களத்தில் இருக்கும்போது ஆத்தூர் திமுக வேட்பாளர் மாற்றம் ஏன்?

politics

திமுகவின் சேலம் மாவட்ட ஆத்தூர் தனித் தொகுதி பெண் வேட்பாளர் ஜீவா ஸ்டாலின் மாற்றப்பட்டிருக்கிறார். அவருக்கு பதிலாக பக்கத்து தொகுதியான கெங்கவல்லியின் முன்னாள் எம்.எல்.ஏ. சின்னதுரை அறிவிக்கப்பட்டிருக்கிறார்.

அதிமுகவில் நடப்பது போன்று பல இடங்களில் வேட்பாளர் பட்டியலை எதிர்த்து போராட்டங்கள் நடக்கவில்லை என்றாலும் திமுகவிலும் ஆங்காங்கே வேட்பாளர் பட்டியலை எதிர்த்து போராட்டங்கள் நடத்தப்பட்டும் புகார்கள் அனுப்பப்பட்டும் வருகின்றன.

விருகம்பாக்கம் தொகுதி வேட்பாளராக வர்த்தகர் சங்க தலைவரான விக்ரமராஜாவின் மகன் பிரபாகர் ராஜா அறிவிக்கப்பட்ட நிலையில், அத்தொகுதிக்கு உட்பட்ட கே.கே.நகர் தனசேகரன் எதிர்த்தார். அவரது ஆதரவாளர்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர். வேட்பாளரின் காரும் தாக்கப்பட்டது. இந்த நிலையில் அறிவாலயம் சென்று ஸ்டாலினை சந்தித்த தனசேகரன் அதன் பின் அமைதியாகிவிட்டார்.

இதேபோல கடையநல்லூர் தொகுதிக்காக திமுக வர்த்தகர் அணி மாநில துணைத் தலைவர் அய்யாதுரை பாண்டியன் நீண்ட காலமாகவே முயற்சித்து வந்தார். திமுக தலைமையில் இருந்தும் அவருக்கு உரிய உத்தரவாதம் அளிக்கப்பட்டிருந்தது. ஆனால் அவருக்கு கடைசி நேரத்தில் சீட் கொடுக்கப்படாமல் தற்போது எம்.எல்.ஏ.வை பெற்றிருக்கும் முஸ்லிம் லீக்குக்கே கொடுக்கப்பட்டது. இதனால் அதிருப்தியான அய்யாதுரை பாண்டியன் அமைதியாக திமுகவில் இருந்து விலகி அமமுகவில் சேர்ந்து அங்கே கடையநல்லூர் வேட்பாளர் ஆகிவிட்டார்.

இந்த நிலையில்தான் சேலம் ஆத்தூர் தொகுதியில் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட ஆத்தூர் தொகுதியைச் சேர்ந்த ஜீவா ஸ்டாலின் தேர்தல் பரப்புரைக்கு முன்னதாக நேற்றும் இன்றும் திமுக நிர்வாகிகளின் வீடு தேடிச் சென்று சந்தித்து வந்தார் ஜீவா ஸ்டாலின். இன்று நரசிங்கபுரம் நகர செயலாளர், ஒன்றிய நிர்வாகிகளை சந்தித்துக் கொண்டிருக்கும்போதுதான், தலைமையில் இருந்து அந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஜீவா ஸ்டாலின் மாற்றப்பட்டு கு. சின்னதுரை வேட்பாளராக அறிவிக்கப்படுகிறார் என்பதுதான் அந்த அறிவிப்பு.

இந்தத் தகவல் களத்தில் இருந்த வேட்பாளர் ஜீவாவுக்கு சொல்லப்பட்டதும் அதிர்ச்சி அடைந்தார். அவரது கணவரும் முன்னாள் ஆத்தூர் நகர்மன்ற உறுப்பினர் ஸ்டாலினும் இதனால் அதிர்ச்சி அடைந்தார்.

வேட்பாளர் மாற்றப்பட்டது ஏன் என்று ஆத்தூர் திமுகவில் விசாரித்தோம்.

“ஆத்தூர் ஸ்டாலின் முன்னாள் கவுன்சிலர். அதிமுகவை எந்த சமரசமும் இல்லாமல் எதிர்த்து வந்த ஆத்தூரில் இருக்கும் ஒரு சில திமுகவினரில் இவரும் ஒருவர். முதல்வரின் வலதுகரமான ஆத்தூர் இளங்கோவனின் செயல்பாடுகளை தொடர்ந்து விமரிசித்து வந்ததால் இவர் மீது பொய் வழக்கு போடப்பட்டு சிறைக்கு அனுப்பப்பட்டார். இந்நிலையில் ஐபேக் தொகுதி முழுதும் ஆராய்ந்து மகளிரணியில் இருக்கும் இவரது மனைவி ஜீவா ஸ்டாலினுக்கு வாய்ப்பு தரலாம் என்று ரிப்போர்ட் அனுப்பியது.

அதேநேரம் கெங்கவல்லி தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. சின்னதுரை தனக்கு ஆத்தூர் அல்லது கெங்கவல்லி சீட் மீண்டும் கேட்டு காய் நகர்த்தி வந்தார். வேட்பாளர் அறிவிக்கப்பட்டதும் சின்னதுரை ஆதரவாளர்கள் ஜீவா ஸ்டாலின் பெற்றோர் இருவருமே பட்டியல் வகுப்பைச் சேர்ந்தவர்கள் இல்லை என்று குறிப்பிட்டு தலைமைக்கு புகார்கள் அனுப்பினார்கள். மேலும் வேட்பாளரை மாற்றவில்லை என்றால் மனு பரிசீலனையின் போது சிக்கல் ஏற்படலாம் என்று புகார் அனுப்பியுள்ளார்கள். இதன் அடிப்படையில்தான் வேட்பாளர் மாற்றப்பட்டிருக்கிறார்” என்கிறார்கள்.

வேட்பாளர் மாற்றத்துக்குப் பின் ஜீவாவின் கணவர் ஸ்டாலின், ‘1996 முதல் திமுகவுக்காக பாடுபட்டு வருகிறேன். இனியும் தொடர்ந்து தளராமல் உழைப்பேன்’என்று முகநூலில் பதிவிட்டுள்ளார்

**-வேந்தன்**

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *