மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 16 மா 2021

ஜவாஹிருல்லாவுக்காக பிரச்சாரம் செய்வாரா ஹைதர் அலி?

ஜவாஹிருல்லாவுக்காக பிரச்சாரம் செய்வாரா ஹைதர் அலி?

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தில் பொதுச் செயலாளராக இருந்த ஹைதர் அலிக்கும், மமக தலைவர் ஜவாஹிருல்லாவுக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டது. கடந்த 2019 ஜூன் 29 ஆம் தேதி ஜவாஹிருல்லா சிங்கப்பெருமாள் கோயிலில் கூட்டிய பொதுக்குழுவில் ஹைதர் அலி அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்பட்டார். ஹைதர் அலி திருச்சியில் கூட்டிய பொதுக்குழுவில் ஜவாஹிருல்லா மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்து நிறைவேற்றப்பட்டது. இதுகுறித்து மின்னம்பலத்தில் பொதுக்குழுவா, பொய்க்குழுவா? –தமுமுகவின் இரு தரப்பு வாதங்கள்! என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டோம்.

இவ்விரு தரப்பினருக்கும் வழக்கு நடந்து வரும் நிலையில்... ஹைதர் அலி தனது ஆதரவாளர்களுடன் மதுரையில் ஒரு ஆலோசனைக் கூட்டத்தை மார்ச் 14 ஆம் தேதி கூட்டினார். அதில் திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவிப்பதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆயினும் திமுக கூட்டணியில் இருக்கும் மமகவுக்கு ஆதரவு தெரிவிப்பதா என்பது குறித்து இக்கூட்டத்தில் கேள்வி எழுந்துள்ளது.

“தமுமுகவில் உரிமை கோரி ஹைதர் அலி வழக்கு நடத்தி வரும் நிலையில் நீதிமன்ற உத்தரவின் பேரில் அவர் தமுமுக கொடிகளை பயன்படுத்த அனுமதியில்லை. ஆனால் ஆலோசனைக் கூட்டம் நடத்தக் கூடவா அனுமதியில்லை? ஏற்கனவே மேலூர் அருகே பெரிய மண்டபத்தில் ஆலோசனைக் கூட்டம் நடத்தத் திட்டமிட்ட நிலையில் மமக நிர்வாகிகள் சிலர் எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியில் உள்ள திமுகவினர் மூலம் அதைத் தடுத்து நிறுத்தினர். இந்த ஆலோசனைக் கூட்டத்தையும் தடுத்து நிறுத்த பல முயற்சிகள் நடந்தன. ஆனால் மதுரை போலீஸ் ஆணையாளர், தேர்தல் அதிகாரி ஆகியோரை சந்தித்து அனுமதி பெற்று இந்தக் கூட்டத்தை நடத்தியிருக்கிறோம்” என்கிறார்கள் ஹைதர் அலி ஆதரவாளர்கள்.

