மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 16 மா 2021

பக்குவம் இல்லாதவரா எடப்பாடி? திகைப்பூட்டும் சம்பவங்கள்!

பக்குவம் இல்லாதவரா எடப்பாடி?   திகைப்பூட்டும் சம்பவங்கள்!

வெயில் சூட்டோடு வேட்புமனு தாக்கலின் சூடும் கிளம்பி, தமிழக அரசியல் களத்தை அனலாய் தகிக்கவைத்துக் கொண்டிருக்கிறது. கூட்டணியில் இருந்துகொண்டே அதிமுக மீது தாக்குதல் நடத்திய தேமுதிக, இப்போது கூட்டணியை விட்டு வெளியேறிய பின் சும்மா இருக்குமா?

“தேமுதிக பக்குவமற்ற அரசியலை நடத்துகிறது” என்று கூறியிருந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்குப் பதிலளித்து நேற்று (மார்ச் 15) தேமுதிக தலைமை அலுவலகத்தில் பேட்டியளித்த அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா, “ஜெயலலிதாவிடம் இருந்த பக்குவம் எடப்பாடி பழனிசாமியிடம் இல்லை” என்று பதிலளித்துள்ளார்.

இரண்டு கூட்டணிகளிலும் உள்ள எல்லாக் கட்சிகளுமே, திமுக, அதிமுக என இரண்டு தலைமையிலான கூட்டணிகளிலும் வெவ்வேறு காலகட்டங்களில் வேவ்வேறு தேர்தல்களைச் சந்தித்தவைதான். எம்ஜிஆர், கருணாநிதி, ஜெயலலிதா என பெரிய பெரிய ஆளுமைகளுடன் தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தைகளை நடத்திய அனுபவம் அல்லது அது குறித்த தரவுகள் அவர்களிடம் இருக்கின்றன. ஆனால், இந்த முறை இரண்டு கட்சிகளின் தலைமையிலும் இருக்கின்ற ஸ்டாலின், இபிஎஸ் ஆகிய இருவருமே ‘இவ்வளவுதான் சீட்டு; இருந்தா இருங்க, இல்லேன்னா போங்க’ என்று வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டாகப் பேசியதுதான் சின்னக் கட்சிகளின் தலைவர்களின் எண்ணங்களை, எதிர்பார்ப்புகளை சின்னாபின்னமாக்கியிருக்கிறது.

திமுக கூட்டணியிலாவது, ‘கடந்த முறை குறைந்த தொகுதிகள் வித்தியாசத்தில் ஆட்சி வாய்ப்பை இழந்தது, கூட்டணிக் கட்சிகளுக்கு அதிக தொகுதிகளைக் கொடுத்து குறைவான தொகுதிகளில் அவர்கள் வென்றது’ என லாஜிக் ஆன காரணங்கள் கூறப்பட்டுள்ளன. ஆனால் அதிமுக தலைமை இப்போதிருக்கும் நிலையில், சீட்டும் நோட்டும் தாராளமாய்க் கிடைக்குமென்று எதிர்பார்த்துப் போன பல கட்சிகளுக்கு சின்ன ஏமாற்றமே கிடைத்திருக்கிறது. இந்த விவகாரத்தில் இபிஎஸ் காட்டிய கெடுபிடியையும் கெத்தையும் அருகிலிருந்து பார்த்த அதிமுகவின் முக்கியத் தலைகளே கொஞ்சம் ஆடித்தான் போயிருக்கிறார்கள்.

கட்சிக்கு தான்தான் ஒருங்கிணைப்பாளர் என்றாலும், இபிஎஸ்தான் முதல்வர் வேட்பாளர் என்றதுமே, தொகுதிப் பங்கீடு, ‘ஸ்வீட் பாக்ஸ்’ விநியோகம் என எல்லா விஷயங்களிலிருந்தும் நைசாக ஓபிஎஸ் ஒதுங்கிவிட்டார். தன்னுடைய ஆதரவாளர்களுக்கு வேண்டிய சீட்டுகளை வாங்குவது மட்டும்தான் அவருக்கும் இபிஎஸ்ஸுக்கும் இடையில் நடந்த ஒரே பேச்சுவார்த்தையாக இருந்தது. மற்ற கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு உள்ளிட்ட எல்லா விவகாரங்களையும் பேசி முடித்தது, இபிஎஸ்ஸின் வலது இடது கரங்களாக விளங்கும் மணியான மந்திரிகள்தான். முதல்வரின் உறுதியைப் பார்த்து விட்டு, அவர்களே ஒரு கட்டத்தில் வாய் உலர்ந்து போயிருக்கிறார்கள். இதில் பலமாக அடி வாங்கிய செம்பு என்றால் அது தேமுதிகதான். அதிமுகவுடன்தான் கூட்டணி என்பதில் உறுதியாக இருந்த தேமுதிக, இப்போது தெருவுக்குப் போனதற்குக் காரணமாக, திரைமறைவில் நடந்த நிகழ்வுகள் ‘வேற லெவல்’ டீலிங்.

