மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 16 மா 2021

மதுரை சரவணன் என்ன பிரமாதம்... பப்புலியின் கதையைக் கேளுங்க!

மதுரை சரவணன் என்ன பிரமாதம்... பப்புலியின் கதையைக் கேளுங்க!

ஐந்து சட்டப்பேரவைத் தேர்தல்களும் தொடங்குவதற்குள் அப்பப்பா இந்த அரசியல் கட்சிகள் அரங்கேற்றும் கூத்துகளை, என்ன சொல்வதென்றே தெரியவில்லை!

குறிப்பாக, வேட்பாளர் தேர்வு விவகாரம்..!

தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைமையகத்தில் ஒன்றுக்கு பல கோஷ்டிகளாக உண்ணாவிரதப் போராட்டம், நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணியே பகிரங்கக் குற்றச்சாட்டு என ஒரு விதம் என்றால், கேரள காங்கிரஸ் மகளிர் அணியின் தலைவர் மொட்டை போட்டு கட்சியின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்தது எதுமாதிரியும் இல்லாத புதுமாதிரி!

காங்கிரஸ் சார்பில் நிறுத்தப்படும் வேட்பாளர்கள் புதியவர்கள், இளைஞர்கள் என அதிருப்தி கிளப்ப, பாஜகவிலோ அயலவர் ஆதிக்கமே அதிகம் என்கிறார்கள், அதிருப்தியாளர்கள்.

கேரளத்தில் நடிகர் சுரேஷ் கோபியை திருச்சூர் சட்டப்பேரவைத் தொகுதியிலும் 88 வயது மெட்ரோ மேன் ஸ்ரீதரனை பாலக்காட்டிலும் முன்னாள் மத்திய அமைச்சர் அல்போன்சை கஞ்சிரப்பள்ளியிலும் நிறுத்தியுள்ளது, பாஜக. இதிலும் வயநாடு மாவட்டத்தில் மானந்தாவடி தொகுதிக்கு வேட்பாளரின் அனுமதியே பெறாமல் பட்டியலில் சேர்த்ததிலும் ஒரே அம்சம் பொதுவானதாக இருக்கிறது. இது வங்கம்வரை நீள்கிறது.

எட்டு கட்டங்களாக நடக்கும் வங்கத்தேர்தலில், மூன்றாம், நான்காம் கட்டத் தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டிருக்கிறது. அதுவும், 75 தொகுதிகளில் 63 இடங்களுக்கு மட்டும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். பல நாட்கள் டெல்லியில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா முன்னிலையில் அலசி ஆராய்ந்து பட்டியலைத் தயார்செய்திருக்கிறார்கள். இந்தப் பட்டியல் வெளியாகி ஒரு மணி நேரத்துக்குள் பல தொகுதிகளில் பாஜகவினர் போராட்டத்தில் குதித்தனர்.

ஒரு மத்திய அமைச்சர் உள்பட 4 எம்.பி.களை சட்டப்பேரவைத் தேர்தலில் நிறுத்தியிருக்கிறது, பாஜக தலைமை. நடிகையும் ஹூக்ளி மக்களவைத் தொகுதி உறுப்பினருமான லாக்கட் சட்டர்ஜி சின்சுரா சட்டப்பேரவைத் தொகுதிக்கும் பிரபல பாடகரும் அசன்சோல் மக்களவை உறுப்பினருமான மத்திய அமைச்சர் பாபுல் சுப்ரியோ டோலிகஞ்ச் தொகுதிக்கும் கூச்பிகார் எம்.பி. நிசித் பிரமானிக் தின்ஹட்டா தொகுதிக்கும், மாநிலங்களவை உறுப்பினர் ஸ்வபன்தாஸ் குப்தா தாரகேஸ்வர் தொகுதிக்கும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

இன்னொரு முக்கிய வேட்பாளர், பிரபல பொருளாதார வல்லுநர், அசோக் லாகிரி. உலக வங்கி, ஐ.எம்.எஃப். ஆகியவற்றிலும் நாட்டின் முதன்மைப் பொருளாதார ஆலோசகராகவும் பணியாற்றிய இவர், பிரதமருக்கு அணுக்கமானவர். அலிப்புர்துவார் தொகுதியில் இவரை வேட்பாளராக அறிவித்தது, அந்த மாவட்ட பாஜக தலைவருக்கே தெரியவில்லை. பட்டியல் அறிவித்து சில மணி நேரத்துக்குப் பின்னர் அவரை செய்தியாளர்கள் வழக்கம்போல விவரம் அறியத் தொடர்புகொண்டுள்ளனர். அப்படி ஒருவரை யார் என்றே எனக்குத் தெரியாதபோது, அவரைப் பற்றி நான் என்ன சொல்லமுடியும் என எதிர்க்கேள்வி கேட்டிருக்கிறார், மாவட்ட பாஜக தலைவர் கங்கா பிரசாத் சர்மா.

இதே அலிப்பூர்துவார் மாவட்டத்தில் அண்மையில்தான் இன்னொரு வேட்பாளர் பிரச்னை வந்து ஓய்ந்தது. கோர்கா ஜன்முக்தி மோர்ச்சா அமைப்பின் முன்னாள் தலைவர் பிஷால் லாமா என்பவரை கல்சினி தொகுதியில் இதேபோலத்தான் மாவட்ட நிர்வாகிகளுக்குத் தெரியாமல் அறிவித்தது, கட்சித் தலைமை. அவர் கட்சியில் சேர்ந்து சில நாள்களில் அவருக்கு போட்டியிட வாய்ப்பு தரப்பட்ட நிலையில், தொகுதியில் உள்ள பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்த சத்தம் ஓய்ந்துமுடிவதற்குள் லாகிரியின் தேர்வைக் கண்டித்தும் மாவட்ட பாஜகவினர் கங்கா பிரசாத் வீட்டு முன்பு போராட்டம் நடத்தினார்கள். அவர்தான் பாவம் என்ன செய்வார்?