மேலும் இந்தக் கூட்டத்தில், “ஏராளமான உருது ஆசிரியர்களை உருவாக்கிய சென்னை தாஹிர்சாகிப் தெருவில் செயல்பட்டு வந்த உருது ஆசிரியர் பள்ளியை மீண்டும் திறந்திட வலியுறுத்துவது, தமிழ்நாடு வக்பு வாரிய சொத்துக்கள் பல்லாண்டுகளாக மீளாய்வு செய்யாமல் தொடர்ந்து வருகிறது. வக்பு வாரிய நிர்வாகம் சமீபமாக ஊழல் மயமாகி வருகிறது. இதனை தடுக்கும் விதமாகவும், வக்பு வாரிய கண்காணிப்பில் உள்ள சொத்துக்களை முழுமையாக கள ஆய்வு செய்திடவும் வக்பு வாரிய மறுசீரமைப்பு குழு ஒன்றை ஏற்ப்படுத்தி குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் தமிழக அரசுக்கு பரிந்துரைகள் பெற்று அதனை நடைமுறைப்படுத்த வேண்டும். மாநில சிறுபான்மை நலவாரியத்தை மனித உரிமை ஆணையத்திற்கு இணையான அதிகாரம் பெற்ற அமைப்பாக புனரமைப்பு செய்ய வேண்டும். பூரணமதுவிலக்கை சமரசமின்றி அமுல்படுத்த வேண்டும்” ஆகிய சமுதாய ரீதியிலான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அதோடு அரசியல் தீர்மானங்களாக, “எதிர்வரும் தமிழ்நாடு சட்டசபை தேர்தலில் மக்கள் விரோத பாஜக,அதிமுக தலைமையிலான கூட்டணியை மக்கள் புறக்கணிக்க வேண்டும் என்றும் வாக்காளர்களிடம் தீவிர பிரச்சாரம் செய்வது என தீர்மானிக்கப்படுகிறது. தமிழக சட்டமன்ற தேர்தலில் திராவிட முன்னேற்ற கழகம் தலைமையிலான கூட்டணியை ஆதரித்து வெற்றி பெறச்செய்வது என தீர்மானிக்கப்படுகிறது. தமிழக சட்டசபை தேர்தலில் நூறு சதவிகித வாக்குப்பதிவை உறுதி செய்ய வாய்ப்புள்ள அனைத்து இடங்களிலும் தீவீர பிரச்சாரம் மேற்கொள்வது, திமுக தேர்தல் அறிக்கை குறித்து திண்ணை பிரச்சாரம் மேற்கொள்வது”என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

திமுக கூட்டணியை ஆதரிப்பது என்றால் அதில் இடம்பெற்றிருக்கும் நமது பங்காளியான ஜவாஹிருல்லாவையும், அப்துல் சமதுவையும் ஆதரித்து பிரச்சாரம் செய்யப் போகிறோமா என்று அந்தக் கூட்டத்திலேயே சிலர் ஹைதர் அலியிடம் கேள்வி எழுப்பினார்கள்.

அதற்கு பதிலளித்த ஹைதர் அலி, “அவர்கள் நம்மிடம் கேட்டால் அதுபற்றி பரிசீலிப்போம்” என்று பதிலளித்திருக்கிறார்.

ஏற்கனவே சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு ஜவாஹிருல்லா பல்வேறு அமைப்புகளின், கட்சிகளின் தலைவர்களையும், நிர்வாகிகளையும் சந்தித்து வருகிறார். ஏற்கனவே மமகவில் இருந்து விலகி மனித நேய ஜனநாயகக் கட்சி கண்ட தமிமுன் அன்சாரியையும் சந்தித்துள்ளார் ஜவாஹிருல்லா. இந்த வகையில் ஹைதர் அலியையும் சந்திப்பாரா என்ற கேள்விகளும் எழுந்துள்ளன.

இதன் அடிப்படையில் ஜவாஹிருல்லாவுக்கு ஹைதர் அலி பிரச்சாரம் செய்வாரா என்றும், அதன் மூலம் இருவருக்கும் இடையிலான பிரச்சினைகள் பேசித் தீர்க்கப்பட்டுவிடுமா என்றும் எதிர்பார்ப்பு மமக-தமுமுகவினரிடையே ஏற்பட்டுள்ளது.

-ஆரா

அதிமுக அமைப்புத் தேர்தல்: ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு எடப்பாடி ...

9 நிமிட வாசிப்பு

அதிமுக அமைப்புத் தேர்தல்: ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு எடப்பாடி போட்டி?

‘கவலைப்படாதீங்க’ : ஓட்டுநருக்கு ஆறுதல் கூறிய ராதாகிருஷ்ணன் ...

3 நிமிட வாசிப்பு

‘கவலைப்படாதீங்க’ : ஓட்டுநருக்கு ஆறுதல் கூறிய ராதாகிருஷ்ணன்

என்னை எதிர்த்தால் நீக்கம்- எடப்பாடியின் செயற்குழு மெசேஜ்

6 நிமிட வாசிப்பு

என்னை எதிர்த்தால் நீக்கம்- எடப்பாடியின் செயற்குழு மெசேஜ்

செவ்வாய் 16 மா 2021