தொகுதிப் பங்கீட்டில் ஒவ்வொரு கட்சியையும் இபிஎஸ் டீல் செய்த விதத்தை அவருக்கு நெருக்கமாக இருந்து பார்த்த சிலர் நம்மிடம் ‘லைவ்’ ஆக விவரிக்க எடப்பாடியின் இன்னொரு பிம்பம் திகைப்பை ஏற்படுத்துகிறது.

‘‘முதல்வரின் வீடு... அன்று மதியம் தேமுதிகவுடன் தொகுதிப் பங்கீட்டைப் பேசி முடிப்பது தொடர்பாக முதல்வரிடம் பேசுவதற்காக அமைச்சர் தங்கமணி வந்தார். ‘என்னண்ணே தேமுதிக கூட பேசி முடிச்சிடவா’ என்று கேட்டார். உடனே அருகிலிருந்த காலண்டரைப் பார்த்த இபிஎஸ், ‘தம்பி! இப்ப கூட்டணி பத்தி பேசறதுக்கு நேரம் சரியில்லை... சாயங்காலம் வாங்க’ என்று அனுப்பிவிட்டார். மாலையில் அவர் வந்தபோது, முதல்வர் சில அதிகாரிகளுடன் பேசிக்கொண்டிருக்கவே அவர் திரும்பிவிட்டார். மறுநாள் வந்து மீண்டும் அதேபோல பேச்சை ஆரம்பித்தார். (மறுநாள் வரை பேச்சுவார்த்தையை தள்ளிப் போடவே முதல்வர் அந்த இரு சந்தர்ப்பங்களைத் தவிர்த்திருக்கிறார்)

‘‘என்னது 41 கேக்குறாங்களா... நான் விசாரிச்சவரைக்கும் அங்க விருப்ப மனு கொடுக்குறதுக்கே யாரும் விரும்பலையாமே. அங்க தேர்தல்ல நிக்கிறதா இருந்தா விஜயகாந்த், பிரேமலதா, அவுங்க பையன் விஜய பிரபாகரன் மூணு பேருதானே இருக்காங்க. வேணும்னா அஞ்சு சீட் கொடுக்கலாம். பேசுங்க!’’ என்று சொல்லி அனுப்பிவிட்டார். தங்கமணி போய், தேமுதிக துணைத்தலைவர் பார்த்தசாரதி, அவைத்தலைவர் அழகாபுரம் மோகன்ராஜ் ஆகியோரிடம் மூணு சீட்டில்தான் பேச்சை ஆரம்பித்திருக்கிறார். அவர்கள் அதிர்ந்து போக, ‘வேணும்னா அஞ்சு சீட் கொடுக்கலாம்’ என்று சொல்ல, அவர்கள் ‘நாங்க பேசிட்டு வர்றோம்’ என்று கிளம்பிவிட்டனர். அவர்கள் திரும்ப வந்து இருபது வரைக்கும் இறங்கி வந்துள்ளனர். ஆனால் தங்கமணி மறுபடியும் முதல்வரிடம் பேசிவிட்டு, எட்டு வரைக்கும் ஏற்றியிருக்கிறார்.

இரண்டு மூன்று நாட்களாக இப்படியே பேச்சுவார்த்தை போய்க் கொண்டிருந்தது. ஓபிஎஸ், உதயகுமார் உள்ளிட்ட தென்மாவட்ட அமைச்சர்கள் போன்றோர், ‘கொஞ்சம் கூடுதலாக் கொடுத்து முடிச்சிரலாம்ணே’ என்று சொல்லி இருக்கிறார்கள். அதற்கு இபிஎஸ், ‘அவுங்களுக்கு அதிகபட்சமாக மூணு பர்சண்டேஜ்தான் ஓட்டு இருக்கும். அதுவும் விஜயகாந்த் பிரசாரத்துக்கு வந்தால்தான் கிடைக்கும்’ என்று விளக்கியிருக்கிறார். இதையும் முதல்வர் சும்மா சொல்லவில்லை. இந்தத் தேர்தலுக்காக முதன்முதலில் விஜயகாந்தைச் சந்திக்க அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி ஆகியோர் அவரது இல்லத்துக்குச் சென்றனர். அப்போது பிரேமலதா சென்னையில் இல்லை. சுதீஷ் மட்டும்தான் இருந்திருக்கிறார்.

