் எதுவும் செய்யாமல், தற்போது தேர்தல் அறிக்கையில் இலவசங்களை அறிவிக்கின்றனர். மக்களுக்குப் பாதுகாப்பான ஆட்சியை திமுக வழங்கும் என்று தெரிவித்தார் உதயநிதி ஸ்டாலின்.
-பிரியா