மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 16 மா 2021

ஸ்டாலின் பாணியில் வாக்கிங்கில் வாக்கு சேகரித்த கமல்

ஸ்டாலின் பாணியில் வாக்கிங்கில் வாக்கு சேகரித்த கமல்

சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கிறது. அடுத்த 5 ஆண்டு ஆட்சியில் அமரப்போவது யார் என்று எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் அதிகரித்திருக்கிறது. அதே சமயத்தில் அரசியல் கட்சித் தலைவர்களின் பிரச்சாரம் களை கட்டியிருக்கிறது.

வழக்கமாக திமுக தலைவர் ஸ்டாலின், தேர்தல் சமயங்களில் நடைப்பயிற்சி மேற்கொண்டு பொது மக்களிடம் பேசி அவர்களது குறைகளைக் கேட்டறிந்து வாக்கு சேகரிப்பார். மார்க்கெட் வியாபாரிகள், கடை வியாபாரிகள் என அனைவரும் தங்களது குறைகளைக் கொட்டுவார்கள்.

அந்த பாணியில் தற்போது, வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருக்கிறார் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன். சட்டமன்றத் தேர்தலில் முதன்முறையாகக் களமிறங்கும் கமல், கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடுகிறார்.

2019 மக்களவைத் தேர்தலில், கோவை தெற்கில், பி.ஆர்.நடராஜன் (சிபிஎம்) 64453, சி.பி.ராதாகிருஷ்ணன் (பாஜ) 46368 வாக்குகள் பெற்றிருந்தனர். இதற்கு அடுத்தபடியாக மநீம வேட்பாளர் ஆர்.மகேந்திரன் 23838 வாக்குகள் பெற்றிருந்தார். இந்நிலையில்தான் கமல் அந்த தொகுதியில் போட்டியிடவுள்ளதாக அறிவித்தார்.

இதற்காக நேற்று, வேட்புமனு தாக்கல் செய்தார். இதையடுத்து நேற்று இரவு, கோவை ராஜவீதி தேர்நிலைத் திடலில் இரவு நடந்த மக்கள் நீதி மய்யத்தின் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் கமல் உரையாற்றினார். அப்போது, “என்னை குறிப்பிட்ட வட்டத்துக்குள் அடக்க முயற்சிகள் நடைபெற்றன. மயிலாப்பூரில் எனது உறவினர்கள் உள்ளதால், அங்குதான் போட்டியிடுவார் என்றார்கள். எனக்கு 234 தொகுதிகளிலும் உறவினர்கள் உள்ளனர்.

தேர்தல் முடிந்தவுடன் நடிக்க சென்றுவிடுவேன் என்று கூறுகிறார்கள். அப்படிச் சொல்பவர்களுக்கு அரசியல் ஒரு தொழில், ஆனால் எனக்கு அரசியல் என்பது கடமை. இதுதான் எனக்கும் அவர்களுக்கும் உள்ள வித்தியாசம். மக்களுக்குக் குடிக்கத் தண்ணீர் இல்லை. இப்படி தண்ணீர் இல்லாத ஊரில் வாஷிங்மிஷின் தருவது கெட்டிக்காரத்தனமா? இதிலிருந்தே இவர்களுக்கு ஆளும் தகுதி இல்லை என்பது புலப்படுகிறது.

கொங்கு செழித்தால் எங்கும் செழிக்கும்... எனவே கொங்கின் சங்க நாதம் சட்டப்பேரவையில் ஒலிக்க வேண்டும். அந்தக் குரலாக நான் இருக்க வேண்டும். தமிழ் சினிமாவில் நான் மற்றம் கொண்டு வந்தது போல தமிழகத்திலும் மாற்றம் கொண்டு வருவேன்” என்றார்.

இந்நிகழ்வை முடித்துக்கொண்டு, கோவையிலேயே தங்கியிருந்து இன்று காலை நடைப்பயிற்சி மேற்கொண்டு வாக்கு சேகரித்தார். முகக்கவசம் அணிந்து ரேஸ்கோர்ஸ் சாலையில் காலையில் வாக்கிங் சென்றவரை அங்கிருந்தவர் ஆச்சரியத்துடன் பார்த்தனர். பின்னர், அங்கிருந்த நடைபாதையை ஒட்டியவாறு அமைந்துள்ள தேநீர் கடைக்குச் சென்ற அவர் அவர்களின் குறைகளைக் கேட்டறிந்தார்.

தொடர்ந்து, தேகப்பயிற்சி சாலையில் உடற்பயிற்சி மேற்கொண்டார். சிறிது நேரம் சிலம்பம் சுற்றிவிட்டு, அங்குள்ள சிறுவர்களிடம் பேசிவிட்டு, தேகப்பயிற்சியின் செயல்பாடுகள் குறித்துக் கேட்டறிந்தார். மேலும், கோவை மீன்மார்கெட் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு சென்ற கமல், அங்குள்ள மக்களின் குறைகளைக் கேட்டறிந்தார்.

இவ்வாறு மக்களிடம் குறைகளைக் கேட்டுக்கொண்டிருந்த போது அங்கிருந்த ஒருவர், “சிறு,குறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களிலிருந்து எல்லாத் தொழில்களும், தற்போது கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. ஸ்டீல் உள்ளிட்ட எல்லா மூலப் பொருட்களின் விலையும் கடுமையாக உயர்ந்துவிட்டது. இதுதான் உங்கள் முன் இருக்கக்கூடிய சவால். இதைச் சீரமைக்க என்ன செய்யப் போகிறீர்கள்?” என கேள்வி எழுப்பினார்.

அவருக்குப் பதிலளித்த கமல் ‘‘நான் தனிமனிதராகச் செய்து பார்த்து, நடக்கவில்லை என்பதால் தான் அரசியலுக்கு வந்துள்ளேன். உரிய நடவடிக்கை எடுப்பேன்’’ என்றார் .

அதேபோல, மாநகர பேருந்துகளில் ஏறி மக்களிடம் பேசுவது, பள்ளி மாணவிகளுடன் உரையாடுவது என்று தொடர்ந்து பிரசாரத்தில் ஈடுபட்டு கோவை மக்களை ஆச்சரியப்படுத்தியிருக்கிறார் கமல்.

-பிரியா

கொடநாடு வழக்கு: சேலத்தில் ஒருவர் கைது!

5 நிமிட வாசிப்பு

கொடநாடு வழக்கு: சேலத்தில் ஒருவர் கைது!

பன்னீர் பின்னால் திமுக: சிவி சண்முகம்

4 நிமிட வாசிப்பு

பன்னீர் பின்னால் திமுக: சிவி சண்முகம்

மகாராஷ்டிரா: ஆளுநருடன் பாஜக பட்னவிஸ் சந்திப்பு- அடுத்த ஆட்சிக்கு ...

3 நிமிட வாசிப்பு

மகாராஷ்டிரா: ஆளுநருடன் பாஜக பட்னவிஸ் சந்திப்பு- அடுத்த ஆட்சிக்கு ஆயத்தம்! 

செவ்வாய் 16 மா 2021