ஓய்வெடுத்துக் கொண்டிருந்த விஜயகாந்தை மெல்ல மெல்ல தயார் செய்து அழைத்து வந்திருக்கிறார்கள். சுமார் முப்பது நிமிடங்களுக்கும் மேலாக தன்னைச் சுற்றிலும் என்ன நடக்கிறது என்பதே தெரியாமல் அமர்ந்திருந்தார் விஜயகாந்த். அவரைப் பார்த்த வேலுமணி,தங்கமணி, கே.பி.முனுசாமி ஆகியோருக்கு அதிர்ச்சி. அதன்பின் முதல்வரை சந்தித்த இந்த மூவரும், ‘விஜயகாந்த் பாவங்க. அவரால ஒண்ணுமே முடியலை. அவரை மையப் பொருளா வச்சி அவங்க கட்சி நடத்திக்கிட்டிருக்காங்க. விஜயகாந்த் பங்களிப்பு தேமுதிகவுக்கு இருக்க வாய்ப்பே இல்லை. அதனால முன்ன வாங்கின அளவுக்கு கூட அவங்களால ஓட்டு வாங்க முடியுமானு டவுட்டுதான்’ என்று சொல்லியிருக்கிறார்கள். இதை மனதில் வைத்துதான், ‘தேமுதிகவின் அதிகபட்ச 3% ஓட்டும் விஜயகாந்த் வந்தால்தான் கிடைக்கும்’ என்று தென்மாவட்ட அமைச்சர்களிடம் சொல்லியிருக்கிறார். அந்த மூவர் மூலம் தேமுதிகவில் நடப்பது பற்றி துல்லியமாக அறிந்த பின்னரே சீட்டு எண்ணிக்கையில் கறார் தனத்தை உறுதி செய்திருக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

இதற்கிடையில் திமுகவிடமும் பேச்சை ஆரம்பித்திருக்கிறது தேமுதிக. அங்கே பெரிதாக இன்ட்ரஸ்ட் காட்டவில்லை. கடைசியாக சுதீஷ் முதல்வரிடம் நேரில் சென்று, ’15 சீட் கொடுங்க; ஆனா நாங்க கேக்குற தொகுதிகளைக் கொடுக்கணும்’ என்று கேட்டிருக்கிறார். அதற்கு இபிஎஸ், ‘‘அது ரொம்ப கஷ்டம் தம்பி... விருத்தாசலம் வேணும்னு நீங்க கேப்பீங்க. பாமகவும் அதைக் கேட்பாங்க. அதனால நாங்க கொடுக்குறதை வாங்கிக்கோங்க’’ என்று திட்டவட்டமாகச் சொல்லியிருக்கிறார். இதற்கிடையில், ’ஸ்வீட் பாக்ஸ்’ எவ்வளவு என்பது குறித்த பேச்சுவார்த்தைகளும் நடந்தன. அதில் அவர்கள் கேட்ட ஸ்வீட் பாக்ஸ் எண்ணிக்கையைக் கேட்டு இபிஎஸ்ஸே மிரண்டு போயிருக்கிறார். ‘அவ்வளவு தரணும்னா வேண்டவே வேண்டாம். அதுக்குப் பதிலா நாமளே மக்களுக்கு ஸ்வீட்டைக் கொடுத்துட்டுப் போயிருவோம்’ என்று சொல்லியிருக்கிறார். இடையில் ஒரு ராஜ்யசபா தொகுதியையும் தேமுதிக கேட்டதற்கு, ‘அதை அப்புறம் பார்க்கலாம். ஒப்பந்தமெல்லாம் போட்டுத்தர முடியாது’ என்று திட்டவட்டமாகச் சொல்லிவிட்டார் இபிஎஸ்.