ஊடகச் செய்தி மூலமாகத்தான் பிசால் லாமா போட்டியிடுவது பற்றி எனக்கே தெரியும்; மாவட்ட நிர்வாகத்துடன் இதைப் பற்றி கட்சியில் யாரும் கலந்துபேசவில்லை; இந்த இரண்டு விவகாரங்களும் எங்களுடைய கௌரவத்தைக் குலைத்துவிட்டன என்று வெளிப்படையாகவே அதிருப்தியை வெளிப்படுத்தியிருக்கிறார், கங்கா பிரசாத்.

அலிப்புர்துவாரில் போட்டியிட 30 உள்ளூர் தலைவர்களாவது தயாராக இருந்துள்ளனர். பிசால் லாமோவுக்கு எதிராக சில நாள்களுக்கு முன்னர்வரை அரசியல் செய்திருக்கிறோம்; இப்போது அவர் எங்கள் கட்சியின் வேட்பாளர் என பொறுமுகிறார்கள், மாவட்ட பாஜகவினர்.

கொல்கத்தா முன்னாள் மேயர் சோவன் சட்டர்ஜி கிழக்கு பெகலா தொகுதியில் போட்டியிடுவதாக இருந்தது. ஆனால் சில வாரங்களுக்கு முன்னர் கட்சியில் சேர்ந்த நடிகை பயல் சர்க்கார்தான் இங்கு வேட்பாளர். நொந்துபோன அவர் கட்சியிலிருந்தே விலகிக்கொள்வதாக மாநிலத் தலைவருக்கு கடிதம் அனுப்பிவிட்டு ஒதுங்கிக்கொண்டார்.

திரிணமூல் காங்கிரஸ் கட்சியிலிருந்து வந்த 89 வயது ரவீந்திரநாத் பட்டாச்சார்யாவுக்கு சிங்குர் தொகுதியில் வாய்ப்பு தரப்பட்டுள்ளது. இன்னும் சில முன்னாள் திரிணமூல் புள்ளிகள், ஒரு சிபிஎம்காரர், ஒரு பார்வர்டு பிளாக் கட்சிக்காரர் என கட்சிமாறிவந்த பலருக்கும் பாஜகவில் சீட் வழங்கப்பட்டுள்ளது.

”திரிணமூல் கட்சியின் சந்தனு பப்புலி, கடந்த ஆம்பன் புயல் நிவாரணத்தில் கையாடல் செய்தார் என பாஜக அவர் மீது கடுமையாகக் குற்றம்சாட்டியது.. அவர் முறைப்படி இன்னும் கட்சியில் சேரக்கூட இல்லை; ஆனால் ரைடிகி தொகுதியில் அவர்தான் பாஜக வேட்பாளர்.” என்கிற புலம்பல்தான், உண்மையில் சோகமானது.

இறுதிப்பட்டியல் வருவதற்கு முன்னர் பல கட்டமாக உள்கட்சி ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தப்பட்டபோதும், பெயர்களை இறுதிசெய்யமுடியவில்லை என்பது ஒன்று; மற்றது, இப்படியான பெரிய ஆள்களை நிறுத்தினால் தொண்டர்களுக்கு தெம்பாக இருக்கும் என நினைப்பது அபத்தம்; ஒருவேளை திரிணமூல் கட்சியினர் இதை எதிராகப் பயன்படுத்த வேண்டுமானால் இது சாதகமாக இருக்கும் என்கிறார்கள், அதிருப்தி பாஜக நிர்வாகிகள்.

அதை நிரூபிப்பதைப் போலவே, நாடாளுமன்றத்தில் கவனத்தை ஈர்க்கும் பேச்சாளரான திரிணமூல் எம்.பி. மகுவா மொயித்ராவும் தன் டுவிட்டர் பக்கத்தில், “ உலகத்திலேயே மிகப்பெரிய அரசியல் கட்சிக்கு ஒரேயடியாக 294 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவிக்க பலம் இல்லை; இவர்கள்தான் பெரும்பான்மை வெற்றி பெறுவோம் என சொல்லிக்கொள்கிறார்கள்.” என்று கிண்டலாகக் கூறியிருக்கிறார்.

- இளமுருகு

நயினார் நாகேந்திரன் பேச்சு: ஓபிஎஸ் அறிக்கை!

10 நிமிட வாசிப்பு

நயினார் நாகேந்திரன் பேச்சு: ஓபிஎஸ் அறிக்கை!

டிஜிட்டல் திண்ணை: ஐஏஎஸ்-ஐபிஎஸ் அதிகாரிகள் சட்டம்: பாஜகவின் தேர்தல் ...

6 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: ஐஏஎஸ்-ஐபிஎஸ் அதிகாரிகள் சட்டம்: பாஜகவின் தேர்தல் திட்டம்!

அதிமுக-பாஜக:என்ன நடக்கிறது?

10 நிமிட வாசிப்பு

அதிமுக-பாஜக:என்ன நடக்கிறது?

செவ்வாய் 16 மா 2021