அதற்குப் பிறகுதான், தினகரனிடம் போய், ‘எவ்வளவு சீட்டு எவ்வளவு ஸ்வீட் பாக்ஸ் தருவீங்க’ என்று தேமுதிக தரப்பில் கேட்டிருக்கிறார்கள். அவர், ‘கூட்டணி வச்சுக்கலாம்; ஸ்வீட்டெல்லாம் என்கிட்ட இல்லை’ என்று சொல்ல, கேப்டனின் குடும்பக் கப்பல் நடுக்கடலில் தத்தளித்திருக்கிறது. கமலிடம் கூடப் பேசியிருக்கிறார்கள். அங்கே நிலைமை ரொம்ப மோசம். ‘சந்தோஷமா கூட்டணி வெச்சுக்கலாம். செலவுக்கு எவ்வளவு கொடுப்பீங்க’ என்று அவர்கள் தரப்பில் கேட்க, ஊமை விழிகளாய் அழுத கேப்டன் குடும்பம், ஒரு கட்டத்தில். கொதித்துப் போய், அதிமுகவைத் தோற்கடிக்கத் தனியாய் நிற்போம் என்று மாவட்டச் செயலாளர்கள் ஒவ்வொருவராக அழைத்து, ‘விருப்ப மனு கொடுக்க வாங்க’ என்று கூப்பிட, ‘கலகலப்பு’ படத்தின் சண்டைக்காட்சியில் சந்தானத்தின் அடியாட்கள் ‘அண்ணே! காலையில பிரஷர் மாத்திரை போடலண்ணே’, ‘தலைவரே! ஒரு ஐடியா சாப்பிட்டு சாயங்காலம் தேடுவோமா’ என்று கேட்பதைப் போல, ஒவ்வொருவரும் ‘இல்லீங்க! சுகர் அதிகமாயிடுச்சுங்க; தேர்தல்ல நிக்க முடியாதுங்க’, ‘இருங்க பொண்டாட்டிகிட்ட கேட்டுச் சொல்றேன்’ என்று ஆளுக்கொரு காரணம் சொல்லியிருக்கிறார்கள். கடைசியில் வேறு வழியில்லாமல்தான் தினகரனிடம் சரண்டராயிருக்கிறார்கள்’’ என்று தேமுதிக தேய்ந்து ஓய்ந்த கதையை விரிவாக விளக்கினார்கள்.

அதேபோல அகில இந்தியாவையும் ஆட்டிப்படைக்கும் அமித் ஷாவை ரைட் ஹேண்டிலும், ரகளைக்கு பெயர்போன ராமதாஸை லெப்ட் ஹேண்ட்டிலும் ‘டீல்’ செய்த கதையையும் அவர்களே விளக்கினார்கள்...

‘‘பாமகவுடன் பேச்சுவார்த்தை துவங்கியபோது, அவர்களும் நாற்பது சீட்டு என்றுதான் ஆரம்பித்தார்கள். ஆனால் போனமுறை அவர்கள் ஜெயித்த இடங்களின் எண்ணிக்கையை வைத்து ‘எட்டு சீட்டுதான்’ என்று இபிஎஸ் ஆரம்பிக்க அதிர்ந்து போயிருக்கிறார் அன்புமணி. அவர் அப்பாவிடம் சொல்ல அவர் தன்னுடைய பாணியில் சில தகவல்களைச் சொல்லி அனுப்பியிருக்கிறார். அதற்கு இபிஎஸ், ‘‘நான் எவ்வளவு பிரச்சினைக்கிடையில உங்களுக்கு பத்தரை பர்சண்டேஜ் கொடுத்திருக்கேன் தெரியுமா... ஓபிஎஸ், அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி எல்லாருமே இதைக் கடுமையா எதிர்த்தாங்க. நான்தான் அவசர அவசரமா இதுக்கான வேலைகளைச் செஞ்சு, தேர்தல் அறிவிப்பு வர்றதுக்கு முன்னாலயே அறிவிச்சிருக்கேன். மறுநாளே கவர்னர் ஒப்புதலும் கொடுத்துவிட்டார். ரிசர்வேஷனுக்காக வலியுறுத்தும்போது, நீங்க ‘எங்களுக்கு சீட்டே வேண்டாம்; ரிசர்வேஷன் அறிவிச்சா போதும்னுதான சொன்னீங்கல்ல’’ என்று கேட்டிருக்கிறார்.

விடாப்பிடியாக இருந்த எடப்பாடியின் பிடிவாதத்தைப் பார்த்து விரக்தியடைந்த ராமதாஸ், தன்னுடைய கோபத்தை வெளிப்படுத்தும் வகையில், ‘‘ரொம்பத்தான் கஷ்டப்பட்டு எங்களுக்காகப் பண்ணிருக்கீங்க. அதனால நாங்க இந்தத் தேர்தல்ல வெளியில இருந்து உங்களுக்கு ஆதரவு தர்றோம்’’ என்று சொல்லி அனுப்பியிருக்கிறார். அப்படியாவது தன்னுடைய கோபத்தைப் புரிந்து கொண்டு இபிஎஸ் கொஞ்சம் ஏறிவருவார் என்று அவர் எதிர்பார்த்தார்.

ஆனால் இபிஎஸ், ‘‘ரொம்ப நல்லதாப் போச்சுங்க...அதை அப்படியே ஒரு ஒப்பந்தமா எழுதி கையெழுத்துப் போட்டு வாங்கிட்டு வந்துருங்க!’’ என்று சொல்ல அய்யா ராமதாஸ் அய்யோ என்று அலறும்படியாகிவிட்டது. இறுதியில் 23 சீட்டு என்று முடிவான பின்னும், நாங்கள் கேட்கும் தொகுதிகளைத் தர வேண்டுமென்று கேட்டதையும் இபிஎஸ் ஒப்புக்கொள்ளவில்லை. ‘‘ஜெயிக்கிற தொகுதிகளை எல்லாம் நீங்க வாங்கிட்டா நாங்க என்ன பண்றது’’ என்று கேட்டு, தரக்கூடிய தொகுதிகளையும் குறித்துக் கொடுத்திருக்கிறார். அதில்தான் ராமதாஸ் ரொம்பவே ‘மெர்சல்’ ஆகி, ‘‘நான் கலைஞர், ஜெயலலிதான்னு எத்தனையோ பேரைப் பாத்திருக்கேன். ஆனா இவரை மாதிரி பேரம் பேசுற ஒருத்தரைப் பார்த்ததேயில்லை. நல்ல வெல்லக்கட்டி வியாபாரிதான்...!’’ என்று புலம்பிப் பொறுமியிருக்கிறார்.

பாரதிய ஜனதாவையும் அவர் அப்படித்தான் ‘டீல்’ செய்தார். அதைப்பற்றி தங்கமணியும், வேலுமணியும் கேட்டதற்கு, ‘அஞ்சு சீட் கொடுப்போம்’ என்று சொல்ல, இரண்டு பேரும் அதிர்ந்து போய், ‘என்னண்ணா! அவுங்க சென்ட்ரல்ல ரூலிங் பார்ட்டி’ என்று சொல்லியிருக்கிறார்கள். அதற்கு இபிஎஸ், ‘‘அவ்வளவுதாங்க. என்னங்க செஞ்சிருவாங்க... அஞ்சு கொடுத்தா ஒண்ணுலதான் ஜெயிப்பாங்க’’ என்று சொல்லியிருக்கிறார்.

இந்தத் தகவல் தமிழக பிஜேபி தலைவர்களுக்குப் போனதும் அவர்கள் தலைசுற்றி விழாத குறையாக, ‘அமித் ஷா வந்து பேசினால்தான் இது சரிப்பட்டு வரும்’ என்று விட்டு விட்டார்கள்.

அமித் ஷா தமிழகம் வந்து விழுப்புரம் மீட்டிங் முடித்துவிட்டு, லீலா பேலஸ் ஓட்டலில் அன்றிரவு இபிஎஸ்ஸைச் சந்தித்தார். எடுத்த எடுப்பில், ‘‘சசிகலாவை மறுபடியும் கட்சியில் சேர்த்துக் கொள்ளலாமே... அமமுகவையும் சேர்த்தால் கட்சிக்குப் பெரிய பலம் கிடைக்கும். திமுகவை எளிதில் வீழ்த்திவிடலாமே’’ என்று அமித் ஷா பேச்சை ஆரம்பித்திருக்கிறார். அதற்கு இபிஎஸ், ‘‘நல்லா சேத்துக்கலாம்ங்க. ஆனா நான் பேசாம ஊருக்குப் போய் விவசாயம் பண்ண ஆரம்பிச்சிருவேன்’’ என்று தடாலடியாக மறுக்க, அந்தப் பேச்சை அப்படியே விட்டு, தொகுதிப் பங்கீட்டைப் பேச ஆரம்பித்துவிட்டார் அமித்ஷா.

அப்போதும் ஐந்தில்தான் ஆரம்பித்திருக்கிறார் இபிஎஸ். அமித் ஷா பல விஷயங்களை விளக்கிய பின்னும், ‘உங்களுக்கும் வேண்டாம்; எங்களுக்கும் வேண்டாம்; எட்டுல முடிச்சிருவோம்’ என்று சொல்லியிருக்கிறார். அமித்ஷா அன்று இரவு 10 மணிக்கு தனி விமானத்தில் டெல்லி திரும்புவதாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அவருடைய உதவியாளர்கள், அவரிடம் நேரத்தைக் காண்பித்தபோது, ‘ஒரு மணி நேரம் கழித்துக் கிளம்புவோம்’ என்று சொல்லிவிட்டு, மறுபடியும் பேச்சைத் தொடர்ந்திருக்கிறார். ஆனாலும் எட்டு, பத்து என்று இழுத்துக்கொண்டே போயிருக்கிறது. சொன்ன நேரத்தை விட கூடுதல் நேரமாகிவிட்டது. கடைசி வரை ஒரு முடிவு தெரியாமல்தான் அமித் ஷா கிளம்பிப் போயிருக்கிறார். மறுநாள் அங்கிருந்து அவர்கள் சொன்னதிலும் குறைத்துத்தான் 20 என்று முடித்திருக்கிறார். அமித்ஷா வெறுத்துப் போய், ‘வில்லேஜ் மேன். இவ்வளவு கெடுபிடியா இருக்கிறாரே’ என்று சலித்துக் கொண்டதாகத் தகவல்.

இவர்களையே இப்படி ‘டீல்’ செய்தவர், தமாகாவை எப்படிக் கையாண்டிருப்பார் என்று கேட்க வேண்டுமா... அவர்களுக்கு மூணு சீட்டு மட்டும்தான் என்று அடித்துச் சொல்லிவிட்டார் இபிஎஸ். அமைச்சர்கள் வேலுமணியும், தங்கமணியும் ‘நான்கு கொடுக்கலாம், ஐந்து கொடுக்கலாம்’ என்று சொன்னபோதும் மறுத்துவிட்டார். கடைசியில் டெல்லியிலிருந்து பிஜேபி கேட்டுக்கொண்டதால் ஆறு தொகுதி என்று முடித்தார்கள். அதிலும் வாசன் கேட்ட தொகுதி எதுவும் தரப்படவில்லை. எல்லோரிடமுமே அவர் சொன்ன ஒரு விஷயம், ‘திமுக இத்தனை சீட்டுகள் நிற்கிறார்கள். நாம் மட்டும் எப்படிக் குறைவான இடத்தில் நிற்பது’ என்பதுதான். தொகுதிப் பங்கீட்டில் யார் சொன்னதையும் கேட்காமல் ஓர் அசாத்தியமான துணிச்சலுடன்தான் முடிவுகளை எடுத்திருக்கிறார் இபிஎஸ்’’ என்று ஆச்சரியம் அகலாமல் விஷயத்தை முடித்தார்கள்.

இபிஎஸ்ஸின் பக்குவத்துக்கு இதற்கு மேல் என்ன உதாரணம் சொல்ல வேண்டும் என்கிறார்கள் அந்த பேச்சுவார்த்தைகளில் பங்கேற்றவர்கள். மே இரண்டுதான் இதற்கு பதில் சொல்ல வேண்டும்.

-பாலசிங்கம்

கரூரில் கடல்- பிரம்மாண்டத்தை மிஞ்சும் பிரம்மாண்டம்: செந்தில்பாலாஜியைப் புகழ்ந்த ...

4 நிமிட வாசிப்பு

கரூரில் கடல்- பிரம்மாண்டத்தை மிஞ்சும் பிரம்மாண்டம்: செந்தில்பாலாஜியைப் புகழ்ந்த ஸ்டாலின்

சரவணா ஸ்டோர்ஸ் கோல்டு பேலஸ் சொத்துகள் முடக்கம்!

3 நிமிட வாசிப்பு

சரவணா ஸ்டோர்ஸ் கோல்டு பேலஸ் சொத்துகள் முடக்கம்!

சென்னை வரும் திரௌபதி முர்மு: பன்னீர்- எடப்பாடி இணைந்து சந்திப்பார்களா? ...

3 நிமிட வாசிப்பு

சென்னை வரும் திரௌபதி முர்மு: பன்னீர்- எடப்பாடி இணைந்து சந்திப்பார்களா?

செவ்வாய் 16 மா 2021